விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம்ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவின் தனித்துவமான ஈரநிலப் பகுதியை அழித்து அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது சட்டவிரோதமான முறையில் ஆரம்பித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாமல் 138 ஏக்கர் ஈரநிலப்பகுதியை நிரப்புதல் மற்றும் கம்பி வேலிகளை இட்டு ஈரநிலத்தைப் பிரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறி இவ்வாறான ஒரு பாரிய சட்டவிரோதச் செயல் இடம்பெற்று வருகின்ற நிலையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் அமைச்சு மௌனம் காப்பது இந்நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக சவாலுக்கு உட்படுத்தும் ஒரு செயலாகும். இதற்கு நிறைவேற்று அதிகாரத்தின் வழிகாட்டல் இருப்பதை நோக்கும்போது, எதிர்காலத்தில் இந்நாட்டின் சட்ட அமைப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்திப்பது மட்டுமன்றி, நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் கடும் ஆபத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதும் தெளிவாகப் புலனாகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மேலதிகமாக, கோல்ப் மைதானம், வீட்டுத் தொகுதிகள் மற்றும் ஹோட்டல் வளாகங்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் போது, அந்த ஈரநிலப் பகுதி முழுமையாக அழிந்து போவதுடன், அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட யாழ். கடலேரியின் சிறுதொழில் மீன்பிடித் தொழிற்துறையும் முற்றாக வீழ்ச்சியடையும். அதுமட்டுமன்றி, இந்த விளையாட்டு மைதானங்களைப் பராமரிப்பதற்குப் பாரிய அளவிலான நீர் தேவைப்படும். தற்போது யாழ்ப்பாண மக்கள் கடும் நீர் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், கிரிக்கெட் மற்றும் கோல்ப் மைதானங்களுக்காக அதிகளவு நீரைப் பயன்படுத்த நேரிடுவதால் அந்த நீர் நெருக்கடி மேலும் தீவிரமடையும். இதன் விளைவாக, இந்தத் திட்டத்தினால் யாழ். மக்களின் நீர் உரிமை முற்றாகப் பறிபோகும் நிலை ஏற்படும்.
ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகளின் வாழ்விடங்கள் அழிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு தீவானது கண்டல் தாவரங்கள், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் உவர்நீர் சதுப்பு நிலங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான ஈரநிலத் தொகுதியாகும். இந்த ஈரநிலங்களை உள்நாட்டு மற்றும் புலம்பெயர் நீர்வாழ் பறவை இனங்கள் பெருமளவில் தமது இரையூட்டும் நிலங்களாகப் பயன்படுத்துகின்றன.
இலங்கைக்கு புலம்பெயர்ந்து வரும் Glossy Ibis, Black-tailed Godwit, Garganey, Eurasian Wigeon, Northern Pintail மற்றும் Northern Shoveler போன்ற ஆயிரக்கணக்கான பறவைக் கூட்டங்கள் இந்த ஈரநிலங்களில் பதிவாகியுள்ளன.
இலங்கை பறவைகள் சங்கத்தினால் (Ceylon Bird Club) 1983ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு அறிக்கைகளின்படி, யாழ்ப்பாண ஈரநில பகுதிகளில் சுமார் 2 மில்லியன் வரையான கரையோரப் புலம்பெயர் நீர்வாழ் பறவைகள் (Shorebirds) பதிவாகியுள்ளன. சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland International) 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி, இலங்கையில் அதிகளவிலான நீர்வாழ் பறவைகள் பதிவாகும் பகுதிகளில் ஒன்றாக யாழ்ப்பாண ஈரநிலப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, வடக்கு சைபீரியாவிலிருந்து மத்திய ஆசியப் பறவைகள் இடப்பெயர்வுப் பாதை (Central Asian Flyway) ஊடாக மில்லியன் கணக்கான குளிர்காலப் புலம்பெயர் பறவைகள் இலங்கைக்கு வருகை தருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தீவுகள் ஊடாகவே நாட்டிற்குள் நுழைகின்றன. இடைவிடாது நீண்டதூரம் பறந்து வரும் இந்தப் பறவைகளின் முதல் தங்குமிடமாக இப்பகுதிகள் அமைகின்றன. இவ்வாறானதொரு தனித்துவமான ஈரநிலப் பகுதியை அழிப்பதன் மூலம், இந்தப் பறவைகளின் இரையூட்டும் நிலங்கள் அழிக்கப்படுகின்றன. வட துருவத்திலிருந்து தென் துருவத்தை நோக்கி குளிர்காலத்தைத் தவிர்ப்பதற்காக மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்து வரும் இந்தப் பறவைகளின் வாழ்விடங்கள் மிகக்குறுகிய காலத்தில் பறிக்கப்படுகின்றன. இத்தகைய பாரிய அழிவுகரமான திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலிருந்து ஜனாதிபதி, விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகியோர் தப்பித்துக் கொள்ள முடியாது.

மீன்பிடித் தொழிலாளர்களை இடம்பெயரச் செய்தல்
புலம்பெயர் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமன்றி, இந்த ஈரநிலப் பகுதியானது யாழ்ப்பாணக் கடலேரி சார்ந்த மீன்கள், இறால் மற்றும் நண்டுகளின் இனப்பெருக்கப் பிரதேசமாகவும் காணப்படுகிறது. எனவே, இப்பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு சிறுதொழில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவ மக்களின் அன்றாட வாழ்க்கையும் பொருளாதாரமும் இந்த ஈரநிலங்களிலேயே தங்கியுள்ளன.
இதன் காரணமாக, இந்த ஈரநிலப் தொகுதியை யாழ்ப்பாணக் கடலேரி சரணாலயமாக (Jaffna Lagoon Sanctuary) பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து 2014ஆம் ஆண்டு தயாரித்த “வட மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு” (Integrated Strategic Environmental Assessment for the Northern Province of Sri Lanka) அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தச் சிறப்புமிக்க சரணாலயத்தைப் பிரகடனப்படுத்தாமைக்குக் காரணம், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஈரநிலப் பகுதியை அழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தமையே ஆகும். இவ்வாறான விடயங்கள் குறித்துப் புரிதலைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் வரை மக்கள் காத்திருந்தது, இவ்வாறான இயற்கை வளங்களையும் அதனுடன் பிணைந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆகும்.
மக்கள் தமது இறையாண்மை அதிகாரத்திற்கு உட்பட்ட நிறைவேற்று, சட்டவாக்க மற்றும் நீதித்துறை அதிகாரத்தை தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கியது இவ்வாறான அழிவுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதற்காகவே ஆகும். ஆனால், அவர்களும் முந்தைய அரசாங்கங்களைப் போலவே மக்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்களானால், தற்போதைய அரசாங்கமும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சீர்குலைத்துள்ளது என்றே கருத வேண்டும்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சுற்றுச்சூழல் சட்டங்களைக் குறைத்து மதிப்பிடுதல்
தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் 23(ஆ) பிரிவின்படி, இந்த கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு நகரத் திட்டமானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையின் அடிப்படையில் அனுமதி பெறப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். அந்தப் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 ஆம் திகதியிட்ட 772/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி, 4 ஹெக்டேயருக்கும் அதிகமான அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான ஈரநிலத்தை நிரப்பி அபிவிருத்தித் திட்டமொன்றைச் செயல்படுத்துவதற்கு முன்னர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும்.

முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு அனுமதி பெறாமல், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் 23(அஅ) உப பிரிவின் கீழ் சட்டவிரோதமாக திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அச் சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி நீதவான் நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு 15,000 ரூபாவிற்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக வழங்கப்பட முடியும்.
இதற்கு மேலதிகமாக, 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க திருத்தப்பட்ட தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 23(அ) மற்றும் 47 ஆகிய பிரிவுகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட 2001ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க திட்டச் செயற்பாட்டு நடைமுறை ஒழுங்கு விதிகளின்படி, இரண்டு ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட ஈரநிலத்தை நிரப்புவதற்கு முன்னர், தொல்பொருள் பாதிப்பு மதிப்பீடு (Archaeological Impact Assessment) ஒன்றை மேற்கொண்டு அதற்கான அனுமதியைப் பெறுவது அவசியமாகும்.
எந்தவிதமான அனுமதிகளுமின்றி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஜனாதிபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை பலவந்தமாக நடைமுறைப்படுத்துவதாகத் தெரிகிறது. இது எதிர்கால அபிவிருத்திப் பணிகளின் போது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதாக அமையும்.

நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இது முன்னெடுக்கப்படுவது குறித்து நாம் கவலையடைகிறோம். இதன் காரணமாக, நாட்டின் எதிர்கால விதிமுறை குறித்து எம்மால் எவ்வித நம்பிக்கையையும் கொள்ள முடியாமல் உள்ளது.
சர்வதேச உடன்படிக்கைகளை மீறுதல்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் மேற்கு ஜெர்மனியின் பொன் (Bonn) நகரில் 1979 ஜூன் 23 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1983 நவம்பர் 01 முதல் நடைமுறைக்கு வந்த ‘புலம்பெயர் வனவிலங்கு இனங்களைப் பாதுகாப்பதற்கான பொன் உடன்படிக்கையை’ (Bonn Convention – CMS), இலங்கை 1990 ஜூன் 06 அன்று அங்கீகரித்தது. எல்லைகளைக் கடந்து இடம்பெயரும் விலங்கு இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
புலம்பெயர் இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், புலம்பெயர் இனங்கள் அழிந்துபோவதைத் தடுத்தல் மற்றும் அவை தொடர்பான ஆய்வுகளை ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை அங்கீகரித்த ஒரு நாடு என்ற ரீதியில், புலம்பெயர் பறவை இனங்களின் பாதுகாப்பிற்கும் அவற்றின் வாழ்விடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த நமக்கு உரிமை இல்லை.
அதுமட்டுமன்றி, ஈரானின் ராம்சார் (Ramsar) நகரில் 1971 பெப்ரவரி 02ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்வாழ் பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ‘ராம்சார் உடன்படிக்கையை’ (RAMSAR Convention), 1990 ஜூன் 15ஆம் திகதி அங்கீகரித்த நாடு என்ற ரீதியிலும், எமது நாடு ஈரநிலங்களையும் நீர்வாழ் பறவைகளின் வாழ்விடங்களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ், இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு ராம்சார் ஈரநிலங்கள் இதுவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது மாது கங்கா சரணாலயம், புந்தல தேசிய பூங்கா, ஆனைவிழுந்தான் சரணாலயம், வன்காலை சரணாலயம், வில்பத்து தேசிய பூங்கா மற்றும் குமண தேசிய பூங்கா உள்ளிட்ட குடும்பிகல-பாணமை சரணாலயம் ஆகியவையே அந்த ஆறு இடங்களாகும். இதற்கு மேலதிகமாக கொழும்பு நகரம் சர்வதேச ஈரநில நகரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 02ஆம் திகதி உலக ஈரநில தினத்தைக் கொண்டாடும் ஒரு நாடு என்ற ரீதியிலும், இந்த ஆண்டு சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஈரநில தினத்தைக் கொண்டாடி மக்களுக்கு வழிகாட்டிய ஒரு அரசாங்கம் என்ற ரீதியிலும், ஈரநிலங்களை அழிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை. இவை அனைத்திலிருந்தும் தெரிவது என்னவென்றால், தற்போதைய அரசாங்கம் மக்களுக்குக் காட்ட முயற்சிக்கும் பிம்பத்தை விட, அவர்களின் உண்மையான செயல்பாடுகள் மிகவும் அழிவுகரமானவை என்பதாகும்.
வளமான நாடு அழகான வாழ்க்கையை காட்டி மக்களை ஏமாற்றுதல்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுடன் உடன்பட்ட “வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தின் ‘நிலையான உயிரியல் உலகம் – பசுமையான வாழ்வு’ பகுதியில், சுற்றுச்சூழல் நீதி மற்றும் சமத்துவம், சுற்றுச்சூழல் அமைப்பு அணுகுமுறை, சுற்றுச்சூழல் நல்லாட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கருத்துருக்கள் கொள்கைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் வலயங்களைப் பிரகடனப்படுத்தி அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாட்டிலுள்ள ஈரநிலங்களை அடையாளம் கண்டு, ஆவணப்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அந்தப் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத வகையில், தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்களிடம் முன்வைத்து உடன்பட்ட “மிஹிகத (பூமி) சுற்றுச்சூழல் கொள்கையில்”, சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறன் மிக்க வலயங்களைச் சரியாக உறுதிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கடந்த கால அரசாங்கங்கள் எவையும் செய்யாத வகையில் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்களை கிஞ்சித்தும் மதிக்காமல் தற்போதைய அரசாங்கம் செயற்படுவதானது, இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் மூலம் மக்கள் மிக மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது.

இதன் காரணமாக, வடக்கில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படக் கூடாது என்பதை நாம் வலியுறுத்தவில்லை. வடக்கு – கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும்போது, சட்டத்தின் ஆட்சியும் சட்டத்தின் முன் சமத்துவமும் மீறப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
அதுமட்டுமன்றி, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியையே ஏற்படுத்த வேண்டும். மாறாக, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட, மக்களையும் இயற்கையையும் இடம்பெயரச் செய்யும் அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான தவறான அபிவிருத்தியின் மோசமான விளைவுகளை அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கடந்த பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர்.
அந்த முன்னுதாரணங்களைத் தவிர்த்து, யாழ்ப்பாணத்திலும் அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் அபிவிருத்தியைத் திட்டமிடுவது தற்போதைய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படாத ஒரு நிலையாகும்.
யாழ்ப்பாண மக்களின் அன்றாட வாழ்வாதாரமும் பொருளாதாரமும் தங்கியுள்ள இயற்கை வளங்களான கடலேரி, கண்டல் காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் உவர்நீர் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நன்னீர் தொகுதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களிடமிருந்து பறிக்கப்படக் கூடாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் இதனை உணர்ந்திருந்த தேசிய மக்கள் சக்தி, தமது “வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தில் இவை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது இதற்காகவே ஆகும்.
இருப்பினும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் இவை அனைத்தையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட, வணிக நோக்கங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முறையில் நடைமுறைப்படுத்தும் போக்கையே காணமுடிகிறது.

எனவே, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மக்கள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை வழங்குவது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் பரிந்துரைக்கிறோம். அதுமட்டுமன்றி, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைக்கும்போது, சாத்தியக்கூறு ஆய்வுகளின் (Feasibility Studies) அடிப்படையில், சூழலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து, முறையான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
கடந்த கால அரசாங்கங்களின் தவறான திட்டமிடல்களால் சூழல், பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளதை அனுபவித்து வரும் நாம், தற்போதைய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது முறையான, யதார்த்தமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஒரு அபிவிருத்திச் செயல்பாட்டையே என்பதை இறுதியாக வலியுறுத்துகிறோம்.
சஜீவ சாமிகர
காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்