படம் | Groundviews
தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களுடன் சர்வதேச விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்பதுதான் அரசுக்கு தற்போது உள்ள பிரச்சினை. அரசு என்பதை விட ‘இலங்கை அரசு’ என்ற அந்த கட்டமைப்பு காலம் காலமாக நிலவி வந்த சூழலில் இருந்து எப்படி அரசியல் தீர்வு என்ற இலக்கை நோக்கி நகரமுடியும் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சங்கடமானதுதான். ஆனாலும், அந்த சங்கடங்களையும் தாண்டி தற்போது அவசர முடிவுகள் அல்லது விட்டுக் கொடுப்புகள் என்ற நிலைமைக்குள் இறங்கவேண்டிய ஒரு சூழலும் ஜனாதிபதிக்கு வந்துள்ளது எனலாம்.
அணுகுமுறைகள் மாறுபடலாம்
அடுத்து வரும் மாதங்களில் மூன்று வகையான அரசியல் நகர்வுகளுக்கு ஜனாதிபதி தயாராகியுள்ளார். ஒன்று, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஒரு தேசிய அரசை அமைப்பது அல்லது தேசிய விடயங்களில் எதிர்க்கட்சிகளை ஒத்துழைக்க வைப்பது. இரண்டாவது, நாடாமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலத்தை நீடித்து ஒப்பாசாரத்துக்கேனும் அரசியல் தீர்வுக்கான பேச்சை ஆரம்பிப்பது. மூன்றாவது, ஜெனீவா தீர்மானம் உள்ளிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த சிறப்பு குழு ஒன்றை அமைப்பது. இந்த மூன்று வகையான நகர்வுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி விரைவில் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக்க் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அமைத்த சர்வதேச விசாரணைக் குழுவின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கான ஆதரவு குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி பேசலாம் எனவும் கூறப்படுகின்றது.
சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த மூன்று வகையான நகர்வுகளும் அமையலாம். அரசு இதுவரை காலமும் சர்வதேச அழுத்தங்கள் அல்லது ஆலோசனைகளை பொருட்படுத்தவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் அழிக்கப்பட்ட காலத்தின் பின்னர் எவரையுமே பொருட்படுத்தியதாக இல்லை. ஆனால், அமெரிக்கா, சர்வதேச நாடுகளிடம் இருந்து வருகின்ற அழுத்தங்களின் வலி அரசுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளதுபோல் தெரிகின்றது.
விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு
ஆனாலும், இந்த வலி இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தளவு தூரத்துக்கு சாதகமாக அமையும் என்பது கேள்வி. சர்வதேச நாடுகளை பொறுத்தவரை தமக்குச் சாதகமான நகர்வுகளுக்கு இடம்கொடுத்துவிட்டால் அழுத்தங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள் என்பது வரலாறு. மஹிந்த அரசு நொடிப்பொழுதில் சர்வதேசத்துக்கு தேவையானவற்றை விட்டுக்கொடுக்கலாம் அல்லது ஏதேனும் விடயங்களை செய்து முடிக்கலாம். குறிப்பாக சர்வதேச விசாரணைக்கு இலங்கையில் இடமளிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.
அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முக்கியப்படுத்தாத அரசியல், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தின் எண்ணிக்கையிணை குறைக்காத அல்லது முகாம்களை மூடாத செயற்பாடுகள், சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாத மற்றும் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகளை தடுக்காத நடவடிக்கைகளுடன் எவ்வாறு சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை சமாளித்து தேசிய அரசியலையும் கொண்டு செல்லாம் என்பது தொடர்பாக சில பரிந்துரைகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக ஹெல உறுமய கட்சிகளின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கையளித்திருப்பதாகவும் ஒரு தகவல்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள்
இந்த இடத்திலேதான் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள், காய்நகர்த்தல்கள் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. மேற்சொன்ன நகர்வுகளை அரசு தக்கபடி கையாளுமாக இருந்தால், சர்வதேச அரங்கில் தமிழர் குறித்த பார்வை குறையக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைத்தமை முக்கியமானது, அதனை அமெரிக்கா வரவேற்றும் உள்ளது.
ஆகவே, சர்வதேச நாடுகள் இலங்கை அரசின் போலித்தனமான செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்துவிட்டால், அந்த நிலைமையை தமிழர் தரப்பினால் இலகுவில் மாற்றிவிட முடியாது. வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ நிர்வாகம்தான் உள்ளது எனவும், இராணுவ முகாம்கள் குறைக்கப்படவில்லை என்று கூறினாலும், அரசு எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகள் காலப்போக்கில் சாத்தியமாகும் என்ற கருத்தை சர்வதேச நாடுகள் முன்வைக்கக்கூடிய நிலைய உருவாகலாம். எப்படியும் தமிழரின் அரசியல் முக்கியத்துவத்தை குறைக்கும் இலங்கை அரசின் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் விரும்பியோ விரும்பாமலோ ஆதரவு கொடுக்கும் நிலை ஒன்றும் உருவாகலாம். ஏனெனில், அவ்வாறு ஆதரவு கொடுக்கவில்லையானால் அது, அவர்களின் எதிர்கால அரசியல் செயன்முறைகளுக்கு ஆபத்தாக அமையும்.
தமிழர்களுக்கு எதிரான சூழல்
இந்த நிலையில், தமிழத் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் எப்படி செயற்படப் போகின்றது? தமிழர் தரப்புக்கு ஏதோ செய்வதாக காண்பித்து சர்வதேச நாடுகளை அரசு ஏமாற்றப்போகின்றது என்பதை அறிந்து அதற்குரிய மாற்று செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும். மாற்று செயற்பாடுகள் என்பது வெறுமனே சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது – கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பது அல்ல. சர்வதேச அரங்கில் எழக்கூடிய தமிழர் அரசியலுக்கு சாதகமான விடயங்களுக்கு ஆப்பு வைக்கக்கூடிய அரசின் செயற்திட்டங்களை எவ்வாறு முறியடிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
1983ஆம் ஆண்டில் இருந்து இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எப்படி செயற்பட்டன அல்லது அந்த ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகள் எப்படி குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டன என்பது போன்ற விடயங்கள் சர்வதேச அரங்கில் தமிழ்த்தரப்பினரால் ஆழமாக சுட்டிக்காட்ட வேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.