படம் | கட்டுரையாளர்

இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும் தொழில் செய்யும் குவேனி தலைவியாக இருந்தாள், என்கிற கதை இலங்கை வரலாறு படித்த அனைவருக்குமே நினைவிருக்கலாம். அதில் நாகர் வழிவந்த இனத்தின் மிச்ச சொச்சங்களும், நாகர்களின் பண்பாட்டைப் பின்பற்றுகின்ற கலாசார தொடர்புகளும் உள்ள ஓரிடம் 2014 இன் பின் அரைப் பகுதியில் எப்படியிருக்கின்றது?

நாகர்கோவில், யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் நிரந்தரமாகவே பிரித்துவைத்திருக்கும் ஏரிப் பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் கிராமம். எங்கு பார்த்தாலும், குவிந்திருக்கும் வெண் மணல் வெயிலிலும் அழகாக இருக்கின்றது. இயல்பாகவே இந்த மணற்பரப்பைப் பார்த்ததும் கால் புதையப் புதையத் துள்ளியோட வேண்டும் போன்ற எண்ணம் வரும். ஆனால், நீங்கள் ஓட முடியாது. எங்கும் எச்சரிக்கின்றன “மிதிவெடி கவனம்” அபாய எச்சரிப்புகள்.
ஒரு காலத்தில், “எதிர்பாராத வெடிவிபத்துகளுக்கும்”, “இராணுவத்தினருடனான நேரடி மோதல்களுக்கும்” செய்திகளில் இந்த இடம் பிரபலம் பெற்றிருந்தது. முகமாலை முன்னரங்க நிலைகள் மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களிலும் நாகர்கோவில் கிழிந்து தொங்கி, சின்னாபின்னமானதற்கு பனைமரங்கள் பெருஞ்சாட்சி. அதிக காலமும், அதிக வெடிபொருட்களோடு இந்த இடம் பரீட்சயப்பட்டிருப்பதை நாகர்கோவில் மணல் வெளி காட்டிக் கொடுத்துவிடுகிறது. மணல் மேடுகள் முழுவதிலும் வெடிபொருட்கள் அனைத்தினதும் சிதிலங்கள், உடைந்த பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. போரில் ஈடுபட்ட தரப்பினரின் ஆயுத வகையறாக்களை அடையாளங் கண்டுகொள்ளுமளவிற்கு அந்த வெளியெங்கும் விதம் விதமான வெடிபொருட்களின் எச்சங்கள் மலிவாகக் காட்சி தருகின்றன. மணலால் மூடப்பட்டும், மணலுக்கு வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டும், மரங்களின் முதுகுகளைத் துளைத்துக் கொண்டும், அந்த நிலத்துப் பூர்வ குடிகளது உடல்களின் தலை, கால், முதுகு, தொடை என எந்தப் பாகத்துக்குள்ளும் குத்திக் கொண்டும் இருக்கின்றன வெடிபொருட்களின் மிஞ்சிய பாகங்கள்.

அநேக சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களும், உடனடி அலங்காரப் பொருட்களாகவும் வெடிபொருட்களின் கோதுகள் பயன்படுத்தப்படுகின்றன. சிரட்டையில் மண் அள்ளி, மண் கும்பிகளில் அடுப்பு நட்டு விளையாடும் கிராமத்துச் சிறார்களின் விளையாட்டில், சிரட்டையும், மரத்தடிகளும் பிடித்த இடத்தை வெவ்வேறு அளவிலான துப்பாக்கி ரவைகளின் கோதுகளும், பீரங்கிக் குண்டுகளின் உடைந்த பாகங்களும் பிடித்திருக்கின்றன. மண் சிலையை சுவாமியாக வைத்து விளையாடிய சிறார்கள், ஆட்லெறி ஷெல்லின் கோதுகளில் சிவனைக் காண்கிறார்கள். மலர் வைத்து , திருநீறு பூசி அதற்குப் பூசையும் செய்கிறார்கள். செருப்பை வெட்டிச் சில்லு செய்து, பிளாஸ்ரிக் போத்தலோடு செருகி செய்யும் வண்டில்களும், வெடிபொருள்களின் எச்சங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இதைவிட வீட்டுப் பூந்தோட்டங்களுக்கும், முற்றங்களுக்கான வளைவுகளுக்கும் ஆட்லெறி, ஐஞ்சிஞ்சி ஷெல்களின் கோதுகள் அலங்கரிக்கப் பயன்படுகின்றன.

ஆபத்து மிக்க இந்தத் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் குண்டுவெடித்து உடல் சிதறி இறந்திருக்கிறார். அவரின் சடலத்தைக்கூட 4 நாட்கள் கழித்து, நாய், காகம் தின்ற எஞ்சிய பாகங்களை எடுத்து அடக்கம் செய்திருக்கின்றனர். பேராபத்துமிக்க இந்தத் தொழிலை பாடசாலை செல்லும் சிறுவர், சிறுமியர் தொடக்கம் கர்ப்பிணிப் பெண்கள் வரையும் செய்கின்றனர். நாளொன்றில் ஒரு பொழுதையாவது வயிற்றை நிரப்ப வேறு என்னதான் வழியிருக்கிறது அவர்களுக்கு?

இவ்வளவுக்கும் மத்தியில் துரித கதியில் வெடிபொருள் மீட்புப் பணியாளர்கள், நாகர்கோவிலின் பல பகுதிகளிலும் தம் பணியைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களாலும் என்ன செய்யமுடியும். அங்கு பணிசெய்யத் தொடங்கிய காலத்தில், அந்தப் பணியாளர்களில் ஒருவர் உடல் சிதறிப் பலியாகியிருக்கிறார். இன்னுமொருவர் காயப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது. பிரகடனும் செய்தாயிற்று. ஆனால், வெடிபொருட்களுடனான விளையாட்டு மட்டும் இன்னமும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. சிறுவர்களின் நாள்களில் அதிக இடத்தை இந்த வெடிபொருகள் எடுத்துக் கொள்கின்றன. அந்தப் பொருள்கள் பற்றிய கதைகளும், நினைவுகளும் அவர்கள் மத்தியில் கடத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.

வெடிபொருள்களைத் தவிர்த்துப் பார்த்தாலும், அங்கு பிரச்சினைகள்தான் முதலில் தெரிகின்றன. பெரும்பாலான ஆண்கள் கடற்றொழிலை நம்பியிருக்கின்றனர். போருக்குப் பின்னர் அந்தப் பகுதி கடலில் மீன்வளம் அருகிவிட்டது. யார் யாரெல்லாமோ வந்து கடல் வளத்தைச் சூறையாடிச் செல்வதாக வந்து போகின்றவர்களிடம் முறையிடுகிறார்கள். இதைவிட நிறுவனங்கள் தரும் வீட்டுத்திட்ட வேலைகளில், பலர் மேசன்களாக இணைந்திருக்கின்றனர். விடுதலைப்புலிகளும், இராணுவமும் விட்டுச் சென்ற முகாம்களிலிருந்தும், காவலரண்களிலிருந்தும் இரும்பு சேகரித்து விற்பதையும் முக்கியமான ஒரு தொழிலாக வைத்திருக்கின்றனர். ஆபத்து மிக்க இந்தத் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் குண்டுவெடித்து உடல் சிதறி இறந்திருக்கிறார். அவரின் சடலத்தைக்கூட 4 நாட்கள் கழித்து, நாய், காகம் தின்ற எஞ்சிய பாகங்களை எடுத்து அடக்கம் செய்திருக்கின்றனர். பேராபத்துமிக்க இந்தத் தொழிலை பாடசாலை செல்லும் சிறுவர், சிறுமியர் தொடக்கம் கர்ப்பிணிப் பெண்கள் வரையும் செய்கின்றனர். நாளொன்றில் ஒரு பொழுதையாவது வயிற்றை நிரப்ப வேறு என்னதான் வழியிருக்கிறது அவர்களுக்கு? இப்படியெல்லாம் சிரமப்பட்டு, உயிர் கொடுத்து உழைக்கும் உழைப்பின் பெரும்பகுதியை ஆண்கள் குடிப்பதற்கே செலவிடுகின்றனர். காரணம் என்ன என்று கேட்டால், “இந்த வாழ்க்கைதான்” என்கின்றனர்.

வீட்டுத்திட்ட மற்றும் நிவாரண வழங்கல்களிலும் பாகுபாடு காட்டப்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இயந்திர கதியில் வீட்டுத்திட்ட வேலைகள் நடக்கின்றமையை அவதானிக்கலாம். ஆனால், அந்த வெளியெங்கும் குடிசை வீடுகளே தெரிகின்றன. மிகுதி காசு தரவில்லை என்ற காரணத்தைப் பலரும் சொல்கின்றனர்.
நாகர்கோவில் பாடசாலை மீது 1997ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 மாணவர்கள் பலியானமை மறந்தே போயிருக்கலாம். ஆனால், அந்தப் பாடசாலையும், அந்தத் தாக்குதலில் காயப்பட்டு, மாற்றுத் திறனாளிகளாக வலம் வரும் பலர் அதை இப்போது நினைவுபடுத்துகின்றனர். இடிந்து நொருங்கிக் கிடக்கும் பாடசாலைக் கட்டடங்கள் போல அவர்களின் வாழ்க்கையும் பல வழிகளிலும் நொருக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் என்ன செய்ய? விமானத் தாக்குதலில் பலியான மாணவர்களை நினைவுகூறக்கூட அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கும் மேலாக அங்கிருக்கும் மாணவர்களில் அதிகம் பேர் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை. காலை 10 மணிவரைக்கும் கடற்றொழில் பார்த்து குறிப்பிட்டளவு வருமானத்தை பெற்ற பின்னரே பாடசாலைப் பக்கம் எட்டிப் பார்க்கின்றனர். 10 வயதுக்குப் பின்னர் அவரவர் வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொள்வதில் அந்தச் சிறார்கள் நாட்டம் கொள்கின்றனர்.

இப்போது மணலும், விரைவாகச் சூறையாடப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மணல் அகழ்வு நிறுவனமொன்று நாகர் கோவில் மணல் அரண்களை அள்ளியெடுத்து காசாக்குவதில் தீவிரம் காட்டுகிறது. இரவு பகலாக மணலகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெருங்கடல் உள்வருவதைத் தடுத்து, நாகர் கோவிலைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும், மணல் அணை அகழப்படுகின்றது. இப்படியே அந்த மணல் மேடு முழுதும் அகற்றப்படுமானால், இன்னொரு சின்னச் சுனாமி வந்தாலே, நாகர்கோவிலைக் கடல் கொண்டுவிடும். எங்கள் உடலங்களை கடலில்தான் பொறுக்க வேண்டும் என்கின்றார் இரண்டு நூற்றாண்டு வயதுகளைத் தொட்ட மூத்தகுடிமகனொருவர். எந்த வகை அநீதிக்கு எதிராகவும் அந்தப் பழைய குடிகள் வாய் திறக்க முடியாது. கதைத்தால் உடனடியாகவே “அவர்கள்“ வந்துவிடுகின்றனர்.

வீதிகள் இன்னும் மோசம். மேடுபள்ளமான மணல் வீதி பல தசாப்தங்களாகத் திருத்தப்படாமலேயே கிடக்கின்றது. இரவில் ஏதும் நோய் நொடியென்றால்கூட 15 கிலோமீற்றர்களுக்கு அப்பாலான மந்திகை மருத்துவமனைக்குத்தான் அவர்கள் செல்ல வேண்டியிருக்கின்றது. அண்மையில், பிரசவ வழியால் துடித்த கர்ப்பிணித் தாயொருவர், ஓட்டோவில் ஏற்றிச் செல்லும்போது, ஓட்டோவுக்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.

அரச, அரச சார்பற்ற எந்தக் கட்டமைப்புக்களும் இன்னும் சரியாக செயற்படத் தொடங்காத ஒரு கிராமமாக நாகர்கோவில் இருக்கின்றது. ஆனால், இராணுவப் பார்வைகள் மட்டும் அந்தக் கிராமத்தை விட்டு அகழவேயில்லை. இலங்கையின் மூத்த குடிகளில் பெயரை தம்மோடு இணைத்துக் கொண்ட நிலத்தவரின் வாழ்க்கை எல்லா பக்கங்களிலும் இன்மைமயப்பட்டதாகவே இருக்கின்றது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயங்கியல் தத்துவம் இங்கு மட்டுமே பொய்த்திருக்கின்றது போலும்.

நன்றி: சூரியகாந்தி

ஜெரா

Jera