படம் | Photito

போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து வாசலுக்குள்ளால் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும், சிலரும் உதவிசெய்து, ஒரு ஆசனத்தில் அமர வைக்கின்றனர். யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியாக, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறையேறி கருப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கியிருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக அந்தத் தாய் தெரிகிறாள்.

அவரின் பெயர் மலரம்மா.

“இந்த ஊரிலை இருக்கிறது என்ற பேருக்கு தான் இருக்கிறா, யாரோடையும் கதைக்கமாட்டா, அவவுக்கு ஒரு மாதிரி எண்டு சொல்லுகினம், தனியத்தான் திரியுறா, நல்லது கெட்டதுக்கு ஒண்டுக்கும் வரமாட்டா! சிலவேளை நடுவெயில்லை நின்று கத்துவா, வானத்தை அண்ணாந்து பார்த்து ஏதோ கதைச்சுக்கொண்டு இருப்பா”, மலரம்மாவைப் பற்றி அந்த ஊர் தரும் அறிமுகம் இது. அவருக்கு அப்பிடி என்ன பிரச்சினை? அதுவும் நீண்டகாலமாக இப்பிடியே இருக்கிறாராம். குடும்பம் எங்கே? கணவன் பிள்ளைகள் இருக்கிறார்களா? என்ன நடந்தது?

இலங்கையின் இறுதிப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுற்றாலும், கடந்த 30 ஆண்டுகளாகப் போரின் பல்வேறு வடுக்களையும் மக்கள் தாங்கியிருக்கின்றனர். உடல் காயமாக, உளக்காயமாக அது அவர்களைத் துருத்திக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு வகையான பாதிப்புக்குள்ளும் வலுவாக அகப்பட்டவர்தான் “அவவுக்கு ஒரு மாதிரி” என ஊர் அறிமுகம் செய்யும் மலரம்மா.

1990ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் வடுக்களை அவர் சுமந்திருக்கிறார். அந்த நாட்களில் கரையோரப் பிரதேசத்தில் கடலன்னையின் அரவணைப்பில் உழைத்துக்கொழித்த செல்வத்தோடு இறைவன் கொடுத்த மக்கள் செல்வத்தின் பயன் நான்கு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் அது.

நீண்ட பிரயத்தனத்தின் பின் மலரம்மா கதைக்கத் தொடங்கினார். “தொண்ணூறாம் ஆண்டு, தொடர்ச்சியாக புக்காராவின் குண்டுமழைக்கு நடுவில் எங்கள் மக்கள் வீடு வாசல், ஊரின் மணல் வாசத்தையெல்லாம் இழந்து, பிரிந்து தூரதேசத்துக்கு நடந்துகொண்டிருந்தனர். இஞ்சேரப்பா எல்லாரும் போய்க்கொண்டிருக்கினம். நாங்கள் இந்த சின்னனுகளை வைச்சுக்கொண்டு என்ன செய்யப்போறம். அவங்கள் மாறி மாறி ஷெல்லடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு அவரிட்ட அடிக்கடி செல்லியிருப்பன். என்ரை மூத்தவள் நிலா உண்மையா நிலவு முகம்தான்! அம்மா பெரியம்மாக்கள் போயிட்டினம் நாங்களும் போவம் பயமாக்கிடக்கு, அவள் கேட்கத் தொடங்கியிருந்தாள். கடைசி சின்னவன் கைக்குழந்தை. எனக்கு எல்லாம் யோசிக்க பயமாக்கிடந்தது. அந்த மனநிலையை வார்த்தையாலை சொல்ல ஏலாது. பயமும் ஏக்கமும், அமைதியற்ற நிலையும் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற அல்லாட்டம் தான் நிறைந்திருந்தது.

“பொறடியப்பா நீ சும்மா பயப்பிடுறாய் நிலமையைப்பார்த்து நாங்களும் வெளிக்கிடுவம்”, அவரின்ரை கண்ணிலும் பயம் தெரிந்தது. எனக்கு ஏதோ நடக்கப்போகுது என்டு விளங்கிட்டுது, என்ன நடந்தாலும் நான் என்ரை பிள்ளையளைக் கொண்டு எப்படியாவது போயிடவேணும் என்டு முடிவெடுத்திட்டன். காலமை பத்துமணியிருக்கும் எங்கடை நாய் பதறிப்பதறி, ஓடி ஓடி குலைக்கத்தொடங்கியது. எனக்கு நெஞ்சு பதறத்தொடங்கிட்டுது. சாப்பிட இடியப்பமும் அவிச்சு கும்பிளா மீனில குழம்பும் வைச்சனான். இவர் கடற்கரைக்குப் போட்டார். பிள்ளையளை எல்லோரையும் கூட்டிக்கொண்டு ஒரு கிண்ணியிலை இடியப்பத்தை அடுக்கி வைச்சுப்போட்டு, “எல்லாரும் எனக்குப் பக்கத்திலை இருக்க வேண்டும், ஒருடமும் போகக்கூடாது” என்று சொன்னன். பிள்ளையளும் அம்மா ஏதோ பிரச்சினை எண்டுதான் அப்பிடிச்சொல்லுறா எண்டு நினைச்சு என்னைச்சுத்தி வரிசையா இருந்ததுகள். எனக்கு இப்பவும் நினைவிருக்கு! பிள்ளையள் என்ரை முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததுகள். பயத்திலை முகமெல்லாம் வெளிறிப்போச்சு… எனக்குத் தொடர்ச்சியாப் பக்கத்திலை கேட்ட வெடிச்சத்தத்திலை என்ன நடக்குது, வெளியிலை என்று தெரிஞ்சாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல், செல்லங்களே ஒருத்தரும் பயப்பிடக்கூடாது, அம்மா இருக்கிறன் தானே! அப்பா இப்ப வந்திடுவார், நாங்கள் வெளிக்கிட்டு போவம், அதுவரைக்கும் அம்மாவை விட்டு ஒருத்தரும் அசையக்கூடாது என்று சொன்னன்! அப்பிடிச்சொல்லி பிழை விட்டுட்டேன்! ஐயோ! நான் பெரிய பிழையவிட்டுட்டேன்.

“கடற்கரையிலை ஒரே பெரிய வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் என்ரை சின்னனை மடியிலை வைச்சுக்கொண்டு சுத்தி எல்லாரையும் வைச்சுக்கொண்டு இருந்தன். (இரு கைகளையும் மடித்து, தன் மடியோடு அந்தக் குழந்தையை அணைத்து வைத்திருந்ததை செய்து காட்டுகிறார்) காதைப்பிய்க்கிற மாதிரி ஒரு சத்தம் கேட்டது. பக்கத்திலை தான் குண்டு விழுந்தது. எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களைச்சுத்திப் பளீர் என்று ஒரு வெளிச்சம் வந்து போனது. என் வயிற்றில் சுரீரென்று ஏதோ குத்தியது போல இருந்தது. மயக்கம் வருமாப்போல இருந்தது. பிறகென்னத்தைச் சொல்ல, நான் என்ரை நாலு பிள்ளையளையும் கண்ணுக்கு முன்னாலே பறிகொடுத்துவிட்டேன். அம்மா என்று பெரிய அழுகைச்சத்தம் தான் கேட்டது. என்ர நாலு பிள்ளையளும் என்ர கண்ணுக்கு முன்னாலயே சிதறிப் போயிட்டினம். (சொல்லி முடிக்க முன் மலரம்மாவில் பெருகும் கண்ணீர் மேலும் பேச தடைவிதிக்கிறது)

“என் கண்ணீருக்கு யாரும் பதில் சொல்ல முடியாது. என்ரை கைக்குழந்தையையும், என்ரை நிலாவையும் எல்லாரையும் பறிகுடுத்திட்டேன்! இன்றைக்கு நான் நடைப்பிணமாகத் திரியுறேன்.. இன்றைக்கும் என் கண்முன்னே என்ரை பிள்ளைகள் கத்தியழுத காட்சிதான் வருகிறது. என்னவென்று நான் மறப்பேன். கண்ணுக்கு முன்னாலை கத்தி கத்தி இரண்டுபேரும், ஒரு சத்தமும் இன்றி இரண்டுபேரும், ஐயோ இப்ப நினைச்சாலும் என்ரை நெஞ்சு பத்தியெரியுது…”

அந்த நாளிலிருந்து அனைவரிடமும் ஒதுங்கி வாழ்ந்து தன்னுடைய மனதின் ஆழத்திலுள்ள சோகங்களைக் கொட்டி அழாத அந்த அம்மாவின் சோகங்களுக்கு எங்களின் வருகை ஒரு வடிகாலாக அமைந்தது என்கிறார் அவருக்கு இப்போது உளச்சிகிச்சை அளித்து வரும் களப்பணியாளர் ஒருவர்.

கிட்டத்தட்ட அறுபது வயது மதிக்கத்தக்க அந்த அம்மாவின் கைகள் இரண்டும் தன்னுடைய குழந்தைகளைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தில் செயலிழந்துவிட்டன. உடலின் பல்வேறு பகுதிகளிலும் போர் கொடுத்த வடுக்களைத் தாங்கியுள்ளார். தன்னுடைய பிள்ளைகளை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்திலிருந்து சற்றும் விடுபடவில்லை அவர். “மூத்தவள் இப்ப எப்படியும் கல்யாணம் கட்டியிருப்பாள். என்ரை கடைசி இன்டைக்கு படிச்சுப் பெரிய நிலமையிலிருப்பான், ரெண்டாவது அப்பவே சொல்லுவான், அம்மா நான் படிச்சு பெரிய எழுத்தாளனா வருவேன் என்று…” அடிப்படையில் படிப்பில் கெட்டிக்காரக் குழந்தைகள் போலும்…! மலரம்மாவும் அந்தக் காலத்திலை எஸ்.எஸ்.சி. (சாதாரணதரத்துக்கு நிகரானது) படித்தவர்தான்!

“என்னையும் உந்தக் கொடிய ஷெல் கொண்டுபோயிருக்கவேணும் தப்பவிட்டு இண்டைக்கு நான் அநாதையாக நிக்கிறேன்… என்ரை அக்காவின் பிள்ளைவீட்டை சாப்பிடப்போவன், அவன் ஒன்றும் சொல்ல மாட்டான். ஆனாலும், என்ரை மனம் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு வரும் வரைக்கும் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கும்… நாங்கள் எப்படியிருந்த குடும்பம், நான் தனிய அலைஞ்சி கொண்டிருக்கிறன். என்னைய சிலர், “பிள்ளையளை பறிகொடுத்ததிலை அவளுக்குப் பைத்தியமாக்கிட்டுது என்று சொல்லுகினம்.” எங்கடை ஊரிலை இருக்கும் போது எல்லா நாளும் என்ரை பிள்ளையளின்ரை நினைவு தான்… நான் நிறையக்கனவோடை இருந்தேன். என்ரை கனவுகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. நான் யாரோடை கதைச்சு என்னத்தைப் செய்யப்போறன்… இனி நான் நல்லா வந்து யாருக்கு என்ன லாபம்? ஏதோ என்ரை காலம் முடியுற வரைக்கும் நான் இப்பிடியே இருந்திட்டு செத்துப்போறன்…” தொடர்ந்தும் பெரிய சத்தத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கண்ணுக்கு முன்னாலையே பறிகொடுத்துவிட்டு, இழிவிரக்கத்துடன் தொடர்ச்சியாக யாருடனும் பேசாது, மனதிலுள்ள துன்பங்களைத் தன்னுள்ளே அடக்கிவைத்துக்கொண்டிருந்த மலரம்மாவில் இப்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக உளசிகிச்சை பணியாளர் சொல்கிறார். கோயிலுக்கு செல்லவும், அயலாருடன் பேசவும், தன் வீட்டுக் கடமைகளைத் தானே செய்துகொள்ளவுமான மாற்றங்களை அவர் அவதானித்துப் பட்டியலிடுகின்றார்.

போர் இப்படித்தான் விளைவுகளைச் செய்யும். நீண்டகாலமாக செரிக்காத நிலையிலிருந்து மனிதர்களைப் மன ஊனமாக்கும். மலரம்மா அதற்கு சாட்சி.

நன்றி: சூரியகாந்தி

ஜெரா