படம் | Thyagi Ruwanpathirana

சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல்ல. அது ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த ஒரு விவகாரம்தான். ஆனால், கடந்த முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்தியிருந்த தீச்சுவாலையின் பிரகாசத்திற்கு முன்னால், அந்தப் புகை சிங்கள தேசியவாதிகளின் கண்களை உறுத்தியிருக்கவில்லை.

தமிழீழ விடுதலை புலிகள் என்னும் பலம்வாய்ந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு, தமிழர்களுடன் மொழியால் ஒன்றுபட்ட, ஆனால், மதத்தால் வேறுபட்ட முஸ்லிம்களின் ஆதரவு, அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது. புலிகள் ஒரு தனிநாட்டை இலக்குவைத்து, இலங்கையின் இராணுவ நிலைகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்த வேளையில், முஸ்லிம்களை உற்றுநோக்க வேண்டிய சூழல் தெற்கில் இருந்திருக்கவில்லை. அவ்வாறு செயற்படவும் முடியாது. ஆயினும், அந்த நேரத்தில் கூட முஸ்லிம்கள் குறித்து சிறிது கலக்கம் தெற்கில் ஏற்படாமல் இல்லை. புலிகளுக்கும் – அரச படைகளுக்கும் இடையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில்தான் ஹெல உறுமய என்னும் சிங்கள கடும்போக்குவாத அமைப்பு உருப்பெற்றது. அப்போது ஹெல உறுமயவின் தத்துவ ஆசிரியராக இருந்தவர்தான், தற்போது அமைச்சராக இருக்கும் சம்பிக்க ரணவக்க. முஸ்லிம்களுடன் ஆட்சியாளர்கள் நெருக்கமாக இருந்த அன்றைய சூழலில் கூட சம்பிக்க, முஸ்லிம்கள் குறித்து எச்சரிப்பவராகவே இருந்தார். தமிழர்களை விடவும் முஸ்லிம்கள் ஆபத்து நிறைந்தவர்கள் என்று அன்றே அவர் எச்சரித்திருந்தார். முஸ்லிம்கள் குறித்த ஒரு அச்சவுணர்வு தெற்கில் ஏலவே இருந்த ஒன்றுதான் என்பதை தெளிவுபடுத்தவே மேற்படி உதாரணத்தை இங்கு எடுத்தாண்டேன்.

இந்த பின்னனியில்தான், ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசானது முப்பது வருடகால யுத்தத்தில் பாரிய வெற்றியீட்டியது. யுத்த வெற்றியென்பது வெறுமனே புலிகளின் முடிவாக மட்டும் இருக்கவில்லை, மாறாக அது, தெற்கின் தேசியவாதிகளுக்கு ஆசுவாசமாக சிந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தது. அதுவரை புலிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி சிந்தித்துவந்த சிங்கள தேசியவாதிகளின் கவனமானது, அதுவரை தங்களுடன் நெருங்கியிருந்த முஸ்லிம்கள் பக்கமாகவும் திரும்பியது. அதுவரை கண்ணையுறுத்தாமல் புகைந்து கொண்டிருந்த முஸ்லிம் விவகாரம், தமிழர் விவகாரத்தை காட்டிலும் பாரதூரமானது என்பதை அவர்கள் உணர ஆரம்பித்ததன் விளைவே, தற்போது மேலெழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாடாகும். இதன் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாவிட்டாலும், முஸ்லிம்கள் குறித்த அச்சவுணர்வு சிங்கள தேசியவாதிகள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதே உண்மை.

இந்த பின்னனியில் உருவாகியிருக்கும் அமைப்புத்தான் தற்போது முஸ்லிம்களால் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிற பொதுபல சேனா. இந்த அமைப்பு, ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து முஸ்லிம்கள் குறித்து எச்சரிக்கின்ற ஒரு அமைப்பாகவே, அது தன்னை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறது. அது முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆரம்பத்திலிருந்தே முன்வைத்து வருகிறது. முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கம், அத்துடன், முஸ்லிம்கள் வர்த்தகத் துறையில் செலுத்திவரும் செல்வாக்கு ஆகியவற்றை இலக்காகக் கொண்டே பொதுபல சேனாவின் பிரச்சாரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாகவே அளுத்கம சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து அரசின் முன்னாள் கூட்டாளியான மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சுமற்றும் புலனாய்வுப் பிரிவின் மீது குற்றம் சாட்டியிருந்தார். அவர்களின் ஆசியுடனேயே மேற்படி அளுத்கம சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எவருமே அரசின் மீது நேரடியாக குற்றம்சாட்டியிருக்கவில்லை. மாறாக காவல் துறையின் மீதே குற்றம்சாட்டியிருந்தனர். எனவே, இதன் மூலம் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் மங்கள சமரவீரவின் கருத்தை நிராகரித்திருக்கின்றனர். இதன் மூலம் தாங்கள் இதுவரை அரசுடன் பேணிவரும் உறவை எந்த வகையிலும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்பதில் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் தெளிவாக இருந்தனர். இதில் அவர்கள் தங்களுக்குள் கட்சிகளாக பிளவுபடவும் இல்லை. ஆனால், இந்த விடயத்தை சரியாக கவனிக்கத் தவறிய தமிழ் அரசியல் தரப்புக்கள், மேற்படி தாக்குதல் சம்பவத்தின் விளைவாக முஸ்லிம் – தமிழர் உறவு மலரப் போவதாக கற்பனை செய்துகொண்டனர். நாடு கடந்த அரசின் பிரதமராக தன்னை அடையாளப்படுத்திருக்கும் உருத்திரகுமாரன் கூட, முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கை விடுமளவிற்கு நிலைமை சென்றது.

முஸ்லிம் – தமிழ் உறவு குறித்து அவ்வப்போது பலரும் விவாதிப்பதுண்டு. இவ்வாறான விவாதங்களை எடுத்து நோக்கினால், இவ்வகை விவாதங்கள் அனைத்தும் அவ்வப்போது மேலேழும் அரசியல் போக்கில் நிலைகொண்டிருப்பதை காணலாம். கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தை கூட்டமைப்பு வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு இணங்கும் பட்சத்தில், தாம் அவர்களுக்கு முதலமைச்சரை வழங்கவும் தயாராக இருப்பதாக அறிவித்தார். முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து ஒரு சாதகமான பதில் வருமென்னும் நம்பிக்கையுடன் சம்பந்தர் காத்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸோ, கூட்டமைப்பு நீட்டிய நடப்புக் கரத்தை புறந்தள்ளி, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கைகோர்த்தது.

புலிகள் வலுவாக இருந்த காலத்தில் முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் புத்திஜீவிகள் என்போரும் புலிகளின் தவறுகளை முன்னிலைப்படுத்தியே, தங்களின் அரச பிணைப்பை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், இன்று சம்பந்தன் போன்ற மிதவாத, சர்வதேசம் அங்கீகரித்திருக்கின்ற தலைவர் ஒருவருடன் இணைந்து பணியாற்ற முடியாமைக்கு என்ன காரணத்தை அவர்கள் சொல்வார்கள்? சம்பந்தனுடன் இணைந்து பணியாற்ற முடியாத ரவூப் ஹக்கீமால், வேறு எந்தவொரு தமிழ் தலைவருடனும் இணைந்து பணியாற்ற முடியும்?

ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் தலைவர்கள் எவரும், கணிசமான தமிழ் மக்கள் இறுதிப் போரில் அகப்பட்டுக்கிடந்த சந்தர்ப்பத்தில், ஒரு சிறு கரிசனையைக் கூட காண்பித்ததற்குச் சான்றில்லை. ஆனால், தெற்கில் உள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்திருந்தனர். இது குறித்த ஒரு சிறு குற்றவுணர்வு கூட முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் என்போருக்கு ஏற்படவில்லை. யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட, கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுத்த எந்தவொரு செயற்பாட்டிலும் முஸ்லிம் தலைவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள முயன்றதில்லை. அவ்வாறிருந்த போதும், கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு இடம் கொடுத்திருந்தது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னரான கடந்த ஜந்து வருடங்களில் முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஒரு கையைக் கூடஉயர்த்தியதற்குச் சான்றில்லை. இதனை இன்று முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக கதைகள் புனைவோர் கருத்தில்கொள்ள வேண்டும்.

இன்று ஒரு அளுத்கம என்னும் சம்பவத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் தமிழர்களின் பக்கமாக நிற்பார்கள் என்பதை எதனைக் கொண்டு மதிப்பிடுவது? இப்பத்தியாளரின் கணிப்பில், தமிழர்கள் என்னதான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலும், முஸ்லிம் தலைவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்ப்பரசியலில் ஒருபோதுமே ஈடுபடப் போவதில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களவில் இதற்கு நியாயமுண்டு. சிங்கள மக்களும் – தமிழ் மக்களும் எதிர் மனோபாவத்தில் இறுகிப்போன கடந்த நான்கு தசாப்தங்களில் முஸ்லிம்கள் தங்களை பல்வேறு துறைகளிலும் வளர்த்துக் கொண்டனர். அந்த வளர்ச்சி சிங்களவர்களையும் தாண்டிச் சென்றுவிட்டது. அவர்களது இந்த அபார வளர்ச்சிக்கான அடிப்படையாக இருப்பது அரச ஆதரவு என்னும் கவசம்தான். எனவே, அந்தக் கவசத்தை அவர்கள் ஒருபோதும் கழற்றி வீசி, வீரம் பேசத் துணியமாட்டார்கள். இதனை விளங்கிக் கொள்ளாமல் முஸ்லிம்கள் தொடர்பில் கற்பனையை வளர்த்துக் கொள்வதானது, முஸ்லிம்களின் பிரச்சினையல்ல, மாறாக, அது அறியாமையென்னும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் பிரச்சினையாகும்.

அளுத்கம போன்று இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்கள் சினம்கொண்டு, அரசிற்கு எதிராகத் திரும்பப் போவதில்லை. வேண்டுமானால் தங்களுக்குள் நிலவும் கட்சி பேதங்களை புறம்தள்ளி, ஓரணியாக நின்று அரசுடன் பேரம் பேசவே முற்படுவர். தற்போதிருக்கும் அரசுமும் முஸ்லிம் தலைவர்களின் எல்லைக் கோட்டை தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறது. எனவே, முஸ்லிம் – தமிழ் அரசியல் இணைவு தொடர்பில் கற்பனைகளை வளர்ப்போர், கொஞ்சம் நிதானமாக இருந்தால், அது தமிழர்களுக்கு நல்லது. அதீத அரசியல் கற்பனைகள், தமிழ் சமூகத்திற்கு உதவாது.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

DSC_4908