படம் | Tamilguardian

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 04 | நான்காவது பாகம்

###

பிரபாகரனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதிலிருந்து கற்ற பாடம் என்ன?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் இறந்தபோது அவரைப் பற்றி நான் எழுதிய நினைவுக் குறிப்பு இவ்வாறு செல்கின்றது,

“கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை மனதில் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய்விட்டது என்று யோசித்திருப்பாரா…?

அல்லது, “நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறுகின்ற உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்கவேண்டும்; என்று பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்) திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று கருதியிருப்பாரா…?

அல்லது, உறுதியான ஓர் அரசியல் அடித்தளத்தை இடாமல் இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் – தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் – இப்போது அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும்போது தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று எண்ணியிருப்பாரா…?

அல்லது, கடந்த காலங்களில் தான் செய்த சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா…?

அல்லது, தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி, எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா…?

எனக்கு எதுவும் தெரியாது.”

இப்போது பிரபாகரன் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அவர் விட்டுச் சென்ற பணியைப் பலர் பொறுப்பெடுத்துள்ளார்கள்.

அவர்களுள், அவரை அடியோடு நிராகரிப்பவர்களும் உண்டு; அரைகுறையாக ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு; அவரே சரியென்று சாதிப்பவர்களும் உண்டு.

எவர் எவ்வாறு இருந்தாலும், தமிழ் பேசும் மக்களுக்கு இன்று இருக்கும் கவலைகள் எல்லாம் பிரபாகரன் பற்றிவை அல்ல; ஆனால், அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர முன்வந்திருக்கும் இன்றைய தலைவர்களும், அவர் இழைத்தது போன்றதான தவறுகளையே விட்டுவிடுவார்களோ என்பதாகும்.

பிரபாகரனுக்குத் தமிழ் மக்கள் வழங்கிய நிபந்தனைகளற்ற ஆதரவிற்கு மிக முதன்மையான காரணம், அவர் மீதிருந்த பயம் அல்ல; மாறாக, அவரது போராளிகள் செய்துகொண்டிருந்த மகோன்னத தியாகங்கள். தங்களால் செய்யமுடியாத அர்ப்பணிப்புக்களை அந்தப் போராளிகள் செய்த போது, எதிர்த்து நின்று கேள்வியெழுப்பித் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உளத்துணிவு தமிழர்களிடம் இருக்கவில்லை; அவர்களது மனச் சாட்சியும் அதற்கு இடமளிக்கவில்லை. பிரபாகரன் தமிழீழம் எடுத்துத் தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும், அந்தத் தியாகங்களுக்கு முன்னால் தமிழர்கள் தங்களைத் தாழ்த்திக்கொண்டனர். பொன்னும் பொருளும் உயிருமாகக் கேட்டதெல்லாம் கொடுத்தனர்.

ஆனால், தமது இன்றைய தலைவர்களுக்கு முன்னால் தமிழர்கள் அவ்வாறு கைகட்டி வாய்பொத்தி இருக்கப் போவதில்லை. கேட்பதெல்லாவற்றையும் கேட்கும் பொழுதிலெல்லாம் கொடுக்கப்போவதுமில்லை. ஏகபோகத் தலைமைத்துவத்தைத் தனது கைகளில் எடுத்திருந்த பிரபாகரனிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்கியதன் விளைவை அவர்கள் ஒரு பாடமாகக் கற்றுள்ளார்கள்.

ஆனால், பிரபாகரனிடம் ஆயுதங்கள் இருந்தன; அச்சமூட்டும் ஆளணிகள் இருந்தன; பிரமிக்க வைக்கும் நுட்பங்கள் இருந்தன; கட்டுக்கோப்பான இராணுவ – அரசியல் அமைப்பு ஒன்று இருந்தது. ஏதோ ஒரு வகையில் தீர்மானிக்கும் சக்தியாக – தவிர்க்க முடியாத சக்தியாக – அவர் இருந்தார்.

இவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு – ஏதோ ஒரு தந்திரோபாயத்தைக் கையாண்டு – அற்புதமொன்றை அவர் நிகழ்த்தமுடியும் என்றும் – நிகழ்த்திவிடுவார் என்றும் – தமிழர்கள் நம்பியிருந்தனர். இருந்தாலும், இவையெல்லாமும் அவரிடம் இருந்தும், தனது மக்கள் எதிர்பார்த்தது போன்ற சரியான விளைவுகளைப் பெற்றெடுக்க அவரால் முடியவில்லை. அது தான் தமிழ் மக்கள் கற்றிருக்கும் பாடம்.

இன்று இருக்கின்ற தமிழ் அரசியற் தலைவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், பிரபாகரனைப் போன்றதான ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக – தீர்மானிக்கும் சக்தியாக – இருக்கின்றார்கள் என்று எந்த அடிப்படையில் கருத முடியும்…?

பிரபாகரனிடம் ஒரு பலம் இருந்தது. இலங்கை தொடர்பான எந்த நகர்வை எந்த நாடு எடுக்க முனைந்தாலும், அவரது அந்தப் பலத்தைச் சார்ந்தே தமது முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அந்தப் பலத்தைச் சார்ந்துதான் தமிழர்களுக்கு ஓர் அரசியற் தீர்வை வழங்க வேண்டிய இலங்கை ஆட்சியாளர்கள் மீதான நிர்ப்பந்தமும் இருந்தது. ஒன்றில், அவரோடு சேர்ந்தியங்க வேண்டும் அல்லது அவரை அழித்துவிட்டு இயங்க வேண்டும். வெளித் தலையீடுகளோ அல்லது வெளித் தலையீடுகள் இல்லாமலோ, தமிழர்களுக்கு நன்மைகள் விளையக்கூடிய சாத்தியங்கள், அவரது அந்தப் பலம் வகித்த பாத்திரத்தின் காரணமாகவே இருந்தன. அவ்வாறான ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடிய எத்தகைய பலத்தை தமிழினத்தின் இன்றைய தலைவர்கள் கொண்டுள்ளார்கள்…?

பிரபாகரனை எப்போதும் மறுதலித்ததுடன், அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை நிராகரித்ததுடன், தமிழருக்கு விடிவு கிடைப்பதற்கு அவரே பெரும் தடை என வலியுறுத்தியும் வந்த இன்றைய தலைவர்கள், அவர் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஒரு குறைந்தபட்சத் தீர்வைத் தன்னும் தமிழர்களுக்குப் பெற்றெடுக்க முடியாமல் இருப்பது எதனால்…?

சர்வதேச சமூகத்தை முன்னிலைப்படுத்தியே – அதனை நம்பியே – ஆட்சியுரிமைக்கான தமிழரது அரசியற் போராட்டம் இப்போது நகர்த்தப்படுகின்றது. தாம் தொடர்ச்சியான அரசியல், பொருளாதார, இராணுவ, இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்ற ஓர் அரசை மீறி – ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை மீறி – உள்நாட்டில் மக்களின் பேராதரவோடு அசுரபலத்துடன் இருக்கின்ற ஓர் அரசை மீறி அந்த நாட்டில் வெறும் 10 வீதமே உள்ள ஒரு மக்கள் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அரசியற் கட்சியுடன் எந்த ஒரு வெளிநாடும் எதற்காக நேர்மையான தொடர்புகளை வைக்க வேண்டும்…?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயலகம் நடத்தவுள்ள போர்க்குற்ற விசாரணையின் முடிவானது, குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிக்கு முன் நிறுத்தக்கூடும்; அவர்களுக்குத் தண்டனையையும் பெற்றுக்கொடுக்கக்கூடும். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும், தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரத்தரத் தீர்வு கிடைப்பதற்கும் எவ்வாறு வழிசெய்யும்…?

உலக ஒழுங்கு என்பது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பு வகிக்கும் பேரரசுகள், ஆங்காங்குள்ள பிராந்தியச் சிற்றரசுகளுடன் சேர்ந்து தமது தேசிய நலன்களுக்காக மட்டும் வனைந்தெடுக்கின்ற உறவுமுறையாகும். ராஜீவ் காந்தியைக் கொன்ற பாரதூரமான செயலுக்காக மட்டும் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பிரபாகரனை அழித்தன என்று சொல்ல முடியாது அல்லது தனது அரசியல் கோரிக்கைகளை அடைவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகளுக்காக மட்டுமே அவர் அழிக்கப்பட்டார் என்றும் சொல்ல முடியாது. மாறாக, அவரது அரசியல் இலட்சியமே தமது தேசிய நலன்களுக்கு இடையூறாக அமைந்ததனாலேயே குறிப்பாக அவர் அழிக்கப்பட்டார். இதில் தமிழர்களுக்கான பாடம் என்னவெனில், அவர்களது கோரிக்கைகள் உலகச் சக்திகளின் தேசிய நலன்களைத் திருப்திப்படுத்தவில்லை எனில், அந்த இலக்குகளை அடையவதற்கு உலகச் சக்திகள் துணை இருக்க மாட்டார்கள்; தடையாகவும் இருப்பார்கள். இத்தகைய புறநிலையில், தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய உயரத்திலும், இந்த வல்லரசுகளின் தேசிய நலன்களைப் பாதிக்காத அளவுக்குத் தாழ்வாகவுமான ஒரு தீர்வு ஒரே சம மட்டத்தில் எவ்வாறு சாத்தியமாகும்…?

மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் மாறாக இலங்கை செயற்படுவதும், இலங்கையைத் தமது வழிக்குக் கொண்டுவர முடியாமல் மேற்குலகு சிக்கல்படுவதும்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் அரசியலின் இன்றைய பலம். இது பிரபாகரன் வைத்திருந்ததைப் போன்றதான சொந்தப் பலம் அல்ல; இது இலங்கை அரசின் பலவீனத்தால் வந்த பலம். திடீரென, தமது ஆட்சியையும் அன்பர்களையும் பாதுகாப்பதற்கான ஒரு தந்திரோபாயத் திருப்பத்தைச் செய்து மேற்குலகத்துடனும் இந்தியாவுடனும் இலங்கை அரசு ஒரு சமரசத்திற்குப் போய் பலம் பெற்றுவிடுமிடத்து, பலமிழந்து போய்விடும் தமிழர்கள் தமக்கான புதிய பலத்தைத் தேடிக்கொள்வது எவ்வாறு…?

இந்திய நாட்டை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரியாகப் பிரபாகரன் எப்போதாவது கருதினார் என்று சொல்ல முடியாது. இலங்கைத் தமிழர்களின் நலன்களும் இந்திய நாட்டின் நலன்களும் பொருந்திவராது என்பதுதான் அவருடைய பிரச்சினை. அதன் காரணமாக, இந்தியாவின் முயற்சிகளை அவர் ஐயத்தோடு பார்த்தார்; இந்தியாவின் முடிவுகளை ஏற்கத் தயங்கினார். அதனால், இந்தியாதான் அவரை எதிரியாகப் பார்த்தது. தமது வழிக்கு வர மறுக்கின்றார் என்பதால் இந்தியாவே அவர் மீது போரைத் தொடுத்தது. ‘பிரபாகரன்தான் பிரச்சனைக்காரன்’ என்று சொல்லுபவர்கள், அவரது இறப்புக்குப் பின்னர் – கடந்த ஐந்து ஆண்டுகளாக – ஆகக் கடைசியாக ஜெனீவாவில் வாக்களிக்காது விலகியது வரை – இந்தியா நடந்துவருகின்ற முறையை எவ்வாறு நியாயப்படுத்தவார்கள்…?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை எய்தி மக்களின் பேராதரவு தங்களோடு இருப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரூபித்தால், ஜெனீவா வாக்கெடுப்பின் போது இந்தியா அவர்களோடு நிற்கும் என்ற வாக்குறுதி டில்லியில் வைத்து இந்தியாவால் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது. அதை நம்பி, ஜெனீவாத் தீர்மானத்தில் இந்தியாவின் ஆதரவைத் தாங்கள் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை, தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வோசிங்டனில் வைத்து வழங்கினார் சுமந்திரன். ஆனால், கடைசியில் ஜெனீவா வாக்கெடுப்பின் போது இந்தியா பின்பற்றிய கொள்கை, மாறியிருக்கின்ற புதிய நரேந்திர மோடி அரசில் மாறிவிடும் என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உண்டு…?

எப்பெயர்ப்பட்ட பாரத மாதா பக்கத்திலிருந்தே அந்த அன்னை அருளிய மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதில் இடர்பாடுகளும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் நிலவுகிறபோது, அந்த மாகாண சபையை முழுமையாகப் பெறுவது எவ்வாறு…? அத்தோடு, அந்த 13ஆவது திருத்தச் சட்டத்தையும் தாண்டிச் செல்வது பற்றிய வாக்குறுதிகள் வழங்குவோர் அதனைச் சாத்தியமாக்கப் போவது எவ்வாறு…?

தனது கடைசி நாட்களில் பிரபாகரன் அவ்வாறெல்லாம் நினைத்திருப்பாரா என்று அன்று நான் எழுதியது அவருக்கு எதிரான எண்ணப்பாட்டினால் அல்ல. இன்றைய தலைவர்களின் அரசியல் நகர்வுகள் தொடர்பான தெளிவைத் தேடி இன்று நான் இவ்வாறு எழுதுவது இவர்களுக்கு மாறானவன் என்பதாலும் அல்ல.

இந்தக் கேள்விகள் என்னிடம் மட்டும் இல்லை.

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.