படம் | கட்டுரையாளர்

யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கார்களையும், பொம்மைகளையும் குழந்தைகள் சில வைத்திருக்கின்றன. சிரட்டை, மண் அடுப்பு, குட்டிச் சமையல் விளையாட்டுக்களும் நடக்கின்றன. காற்சட்டை அணிந்தால் மேற்சட்டை அணியாமலோ, மேற்சட்டை அணிந்தால் காற்சட்டை அணியாமலோ அவர்களின் முழுப்பொழுதும் பூரண சுதந்திரத்தோடு கழிகிறது. அழுக்கு மேனியெங்குமின்றி, வார்த்தைகளிலும் அவர்களை மீறி வருகிறது. அந்தத் தலைகள் எண்ணையையும், சுத்தமான தண்ணீரையும் கண்டு பலகாலமாகிவிட்டதை உணர்த்துகின்றன.

எல்லாக் குழந்தைகளைப் போலவும், கணினி கேம் விளையாடவும், சுட்டித் தொலைக்காட்சிகள் பார்க்கவும், வடிவேல் நகைச்சுவை ரசிக்கவும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அப்பாவின் மோட்டார் சயிக்கிளில் முன்னிருந்து ஊர் சுற்றிப் பார்க்கவும், எல்லாம் கடந்து ரியூசன் சென்று படிக்கவும் என இந்தக் குழந்தைகளின் கனவும் மிகப்பெரியது. ஆனால், அது நடக்க சாத்தியமேயில்லை என்கின்றனர் அவர்களின் அப்பாக்களும் அம்மாக்களும்.

“…இங்க இருந்து கொண்டு எந்தத் தொழில் செய்யிறது. மேசன் வேலையும், கடை போடுறதையும் தவிர வேற வேலையள் இல்ல. மீன் யாவாரம் சில பேர் செய்யிறாங்கள். அதுவும் ஓடுற மோட்டார் சயிக்கிளின்ர பெற்றோலுக்கே சரியாபோயிடுது… இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அரசாங்கமும், நிறுவனங்களுக்கும் குடுக்கிற நிவாரணங்கள் கூட எங்களுக்குத் தாறதில்லை. ஏதாவது விசேஷம் என்டா மட்டும் ஆமிக்காரர் கூப்பிட்டு தெரிவுசெஞ்ச சிலபேருக்சுகு சாப்பாடு தாறவங்கள்” என்கிறார் அந்தக் கூடுகளுக்குள் வசிக்கும் மேசன் வேலை செய்யும் ஒரு அப்பா. அவருக்கும்

இதே ஆசைகளோடு 5 குழந்தைகள் ஏறுவரிசையில் நிற்கின்றனர்.
இதைத் தவிர அவர்களால் என்ன தொழில் செய்ய முடியும்? இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் வாழ்வின் முழுப்பாகங்களும், அவர்தம் குழந்தைகளும் திருப்திபடும் தொழிலையே அவர்கள் செய்தனர். மீன்பிடி, விவசாயம் ஆகிய இரண்டு தொழில்களும் மிகவும் சிறப்பாக இருந்த காலமொன்றில் அவர்கள் வலி. வடக்கு கிராமங்களை விட்டு விரட்டப்பட்டார்கள்.

“காலையில திருப்பி வந்திடலாம்” என்கிற நம்பிக்கையில் பலவற்றை விட்டு வந்தனர். வயதான, நடக்க முடியாத மூத்தவர்கள், பட்டியில் கட்டியிருந்த ஆடுகள் – மாடுகள், அடைக்கப்பட்டிருந்த கோழிகள், சமையலறைப் தானியப் பேணிகளில் அம்மாக்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், நகை, அப்பாக்களின் சேர்ட் பொக்கற்றுக்களில் இருந்த மிச்சக்காசு, சுவாமியறையிலிருந்து கடவுளர்களின் படங்கள் என அனைத்தையுமே நாளை வந்து பார்ப்போம் என்ற நம்பிக்கையில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அந்தக் குழந்தைகளுக்கு இன்று கால்நூற்றாண்டு வயது கடக்கிறது. அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். ஆனால், ஊர் திரும்பும் அந்த ‘நாளை’ மட்டும் இன்னும் வரவேயில்லை. விட்டு வந்த கிராமங்கள் முழுவதுமே இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுவிட்டது. “ஆமிக்காரன் எங்கட வீட்டில நிரந்தரமாவே தங்கீட்டான். நாங்க எங்கட ஊருக்கு போகமாட்டம் போல” ஊர் திரும்புதலுக்கான நம்பிக்கையும் இப்போது தளர்ந்துவருகிறது.

‘நாளை’ அவர்களுக்கு வரவேயில்லையாயினும், பூர்வீக நிலத்திலிருந்து பெயர்ந்த நாளிலிருந்து இடம்பெயர்வுகள் தொடர்ந்தன. யாழின் பல பகுதிகளையும், வன்னியின் முள்ளிவாய்க்காலையும், இந்தியாவின் ராமேஸ்வரம் உள்ளிட்ட ஈழ அகதிகள் நலன்புரி நிலையங்களையும் தரிசித்து திரும்பியவர்கள்தான் இங்கிருக்கின்றனர். இன்னும் சிலர் புலம்பெயர் தமிழர்களாகிவிட்டனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் 10 இற்கும் குறையாத இடப்பெயர்வுகளைச் சந்தித்து கோணப்புலவு மற்றும் ஊரணிக் கூடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர். இந்த பெயர்வுக் காலத்தில் இழந்தவைகளாக மகன்கள், மகள்கள், கணவன்கள், கால்கள், கைகள், கண், உடலின் வேறு எதாவதொரு பாகம், மற்றும் இதர பொருள் சொத்துக்களை அவர்கள் குறிப்பிடுகின்றனர். இழப்பை இலகுவாகக் கடத்தலை இந்த உழல்வு வாழ்க்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது.

ஆனாலும், அவர்கள் விடுவது ஒரே ஒரு வேண்டுகைதான். “ஊர் போக வேணும். எங்கட குழந்தைகளுக்கு ஊரைக் காட்டவேணும். ஊருக்கு அனுப்புங்கோ. எங்கட குழந்தைகளும் நல்லநிலைக்கு வரவேணும்”

இடைக்கால தங்குதலுக்காக அமைக்கப்படுவதை முகாம் என்றோ, நலன்புரி நிலையமென்றோ, காம்ப் என்றோ நாம் அழைத்துக் கொள்கிறோம். அதாவது, ஒரு தொகுதி மக்கள் இரவோடிரவாகவோ, பகலோடு பகலாகவோ, அதிகாலையோடு அதிகாலையாகவோ, எப்பொழுதிலாவது பெயர்க்கப்பட்டு வேறொரு இடத்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதைக் குறிக்கவே இந்தச் சொற்களைப் பயன்படுத்துகின்றோம். 25 ஆண்டுகள், நிரந்தரமாகவே இந்த இடம்பெயரிகள் தங்கியிருக்கும் கூண்டுகளுக்கு என்ன பெயரிட்டு அழைப்போம்?

ஜெரா