படங்கள் | Vikalpa Flickr

கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த கணேசன் நிமலரூபன், சிகிச்சை உதவி கேட்டு அலறியும் வழங்கப்படாமல் 2012 ஜூலை 4ஆம் திகதி உயிரிழக்கிறார். 16 தினங்கள் கழித்து பெற்றோருக்கு மகனின் உடல் வழக்கப்படுகிறது. நிமலரூபனின் உடலில் 32 காயங்கள் இருந்தும் மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என இலங்கை அரசு கூறியது. அதுமட்டுமல்லாமல், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் எனத் தெரிவித்து, நிமலரூபனின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனித உரிமை மீறல் வழக்கை, உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தள்ளுபடி செய்திருந்தார். மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்ட நிமலரூபனின் 60 வயதைக் கடந்து வாழும் பெற்றோர், தனது ஒரே பிள்ளையை இழந்து துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்துவருகின்றனர். நிமலரூபனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நான், தினக்குரல் பத்திரிகைக்காக 2012ஆம் ஆண்டு ஜூலை 29 எழுதிய கட்டுரையை இங்கு தருகிறேன்.

###

வீட்டிலிருந்து புதைக்குழி வரை பாதையின் இருபுறத்திலும் 600இற்கும் மேலதிகமான பொலிஸார், இராணுவத்தினர் அந்த இளைஞரின் இறுதிக் கிரியைக்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். 3 நட்சத்திரங்கள், 2 நட்சத்திரங்கள் பொருந்திய மூவர் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பின்னாலே வந்துகொண்டிருந்தனர். புலனாய்வாளர்களும் தங்களது கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தனர். இந்த அடுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரின் மரணத்தின்போதோ அல்லது அரச குடும்பத்தினர் ஒருவரின் இறுதிச் சடங்கின்போது வழங்கப்படவில்லை. இரக்கமற்ற அரக்கர்களால் மிருகங்களைவிட கேவலமான வகையில் அடித்துக்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் இறுதிச் சடங்கின்போதே கொலைக்குப் பொறுப்பான மஹிந்த அரசால் வழங்கப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிமலரூபனின் உடல் வவுனியா நெலுக்குளம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நெருங்கிய உறவினர் மாத்திரமே அஞ்சலி செலுத்தினர். சுமார் 150இற்கும் குறைவானவர்களே வருகை தந்திருந்தனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஓலை குடிசையை இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். அவரது வீட்டினுள்ளும் இராணுவத்தினர் நடமாடினர்.

அரச பொறுப்பில் உள்ள சிறைச்சாலையினுள் அடித்து துவம்சம் செய்யப்பட்ட நிமலரூபன் மஹர சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்தார். சடலத்தை ராகம வைத்தியசாலைக்கு மாற்றிய மஹிந்த அரசு அங்கு வைத்து மாரடைப்பு ஏற்பட்டதனால்தான் உயிரிழந்தார் எனத் தெரிவித்தது. தனது ஒரே பிள்ளையான நிமலரூபனை உயிருடன்தான் தன்னிடம் ஒப்படைக்கவில்லை, அவனின் உடலையாவது தாங்களே என கெஞ்சிய பெற்றோர் மீதாவது மஹிந்த அரசு அனுதாபம் காட்டவில்லை. சுமார் 20 நாட்கள் நீதிமன்ற வாசலில் அலையவைத்தது. உடல் கிடைக்கப்பெற்றவுடன் இனி இறுதிக்கிரியையாவது நிம்மதியாக செய்யலாம் என எண்ணியிருந்த பெற்றோரையும், உறவினர்களையும், சுற்றத்தாரையும் விட்டபாடில்லை. உடல் நெலுக்குளம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பொலிஸார், இராணுவத்தினர் நிமலரூபனின் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். இறுதிக்கிரியைகள் தொடர்பாக எவருக்கும் தெரிவிக்கக்கூடாது என நிமலரூபனின் அக்காவுக்கு (உடன் பிறவாத) அநாமதேய அழைப்புக்களும் வந்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் இரவோடிரவாக பொலிஸார் அகற்றியிருந்தனர். இவ்வளவு தூரம்தான் வந்தார்கள், பரவாயில்லை, மயானம் வரைக்கும் வரவேண்டுமா? நிமலரூபனின் வீட்டிலிருந்து நெலுக்குளம் பொது மயானத்துக்கு சுமார் 3 கிலோமீற்றர் வரை தூரம் இருக்கும். அதுவரைக்கும் பாதையின் இருமருங்கிலும் பொலிஸார், இராணுவத்தினர் துப்பாக்கிகள், பட்டன் பொல்லுகள் சகிதம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஒருவேளை நிமலரூபன் எழுந்துவிட்டால், மீண்டும் அடித்து நொறுக்க வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை பாதுகாப்பு. அத்தனையும் எங்களின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெறவேண்டும் என்பதில் மஹிந்த அரசு மிகவும் கவனமாக இருந்தது. புதைக்குழியையும் பொலிஸார்தான் தோண்டியிருந்தனர் என்றால் பாருங்களேன். மண் அகழும் இயந்திரத்தைக் கொண்டு பொலிஸார் நிமலரூபனை புதைப்பதற்கான குழியை தோண்டியிருந்தனர். முற்றாக குழி மூடுபடும் வரை இராணுவத்தினரும் பொலிஸாரும் மயானத்தை விட்டு அகழவில்லை.

தாயின் சாபம்

நிமலரூபனின் தாயாரான க. இராஜேஸ்வரி தனது ஒரே மகனை இழந்த துயரத்தில் கதறியழுத அந்த நேரம் அனைவரது இதயமும் ஒரு கணம் நின்றுபோனது போல் இருந்தது. அவரது அழு குரல் அங்கிருந்த அனைவரது கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது. அத்தோடு, தனது மகனை துன்புறுத்தி கொலைசெய்தோருக்கு, செய்யத் தூண்டியோருக்கு, அதற்கு பொறுப்பானவர்களுக்கு சாபம் விடுவதைப் போன்று அவரது அழுகை அவ்விடத்தையே அதிரச் செய்தது. செய்தி சேகரிப்புக்காக வந்திருந்த சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் தங்களது கமராவை அப்படியே வைத்துவிட்டு அழுததையும் காணக்கூடியதாக இருந்தது.

“பிள்ள வெளிய வந்துரும். கல்யாணத்த பண்ணி வைக்கலாமுனு இருந்தேன். ஆனா இப்படி நடந்துருச்சே… உங்கள அடித்துக்கொல்லச் சொல்லி எந்த சட்டத்தில இருக்கு? எத்தனையாவது சட்டத்தில இருக்கு? என்ட பிள்ளைய கொன்றிருக்காங்க. நீங்க யாராயிருந்தாலும் பரவாயில்ல. என்ன வந்து சுட்டுபோட்டு போகலாம். நான் பயப்படமாட்டேன். ஒரு மனுஷனுக்கு நீதி, நியாயம், உண்மைதான் தேவை. மிருகங்கள்… நீதியில்லாம.. என்ட வயிறு எரியிறமாதிரி உங்கட வயிறு எரியும். இந்தக் கிழவன் உழைச்சிதான் மகன வளர்த்தார். கொலை செய்து, கொள்ளையடித்து என்ட மகன நான் வளர்கல. நன்மையில்ல, தீம… என்ன சுடு பயமில்ல. மற்றவன்ட நெஞ்சில குண்டு பாயிற மாதிரி என்ட நெஞ்சிலயும் குண்டு பாயலாம். மற்றவனுக்கு நோகுற மாதிரி எனக்கும் நோகலாம். 12 வருஷம் தவமிருந்து பெற்ற என் பிள்ள… ஆசையா என் பிள்ளய வளர்த்தேன். குற்றம் செய்திருந்தால் தண்டனை கொடுத்திருக்கனும். கொலைசெய்யனும்னு எந்த சட்டத்தில இருக்கு? எங்க இருக்கு? ஒழிச்சி வச்சி என்ட மகன கொலை செஞ்சிருக்கீங்க. ஆயிரக்கணக்குல துவக்கோடு என்ட வீட்ட சுத்தி இருக்கானுக. எங்கிட்ட ஒன்னுமே இல்ல. முடிஞ்சா வா… எனக்கு முன்னாடி என் மகன கொலை செய்திருக்கனும், அப்ப தெரியும் யார்? எப்படினு?”

“இடியப்பம் தீத்துனு இந்தக் கையால வாய்கரிசி போடுறேனே”

மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தாய் கதறியழ, அங்கிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர் சொட்டத் தொடங்கியது.

நன்றி விகல்ப,

சுயநலக்காரர்கள்

நிமலரூபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த எம்.பிமார்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என வந்திருந்தனர். வழமையாக நாம் காணும் முகங்களே அங்கும் இருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களான சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதம், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி, ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களான சிறிதுங்க ஜயசூரிய, உந்துல் பிரேமரத்ன தவிர்ந்த வேறு எந்தவொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் நிமலரூபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒருவர்கூட வந்திருக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் தொடர்பான கருத்து உள்வாங்களுக்காக புறக்கோட்டையில் ஒவ்வொரு வீதியாகச் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏன் நிமலரூபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. தமிழன் என்பதாலா…?

வவுனியா சிறைச்சாலையில் மீண்டும் புலிகளின் குரல் என சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்தை தெரிவித்து வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்கிறார்கள். தமிழர்களுக்கும் நல்ல முகத்தைக் காட்டிக்கொண்டு சிங்களவர்களுக்கும் அதே முகத்தைக் காட்டிக்கொண்டு நரித்தனக் காரியங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். அத்தோடு ஏனைய தமிழ் கட்சிகள் நிமலரூபனின் மரணம் தொடர்பாக வாய்திறக்கவே இல்லை. நிமலரூபனின் கொலைக்கு பொறுப்புக் கூறக்கூடியவர்களில் நீங்களும் உள்ளடக்குகிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் மறக்கலாகாது.

இனரீதியாக பிரிந்துள்ள ஊடகங்கள்

பொலிஸாரின் பிடியில் இருந்தபோது கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்கள் தொடர்பாக பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்ட சிங்கள, ஆங்கில பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் நிமலரூபன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவனம் செலுத்தவேயில்லை. அங்குலான, தொம்பே ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக சிங்கள பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களும் செல்லத் தவறவில்லை. அனைத்து சிங்கள பத்திரிகைகளும் வெளியிட்ட சொற்ப செய்திகளில் நிமலரூபனை புலி என்றே குறிப்பிட்டுள்ளன. நிமலரூபனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மறுநாள் 25ஆம் திகதி அனைத்து தமிழ் பத்திரிகைகளும் அந்தச் சம்பவத்தை பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தபோதிலும் சிங்கள பத்திரிகைகளில் இது தொர்பாக எந்தவொரு செய்தியும் வந்திருக்கவில்லை. கற்பழிப்பு, கொள்ளை, குடும்பச் சண்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்பத்திரிகைகள் அதிகாரவர்க்கத்தால் தமிழன் கொல்லப்பட்டால் அது தொடர்பாக கண்டுகொள்வதில்லை.

ஜூலை மாதம் தமிழனுக்கு கறுப்புதான் என்பது மீண்டுமொருமுறை நிமலரூபன் அடித்துக்கொலை செய்யப்பட்டது மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கொலைக்குப் பொறுப்பானவர்களும், தமிழர்களின் அழிவை எதிர்பார்த்துக் காத்திருப்போரும் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம். ஆனால், நிமலரூபனின் தாயாரின் குமுறல் அவர்களை தூங்கவிடாது. அந்தத் தாய் விட்ட சாபம் எப்போதும் அவர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

படங்களைக் கீழே காணலாம்.

  • 27 ஜூன் 2012 – அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சரவணபவனை மீண்டும் வவுனியா சிறைக்கு கொண்டுவருமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.
  • 28 ஜூன் 2012 – தமிழ் அரசியல் கைதிகளால் 3 சிறைக்காவலர்கள் பணயக்கைதிகளாக பிடித்துவைப்பு.
  • 30 ஜூன் 2012 – 3 சிறைக்காவலர்களுகம் மீட்கப்பட்டனர்.
  • 30 ஜூன் 2012 – அனுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டு தாக்குதல்.
  • 04 ஜூலை 2012 – தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் மரணம்.
  • 23 ஜூலை 2012 – நிலரூபனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.
  • 24 ஜூலை 2012 – நிமலரூபனின் பூதவுடல் நல்லடக்கம்.

செல்வராஜா ராஜசேகர்