Photo, The Independent

எந்தவொரு நபராயினும் அவர் எந்தவித குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவராயினும் அவரது உயிர், கண்ணியம், உள பாதுகாப்பினை உறுதிசெய்வது அரசின் மாற்ற முடியாததொரு பொறுப்பாகும். கடந்த 25.05.2026 அன்று யாழ்ப்பாண சிறையில் தூக்கிட்டு மரணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்ற தடுப்பில் இருந்த கைதியின் மரணமானது அரசின் பாதுகாப்புக் கடமை, சிறைச்சாலை நிர்வாகத்தின் பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு முறைகள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

2015 இல் மே 13 இல் கடத்தப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையில் பாரியதொரு அதிர்வலையினை ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் அடுத்த நாள் வீட்டருகில் இருந்த பாழடைந்த கட்டத்தினுள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையிலும் 41 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் 9 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 2017 ஒக்டோபர் 27 அன்று மூன்று நீதிபதிகள் உள்ளடங்கிய குழு இவர்களுள் 7 பேரை குற்றவாளியாக தீர்மானித்து மரணதண்டணை வழங்கியது. மேலும், ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையையும் செலுத்த உத்தரவிட்டது. அதில் குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் தவக்குமார் உடல்நலக் குறைபாடு காரணமாக கண்டி வைத்தியசாலைக்குச் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்வழக்கில் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க முக்கிய குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மகாலிங்கம் சசிகுமார் தப்பிச்செல்வதற்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட்டு 2025 பெப்ரவரியில் வவுனியா நீதிமன்றம் 4 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டணை மற்றும் 50,000 ரூபா அபராதத் தொகையை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேவேளை, 2025 பெப்ரவரி 6 இல் மரணதண்டணை குற்றவாளிகளின் மேல் முறையீட்டினை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரணைக்கெடுத்துக்கொண்டது. இவ்விசாரணை பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டது. 06 மே 2026 இல் இவ்வழக்கில் இருவருக்கான தண்டணை நீக்கப்பட்டதுடன் நால்வருக்கான மரணதண்டணை உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பூபாலசிங்கம் ஜெயக்குமார் 25.05.2026 அன்று சிறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

மாணவியின் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு பாரியளவில் பேரலையினை தோற்றுவித்ததொரு விடயம். கைதி மரணத்தின் பின்னும் சமூக ஊடகங்களில் இது குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. நுணுக்கமும் கூறுணர்வும் மிக்க இவ்விடயத்தில் எதுவாகினும் பொது மக்களது உணர்வானது மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதொரு தேவையுள்ளது.

சிறைக்கைதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் குறைந்தபட்ச தரநிலை விதிகள் (நெல்சன் மண்டேலா விதிNelson Mandela Rules)

நெல்சன் மண்டேலா விதிகள் என்பது உலகம் முழுவதுமுள்ள சிறைக்கைதிகள் எவ்வாறு மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்தப்பட வேண்டும் என்பதனை வரையறுக்கின்ற சர்வதேச மனிதவுரிமை தரநிலைகளாகும். 1955 இல் உருவாக்கப்பட்ட இத்தரநிலைகள் 2015 இல் புதிப்பிக்கப்பட்டது. தென்னாபிரிக்க ஆளுமைகளுள் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களது நினைவாக இத்தரநிலைகள் அவரின் பெயரில் குறிப்பிடப்படுகின்றன. இவ்விதிகளின் அடிப்படையில்,

  1. கைதிகள் அனைவரும் மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். (இல. 01)
  2. கைதிகளை சித்திரவதை செய்தல், கொடுமைப்படுத்தல் மற்றும் அவமதிப்பு செய்தல் தடைசெய்யப்படல் வேண்டும். (இல. 43)
  3. கைதிகளுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் மனநல பராமரிப்புக்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும். (இல. 24- 27)
  4. சிறைச்சாலைகளில் தற்கொலை தடுப்பு மற்றும் உளவியல் சார் கண்காணிப்பு முக்கிய பொறுப்பாகும்.
  5. ஒருவேளை சிறைக்கைதியொருவர் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் அதற்கான விசாரணை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இடம்பெற வேண்டும்.

போன்ற விதிகள் மேற்கோள்காட்டப்படத்தக்கன. எனவே, பாரிய குற்றங்களுக்காக தீர்ப்பிடப்பட்டவர்கள் கூட தற்கொலை செய்தாலும் அதற்கான பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் உண்டு.

கடந்த 2019 தொடக்கம் 2026 வரையான இலங்கையின் சிறைச்சாலை மரணங்கள் குறித்த தகவல்கள் கீழே தரப்பட்டிருக்கின்றது. இத்தகவல்கள் தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் “இலங்கையில் கைதிகள் நிலை குறித்த ஆண்டறிக்கை 2025” இல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவையாகும்.

இவ்மரணங்கள் நோய்கள், கொவிட் தொற்று, சிறைக்கலவரங்கள் மற்றும் தற்கொலை போன்ற காரணிகளால் ஏற்பட்டுள்ள சிறை உயிரிழப்புகளை உள்ளடக்கியதான தரவாகும்.

அதேவேளை, தற்கொலை தரவுகள் கடந்த ஐந்தாண்டுகளில் வருமாறு:

இவ்வாறு சிறைக்கைதிகள் தற்கொலையில் பெரும்பாலானவை ஆண் கைதிகளே மேற்கொள்வதாகவும் கடந்த 2020 – 2024 வரையான காலப்பகுதியில் 631 மொத்த சிறைக்கைதி மரணங்களில் 18 மட்டுமே பெண்கைதிகள் எனவும் தரவுகள் குறிப்பிடுகின்ற போதும் சில அறிக்கைகளில் சிறை மரணங்கள் குறித்த தரவுகளில் பாலினம் சார் தரவுகள் தெளிவாகவில்லை என்பதும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கது. சிறைகளில் அதிகளவில் ஆண்கைதிகள் உள்ளமையும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதும் இவ்வாறு பெரும்பாலான ஆண் கைதிகள் பாதிப்படைய காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலை மரணங்கள், குறிப்பாக ஆண் கைதிகளில் அதிகமாகக் காணப்படுவது, தனிநபர் குறைபாடுகளாகக் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. இவை, அரசால் நிர்வகிக்கப்படும் தடுப்பு, கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவருகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டும் கட்டமைப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் வெளிப்பாடுகள் ஆகும்.

அரச தடுப்பில் உள்ள ஒவ்வொரு நபரின் உயிரையும் பாதுகாப்பது என்பது, சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கீழ் மறுக்க முடியாத கடமை ஆகும். எனினும், அதிக நெரிசல், நீண்டகாத் தடுப்பு, போதிய மனநல சேவைகளின் பற்றாக்குறை மற்றும் கண்காணிப்பற்ற சிறை நிர்வாக நடைமுறைகள் ஆகியவை இந்த கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.

இதனடிப்படையில், பின்வரும் விடயங்கள் சிறைக்கைதிகளின் பாதுகாப்பு குறித்து அரசினால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது:

  • சிறைச்சாலைகளில் நிகழும் அனைத்து தற்கொலை மற்றும் மரணங்களுக்கும் சுயாதீன, வெளிப்படையான மற்றும் காலவரையற்ற விசாரணை முறைமைகளை உடனடியாக நிறுவுதல்.
  • பாலின அடிப்படையிலான விரிவான தரவுகளை முறையாக சேகரித்து பொதுமக்களுக்கு வெளியிடுதல்.
  • மனநல சேவைகள் மற்றும் உளவள ஆதரவு அணுகலை அனைத்து கைதிகளுக்கும் உறுதிசெய்தல்.
  • அதிக எண்ணிக்கையான கைதிகளை குறைக்கும் சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள், குறிப்பாக விளக்கமறியல் கைதிகள் எண்ணிக்கையை குறைக்கும் மாற்று வழிகளை செயல்படுத்துதல்.
  • சிறை நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல்.
  • இவை அனைத்தும் அவசர முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சிறைச்சாலை மரணங்கள் ஒரு நாட்டின் மனித உரிமை நிலையை அளவிடும் முக்கியக் குறியீடாகும். எனவே, இத்தகைய தடுக்கக்கூடிய உயிரிழப்புகள் தொடர்வது, அரசின் கடமையின்மை மற்றும் அமைப்பு சார்ந்த புறக்கணிப்பின் விளைவாகவே கருதப்பட வேண்டும்.

இது ஒரு கொள்கைத் தோல்வி மட்டுமல்ல — இது அரசின் தடுப்பில் உள்ள உயிர்களைப் பாதுகாக்கத் தவறிய ஒரு கடுமையான மனித உரிமை பொறுப்புக் குறைவு ஆகும். இதனை உடனடியாக சரிசெய்யும் பொறுப்பு, முழுமையாக அரசின் மேல் உள்ளது. தண்டனை மையப்படுத்தப்பட்ட குற்றவியல் அணுகுமுறைகளின் படி, தண்டனை அனுபவிக்கும் செயல்முறைதான் குற்றவாளிகளுக்கு அவர்களுடைய செயல் குறித்து உணர்வு மற்றும் மனச்சாட்சிப் பிரதிபலிப்பை உருவாக்கும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, தண்டனை அனுபவிக்கும் காலத்தில் நிகழும் தற்கொலைகள், குற்ற உணர்வு, மனஅழுத்தம் அல்லது தாங்க முடியாத உளவியல் போராட்டத்தின் வெளிப்பாடாகவும், சிலர் வாதிடுவதுபோல் ஒரு வகையான ‘விடுதலை’ எனவும் விவாதிக்கப்படலாம்.

இதனுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் உருவாக்கிய “Nelson Mandela Rules” படி, தடுப்பில் உள்ள ஒவ்வொரு நபரின் உயிரையும் பாதுகாப்பது அரசின் மாற்றமறுக்கும் கடமையாகும். எனவே, சிறைச்சாலைகளில் நிகழும் தற்கொலைகளை ‘விடுதலை’ எனப் புரிந்துகொள்வது, அரசின் பொறுப்பை மறைக்கும் ஆபத்தான விளக்கமாக மாறக்கூடும். இதனால், தண்டனை அனுபவிப்பது குற்ற உணர்வை உருவாக்கும் ஒரு செயல்முறை என்ற வாதம் ஏற்கத்தக்கதாக இருந்தாலும், அதே நேரத்தில் தற்கொலை மரணங்களை ஒரு தனிநபர் முடிவாக மட்டுமே குறைப்பது தவறானது. இவை, பெரும்பாலும் மனநல ஆதரவு இல்லாமை, அதிக நெரிசல் மற்றும் மனிதாபிமானமற்ற சிறை சூழல் போன்ற கட்டமைப்பு குறைபாடுகளின் விளைவாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

கேஷாயினி எட்மண்ட்