படம் | Asiantribune

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07 | ஏழாவது பாகம்

###

தமிழ் தலைமைகள் கூடிப் படைக்கக்கூடிய முன்னுதாரணம் என்ன?

பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில் பல காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

முன்னேற்றங்களும், முன்னேற்றங்கள் போலத் தென்படுபவையும், பின்னடைவுகளும், பின்னடைவுகள் போலத் தென்படாதவையுமாகக் காட்சிகள் மாறுகின்றன. நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் இந்தக் காட்சிகள் மாறி மாறித் தருகின்றன.

பிரபாகரனின் காலத்தில் அரங்கேறிய ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் நம்பிக்கையின் அடிப்படை இருந்தது. முன்னேற்றங்கள் நிகழ்ந்தபோது அவை அந்த நம்பிக்கையை அதிகரித்தன; பின்னடைவுகள் நேர்ந்த பொழுதுகளில், அவற்றால் ஏற்பட்ட அவநம்பிக்கையைக் கீழே தள்ளி அந்த நம்பிக்கை மேவி வந்தது. அந்த நம்பிக்கை, தனிப்பட்ட பிரபாகரன் மீது இருந்த நம்பிக்கை – அவரது செயற்பாடுகளிலிருந்து பிறந்த நம்பிக்கை.

இன்றைய தமிழர் தலைவர்கள் பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், ஒரு தடத்தில் போர் நடவடிக்கைகளையும் அரசியல் விவகாரங்களையும் அவர் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்த சமவேளையில், இன்னொரு தடத்தில் மக்களுக்கான பொது நிர்வாக அலுவல்களையும் அவர் சமாந்தரமாக வழிநடத்திச் சென்றார். அரசியல் முன்னெடுப்புக்களும் இராணுவ நடவடிக்கைகளும் மாறி மாறிப் பின்னடைவுகளைச் சந்தித்த பொழுதுகளிலும் தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கான பொதுச் சேவைகளை அவர் நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றார். அரசியல் மற்றும் படைத்துறைப் பின்னடைவுகள் பொது நிர்வாகத்தில் இடையூறுகளை ஏற்படுத்த அவர் இடமளிக்கவில்லை. அத்தகைய அவரது தலைமைத்துவப் பண்பினாலும், செயற்பாட்டு இயல்பினாலும்தான் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையாதிருந்தது. அவரது அரசியல் மற்றும் இராணுவத் தோல்விகள் மக்களின் மனோதிடத்தை அவ்வப்போது தளர்வடையச் செய்தபோதும், அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைதான் ஒட்டுமொத்தமான போராட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையாகவும் பரிணமித்திருந்தது.

தற்போது அரங்கேறிவரும் அரசியற் காட்சிகளும் நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் மாறி மாறித் தருவனவாகவே நடந்தேறுகின்றன. ஆனால், அவரது காலத்தைப் போன்று, நம்பிக்கையீனங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை ஊட்டவல்ல செயற்பாடுகள் இப்போது எந்த அளவிற்கு முன்னெடுக்கப்படுகின்றன…?

இன்றைய தமிழர் அரசியல் முதன்மையாக இரண்டு தலைமைகளால், இரண்டு தடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஒன்று, அரசியல் அதிகார விவகாரத்தைத் தீவிரமாக முன்னிலைப்படுத்தி, அபிவிருத்தி விடயங்களுக்குக் குறைந்தளவு முக்கித்துவத்தைக் கொடுக்கின்றது. அடுத்தது, அபிவிருத்தி விடயங்களையே மும்முரமாக முன்னிலைப்படுத்தி அரசியல் விவகாரங்களை இரண்டாம் பட்சமாக்குகின்றது. ஒன்று – எதிர்ப்பு அரசியல். அடுத்தது – இணைந்த அரசியல்; ஒன்று – சம்பந்தனும் அவரது கட்சியும். அடுத்தது – தேவானந்தாவும் அவரது கட்சியும்.

இந்த இடத்தில்தான் நம்பிக்கைக்கும் நம்பிக்கையீனத்திற்குமான பாத்திரங்கள் வருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கமரூனின் வருகை, மன்மோகன் சிங்கோடு நடந்த சந்திப்புக்கள், இந்தியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், தென்னாபிரிக்க அரசின் வருகை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சர்வதேசப் போர்குற்ற விசாரணைகள் போன்றவையெல்லாம் முன்னேற்றங்கள் போலத் தென்படுகின்ற விடயங்கள். இந்த விடயங்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை இணைத்துப் பெருமை கொள்கின்றது. இந்த விடயங்களின் ஊடாக முழுமையான அரசியல் அதிகாரங்களைப் பெற்றெடுத்தாலே, நிலைக்கக்கூடிய பரிபூரணமான சமூக பொருளாதார அபிவிருத்தி சாத்தியமாகும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. இருந்தாலும், உண்மையில் இவையெல்லாம் தொடக்கத்தில் நம்பிக்கை தருவது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. ஆனால், நடைமுறையில் அவநம்பிக்கையைத் தாங்கிவருகின்ற விடயங்களாகவே இருக்கின்றன. சாதாரண மக்களது அன்றாட வாழ்வின் மேம்பாட்டினில் நேரடியான ஆக்கபூர்வ விளைவுகள் எதனையும் இந்தப் பாதையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காண முடியவில்லை.

இராணுவத்தை வெளியேற்றுவது போன்றதான அரசியற் கோசங்களையும், அரசியல் அதிகாரங்களைப் பெற்றெடுத்தல் போன்றதான அதியுச்ச வாக்குறுதிகளையும், சர்வதேச சமூகத்தின் திருவிளையாடல்கள் பற்றிய இராஜதந்திர விளக்கங்களையும், போர்குற்ற விசாரணைகள் தொடர்பான நீதிக் கதைகளையும் தமிழ் மக்கள் தாராளமாகக் கேட்டுவிட்டார்கள். ஆனால், அவை எதுவுமே உருப்படியான எவற்றையுமே இற்றைவரை கொண்டுவந்து சேர்க்கவில்லை. அரசியல் அதிகாரங்களே எல்லாவற்றுக்கும் அடிப்படையானவை என்பது புரிகின்ற போதிலும், அவற்றைப் பெற்றெடுப்பது எவ்வாறு சாத்தியமாகப் போகின்றது என்ற கேள்வியே சாதாரண மக்களிடத்தில் மிஞ்சிக் கிடக்கின்றது.

இன்னொரு தடத்தில், தேவானந்தாவும் அவரது கட்சியும் – கிடைத்தததையும், கிடைப்பதையும், கிடைக்கக்கூடியதையும் சேர்த்தெடுத்து தமிழர்கள் முதலில் தமது இருப்பைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அபிவிருத்திப் பாதையில் பயணிக்கின்றார்கள். அரசியல் அதிகார விடயங்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு, மக்களுக்கான வாழ்வாதரப் பணிகளை முன்னெடுக்கின்றார்கள். முழுமையான அரசியல் அதிகாரங்கள் இல்லாமையால் மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அபிவிருத்தியே செய்யப்படுகின்ற போதும், நம்பிக்கையீனத்திற்கு மத்தியில் இருந்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சி இது என்று சொல்லப்படுகின்றது. இந்தப் பாதையில் மக்கள் விளைவுகளைப் பார்க்கின்றார்கள். ஏதோ ஒரு வகையில், தமது சொந்த மண்ணில், அமைதியாக வாழும் சூழல் உருவாகுவதாக அவர்கள் கருதுகின்றார்கள். அரசியல் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும், ஒரு நீண்டகாலப் பயனை நோக்குமிடத்து, தேவானந்தா முன்னெடுத்துச் செல்லும் அரசியல்தான் பொருத்தமானதோ என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகின்றது.

பிரபாகரனின் காலத்தில் தேவானந்தாவும் அவரது கட்சியும் மறுபக்கத்தில் இருந்தனர்; மறுபக்கத்தில் இருந்ததால் துரோக முத்திரையையும் சுமந்தனர். முன்பொரு காலத்தில் துரோக முத்திரை குத்தப்பட்டிருந்த பலர் இப்போது கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கிறர்கள். பிரபாகரனின் காலம் போன்று இப்போது இரண்டு பக்கங்கள் இல்லை. தமிழ் பேசும் தலைமைகள் எல்லோருமே இலங்கை என்ற ஒற்றை நாட்டுக்குள் தான் தீர்வைத் தேடுகின்றார்கள். எல்லோரும் ஒரே கொள்கையோடு இருக்கின்றபோது, அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளை வைத்து அல்லாமல், அவர்கள் முன்னெடுக்கும் சேவைகளை வைத்தே அவர்கள் மீதான மக்களின் மதிப்புகள் தீர்மானிக்கப்படும். மக்கள் விளைவுகளைப் பார்க்கவே விரும்புகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குப் பலம் இருக்கின்றது. அந்தப் பலம் எத்தகையது எனில், எவ்வளவு ஆழமான அதிருப்திகள் இருப்பினும் தேர்தல் வருகின்றபோது தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்ற தைரியத்தினால் வந்த பலம். இன்னொரு வகையில் இதனைச் சொல்லுவதானால், தமக்குரிய கடமைகளை முழுமையாகச் செய்யாதுவிடினும் கூட, அடுத்த தேர்தலில் தாம் வென்றுவிடுவோம் என்ற அசட்டுத் துணிச்சலோடு வந்த பலம்.

இது, ஏறக்குறைய பிரபாகரனிடமிருந்த ஆயுத பலத்தைப் போன்றது. அந்தப் பலம் எத்தகையது எனில், என்னதான் அதிருப்திகள் இருந்தாலும் மக்கள் தனக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும், அவர்களுக்கு வேறு வழியில்லை என்ற தைரியத்தினால் வந்த பலம். இன்னொரு வகையில் சொல்லுவதானால், மக்களுக்கான எந்தவித பொதுச் சேவைகளையும் முன்னெடுக்காது, வெறுமனே ஆயுதப் போராட்டத்தை மட்டும் நடத்திக்கொண்டிருந்தாலும் கூட, மக்கள் தனக்குப் பின்னாலேயே நிற்பார்கள் என்ற அசட்டுத் திமிரோடு வந்த பலம்.

ஆனால், இங்கே வேறுபாடு என்னவெனில், எது நடந்தாலும் மக்கள் தனக்குப் பின்னாலேயே நிற்பார்கள் என்பது திடமான நிச்சயம் ஆகிவிட்டிருந்த போதும், மாறிவிடமாட்டாத ஒரு தெய்வீக வரம் போல அதனைக் கருதிவிடாமல், மக்களுக்கான சேவைகளைப் பிரபாகரன் விரிவாக்கியபடியே இருந்தார். கடுமையான போரும் அரசியல் நெருக்கடிகளும் தன்னை நாற்புறத்தாலும் நெருக்கிய பொழுதுகளில் கூட, பொதுச் சேவைகளுக்கு இடையூகள் நேர அவர் விடவில்லை. இந்தக் கருத்துரைத் தொடரின் நான்காவது பாகத்தில் நான் குறிப்பிட்டது போல – பிரபாகரனின் காலம் என்பது – யார் விரும்பாவிட்டாலும், எவர் நிராகரித்தாலும் – அன்று அவர் செய்த காரியங்களை இன்று செய்ய முனைவோரின் செயற்திறனை மதிப்பீடு செய்வதற்கான அளவீட்டு அலகாகவே இப்போது ஆகியிருக்கின்றது. அந்த அளவீட்டு அலகில் இன்றைய தலைவர்கள் பெறும் புள்ளிகள் எத்தனை…?

அதே சமயத்தில், வெளிநாடுகளில் இருந்தபடி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை எழுத முனைகின்ற தமிழ் செயற்பாட்டாளர்களும், தாங்கள் ஆற்றுகின்ற பணிகள் தொடர்பாக மீளச் சிந்திக்க வேண்டும். நம்பிக்கையீனத்திற்கு மத்தியில் நம்பிக்கையினையூட்டி மக்கள் இந்த மண்ணில் நிலைத்து வாழத்தக்க சூழலை ஏற்படுத்த உருப்படியாக எதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். பிரபாகரனின் வழித்தோன்றல்களாகத் தம்மை அடையாளப்படுத்த முனைவோர்கள் முதன்மையாக விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில், அவரது பணிகளைத் தொடர்வதென்பது நிச்சயமாகப் புலிக்கொடிகளை எந்தியபடி மேற்குலக நகரங்களில் கோசங்களை எழுப்புவது அல்ல. எந்த மக்களுக்காக இத்தகைய போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அந்த மக்களுக்கு அந்தப் போராட்டங்கள் நன்மைகள் எதனையும் தரவில்லை. பிரபாகரனின் அரசியற் கோட்பாட்டை வலுப்படுத்த விரும்புகின்றவர்கள் செய்யவேண்டியது என்னவெனில், சொந்த மண்ணை விட்டு விலகாமல் மக்கள் இங்கேயே காலூன்றி நிற்பதற்கேற்ற சமூக, பொருளாதாரச் சூழலை இங்கே உருவாக்கப் பாடுபட வேண்டும்.

தமிழர் நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாக மேற்குலகில் குரல் எழுப்புகின்ற தமிழ் ஆர்வலர்கள் உணரவேண்டியது என்னவெனில், மேற்குலகத்திற்கு அது ஒரு பிரச்சினை அல்ல. செறிவான சனத்தொகை உடைய இறுக்கமான பிரதேசங்களிலிருந்து, வேலை வாய்ப்புக் கிடைக்கின்ற அல்லது வாழ்க்கைச் செலவு குறைவான பிரதேசங்களுக்கு மக்கள் நகர்ந்து செல்வது ஓர் இயல்பான விடயம் என்றே மேற்குலகில் கருதப்படும். இலங்கைத் தமிழர் தாயகத்தில் நிலவுகின்ற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு என்னவெனில், அரசியல் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இந்த மண்ணிலிருந்து மக்கள் தொடர்ந்தும் வெளியேறுவது நிறுத்தப்பட வேண்டும். தேவையான பொருளாதார நிறைவுகளுடன் மக்கள் இங்கு வாழும் புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் நிலங்களை அரசு பலவந்தமாகப் பறித்தெடுக்கின்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, மக்கள் வாழாத வெற்று நிலங்களில் அரசு யாராவது மக்களைக் கொண்டுவந்து குடியேற்றினால், அதனை ஒரு பிரச்சினையாக எவரும் மேற்குலகத்தின் முன் வைத்தால், அதனை அவர்கள் ஒரு பொருட்டாக எடுக்கப்போவதில்லை.

அனைத்து அரசியல் அதிகார அபிலாசைகளுக்கும் அடிப்படையானது நிலம். நிலம் காக்கப்பட வேண்டும் எனில், மக்கள் அங்கு வாழ வேண்டும்; மக்கள் அங்கு வாழ வேண்டுமெனில், அதற்கேற்ற சமூக, பொருளாதாரச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழினம் ஒரு வளர்ந்துவரும் சமூகம். எல்லா வகையிலும் வளர்ந்து வரும் சமூகம். நீண்ட போரின் அழிவுகளிலிருந்தும், போர்க்கால மனோநிலையிலிருந்தும் மீண்டு வருகின்ற சமூகம். அடுத்தவர்களில் சார்ந்து நிற்காமல், தன்னைத் தானே தாங்கி நிற்கக் கூடிய பொருளாதார வலுவைப் பெற்றுக்கொள்வதற்காகத் தமிழ் சமூகம் தன்னை வருத்திப் போராடிக்கொண்டிருக்கின்றது. மகத்தான மானிடப் பண்புகளுடனும், மனிதத் தகமைகளுடனும், தனது பண்பாட்டுத் தனித்துவங்களை விட்டுக்கொடுக்காமல் தலை நிமிர்வதற்காகத் திணறிக்கொண்டிருக்கின்றது. இந்தச் சமூகத்திற்கு உதவிகள் தேவை. தனியே நிதி உதவி மட்டுமல்ல, எல்லா வகையான உதவிகளும் தேவை. அறிவை விருத்தி செய்யவும், சிந்தனையைப் பரவலாக்கவும் உதவிகள் தேவை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அதற்கு கைகொடுத்தாலே, தமிழ் சமூகம் இந்த மண்ணில் நிலைத்துத் தலைநிமிரும். அப்போதுதான் நிலம் பாதுகாக்கப்படும்; அப்போது தான் தமிழர்களது அரசியற் கோரிக்கைகள் வலுப்பெறும்.

வெளிநாடுகளில் வாழுகின்ற கணிசமான தமிழர்கள் அரசியல் விடயங்களில் தமது ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்பதும் உண்மைதான். பிரபாகரனின் காலத்திலேயே பலர் ஆர்வமற்றவர்களாகவே இருந்த போதும், அவரது காலத்தில் மும்முரமாக இருந்தவர்களில் ஏராளமானவர்கள் கூட இப்போது இருந்த ஆர்வத்தையும் இழந்துவிட்டார்கள். பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில், நம்பிக்கையீனத்திற்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான விடயங்கள் இந்த மண்ணிலிருந்து அவர்களுக்குப் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் விடயங்களில் அவர்கள் ஆர்வமற்று இருப்பது, தமது சமூகத்தின் மீதே அக்கறையற்று இருக்கின்றார்கள் என்று அர்த்தம் அல்ல. தமது சமூகத்தை, தமது ஊர்களை, தமது உறவுகளை, தமது பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் தளைத்தோங்க வைக்கும் விருப்பு அவர்களுக்குள் நிறைந்து கிடக்கின்றது. ஆனால், அவற்றைச் செய்வதற்கான தெளிவான வழிகள்தான் அவர்களுக்குத் தெரியவில்லை. முன்னர் அத்தகைய வழிகளைப் பிரபாகரன் ஏற்படுத்திக் கொடுத்தார். இப்போது அத்தகைய வழிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது யார்…?

இந்த மண்ணில் தனது பணிகளை முன்னெடுப்பதற்குப் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை வடக்கு மாகாண சபை முன்வைக்கின்ற அதே வேளையில், இந்த மண்ணில் முதலீடுகளைச் செய்யவும், தமது சமூகத்தை முன்னேற்ற ஆர்வத்துடன் தயாராகவும் வெளிநாட்டுத் தமிழர்கள் பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களது முயற்சிகளுக்கான அனுசரணைகளை வடக்கு மாகாண சபை ஒழுங்கமைத்துக் கொடுக்கமுடியும்.

மத்திய அரசோடு பங்காளியாக இருப்பதால் அரசியல் அதிகார விடயங்களில் கடும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் தேவானந்தாவின் கட்சிக்குச் சங்கடங்கள் இருக்கலாம், அது புரிந்துகொள்ளத்தக்கது. அபிவிருத்தி விடயங்களில் அரசோடு இணைவது அரசியல் அதிகாரத்திற்கான வற்புறுத்தல்களை மழுங்கடித்துவிடும் என்ற சங்கடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கலாம், அதுவும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால். ஒருங்கிணைய முடியாதுவிட்டாலும் கூட, தமிழ் மக்களின் தலைமைகளாக இரண்டு தடங்களில் பயணிக்கின்ற இந்த இரண்டு தரப்பினரும் ஓர் ஒத்திசைவோடு இயங்கலாம். ஒற்றை மனிதனாக இருந்து எவ்வாறு பிரபாகரன் நம்பிக்கையை விதைத்தும், நம்பிக்கையீனத்தைத் துடைத்தும் மாறி மாறிக் காரியங்களை நகர்த்தினாரோ, அதை இப்போதைய தமிழ் தலைமைகள் இரண்டும் சமமாகவும் சமாந்தரமாகவும் செய்ய முடியும். அரசியல் அதிகாரத்திற்கான நகர்வில் பின்னடைவு நேர்கையில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்தியும், அபிவிருத்தி விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றபோது அரசியல் அதிகாரக் கோரிக்கைகளைத் தீவிரப்படுத்தியும் செயற்படமுடியும். இவ்வாறான ஓர் ஒத்திசைந்த செயற்பாட்டிற்கான முன்னுதாரண இயங்குகளமாக வடக்கு மாகாண சபை விளங்க முடியும்.

ஏனெனில், ஆளும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பில் தேவானந்தாவின் கட்சியும் இருக்கின்ற நிலையானது, மூன்றாம் தரப்பின் இடையூறுகள் இன்றி, முடிந்தால் அங்கஜன் ராமநாதனின் ஒத்துழைப்புகளையும் பெற்று, தமிழர்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான பெரும் வாய்ப்பை வடக்கு மாகாண சபை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கெனவே, மாகாண அமைச்சர்களின் பணிகளை இலகுபடுத்தத் தன்னாலான உதவிகளை அங்கஜன் வழங்குவதான தகவல்களும் உண்டு.

இவ்வாறாக –

சட்டச் சிக்கல்கள் இருந்தாலும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பைப் பெறக்கூடிய நம்பகத்தன்மையான ஒரு பொறிமுறையை உருவாக்கியும் – கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பையும் பெறுவதற்கேற்ற ஒரு வேலைத்திட்டத்தை வரைந்தெடுத்தும் – தமிழ் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வின் உயர்விற்கான உருப்படியான பணிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், “ஒரு சாதாரண மாகாண சபை இப்படியெல்லாம் கூடச் செயற்படமுடியும்” என்ற ஒரு முன்னதாரணமாக வடக்கு மாகாண சபை திகழ முடியும். அத்தகைய ஒரு முன்னுதாரணம், கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் வருகின்றபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி தமிழ் பேசும் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடும்.

திருச்சிற்றம்பலம் பரந்தாமன்