படம் | Futureforjaffna

கடந்த வாரம் ஜூன் 23ஆம் திகதி சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. எமது நாட்டில் யுத்தம் ஆரம்பித்த காலந்தொடங்கி போர்க்கால விதவைகள் பற்றி நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்திருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டங்கள் இவ்வாறான பெண்களை இலக்குவைத்து செயற்படுத்தப்பட்டும்கூட, இன்னமும் தனியே வாழும் பெண்கள் அனுபவிக்கும் வறுமையைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பற்றியுமே ஊடக அறிக்கைகள் இடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வன்னியில் நிகழ்ந்த கோர யுத்தத்தின் பின்னரான கால கட்டத்தில் வடக்கில் வாழும் நலிவடைந்த பெண்கள் பாலியல் தொழிலை நாட வேண்டியிருக்கின்ற தேவையையும் பற்றி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அப்படியானால் இத்தனை காலமும் அரச நிறுவனங்களும் அரசுசாரா நிறுவனங்களும் அமுலாக்கிய திட்டங்கள் அனேகமும் பயனற்றுப் போய்விட்டன என்றே நாம் கருதவேண்டியதாகவுள்ளது. இந்தத் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வதற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இப்பெண்களைச் சந்தித்துக் கலந்துரையாடினாலே பிரச்சினையை விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு பெண் விதவையாக இருப்பதனால் சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படுவது எதனால்? நாம் பெண் பிள்ளைகளையும் ஆண் பிள்ளைகளையும் வேறு வேறாக வளர்க்கும் விதங்களினால்… பெண் பிள்ளைகளை வெளியுலகம் தெரியாதவர்களாய் பொத்திப்பொத்தி வளர்க்கின்றோம்; குடும்பத்தின் ஆண் துணைகளில் தங்கி நிற்கப் பழக்குகின்றோம்; ஆண்கள்தான் பிரதான உழைப்பாளிகள் எனக் கற்பிதம் செய்து அவர்களைத் தங்கள் தொழிலைத் தாமே மேம்படுத்த முடியாதவர்களாய் ஆக்கி விடுகின்றோம்; பெண்கள் செய்யக்கூடிய தொழில்கள் இவைதாமென்று வரையறுக்கின்றோம், அவையும்கூட அனேகமாகக் குறைந்த வருமானம் தருகின்ற தொழில்களாகக் காணப்படுகின்றன. ஏனெனில், உயர்ந்த வருமானம் தருகின்ற தொழில்களனைத்தும் ஆண்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இப்படியாக வளர்க்கப்படுகின்ற பெண்கள் திடீரெனத் தங்கள் குடும்பங்களின் பிரதான உழைப்பாளிகளான கண்வன்மார்களை இழந்தவுடன் நிராதரவான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தாம் தமது வாழ்க்கையினை நெறிப்படுத்தக்கூடியவர்கள் என்கின்ற உந்து சக்தி (Agency) அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த அடிப்படையான உள ஆரோக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்காமல் எந்த உதவியைப் புரிந்தும் அவர்களால் அதனைச் சரிவர உபயோகிக்க முடியாமல் போகின்றது. அனேகமான திட்டங்கள் வெறுமனே பெண்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியை மட்டுமே மையமாக வைத்து செயற்படுத்தப்படுகின்ற தன்மையினால் இவை தோல்வியடைகின்றன. பணம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாகப் பார்க்கப்படுவதுதான் இதன் காரணமாகும். நாம் தேவையான அனைவருக்கும் தொடர்ந்து வழங்க இயலுமாயின் பணம் ஒரு தீர்வாகலாம். ஆனால், அதுவோ மட்டுப்படுத்தப்பட்ட வளமாக அல்லவா இருக்கின்றது?

பொதுவாக குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் அல்லது தனியே வாழும் பெண்களைச் சந்தித்தால் சுயபச்சாத்தாபத்தினால் அவர்கள் வாடி வதங்குவது புரியும். அவர்கள் கோரஸாகக் கேட்கும் ஒரே விடயம் “ஏதாவதொரு உதவி” ஆகும். ஏதாவதொரு உதவி என்று ஒன்றுமே கிடையாது, குறிப்பாகச் சொல்லுங்கள் என்றால் பேச்சற்றுப் போகின்றனர். அந்த அளவுக்கு தங்கள் நிலைமை பற்றியோ தங்களுக்கு இருக்கக்கூடிய விசேட ஆற்றல்கள் பற்றியோ தம்மைச் சுற்றிவர ஊரில் இருக்கும் வளங்கள் பற்றியோ சிந்தித்தறியாதவர்களாக இருக்கின்றனர். மிஞ்சிப் போனால், எல்லோரும் “வீட்டோடு இருந்து பார்க்கக்கூடிய” தொழில்களைக் கேட்கின்றனர். பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்னும் காரணம் தவிர வெளியே சென்றலைந்து தொழில் பார்க்கும் சந்தர்ப்பங்களை நினைத்துப் பயப்படுவதாலும்கூட வீட்டோடு தொழில் செய்ய விரும்புகின்றனர். நல்ல வருமானம் தரும் அதேசமயம், வீட்டிலும் இருந்து பார்க்கக்கூடிய எத்தனை தொழில்கள் இருக்க முடியும்? இதனால்தானோ என்னவோ தொண்டர் நிறுவனங்கள் வந்து தாம் விரும்பியவண்ணம் ஏதாவதொரு உதவியினைச் செய்துவிட்டுப் போகின்றன. அனேகமாக இவை கோழி வளர்ப்பு, தையல் இயந்திரம் வழங்குதல், வீட்டுத் தோட்டம் செய்தல், மாடு வளர்ப்பு போன்ற ஒரே வகையான தொழில்களாகின்றன. சந்தைகள் தூர அமைந்த காரணத்தினாலும், மிருக வைத்தியரின் சேவைகள் பெறப்படாத பிரதேசங்களாக இருப்பதனாலும் இவையெல்லாம் மிகச் சிறிய அளவில் செய்யப்படும் தொழில்களாகவே நீடிக்கின்றன. இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு தமது வீட்டுச் செலவுகளையும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் பெண்கள் திண்டாடுகின்றனர்.

இப்படியான சூழலில் பெறப்படுகின்ற உதவிகளும் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்றால் அதற்கும் இல்லையென்றே கூற வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் வன்னிப் பிரதேசத்தின் ஊரொன்றில் பெண்களைச் சந்தித்தபோது, அந்த ஊரில் உள்ள சகல குடும்பங்களுக்கும் ஒவ்வொரு சைக்கிளும் ஒரு தண்ணீரிறைக்கும் இயந்திரமும் வழங்கப்பட்டிருந்ததை அறியக்கூடியதாக இருந்தது. இது காட்டின் நடுவே இருக்கும் கிராமமொன்றென்கின்ற காரணத்தினால் அங்கு இவற்றைப் பழுது பார்க்கும் வசதிகள் காணப்படவில்லை. உங்களில் யாராவதொருவர் சைக்கிள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பழுது பார்க்கும் பயிற்சியினையும் அத்தகைய சேவையை ஏற்பாடு செய்வதற்கான உதவியினையும் கேட்டீர்களா என்று வினவியபொழுது அதற்கு இல்லையென்றே பதில் வந்தது. அத்துடன், பல இயந்திரங்கள் பழுதடைந்து பாவனையில் இல்லாமலிருப்பதும் தெரியவந்தது. உதவிகள் தம்மை நாடி வரும்போது அவற்றை அதிகூடிய பயன்பெறும் வகையில் அவர்கள் உபயோகிப்பதற்கான ஆற்றல் அற்றுக் காணப்பட்டனர். இவ்வகையில் தம்மைச் சுற்றியுள்ள வளங்களையும் வாய்ப்புக்களையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்கு இப்பெண்கள் அணிதிரட்டப்படவும், ஆற்றல் மேம்படுத்தப்படவும் வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இந்த நோக்கத்துடனேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் அல்லது தனியே வாழும் பெண்களை இணைத்து ‘அமரா’ என்கின்ற வலையமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பிரச்சினைகளுக்காகத் தாமே குரல் கொடுக்கவும், தாம் எதிர்நோக்கக்கூடிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கூட்டாகத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்கவுமே அமரா தோற்றுவிக்கப்பட்டது. அமரா வழங்கிய முதல் நன்மையானது, அவர்கள் எந்த விடயத்தினையும் கலந்துரையாடித் தெளிவு பெறுவதற்கான களத்தினை அமைத்துக்கொடுத்ததாகும். நிறுவனங்கள் தரும் உதவிகள் நீண்டகாலத்திற்கு நன்மை பயப்பனவாக ஏன் இருப்பதில்லை என்பது தொடங்கி, தமது சமூகத்தில் நடக்கின்ற நல்ல காரியங்களில் தாம் என முதன்மைப்படுத்தப்படுவதில்லை என்பது வரை எதனையும் ஆராயும் வாய்ப்பினை இது வழங்குகின்றது.

அடுத்ததாக, ஆராய்ந்து பெற்ற தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் ஆட்பலத்தினை இது கொடுக்கின்றது. உதாரணமாக, இதுவரை பெண்களுக்கு வழங்கப்பட்ட கடனுதவிகளும் தொழிலுதவிகளும் என்ன காரணங்களினால் தமது நோக்கத்தை அடையவில்லை எனப் பார்த்தபோது, தனியே தொழில் செய்யும்போது ஏற்படக்கூடிய நஷ்டத்தினைத் தாங்கிக்கொள்ளக்கூடிய வல்லமையற்றுப் பெண்கள் இருக்கின்றமை தெரியவந்தது. எனவே, ஒரு தடவை தொழில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மீண்டுவர முடியாது. இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டதனால் இப்பெண்கள் மத்தியில் கூட்டுத் தொழில் ஊக்குவிக்கப்பட்டது. மேலும், இப்பெண்களின் நல்வாழ்வினை உத்தரவாதப்படுத்துவதில் அரசுக்கும் சில கடப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை அது மேற்கொள்ளும் வண்ணம் அழுத்தச் சக்திகளாகச் செயற்படுவதற்கும் அமரா உதவுகின்றது.

அமரா தோற்றுவிக்கப்பட்ட பின்னர் அதில் உறுப்பினராக இருக்கும் பல பெண்களின் வாழ்வில் காத்திரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஊரவர்கள் சேர்ந்து கொண்டாடும் பொங்கல் மற்றும் அதுபோன்ற விழாக்களில் கைம்பெண்களை (கணவனை இழந்த பெண்) மங்களகரமான காரியங்களில் முன்னிற்கச் செய்திருக்கின்றனர். அதன்மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் பல மடங்கு அதிகரித்திருக்கப் பார்க்கின்றோம். யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் கூட்டு விவசாயத்திலும், மெழுகுவர்த்தி உற்பத்தி செய்வது போன்ற கூட்டுத் தொழில்களிலும் இப்பெண்கள் ஈடுபடுவதை அவதானிக்கின்றோம். அனேகமான சந்தர்ப்பங்களில் இவற்றைச் செயற்படுத்த அவர்களுக்கு ஒரு பொருளாதார உதவியும் வழங்கப்படவில்லை. இதன்பொருட்டு தாமே தமது சொந்த வளங்களைத் திரட்டினர். மழை வெள்ளத்தினாலும் வரட்சியினாலும் தமது விவசாயம் பாதிக்கப்பட்டபோதும் சகலரும் ஒன்று சேர்ந்த தன்மையினாலே அப்பெண்களுக்கு அடுத்த போகத்துக்கு மீண்டும் இத்தொழிலை ஆரம்பிக்கக்கூடியதாக இருந்தது.

பசியினால் வாடிக்கொண்டு வாழ்க்கை நடத்திய மூதூர் பிரிவினைச் சோந்த பல குடும்பங்களினால் குறைந்த செலவில் போசாக்குணவை உற்பத்தி செய்யும் பல வழிமுறைகள் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. கைம்பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் யாவும் இனி ‘சஞ்சீவி’ என்கின்ற வர்த்தகச் சின்னத்தின் பெயரில் நாடு பூராவும் சந்தைப்படுத்தப்பட இருக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, அரசின் கடமைகளை அறிவுறுத்தி தமக்கென ஓர் உரிமை சாசனத்தினையும் அவர்கள் வரைந்தெடுத்திருக்கின்றனர். இதில் விதவைகளுக்கான ஓய்வூதியம், அவர்களுடைய பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துவதற்காக இராணுவக் குறைப்பு, காணாமற்போனோரின் பெயரில் காணமாமற்போனோர் எனக் குறிப்பிட்டு வழங்கப்படும் உத்தியோகபூர்வமான சான்றிதழ், பிள்ளைகளுக்கான விசேட கல்வியுதவி போன்றவற்றினைக் கோரியிருக்கின்றனர். இந்த ஆவணமானது மாகாண சபை நிர்வாகத்தினருக்கும் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களின் தீர்மானங்களைக் காத்து நிற்கின்றது.

“அமரா, குடும்பத் தலைமைப் பெண்களின் வலையமைப்பு” வளர்ந்து வரும் காலங்களில் இனிமேலும் போர்க்கால விதவைகள் பற்றி நாம் அதையொரு பிரச்சினையாகக் கருதிப் பேசத் தேவையில்லாத நிலைமை வரும் என்று நாம் பூரணமாக நம்பலாம்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.