படங்கள் | கட்டுரையாளர்

கடந்த ஜூன் 15ஆம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவே பதியப்பட்டது. இந்த அழிப்பு நடவடிக்கைகளில் அழிவடைந்துள்ள வீடுகளுக்குள் கவனமாக சென்று எடுத்த புகைப்படங்கள் மற்றும் சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியதைக் கொண்டு முன்வைக்கப்படும் பதிவிது.

அங்கு தற்போது பொதுபல சேனாவுக்கு எதிரான அதிதீவிர நிலைப்பாடே காணப்படுகிறது. அவர்கள் பொதுபல சேனா மீது கோபத்துடன் இருக்கிறார்கள். இனவாதிகள் நடத்திய அழிவின் பின்னர் மிகுதியாக காணப்படுகின்ற எரிந்த சுவர்களில் வெளிப்பட்டுள்ள உணர்ச்சியை மக்கள் எழுத்துக்களால் பதிவுசெய்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

“சிங்களம், முஸ்லிம் என்று பார்க்கவேண்டாம். சட்டத்தை அமுல்படுத்துங்கள்.” இது ஒரு குறிப்பாகும்.

‘தீவிரவாத பொதுபல சேனா’/ ‘பொதுபல சேனா வேண்டாம்’ இதுபோன்ற பல உணர்வு வெளிப்பாடுகளை காணமுடிந்தது.

கலபொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக நிறையவே எழுதப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால், சொல்ல முடியாதளவுக்கு அவர்களது கோபம் வெளிப்பட்டிருந்தது.

“பௌத்தம் கூறும் கருணை இதுவா?” சொல்லக்கூடிய வகையில் உள்ள ஒன்று இது.

“அரசின் ஆயுதம்தான் பயன்படுத்தப்பட்டது”, “கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறு”, மஹிந்த ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறு” என்ற சில உச்சகட்ட கோபத்தைக் அவர்களது எழுத்துக்களால் காணக்கூடியதாக இருந்தது.

98 படங்களை கீழ்காணும் flickr ஊடாக பார்க்கலாம்.

“இவர்கள்தான் எங்களுக்கு இப்படி செய்தார்கள்.” எனது கையில் கட்டப்பட்டிருந்த ‘பிரித்’ நூலை வெறித்துப் பார்த்தவாறு ஒருவர் கூறினார். ‘பிரித்’ நூல் என்பது பௌத்தர்கள் கையில் அணியும் புனிதமான நூலாகும். தீய, கொடூர அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவது மற்றும் குணப்படுத்துவதற்கான பலம் அந்த நூலுக்கு உள்ளதாக பௌத்தர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து எனது வேலையை செய்துகொண்டு செல்வதானால், ‘பிரித்’ நூலை கழற்றிவிட வேண்டும் என எண்ணினேன். இருந்தாலும் முடிவில் அதை அகற்றக்கூடாது எனத் தீர்மானித்தேன். பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் பொதுபல சேனாவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அளுத்கம மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். “நாங்கள் எல்லோரும் அவ்வாறில்லை.” எனது பாதுகாப்பிற்காக நண்பர் ஒருவர் இவ்வாறு கூறினார். இதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே எனக்குத் தோன்றியது.

“இது திட்டமிட்ட ஒரு கொள்ளை மிஸ். இனவாதம் என்று ஒன்றுமில்லை” என ஒருவர் கூறினார். அருகில் இருந்த இன்னுமொருவர் தலைசாய்த்து ஆமோதித்தபடி, தன்னுடைய வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

16ஆம் திகதி காலை உயிரிழந்த இருவரின் மனைவிகளும் இன்னும் வழமையான வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் நடந்த சம்பவங்களை நம்பமுடியாமல் வாழ்ந்து வருகின்றனர். மொஹமட் சஹிரான் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகிய இருவரும் பள்ளியின் பாதுகாவலர்கள். வீட்டில் எந்தவித பாதுகாப்பும் இல்லாததால் இவர்கள் இருவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் பாதுகாப்பிற்காக பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

வீடியோ ஒன்றில் ஏற்கனவே நான் பார்த்திருந்த மொஹமட் சஹிரானின் மூத்த மகளை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்னர் அப்லோட் செய்யப்பட்டிருந்த வீடியோவில் இருந்ததைப் போன்று, அந்தக் குழந்தையின் கண்கள் இரண்டும் அன்றும் ஈரமாகவே இருந்தன. மொஹமட் சிராஸின், அந்த குழந்தையின் நினைவை மனதிலிருந்து விலக்கிவைப்பதற்காக ஸ்மார்ட் போனில் ஏதோ செய்துகொண்டிருந்தார் எனது நண்பர். சிராஸின் மைத்துனர் அன்றைய நாள் இரவு நடந்ததை விவரிக்கத் தொடங்க, சிராஸின் இளைய மகள் தாய் இருந்த அறையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள். கண்ணீரை வரவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் தாய், குழந்தையின் கால்களில் படிந்திருந்த தூசியை தட்டத் தொடங்கினாள்.

“மிஸ், இப்படித்தான் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்கும்.” அந்நேரம் ஆறுதலாக சொல்வதற்கு ஒரு சொல்லை கூட என்னால் தேடிக்கொள்ள முடியவில்லை.

இன்னொருவர் சொன்னார், இது மறைமுகமாக இருந்து செயற்படுபவர்களின் ஆசிர்வாதமென்று. “நடந்திருக்கும் அழிவுகளைப் பார்த்தாவது, நிறுத்துவார்களேயானால்…”

நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

தியாகி ருவண்பதிரண எழுதி Groundviews தளத்தில் The aftermath: Aluthgama two weeks on என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கமே இது.