படம் | Reuters photo/ Dinuka Liyanawatte, Khabarsouthasia

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 05 | ஐந்தாவது பாகம்

 ###

தோற்றுப் போனதை விடவும் வேதனையான உணர்வு எது தெரியுமா?

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியபோது, அவரோடு இரண்டறக் கலந்திருந்து அவரது எண்ணங்களைச் செயல் வடிவமாக்கியோர் முதன்மையாக இரண்டு தரப்பினர். ஒன்று – தளத்தில் அவரோடு கூடவே இருந்த அவரது போராளிகள். அடுத்தது – நாடுவிட்டுச் சென்றுவிட்டபோதும் அவருக்குத் துணையாக நின்ற அவரது மக்கள்.

இந்த இரண்டு தரப்பினரும் இல்லாமல் அவரால் ஓர் அணுவைக் கூட அசைத்திருக்க முடியாது.

இப்போது அவர் உயிரோடு இல்லை. அவர் நடாத்திய போரின் எச்சமாக மிஞ்சியிருப்பது – ஒரு பக்கம், தப்பியிருக்கும் முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களும்; அடுத்த பக்கம், 90,000 வரையான கணவன்மாரை இழந்த பெண்களும் அவர்கள் கொண்டுநடத்தும் குடும்பங்களும். இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் சமூகத்தினரில் ஏறக்குறைய காற் பங்கினர் இவர்கள்.

இவர்களுள் உடற் பாகங்களை இழந்தும், உடற்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டும் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். இவர்களுள் மிகப் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர். இவர்கள், அலட்சியப்படுத்திவிட முடியாத அளவுக்கு நிச்சயமாக ஒரு கணிசமான தொகையினர்.

இது மிகவும் ஆழமான ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சினை; மிகவும் விரிவான ஓர் அரசியற் பிரச்சினையும் கூட.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்குகின்ற இலங்கைத் தமிழ் சமூக – அரசியற் செயற்பாட்டாளர்கள் – போர் விட்டுச்சென்றிருக்கும் இந்த உயிர்களின் நல்வாழ்வுக்காகத் தயாரித்திருக்கும் திட்டங்கள் என்ன…?

தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை அடைவதற்குக் கொடுக்கப்படுகின்ற அதே அளவு முக்கியத்துவம், இந்த விவகாரத்திற்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படாதது ஏன்…?

எனது நெடுநாள் நண்பன் ஒருவன் நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவன்; ஆழமான உரையாடல்களுக்குத் தகுதியானவன். பிரபாகரனுக்கு நெருக்கமாகப் பணியாற்றியவன்; சாகசங்கள் செய்தவன். இப்போது கிளிநொச்சியில் வாழ்கிறான். முதுகெலும்பில் குண்டு தாக்கியதால் இடுப்பிற்குக் கீழே இயக்கமற்ற உடல்; வருமானத்திற்காகத் தொழிலுக்குப் போகும் மனைவி; இரண்டு குழந்தைகள்.

அவனது கதை இந்த நான்கு வரிகளையும் விட ஆழமானது; ஆத்மார்த்தமானது. அவனது நிலை தனித்த ஒருவனின் கதை மட்டும் அல்ல. அவனைப் போன்ற பல்லாயிரம் பேரின் நிலை.

“தோற்றுப் போனதை விடவும் கொடுமையான உணர்வு கவனிப்பாரற்றுக் கிடப்பதுதான்” என்கிறான். “வெறும் பந்தயக் குதிரைகள் போல நாங்கள் பாவிக்கப்பட்டு விட்டோமா…?” என்று கேட்கிறான்.

அவனைப் போன்றவர்கள் ஒவ்வொருவருமே, தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு மனம் கனத்துவிடும் சோகங்களைத் தாங்கி நிற்கின்றார்கள்.

“தலைவர் இருந்தபோது அள்ளிக்கொடுத்த எங்கட சனங்களுக்கு இப்போது என்ன நடந்தது, அண்ணை…?

இயக்கம் இருந்தபோது ஆயிரக் கணக்கானவர்கள் வன்னிக்கு வந்து போனார்களே, அவர்களெல்லாம் இப்போது எங்கே…?

அப்போது நாங்கள் வெற்றிகளைக் குவித்தபோது கொண்டாடியவர்கள், இப்போது ஒரு பொழுது என்றாலும் எங்களைப் பற்றி நினைப்பார்களா…?

அல்லது, அவர்களையும் வெறும் காசு காய்த்துக் கொழிக்கும் மரங்கள் போலவே நாம் நடத்திவிட்டோமா…?”

– கண்களில் நீர் கசிய அவன் கேட்கிறான். யார் மீதும் அவனுக்குக் கோபம் இல்லை. எவரில் குற்றம் காணவும் அவன் முயலவிலை. கவலையும் ஆற்றாமையுமே மிஞ்சிக்கிடக்கின்றது.

“அல்லது, முழு மக்கள் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்திப் போராட்டத்தின் ஒட்டுமொத்தமான கூட்டுப் பொறுப்பை எல்லோரும் பகிர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்காது விட்டதும் தலைவரின் தவறு தானா…?” என்கிறான்.

எப்போதுமே கண்காணிக்கப்படுவதான அச்சம்; எதிர்பாராமல் வந்துபோகும் விசாரணையாளர்களால் ஏற்படும் பயம்; நாளைய வாழ்வு பற்றிய நிச்சயமின்மை தருகின்ற சஞ்சலம்; பொருளாதாரத் தேவைகள் தருகின்ற நிம்மதியின்மை; சமூக அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்படுகின்ற கவலை; ஆண் துணை இல்லாத பெண்களாய் இருப்பதால் தேடி வருகின்ற சமூகத் தொல்லைகள்; பாதுகாப்புக்காக ஏற்படுத்தவேண்டியிருக்கின்ற வேண்டாத உறவுகள்; அந்த உறவுகளால் கிடைத்துவிடுகின்ற அவப் பெயர்கள்; போதிய கல்வித் தகுதிகள் இல்லாமையால் மறுக்கப்படுகின்ற தொழில் வாய்ப்புக்கள்; தேவையான உடல் வலு இல்லாமையால் கிடைக்காது போகின்ற வேலைகள்; இந்த வாய்ப்புக்களைத் தேடி அலைவதால் ஏற்படுகின்ற அயர்ச்சி; எப்போதும் அடுத்தவரில் சார்ந்திருக்க வேண்டியிருக்கின்ற துயரம்; இவை எல்லாவற்றாலும் குடும்பத்திற்குள் ஏற்படுகின்ற மனக் கசப்புகள்; “என்னடா இது வாழ்க்கை?!” என்று ஒட்டுமொத்தமாக வருகின்ற விரக்தி, இதுதான் பெருமளவுக்கு அவர்களது வாழ்க்கை.

இந்த முன்னாள் போராளிகளுக்காகவும் போரில் கணவன்மாரை இழந்த பெண்களுக்காகவும் இலங்கையில் சட்டபூர்வ அங்கீகாரத்துடன் இயங்கும் வடக்கு மாகாண சபை, தனித்தும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சமூகத்தோடு கைகோர்த்தும் ஒரு பல்பரிமாண வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும்.

முடியுமான வரையில், இயலுமான பொறுப்புக்களில், மாகாண சபையின் நிர்வாகத்திற்குள் அவர்களைப் பணிகளுக்கு அமர்த்துவதிலிருந்து அவர்களுக்கான வேலைத் திட்டங்களைத் தொடங்க முடியும்.

முன்னாள் போராளிகளது குடும்ப வாழ்வுகள் சிறப்புற்று, அவர்கள் சமூகத்திற்குள் மேம்பட்டு, தமக்குத் தொல்லைகள் தராமல் தனிப்பட்டு வாழ வேண்டும் என்பதுதான் அரசினதும் அரச ஆயுதப் படைகளதும் நிச்சயமான நோக்கம். அதனால், அவர்களை மாகாண சபையின் பணிகளுக்குள் ஈர்த்துக்கொள்வதையிட்டோ, அல்லது அவர்களுக்கான வேலைத் திட்டங்கள் எதனையும் மாகாண சபை செயற்படுத்துவதையிட்டோ அரசிற்கு எந்தப் பிரச்சினையுமே இருக்காது. அது மட்டுமல்லாமல், மாகாண ஆட்சி விரும்பினால், அரசின் முழுமையான ஆசீர்வாதத்தையும் ஒத்துழைப்பையும் கூட இந்த முயற்சிகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

விக்னேஸ்வரன் நிர்வாகங்கள் செய்யாதவர்; அரசியலுக்கும் புதியவர்; சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாகவே நடப்பவர்; வழமையான நிர்வாக ஒழுங்குகளைப் பின்பற்றியே வாழ்ந்தவர்; வடக்கு – கிழக்கு வாழ் மக்களுக்கு வெளியிலும், அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு வெளியிலும் வாழ்ந்தவர்; கல்வித் தகுதியை மட்டும் வைத்தே மனிதர்களின் பணியாற்றலை அளவிடும் பழக்கத்திற்குள்ளால் வளர்ந்தவர்; அந்த அடிப்படையிலேயே வடக்கை நிர்வகிப்பதற்கான மனித வலுவைத்தான் தேட வேண்டும் என அவர் இயல்பாகவே எண்ணக் கூடும். அப்படி அவர் எண்ணுவாராயின், அது அவரது தவறோ, குறைபாடோ அல்ல.

பிரபாகரன் விட்டுச் சென்றிருக்கும் விரிந்த பொது நிர்வாக அனுபவமும் அறிவும் உடைய விடுதலைப் புலிகளின் போராளிகள் பற்றி அவர் அறியாதிருக்கலாம். அவர்கள் பல்துறை ஆற்றல் படைத்தவர்கள் என்பது அவருக்குத் தெரியாதிருக்கலாம். அவர்கள் சிறுவயது முதலே குறைந்த கல்வித் தகமைகளோடு வன்முறைச் சூழலுக்குள் வளர்ந்தவர்கள் என அவர் நினைத்திருக்கலாம்; அதனால், அவர்கள் பொது நிர்வாகப் பணிகளுக்குப் பொருந்தி வர மாட்டார்கள் என அவர் கருதியிருக்கலாம்; அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தாலும், இந்த எண்ணங்கள் அவரைத் தடுத்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துத்தான் நேர்த்திருக்கு மிக நெருக்கமான – ஓர் உலகம் வியந்த – நிர்வாகத்தைப் பிரபாகரன் நடத்தினார் என்பதை, அந்த விடயங்கள் தெரிந்த, விக்னேஸ்வரனின் அமைச்சரவையில் இருக்கின்ற, ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா போன்றவர்கள் அவருக்கு எடுத்து விளக்க முடியும்.

விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு போராளியினது தொழில் அனுபவம் மற்றும் அறிவு என்பவற்றின் அடிப்படையில், அவரவருக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் – அந்தப் போராளிகளுக்கு சமூக அங்கீகாரத்தையும், பொருளாதார உறுதிப்பாட்டையும், பாதுகாப்பு உத்தரவாதத்தையும் மாகாண சபை வழங்க முடியும். அதேவேளையில், அர்ப்பணிப்பும், செயற்திறனும், பணி ஒழுக்கமும் மிக்க ஒரு மாபெரும் மனித வலுவையும் வடக்கு மாகாண சபைக்குள் ஈர்க்க முடியும். இன்னொரு வகையில் சொல்லுவதானால், அந்தப் போராளிகளின் நல்வாழ்வுக்காக இதைச் செய்யாதுவிடினும் கூட, மாகாண சபையின் பணிகளை நேர்த்தியாக முடிப்பதற்காக என்றாலும் அவர்களை உள்வாங்கிக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளது குடும்பங்களையும் போரில் கணவன்மாரை இழந்த பெண்கள் கொண்டு நடத்தும் குடும்பங்களையும், அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற்றி, சொந்தக் காலில் செழிப்படையச் செய்வதற்கான இன்னொரு வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் இணைத்து வடக்கு மாகாண சபை முன்னெடுக்க முடியும்.

இவ்வாறான பணிகள், அவர்கள் மீது இரக்கப்பட்டோ அல்லது அனுதாபப்பட்டோ ஆற்றப்பட வேண்டும் என்பதல்ல; மாறாக, தமது தலைமை எடுத்த சரியானதும் தவறானதுமான முடிவுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் அப்பால், சாதாரண போராளிகளாகத் தமக்கான கடமைகளை நியைவேற்றியவர்களைக் கைவிடாது தாங்கிப் பிடித்து நிமிர்த்திவிட வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் உண்டு. அத்தோடு, ஏதோ ஒரு வகையில், நடந்து முடிந்த போரிற்கு நேரடியாகவோ வேறு முறைகளிலோ ஆதரவுகளை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில், அந்தப் போரின் நேரடியான தாக்கங்களால் துவண்டிருப்போரைத் தூக்கி எழுப்பிச் சுயமாக வாழவைக்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பும் ஒட்டுமொத்தமான தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது.

தனிப்பட்ட முறையிலும், சீராக ஒழுங்கமைக்கப்படாத வகையிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏராளமான உதவிகளை நிச்சயமாக வழங்குகின்றார்கள். ஆனால், அந்தச் சேவை ஒரு சமச்சீரற்ற வகையிலேயே சென்றடைகின்றது. குறையத் தேவையானவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கின்றது; தேவையானவர்கள் பலருக்கு எதுவுமே கிடைக்கவில்லை; ஒரே குடும்பங்களுக்குப் பல வழிகளில் கிடைக்கின்றது; பல குடும்பங்களுக்கு உதவிகளைப் பெற வழிகளே தெரியவில்லை.

அத்தோடு, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் இந்தப் பணியில் பங்கேற்க விரும்புகின்ற போதும், வழங்கிய உதவிகள் முழுமையாகப் போய் சேராதுவிட்ட பழைய கசப்பான அனுபவங்களால் அவர்கள் தயங்குகின்றார்கள். மீண்டும் அது போலவே ஆகிவிடுமோ என்ற அச்சம் அவர்களைத் தடுக்கின்றது. அவர்களுக்கு நம்பகமான வழிகள் தெரியவில்லை. நம்பகமான வழிமுறைகள் உருவாக்கப்படின் மேலும் பலர் உதவிக் கரங்களை நீட்டுவார்கள். இதன் காரணமாகவே, சீராக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முறையில் இந்த உதவிகளைத் திரட்டி, அவை உரியவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேருவதற்கு ஏற்ற நேர்த்தியான ஒரு பொறிமுறையை வடக்கு மாகாண சபை ஊடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். அதற்கூடாக, அந்த உதவிகள் கிழக்கு மாகாண மக்களையும் சென்றடைய வகை செய்ய முடியும்.

உருப்படியான சுய தொழில் முயற்சிகளுக்கும் ஆக்கபூர்வமாகக் கல்வியைத் தொடர முயல்கின்றவர்களுக்கும் உதவிகள் வழங்கலாம்; தொழில் புரியும் உடல் நிலைகளில் இல்லாதோருக்கு உதவித் தொகைகளை வழங்கலாம்; பால், வயது, மனநிலை என்பவற்றின் அடிப்படையில் ஆதரவற்றோர்களுக்கு பாராமரிப்பு இல்லங்களை அமைக்கலாம்; மிகக் கொடூரமான போர் நிகழ்ந்த காலத்திலேயே இவற்றையெல்லாம் திறம்படச் செய்த பிரபாகரனிடமிருந்தே இவற்றைச் செயற்படுத்துவதற்கான பாடங்களைக் கற்கலாம்.

வடக்கு மாகாண சபை நேரடியாக வெளிநாட்டுப் பண விடயங்களோடு சம்மந்தப்படுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கலாம். விடுதலைப் புலிகளின் நிதி மாகாண சபைக்கு வருவதாக அரசே அஞ்சலாம்; அல்லது, வேறு எவராவது அவ்வாறான கதைகளைக் கட்டலாம். எனவே, வடக்கு மாகாண சபை, ஓர் அரசு சாரா நிறுவனத்தை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்க முடியும். அரசின் அனுசரணையுடனேயே இதனைச் செய்யவும் முடியும். ஜனநாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இலங்கையில் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றதுமான வடக்கு மாகாண சபையின் பின்னணியுடன் உருவாக்கபடும் ஓர் அரசு சாரா நிறுவனம், ஒரு நம்பகத் தன்மையை இயல்பாகவே பெற்றுவிடும்.

இதற்கு முன்னேற்பாடாக, உண்மையிலேயே பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களை இனங்காணவும், அவர்களது பாதிப்புக்களின் தன்மைகளை மதிப்பீடு செய்யவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் எத்தகையவை என்பதை அளவீடு செய்யவும், உதவிகளால் அவர்கள் பெறக்கூடிய பயன்பாடுகளைக் கணிப்பீடு செய்யவும், அந்த உதவிகளை எல்லாத் தரப்பிலிருந்தும் பெறத்தக்கதான வழிமுறைகளை ஆராயவும், அந்த உதவிகள் சரியான முறையில் உரியவர்களைச் சென்றடையக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கவும் என ஒரு குழுவை வடக்கு மாகாண சபை ஊடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்த முடியும்.

இப்போது மாகாண சபையில் உறுப்பினராக இருக்கின்றவரும், முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், ஆயுதப் போராட்ட அமைப்புப் பின்னணியிலிருந்து வந்தவரும், அரசியல் – இராணுவ அமைப்பு ஒன்றை நிர்வகித்த பட்டறிவை உடையவரும், இராஜதந்திரத் தொடர்பாடல் அனுபவத்தைக் கொண்டவருமான சித்தார்த்தன் தர்மலிங்கத்தின் தலைமையில் – முன்னாள் போராளிகள் மற்றும் போரின் பாதிப்புக்கு உள்ளான பெண்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கான அந்தக் குழுவை வட மாகாண சபை அமைக்கலாம். அந்தக் குழுவில், அவரைப் போலவே ஆயுதப் போராட்டப் பின்னணியிலிருந்து வந்த மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், எம். கே. சிவாஜிலங்கம் ஆகியோருடன், அனந்தி சசிதரனையும் இணைக்கலாம். வேறு சமூகப் பெரியார்களையும் அறிஞர்களையும் கூட இந்தக் குழுவில் சேர்க்கலாம்.

உலகளாவிய தமிழினத்தின் ஆதரவுகளை ஒருங்கு திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து, தற்காலிக மற்றும் நிரந்தரத் திட்டங்களை வகுத்து, அரசு சாரா நிறுவனம் ஒன்றின் ஊடான பொறிமுறைகளை உருவாக்கி அந்தக் குழு அவற்றைச் செயற்படுத்தலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளினதும், போரில் கணவர்களை இழந்த பெண்களால் கொண்டு நடத்தப்படும் குடும்பங்களினதும் வாழ்வு நிலை சிறப்படைவது, அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாது. அதோடு சேர்த்து, தமிழ் சமூகத்தினதும், ஒட்டுமொத்தமான இந்த நாட்டினதும், இந்த நாட்டை ஆளும் அரசினது தேவைகளையும் அது பூர்த்தி செய்யும்.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.