மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து நீண்டகாலமாக போராடிய மிகவும் துணிச்சலான ஆளுமைகளில் ஒருவரை இலங்கை இழந்துள்ளது.
இலங்கை சிவில் உரிமைகள் இயக்கத்தின் (Civil Rrights Movement) செயலாளர், சர்வதேச மன்னிப்புச்சபையின் சர்வதேச செயற்குழுவின் முன்னாள் தலைவர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுத்த ஒரு துணிச்சலான செயற்பாட்டாளர் மற்றும் உரிமையற்றவர்களுக்காக அமைதியாக ஆனால் உறுதியாக வாதிட்ட சூரியா விக்ரமசிங்கவின் மறைவு, நாட்டில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில், சட்டரீதியான துல்லியம், தார்மீகத் தெளிவு மற்றும் தனிப்பட்ட தைரியம் ஆகியவற்றின் அரிய கலவையை அவர் தனது பணிகளில் வெளிப்படுத்தினார்.
இலங்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க முற்போக்கான குடும்பங்கள் ஒன்றில் சூரியா பிறந்தார். அவரது தந்தை டாக்டர் எஸ்.ஏ. விக்ரமசிங்க, அக்காலகட்டத்தின் அரசியல் தொலைநோக்கு பார்வையாளராகவும் 1943ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தாபகராகவும், முக்கிய தலைவராகவும் இருந்தவர்.
சூரியாவின் தாயார் டொரின் யங் விக்ரமசிங்க, 1930களில் இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சோசலிசவாதி. பின்னர், அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்குப் பதிலாக, உள்ளூர் காரணங்களுக்காக நிதி திரட்ட ‘சூரிய மலரை’ விற்ற ‘சூரிய மல்’ இயக்கத்தின் முதல் தலைவராகவும் அவர் இருந்தார். அந்தப் போராட்டமே சூரியாவுக்கு அந்தப் பெயரை வளங்கியது.
டொரினுக்கு 1998ஆம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது உயரிய சிவில் கௌரவமான ‘தேஷமான்ய’ விருது வழங்கப்பட்டது. சூரியா தனது பெற்றோரின் இலட்சியங்களை தசாப்த கால நடைமுறை மனித உரிமைப் பணிகளாக மாற்றி, அந்தப் பாரம்பரியத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்றார்.
சிவில் உரிமைகள் இயக்கத்தின் (CRM) செயலாளராக, சூரியா அந்த அமைப்பை இலங்கையின் மிகவும் கொள்கைப்பிடிப்புள்ள சிவில் சமூகக் குரல்களில் ஒன்றாக மாற்றினார். கிளர்ச்சிகள், உள்நாட்டுப் போர், அவசரகால ஆட்சி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், “அவசரகால ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிரான அச்சமற்ற போராளியாக” அவர் திகழ்ந்ததாக ஒரு சட்ட அறிஞர் விவரித்துள்ளார்.
அவரது தலைமையின் கீழ், மனித உரிமைப் பாதுகாப்பும் கண்காணிப்பும் எந்தவொரு சமாதானத் தீர்வின் அடிப்படை அங்கமாக இருக்க வேண்டும் என்று வாதிட்ட முதல் அமைப்புகளில் ஒன்றாக சிவில் உரிமைகள் இயக்கம் விளங்கியது. “இலங்கை முழுவதும் மனித உரிமைகளைச் சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சரியாகப் பாதுகாப்பது, மோதலுக்கான எந்தவொரு அரசியல் தீர்வினதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும் என்பது அந்த இயக்கத்தின் உறுதியான நம்பிக்கையாக இருந்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சூரியா அரசு வன்முறைகளை ஆவணப்படுத்தியதுடன் மோதல் காலங்களில் மனித உரிமை நிலைமைகள் குறித்த விரிவான அறிக்கைகளை வெளியிட்டார். உலகளாவிய உரிமை கலாச்சாரத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக ‘வன் வேர்ல்ட் அக்சன்’ (One World Action) அமைப்பினால் “பார்க்கப்படாத 100 சக்திவாய்ந்த பெண்களில்” (100 Unseen Powerful Women) ஒருவராக அவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.
1982 முதல் 1985 வரை, சூரியா சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச செயற்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். இது மனச்சாட்சியின் கைதிகளுக்கான உலகளாவிய போராட்டத்தின் மையத்தில் அவரை வைத்தது. மன்னிப்புச் சபையுடனான அவரது பணி 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்விளைவுகளுடன் ஆழமாகத் தொடர்புடையது. அப்போது அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான இளம் இலங்கையர்கள் அவசரகாலச் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1970 களின் முற்பகுதியில், அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதே ஆபத்தானதாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில், சூரியா தனது துணிச்சலை வெளிப்படுத்தினார். அவர் எஸ். நடேசன் மற்றும் குருசுவாமி அவர்களுடன் இணைந்து குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி, சுசில் சிறிவர்தன மற்றும் திரு. விராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்காக வாதிட்டார்.
1975 ஆம் ஆண்டில், சர்வதேச மன்னிப்புச் சபையின் வியோன் டெர்லிங்கனுடன் (Yvonne Terlingen) இணைந்து, கொழும்பு நியூ மகசின் சிறையில் இருந்த ரோஹண விஜேவீரவை சூரியா சந்தித்தார். அரசியல் கைதிகளுக்காக ஏற்கனவே சிவில் உரிமைகள் இயக்கம் முன்னெடுத்து வந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துமாறு மன்னிப்புச் சபையிடம் கோரிக்கை விடுக்குமாறு விஜேவீர வியோனிடம் கேட்டுக் கொண்டார். அவர்கள் இருவரும் உண்மையான அக்கறையுடனும் கவனத்துடனும் தங்களுக்கு செவிமடுத்ததாக விஜேவீர பின்னர் நினைவு கூர்ந்தார்.
அக்காலகட்டத்தில் சிறையில் இருந்த ஒரு நபராக, நான் பின்னர் இவ்வாறு எழுதினேன்; “அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தங்களது பிரச்சாரத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையும் சிவில் உரிமைகள் இயக்கமும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுபவை என்பதை நாங்கள் உறுதியாக நம்பினோம், அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.”
மரணதண்டனைக்கு எதிரான பிரசாரம்
மரண தண்டனைக்கு எதிராக சூரியா தொடர்ந்து முன்னெடுத்த பிரச்சாரம், அவரது தார்மீக நம்பிக்கையின் மிகவும் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ‘பிரவாதா’ (Pravada) இதழில் எழுதிய அவர், நீதித்துறை மூலம் மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவது “நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பின்னடைவு” என்று வாதிட்டார்.
மரண தண்டனைக்கு எதிரான தனது வாதங்களை அவர் தெளிவுடனும் நுணுக்கத்துடனும் முன்வைத்தார். ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம், குற்றங்களைத் தடுப்பதில் மரண தண்டனை தோல்வியடைந்துள்ளது; நீதித்துறையில் தவிர்க்க முடியாத தவறுகள் ஏற்படும்போது அதை மாற்றியமைக்க முடியாது; தகுதியான சட்டப் பிரதிநிதித்துவம் இல்லாத ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு இது இழைக்கப்படும் விகிதாசாரமற்ற கொடுமை; நவீன, மறுவாழ்வு அடிப்படையிலான நீதி அணுகுமுறைகளுடன் இது முற்றிலும் ஒத்துப்போகாதது போன்ற காரணங்களை சூரியா சுட்டிக்காட்டினார்.
அப்பாவி மக்கள் தூக்கிலிடப்படும் அபாயம் குறித்து அவர் குறிப்பாக எச்சரிக்கையாக இருந்தார். பொலிஸ் விசாரணைகள் பிழையற்றவை அல்ல என்றும், ஏழைகளே “நீதித்துறை தவறுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி, “கொலைகாரர்களின் செயல்களுக்கு தனது தார்மீக ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்காக, அரசு ஈவிரக்கமின்றி திட்டமிட்டு கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று அவர் உறுதியுடன் எழுதினார்.
அவரது தலைமையின் கீழ் சிவில் உரிமைகள் இயக்கம் எந்தச் சூழ்நிலையிலும் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன், வன்முறைச் குற்றங்களுக்கு முறையான தீர்வுகளைக் காணுமாறு கேட்டுக்கொண்டது.
பிரதம நீதியரசர் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் இலங்கையின் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்தியபோது, அதற்கு எதிராகக் குரல்கொடுத்த முதன்மையானவர்களில் சூரியாவும் ஒருவர். ‘ப்ரைடே போரம்’ (Friday Forum) சார்பாக முன்னாள் ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் ஜயந்த தனபாலவுடன் இணைந்து எழுதிய அவர், ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுவதையும், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரங்கள் அலட்சியப்படுத்தப்படுவதையும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்க அரசாங்க அதிகாரம் பயன்படுத்தப்படுவதையும் கடுமையாகக் கண்டித்தார்.
அதேவேளை, நீதித்துறையின் உறுதிப்பாட்டை அவர் “இலங்கை மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளி” என்று அழைத்தார். சமூக விஞ்ஞானிகள் சங்கம், ‘ப்ரைடே போரம்’, சிவில் உரிமைகள் இயக்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவற்றில் அவரது செயல்பாடுகள் ஒரு நிலையான உண்மையைப் பிரதிபலித்தன – அதாவது, நிறுவனங்களும் தனிநபர்களும் அதைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் வரை மட்டுமே ஜனநாயகம் வலுவாக இருக்கும்.
நமது நாட்டின் நவீன வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான 1970 களின் முற்பகுதியில் நான் முதலில் சூரியாவை அறிந்து கொண்டேன். குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் சுசில் சிறிவர்தன சார்பாக அவர் ஆஜரானதை முதன் முதலில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1975 இல் நியூ மகசின் சிறையில் விஜேவீரவை அவர் சந்திக்க வந்ததும் எனக்கு நினைவிருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டவர்களை யாரும் அனுதாபத்துடன் பார்க்காத ஒரு காலத்தில், 1971 ஏப்ரல் கிளர்ச்சி பற்றிய அரசின் எதிர்மறையான பிரசாரங்கள் மேலோங்கியிருந்த சூழலில், சூரியாவும் சிவில் உரிமைகள் இயக்கமும் குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டம் நிறுவப்பட்ட நாளிலிருந்தே அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தனர். சிறையில் இருந்தவர்களை அரசு பார்த்தது போன்று அல்லாமல், உரிமைகள், கண்ணியம் மற்றும் நியாயமான விசாரணைக்குத் தகுதியான மனிதர்களாக சூரியா பார்த்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில், அவர் ஒருபோதும் தனது அர்ப்பணிப்பிலிருந்து பின்வாங்கியதையோ அல்லது அரசியல் இலாபங்களுக்காக தனது கொள்கைகளின் தார்மீகத் தெளிவை சமரசம் செய்து கொண்டதையோ நான் கண்டதில்லை.
சூரியா விட்டுச் செல்லும் மரபு என்பது வகித்த பதவிகளாலோ அல்லது வாதிட்ட வழக்குகளாலோ வெறுமனே அளவிடப்படக்கூடியது அல்ல. வசதிக்காக கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத, விளிம்பு நிலை மக்களின் உரிமைகளே ஒரு சமூகத்தின் விழுமியங்களுக்கான உண்மையான சோதனை என்று கருதுகின்ற – நீதிக்காக பொறுமையான, ஆரவாரமற்ற அன்றாட முயற்சி தேவை என்பதை உணர்த்திய ஒரு வாழ்க்கை முறையையே அவர் விட்டுச் சென்றுள்ளார்.
சூரியாவின் தாயார் வழிநடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் நினைவாகவும் பொன்நிற சூரிய மலரின் கௌரவமாகவும் அவருக்கு சூட்டப்பட்ட பெயர் மிகவும் பொருத்தமானது. அந்த மலரைப் போலவே, கடினமான சூழ்நிலைகளில் அவர் பலத்தை அளித்தார், ஒளி தேவைப்படும் இடங்களில் மிக பிரகாசமாக மலர்ந்தார்.
மகிழ்வுடன் இளைப்பாறுங்கள் சூரியா. உங்கள் பணிகளே உங்களின் சாட்சியங்கள். இலங்கை உங்களுக்கு ஒருபோதும் ஈடு செய்ய முடியாத கடன்பட்டுள்ளது.
லயனல் போபகே
ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச்செயலாளர்