Photo, @anuradisanayake

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு,

நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் பத்தொன்பது மாதங்களும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பதினேழு மாதங்களும் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு தமிழன் என்பதைத் தாண்டி, ஒரு இலங்கையனாக சில விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது, உங்களதும், உங்களின் சக தோழர்களான பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துன்னத்தி, விஜித ஹேரத் ஆகியோரதும் அர்ப்பணிப்புடனான அரசியலைக் கண்டு பிரமித்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் தமிழர் -விரோத செயற்பாடுகளால், எம்முடைய தமிழ் அரசியல் தலைமைகள், அரசியல் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்திற்காக உங்களுக்கோ, மேற்குறிப்பிட்ட யாருக்குமோ வாக்களிக்கும் படி தெரிவித்திருந்தாலன்றி, மற்றைய சந்தர்ப்பத்தில் வாக்களித்திருக்க மாட்டேன். அதற்கமைய 2024-இல் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கோ, உங்கள் கட்சி சார்ந்த எவருக்குமோ வாக்களிக்கவில்லை என்பதனை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏற்கனவே கூறியது போல், உங்களுடைய தமிழர் – விரோத செயற்பாடுகளை உறுதிப்படுத்துகின்ற விதமாகவே உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனமும் அமைந்திருந்தது. சுதந்திரத்தின் பின்னரான அரசாங்க கட்டமைப்பு, தமிழர்களை, ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காது, எம்மை திட்டமிட்டு புறக்கணிக்கின்ற, பாரபட்சத்திற்கு உள்ளாக்குகின்ற விதமாக அமைந்துள்ளது என்பதையும், அதனால்தான் எம்முடைய நாட்டினை 76 வருடங்களாக (2024 – 1948) வன்முறை சூழ்ந்திருந்தது என்பதனையும் அங்கீகரிக்காது, கண்துடைப்புக்காக “நாம் எல்லோரும் இலங்கையர்கள்” என்ற போலிக் கோசத்தினை சொல்லி, நிம்மதியானதும், கௌரவமானதுமான வாழ்க்கைக்காக ஏங்கி வருகின்ற எனது மக்களை ஏமாற்றும் விதமாகவே உங்களுடைய விஞ்ஞாபனம் அமைந்திருந்தது. இருந்தாலும், கலாநிதி ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் தேசிய மக்கள் சக்தியுடனான இணைவு ஒரு போலி நம்பிக்கையை என் மனதில் விதைத்திருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்த நம்பிக்கை கூட ஓரிரு மாதங்களில் சிதறடிக்கப்பட்டு விட்டது என்பது கசப்பான, ஆனால் ஆச்சரியமளிக்காத உண்மை.

இந் நீண்ட முன்னுரை எதற்காகவெனில், தமிழர்களுடைய நியாயமான கோரிக்கைகள் கூட உங்கள் காதில் விழப்போவதில்லை என்பதனை அறிந்திருந்தாலும், எமது நாட்டினது முன்னேற்றத்துக்காக தாங்கள் இதயசுத்தியுடன் செயற்படுவீர்கள் என்று நம்பியிருந்தேன். இருப்பினும், அந்நம்பிக்கை, அசோக ரன்வலவினுடைய போலி கலாநிதி பட்டத்தினை நீங்கள் கையாண்ட விதத்தினை அவதானித்ததுடன் நலிவடைந்துபோனது. “தவறு நிகழ்ந்து விட்டது, மன்னிப்புக் கோருகிறோம்,” என்று கூறி அவரை பதவி விலக பணித்திருக்க வேண்டும். ஆனால், அவரது பொய்யை நியாயப்படுத்தும் விதமான கருத்துக்களை உங்களது தோழர்கள் முன்வைத்தார்கள். நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படாதிருந்தால், இன்றுவரை தன்னுடைய கல்வித் தகைமையை நிரூபிக்காத அசோக ரன்வல தொடர்ந்தும் சபாநாயகராகப் பதவி வகித்திருப்பார்.

அடுத்து, முறையான நடபடிமுறைகள் பின்பற்றப்படாது விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான குற்றச்சாட்டினை நீங்கள் கையாண்ட விதம், உங்களின் நேர்மை மீது ஏற்பட்டிருந்த சந்தேகத்தினை வலுப்படுத்தியது. இதற்கிடையில், உங்களால் நியமனம் வழங்கப்பட்ட உங்களின் பணிப்பாளர் – சட்டம், நீக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கோசமெழுப்பிய பயங்கரவாத தடைச் சட்டத்தினை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தங்களின் நிலைப்பாடு என்று மக்களை நம்பவைத்த பல அடிப்படையான, ஆனால் மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் முரண்பாடாக செயற்பட்டும், கருத்துக்களைத் தெரிவித்தும் வருகிறீர்கள். இவை அனைத்தும் மாற்றத்தினை விரும்பி மக்கள் தங்களுக்கு அளித்த ஆணையினை மீறுகின்ற செயற்பாடாகும். இவை, உங்களது ஆணவத்தையும், அறியாமையையும் வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகின்றது.

“நாங்கள் மேன்மையானவர்கள், மற்றவர்கள் அனைவரும் திருடர்கள்,” என்று மக்களை நம்பவைத்து அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொண்ட உங்களின் செயற்பாடு, இன்று அத்திருடர்களை விஞ்சும் விதமாக இருக்கின்றது.

நீங்கள் கூறிய ஏனைய விடயங்களில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. இருப்பினும், இலஞ்சம், ஊழலை ஒழிப்பது தொடர்பில் மக்களின் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுவார்கள் என்று தீர்க்கமாக நம்பினேன். அசோக ரன்வலவிடைய கல்வித்தகைமை மோசடியினை (credential fraud) நீங்கள் கையாண்ட விதத்துடன் நலிவடைந்து போயிருந்த அந் நம்பிக்கை, குமார ஜயக்கொடியுடைய ஊழல் வழக்கு மற்றும் நிலக்கரி இறக்குமதி முறைகேடு ஆகியவற்றுடன் முற்றாக அற்றுப்போய்விட்டது.

ராஜபக்‌ஷர்களினுடைய ஊழலையும், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும் வைத்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், ஆச்சிக்கு வந்த அடுத்த மாதமே பிணைமுறி மோசடியில் ஈடுபட்டு, தன்னுடைய சட்டபூர்வத்தன்மையினை (legitimacy) இழந்தது. அதற்குப் பின்னர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் மக்களால் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி, வெறும் நான்கே வருடங்களில், ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்தினைக் கைப்பற்றினார்கள். இதனை உங்களுக்கு, இவ்விடத்தில் நினைவுபடுத்துவதற்குக் காரணம், “அறிமுகமில்லாத தேவதையை விட, அறிமுகமான பிசாசு மேல்” என்று எமது மக்கள் நினைப்பதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படுவதில்லை. 2015 மற்றும் 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை வேண்டி ஏற்படுத்தப்பட்டவையல்ல. ஆனால், 2024இல் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம், ‘மாற்றம்’ தொடர்பில் மாறுபட்ட சிந்தனை இருந்தாலும், ஏதோவொரு மாற்றத்தினை எதிர்பார்த்து நிகழ்த்தப்பட்டது. அப்பின்னணியில், நாட்டினை மேம்படுத்துகின்ற விதமான, கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மக்கள் ஆணையும், வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இம் மாற்றங்கள் “தேனிலவு” காலம் என்று அறியப்படும் ஆட்சியமைத்த தரப்பு மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கின்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற போதே மக்களால் கேள்விகள் இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரசியல் யதார்த்தம் உள்ளது என்பது நீங்கள் நன்கு அறிந்த விடயம். இருப்பினும், கடந்த பதினேழு மாதங்களில், நீங்கள் வாக்குறுதியளித்த அவ்வாறான கட்டமைப்பு மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி, நிதியினைப் பெறுகின்ற செயற்பாடுகளை மாத்திரமே தாங்கள் மேற்கொண்டு வந்துள்ளீர்கள்.

பாரம்பரியமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்கின்ற தன்மையிலிருந்து மாறி, மாற்றத்தினை வேண்டி, உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களினை ஏமாற்றுகின்ற விதமான தங்களின் செயற்பாடு, மாற்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அற்றுப்போகச் செய்துவிடும். ஏற்கனவே, அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது விட்டன. அரைத்த மாவை அரைப்பது போல, ஒரே விடயத்தை மீண்டும், மீண்டும் அடிக்குரலில் சொல்வதானால் எவ்வித பயனும் இல்லை. “வார்த்தைகளை விட செயல்கள் உரத்து ஒலிக்கும்” (Action speaks louder than words) என்ற முதுமொழிக்கு அமைய, வார்த்தைகளைக் குறைத்து, செயலினை அதிகரிப்பது அவசியம். இக் காலம் கடந்த சூழ்நிலையிலாவது, தங்களுக்குள்ள பொறுப்பினை உணர்ந்து, அரசியல்வாதியாக அல்லாது, ஒரு ஜனாதிபதியாக செயற்படத் தவறுகின்ற போது, மக்களின் ஆணையை மீறிய ஜனாதிபதியாக மட்டுமல்லாது, மாற்றத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அழித்த அநுரவாகவும் நீங்கள் வரலாற்றில் இடம்பெறுவீர்கள்.

ஐங்கரன் குகதாசன்