1970களிலும் 1980 களிலும் இலங்கைத் தீவின் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பான காலங்களில், சிங்கள தலைமுறையினரின் இதயங்களில் குரலால் இடம்பிடித்த இலங்கையின் புகழ் பெற்ற பாடகி நந்தா மாலினி, வியாழக்கிழமை (20) கொழும்புக்கு அருகாமையில் நாவலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 82 வயது. 1943 ஆண்டில் அவர் பிறந்தார்.

நாட்டின் மிகவும் போற்றப்படும் கலைஞர்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21, 2026) முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஒரு ஆர்வமுள்ள இளம் கலைஞராக, மாலினி லக்னோவில் உள்ள பத்கண்டே இந்துஸ்தானி இசைக் கல்லூரியில் இசை பயில்வதற்காக இந்தியா சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, மாலினியை “நம் காலத்தின் ஒரு உண்மையான இசை ஆளுமை்” என்று குறிப்பிட்டிருக்கிறார். “அவரது காலத்தால் அழியாத இசை, இளையோர் முதல் முதியோர் வரை பல தலைமுறை இலங்கையர்களுக்கு உத்வேகம் அளித்தது. அவரது குறிப்பிடத்தக்க மரபு இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றும் வாழும்” என்று ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, மாலினியின் கலைப் பயணம் “இலங்கை இசையின் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல, நாட்டின் சமூக இயக்கங்கள் மற்றும் மனித உணர்வுகளின் ஒரு வாழும் வெளிப்பாடு” என்றும் கூறினார்.

மாலினியின் இசையைப் பற்றிய பரவலான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் அமரசூரிய தனது இரங்கல் செய்தியில் “காதல் மற்றும் பிரிவின் கருப் பொருள்களைத் தாண்டி, அவர் சாதாரண மக்களின் துயரங்கள், அச்சங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குக் குரல் கொடுத்தார். இது அவரது பாடல்களை சமூகத்தின் குரலாகவே எதிரொலிக்கச் செய்தது.”

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சமூக ஊடகப் பதிவில், மாலினியை ஒரு “மகத்தான குரல்” என்றும், “சமூக அநீதிக்கு எதிராக இசையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய பயமற்ற, கொள்கைப் பிடிப்புள்ள கலைஞர்” என்றும் விவரித்தார்.

அரசியல் விழிப்புணர்வு கொண்ட கலைஞர்

பிரபல திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே, மாலினியை “அரசியல் விழிப்புணர்வு கொண்ட” ஒரு கலைஞர் என்று விவரித்தார். அவரது குரலும் இசையும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சிங்கள மக்களின் உணர்வுகளை வடிவமைத்தன. “நம்மில் பலருக்கு, அவரது பாடல்கள் நமது சிறுபிராயம், பெற்றோர், முதல் காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றின் நினைவுகளை மட்டுமல்லாமல், இந்த நாடு கண்ட சமூகக் கொந்தளிப்புகளையும் நினைவுகூட்டுகின்றன. அந்த வகையில், அவர் நமது கூட்டு நினைவிலும் மனசாட்சியிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறார். வேறு எந்தப் பாடகருக்கும் இத்தகைய இடம் இல்லை” என்று அவர் ‘தி இந்து’ நாளிதழிடம் தெரிவித்தார்.

எளிய உழைக்கும் வர்க்க சிங்கள குடும்ப பின்னணியையும் இடதுசாரி அரசியலின் மீதான அவரது ஆதரவையும் சுட்டிக் காட்டிய விதானகே, கூர்மையான வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் சிங்கள இளைஞர்களின் ஏமாற்றத்தைப் பற்றி அவரது பாடல்கள் பேசியதாகவும் அனைவரும் கண்ணியத்துடன் வாழும் ஒரு சமத்துவமான சமூகத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.

1980 களின் முற்பகுதியில் அவரது சில பாடல்கள், சிங்கள,  தமிழ் மக்களுக்கு இடையிலான இன பதற்றங்களால் பிளவுபட்டுக் கொண்டிருந்த ஒரு நாட்டில், இன – தேசியவாத உணர்வை தூண்டியதாக எழுந்த விமர்சனம் குறித்து பேசிய விதானகே, “அவரது படைப்புகளில் சில முரண்பாடுகளும் உள்ளன” என்றார்.

மாலினியின் நீண்டகால கலைப் பயணம், அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் அவற்றை வடிவமைத்த தேர்வுகள், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பு காலத்தில் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை மட்டுமன்றி, அந்தப் கொந்தளிப்பான ஆண்டுகளில் ஒன்றாக நிலவிய தேசியவாத மற்றும் முற்போக்கு அரசியலின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்துகின்றன.

பிரபல இசையமைப்பாளர் டபிள்யூ.டி. அமரதேவவின் வழிகாட்டுதலின் கீழ் திரையுலகில் நுழைந்த அவர், தனது பாடல்களுக்காக பல மதிப்புமிக்க விருதுகளை வென்றார். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது மிகவும் பிரபலமான திரைப்பாடல்களுள் ஒன்றான “மே சிங்கள அபே ரட்டாய்” (இது எங்கள் சிங்கள நாடு), தீவின் தெற்குப் பகுதிகளில் பரவலாக இருந்த சிங்கள பேரினவாத உணர்வைப் பிரதிபலிப்பதாக விமர்சகர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது.

‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த 2017 பேட்டியில்  பிரபல இலங்கை பெண்ணிய அறிஞரும் வரலாற்றாசிரியருமான குமாரி ஜெயவர்த்தன, இந்தப் பாடலை “பாசிசத் தன்மை கொண்டது” என்று குறிப்பிட்டதுடன், இது தேசியவாத வெறியைக் கிளறும் ஜெர்மன் பாடல் ஒன்றின்  மறுவடிவமே என்றும் கூறினார்.

தனது மொழி, உழைக்கும் வர்க்க குடும்பப் பின்னணி மற்றும் இலங்கையின் சிங்கள பெரும்பான்மை தெற்குப் பகுதியின் சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் சூழல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட மாலினியின் இசை (கவிஞரும் அவரது நீண்டகால சகாவான சுனில் ஆரியரத்னவின் வரிகளில் அமைந்தது), சிங்கள இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் அளிப்பதற்காக பரவலாக பிரபல்யமானது. குறிப்பாக, இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி) 1971ஆம் ஆண்டு கிளர்ச்சி, 1980களின் பிற்பகுதியில் அந்தக் கட்சியின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி மற்றும் பெரும்பான்மைவாத அரசுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஆயுதப் போராட்ட எழுச்சி காரணமாக உள்நாட்டு யுத்தம் வரை சென்ற முக்கிய அரசியல் தருணங்களில் இது முக்கிய பங்கு வகித்தது.

1980களின் பிற்பகுதியில் அவரது பாவனா  (தென்றல்) இசை நிகழ்ச்சித் தொடர், சமூக நீதிக்காக குரல் கொடுத்த அதே வேளையில், அரசின் அடக்குமுறைக்கும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதலுக்கும் எதிரான எதிர்ப்பைப் பிரதிபலித்தது.

மறைந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் சுச்சரித கம்லத் உட்பட பலர்  தன் பாடல்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மாலினி நன்கு அறிந்திருந்தார் என்று விதானகே தெரிவித்தார். “அவர் இந்த விமர்சனங்களை நேர்மையாக எதிர் கொண்டார். 1985ஆம் ஆண்டு ‘வினிவித’ என்ற சிங்கள இதழுக்கு அளித்த பேட்டியில், கம்லத் உட்பட தனது தோழர்களும் நண்பர்களும் முன்வைத்த கருத்துக்கள் தன்னை சுயபரிசோதனை செய்ய வைத்ததாக மாலினி கூறினார். அது தன்னைத் திருத்திக் கொள்ள உதவியதாகவும் அதற்குப் பிறகு தான் ஒருபோதும் தீவிர தேசப்பற்றுப் பாடல்களைப் பாடியதில்லை என்றும் அவர் கூறினார்” என்று விதானகே குறிப்பிட்டார்.

உண்மையில், அவரது 1985ஆம் ஆண்டில் ஹேமந்தயேதி (‘குளிர்காலத்தில்’) இசை நாடாவில், அவர் காதல் மற்றும் கண்ணியமான வாழ்க்கையைப் பற்றிப் பாடினார். அந்த ஆல்பத்தில் பல்லின அழைப்பை விடுக்கும் வகையில் “சிங்கள திரவிட முஸ்லிம் கல்யாண மித்ருணி” என்ற பாடலும் இடம் பெற்றிருந்தது என்று விதானகே சுட்டிக் காட்டினார். இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பலிவாங்கிய கொடூரமான போரில்,  விடுதலைப் புலிகளை ஆயுதப் படைகள் அழித்தொழித்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் (2005-2015) மாலினி மௌனமாக இருந்தது அவரது தீவிர இரசிகர்களை வருத்தமடையச் செய்தது.

2022ஆம் ஆண்டு கொழும்பின் காலிமுகத்திடலில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது,  மாலினி, கூட்டத்திற்கு மத்தியில் காணப்பட்டார். வெள்ளை நிறச் சேலை அணிந்து, மக்களிடையே நடந்து சென்று, போராட்ட உணர்வில் பங்கெடுத்த அவர், ஒலிபெருக்கி மூலம் சில வரிகளைப் பாடி மக்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றார்.

மீரா ஸ்ரீனிவாசன்

Sri Lanka’s iconic singer Nanda Malini dies at 82 என்ற தலைப்பில் ‘தி இந்து’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.