இலங்கையைத் தாக்கிய Ditwah புயலின் அழிவுகரமான தாக்கம் தொடர்பாக Tamil Guardian வெளியிட்ட ஒரு கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் Ditwah புயலின் தாக்கத்தை சமீபகால ஆண்டுகளில் நிகழ்ந்த மிகக் கொடிய வானிலை சார்ந்த பேரிடராக விவரிக்கின்றனர். ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள், இந்த கடுமையான பேரிடரின் தாக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் போதும், இலங்கை அரசாங்கம் அனைத்து அவசர தகவல் தொடர்பாடல்களையும் தொடர்ந்து சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே வெளியிட்டு வருகிறது, தமிழ் மொழி பேசும் பகுதிகளுக்கு உயிர் காக்கும் தகவல்கள் இல்லாமல், அரசு அவர்களின் தொடர்பாடலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மூலம் விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் கூட மொழிபெயர்ப்பு இல்லாமல் வெளியிடப்பட்டன, தமிழ் மொழி முழுவதுமாக தவிர்க்கப்பட்டது மற்றும் ஆங்கிலத்தில் அவ்வப்போது மட்டுமே புதுப்பிப்புகள் கிடைக்கின்றன.
Tamil Guardian சுட்டிக்காட்டியது உண்மையா?
மேற்கூறிய கருத்துக்கள் பற்றி, நான் 2025 நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை 7.15 வரை DMC அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் பதிவிடப்பட்ட 68 பதிவுகளை ஆய்வு செய்தேன். ஆரம்பத்தில், அதன் முதன்மை பக்கத்தில் இருந்த அனைத்து அத்தியாவசிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருந்தன. இந்த 68 Facebook பதிவுகளில், சுமார் பன்னிரண்டு (12) தகவல்கள் மற்றும் அத்தியாவசிய அப்டேட்கள் தமிழில் இருந்தன. Machine Translation பயன்படுத்தி அப்டேட்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் வெள்ளம் அல்லது வெள்ள உயர் அபாயம் தொடர்பானவை.
தமிழ் அப்டேட்களின் விவரங்கள்:
- 2025-11-28, 18:07: கொழும்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறது, அம்பத்தலே நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வதால் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
- 2025-11-28, 18:04: கொழும்பு பகுதிக்கு அம்பத்தலே நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேறுவதால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2025-11-28, 16:47: நீர்ப்பாசன திணைக்களம், களனி கங்கை படுகையின் கீழ்ப்பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் உள்ளதாகவும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்துகிறது.
- 2025-11-28, 16:37: களனி கங்கை படுகையின் கீழ்ப்பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்குள் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வசிப்பவர்கள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2025-11-28, 12:09: இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் களு கங்கை படுகையில் பெரிய வெள்ள நிலைமையின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 2025-11-28, 12:08: களு கங்கை கீழ்ப்பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் பெரிய வெள்ள நிலைமையின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- 2025-11-28, 10:02: களனி கங்கை படுகையின் கீழ்ப்பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கடுமையான வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, கொழும்பு மற்றும் களனி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- 2025-11-28, 10:01: களனி கங்கை படுகையின் கீழ்ப்பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கடுமையான வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- 2025-11-27, 22:11: கிழக்கு கடலோரப் பகுதியில் குறைந்த அழுத்த வானிலை நிலைமைகள் காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 2025-11-27, 01:15: நீர்த்தேக்கங்கள் உள்ள பகுதிகளில் மழை காரணமாக மகாவலி கங்கையின் கீழ்ப்பகுதிக்கு 48 மணி நேரத்திற்குள் வெள்ள எச்சரிக்கை சாத்தியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2025-11-27, 01:13: மகாவலி கங்கை கீழ்ப்பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, தகவலுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2025-11-26, 15:54: கல் ஓயா படுகைக்கு 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பதிவுகளில் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசிய தகவல்களை வழங்குவதில் எண்ணிக்கை மற்றும் விரிவான தன்மையில் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. DMC சிங்கள Facebook அப்டேட்கள் அனர்த்த முகாமைத்துவம், குறிப்பிட்ட வீதிகள் மூடப்படுதல், உயர்தர பரீட்சை போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், தமிழ் பதிவுகள் வெள்ளம் தொடர்பாக மட்டுமே இருந்தன.
தமிழ் மொழி பேசும் மக்கள் தவறவிட்டது என்ன?
1) நிலச்சரிவு எச்சரிக்கைகள் முற்றிலும் இல்லை (பூஜ்யம்):
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்ட எச்சரிக்கைகள் பற்றிய விரிவான பதிவுகள் பெரும்பாலும் சிங்களத்திலும் (மற்றும் ஆங்கிலத்திலும்) இருந்தன, ஆனால் தமிழில் இந்த அபாயங்கள் பற்றிய எந்த பதிவுகளும் இல்லை.
சிங்கள பதிவுகளில் உயர் அபாய மாவட்டங்கள் (பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி) மற்றும் மக்களை வெளியேற்ற வேண்டிய குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகள் (Level 3 warnings) தெளிவாகக் குறிப்பிடப்பட்டன. இந்த மலையகத்தில் வசிக்கும் தமிழ் மக்கள், நிலச்சரிவு தொடர்பாக அதிக பாதுகாப்பு/ கவனம் தேவைப்படும் பகுதியில் இருந்தபோதிலும், DMC அதிகாரப்பூர்வ Facebook மூலம் இந்த சிறப்புத் தேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் (தமிழில்) வழங்கப்படவில்லை.
2) அத்தியாவசிய உட்கட்டமைப்பு மற்றும் வீதிகள் மூடப்படுவது தொடர்பான அப்டேட்கள் இல்லாமை
சிங்கள பதிவுகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு மற்றும் வீதிகள் மூடப்படுவது பற்றிய நேரடி அப்டேட்கள் வழங்கப்பட்டன. கொழும்பு – கண்டி வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதி மற்றும் மஹியங்கனை 18 வளைவு வீதி மூடப்படுவது சிங்கள மொழியில் அறிவிக்கப்பட்டது, மாற்று வழிகள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன. இந்த முக்கிய போக்குவரத்து பாதைகள் வழியாக பயணிக்கும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டது மற்றும் தொடர்புடைய நிலச்சரிவு ஆபத்துகள் பற்றி அறிவிக்க அவர்கள் தவறிவிட்டனர்.
3) கல்வி மற்றும் அதனோடு தொடர்புடைய பிற விநியோகங்கள் பற்றிய அப்டேட்கள் இல்லாமை
DMC பேஸ்புக் பதிவுகளில் உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு பரீட்சை வினாத்தாள்கள் கொண்டு செல்வதற்கு விமானப்படை அளித்த ஆதரவு பற்றிய குறிப்பிட்ட சிங்கள பதிவுகள் இருந்தன. ஆச்சரியகரமாக, நாட்டில் யாருக்கும் தெரிந்தபடி யாழ்ப்பாணத்தில் முக்கியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதி – ஆனால் அந்த பதிவு கூட சிங்களத்தில் மட்டுமே இருந்தது.
4) சிறப்பு கங்கை படுகை (Specific River Basin) எச்சரிக்கைகள் இல்லாமை (தெதுரு ஓயா)
தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட பதிவுகள் களனி, களு மற்றும் மகாவலி கங்கைகளின் நிலைமைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, சிங்கள பதிவுகளில் இருந்த மற்ற சிறப்பு படுகைகளின் விரிவான எச்சரிக்கைகள் தமிழ் பதிவுகளில் இல்லை. உதாரணமாக, தெதுரு ஓயா எச்சரிக்கைகளில் குறிப்பிட்ட நீர் வெளியீட்டு வேகம் (77,400 கன அடி, வினாடிக்கு) மற்றும் ஆபத்தான பிரதேச செயலாளர் பிரிவுகள் (உதாரணமாக, வாரியபோல, நிகவரட்டிய) பட்டியலிடப்பட்டிருந்தன, ஆனால் அது பற்றி தமிழில் எதுவும் இல்லை. இந்தப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மொழியில் மட்டுமே செயல்படும் மக்களுக்கு, மிக முக்கியமான நீர் வெளியீட்டு வேகம் பற்றி அறிய முடியவில்லை.
5) கடல் மற்றும் காற்று எச்சரிக்கைகள் தொடர்பாக விரிவான விளக்கமின்மை
சிங்கள மொழி பதிவுகளில், காற்றின் வேகம் (மணிக்கு 60-70 கி.மீ) மற்றும் மீனவ சமூகத்திற்கு ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதில், கிழக்கு கடற்கரைக்கு அதிக ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்ட குறுகிய தமிழ் பதிவு இருந்தாலும், அது சிங்கள பதிவுகளில் இருந்த விரிவான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் அந்தப் பகுதியின் வானிலை நிலைமையை வழங்கவில்லை.
மேலும், DMC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருந்தாலும், பக்க வழிசெலுத்தல், தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு உரை மற்றும் மற்ற அனைத்தும் சிங்கள அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தன. மேலே உள்ள படம் உண்மையில் இணையதளத்தின் தமிழ் பதிப்பு. 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நிலவர அறிக்கை ஆங்கிலம்/ சிங்களம்/ தமிழில் வெளியாகியிருந்தது. 27ஆம் திகதி இருந்த மிக விரிவான நிலவர அறிக்கை, 28ஆம் திகதி இருந்த spreadsheet, அந்த நாளின் மற்றொரு விரிவான நிலவர அறிக்கை, அந்த நாள் மாலை 6 மணிக்கு இருந்த மற்றொரு நிலவர அறிக்கை, 29ஆம் திகதி காலை 6 மணிக்கு இருந்த மற்றொரு நிலவர அறிக்கை அனைத்தும் சிங்களத்தில் மட்டுமே இருந்தன.
DMC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வானிலை அறிக்கைகள் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. நவம்பர் 25 முதல் இணையதளத்தில் 34 அறிக்கைகள் உள்ளன.
29: 4 அறிக்கைகள்
28: 10 அறிக்கைகள்
27: 6 அறிக்கைகள்
26: 7 அறிக்கைகள்
25: 7 அறிக்கைகள்
நான் அவை அனைத்தையும் விரைவாகப் பார்த்தேன். அவற்றில் ஒரு அறிக்கை மட்டுமே தமிழ் மொழியில் இருந்தது. மற்ற அனைத்தும் சிங்களத்தில் மட்டுமே அல்லது சிங்களத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
நவம்பர் 28, நான் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 85 பதிவுகளை ஆய்வு செய்தேன். அவை தமிழ் மொழியில் உள்ளதா என்று பரிசோதித்தேன். வெளியிடப்பட்ட 85 பதிவுகளில் 36 தமிழ் மொழியில் இருந்தன – புள்ளிவிவர ரீதியாக, இது DMC ஐ பேஸ்புக் பக்க பதிவுகளை விட சிறந்த நிலை. ஆனால், விளக்கங்களில் பிரச்சினைகள் இருந்தன. முக்கியமான வானிலை எச்சரிக்கைகளை வெளியிடும் போது தெளிவான மொழி ஏற்றத்தாழ்வு இருந்தது.
1) ஒரே இரவில் உருவான திட்வா புயல் பற்றிய பதிவுகள்/அப்டேட்கள் முழுமையாக தடுக்கப்பட்டது
நவம்பர் 27 இரவு முதல் நவம்பர் 28 காலை வரை திட்வா புயல் தீவிரமாக வளர்ச்சியடையும் நிலைமைகள் பற்றி தமிழ் மொழியில் பெரிய தகவல் பற்றாக்குறை (அல்லது துல்லியமாகச் சொல்வதானால், தகவல் ஏற்றத்தாழ்வு) இருந்தது. சிங்களத்தில், விரிவான எச்சரிக்கைகள் இரவு 8:26 (நவம்பர் 27), 11:19 – 2:02 (நவம்பர் 28), மற்றும் 5:48 க்கு வெளியிடப்பட்டன.
இந்த பதிவுகளில் புயலின் குறிப்பிட்ட இடங்கள், இயக்க வேகம் மற்றும் வளர்ச்சிகள் பற்றிய விவரங்கள் இருந்தன. ஆனால் தமிழில், கடைசி எச்சரிக்கை நவம்பர் 27, மாலை 5:58 க்கு மட்டுமே வெளியிடப்பட்டது. புயல் வேகமாக வளர்ச்சியடைந்த அடுத்த 12 மணி நேரத்தில் தமிழ் மொழியில் எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை.
2) உயிருக்கு ஆபத்தானது – அவசர சூழ்நிலைகளுக்கு குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படுத்துதல்
அவசர எச்சரிக்கைகள் தமிழ் மொழியில், இறுதியாக வெளியிடப்பட்டபோது, அவை மிகவும் தாமதமானவை – விரைவான எச்சரிக்கையின் நோக்கம் அப்போது முடக்கப்படுகிறது. நவம்பர் 25 அன்று, “கடுமையான மழை எச்சரிக்கை” சிங்களத்தில் பிற்பகல் 3:51 க்கு வெளியிடப்பட்டது. அதற்கு சமமான தமிழ் எச்சரிக்கை வெளியிடப்பட்டது மாலை 6:41 க்கு, அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு. தீவின் பல பகுதிகளில் மிக அதிக மழை பதிவான நிலையில், அவசர எச்சரிக்கைகளை தாமதித்து வெளியிடுவது மக்களது உயிரை பறிக்கக்கூடிய வாய்ப்பை அதிகமாக்கும். ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது எந்த அளவுக்கு முக்கியமானது என்பது இதன் மூலம் தெரிகிறது.
நவம்பர் 25 காலை சாதாரண வானிலை முன்னறிவிப்பு சிங்களத்தில் காலை 5:57 க்கு வெளியிடப்பட்டது, தமிழில் காலை 7:30 க்கு வெளியிடப்பட்டது, இதில் சாதாரண பயணிகள் மற்றும் மீனவர்களுக்கு 90 நிமிடங்களுக்கும் அதிகமாக தாமதமாகியே சென்றடைந்திருக்கும்.
3) இடையூறுகள், ஆபத்து அதிகரிப்புகளைத் தவிர்த்தல்
சிங்கள மொழி பதிவுகளில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேஸ்புக் பயனர்களுக்கு வானிலையின் “குறைந்த அழுத்தம்” முதல் “காற்றழுத்த தாழ்வு” – அதிலிருந்து “ஆழமான காற்றழுத்த தாழ்வு” வரை நடக்கும் மாற்றங்களின் விரிவான அப்டேட்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 27 அன்று பிற்பகல் 1:00 க்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிங்களத்தில் (மற்றும் ஆங்கிலத்திலும்) “ஆழமான காற்றழுத்த தாழ்வு” பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டது. ஆய்வுசெய்யப்பட்ட காலத்தில் அதற்கு சமமான தமிழ் மொழி பதிவுகள் பேஸ்புக்கில் காணமுடியவில்லை.
4) சமநிலையற்ற, நிலையற்ற முன்னறிவிப்புகள்
முன்னறிவிப்புகள் (சாதாரண மற்றும் கடல் பகுதிகளில்) பொதுவாக காலை 5:30 முதல் 6:15 க்கு இடையில் தொடர்ந்து சிங்கள மொழியில் வெளியிடப்பட்டாலும், தமிழ் மொழி அப்டேட்கள் சமநிலையற்ற நிலையில் இருந்தன.
நவம்பர் 27, விரிவான வானிலை முன்னறிவிப்பு காலை 6:12 மற்றும் 6:13 க்கு சிங்கள மொழியில் வெளியிடப்பட்டது. அன்று காலை தமிழ் முன்னறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மிக வேகமாக வளர்ச்சியடைந்த வானிலை நிகழ்வுகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றங்களுடன் உயிருக்கு ஆபத்தான தகவல்களை கடல் பகுதிகளில் தமிழ் மொழி பேசும் மீனவர்களுக்கு வழங்க அவர்கள் தவறிவிட்டனர்.
இலங்கையின் டிஜிட்டல்மயமாக்கலில் பாகுபாடு
e-NIC திட்டம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான பாகுபாடு பற்றி இதற்கு முன்பு, இந்த ஆண்டிலேயே நான் ஆட்கள் பதிவுசெய்யும் திணைக்களம் மற்றும் நுகேகொட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (National Transport Medical Institute) ஆகிய அரசு நிறுவனங்களில் உதாரணங்களுடன் அனுபவம் பற்றி எழுதினேன் – அந்த நிறுவனங்களில் அனைத்தும் சிங்களத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. நான் இவ்வாறு எழுதியிருந்தேன் –
அடிப்படையில், பாகுபாட்டின் படி கட்டமைக்கப்பட்ட டிஜிட்டல் உட்கட்டமைப்பு அதன் வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் இயக்கத்தின் மூலம் அந்தப் பாகுபாடுகளை குறியீடாக்கி, மேம்படுத்தி மற்றும் தொடர்ந்து பராமரிக்கும். அப்போது கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் வாக்குறுதிகள் வெற்றுத்தனமானவை மற்றும் சில சமயங்களில், மோசடியானவையாக இருக்கலாம் என்றும் எச்சரித்தேன். இலங்கையின் பொது நிறுவனங்களில் நிலவும் முறையான பாகுபாடு – மொழி கொள்கைகளிலிருந்து ஊழியர்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகள், சேவை வழங்கல் நெறிமுறைகள் வரை உள்ள நிலைமைகள் மற்றும் அந்த நிலைமைகளை உடைக்காமல் எந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் அதன் தொழில்நுட்ப புதுமை அல்லது பாதுகாப்பு அம்சங்கள் எதுவாக இருந்தாலும், அரசியலமைப்பு ரீதியான பாகுபாடுகள் அதில் செயல்படும். அப்போது அணுகலை ஜனநாயகமாக்குவதற்கு பதிலாக, டிஜிட்டல்மயமாக்கல் பாகுபாட்டு முறையாக வளர்கிறது.
DMC பேஸ்புக் பக்கம், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேஸ்புக் பக்கம் அனைத்தும் வடிவமைக்கப்பட்டபடி செயல்பட்டன. அதன் பிரதிபலனாக, இலங்கை அரச நிறுவனங்களில் ஆழமாக பதிந்துள்ள தமிழ் எதிர்ப்பு மற்றும் பாகுபாடுகளை குறியீடாக்கும் மற்றும் பெருக்கும் டிஜிட்டல் தளங்களாக மாறுவதைக் காண முடிந்தது.
உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது கூட தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத, அவ்வாறு செய்வதன் அவசியம் தெரியாத மற்றும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போதும் கூட பொறுப்பை ஏற்காமல் தண்டனையிலிருந்து விடுபட்ட விதத்தில் தங்களின் பழக்கமான பின்தங்கிய செயல்பாடுகளை தொடர்வதே திட்வா புயலின் போது உயிர்களைக் காப்பாற்றும், முக்கியமான தகவல் அப்டேட்கள் பற்றிய இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
எனவே, அடிப்படை கட்டமைப்பு மற்றும் முறைசார் சீர்திருத்தங்கள் இல்லையென்றால், டிஜிட்டல்மயமாக்கல் இலங்கையில் பாகுபாட்டை இன்னும் வேகமாக, ஆபத்தாக மாற்றும் அபாயம் உள்ளது.
சஞ்சன ஹத்தொட்டுவ
Who gets warned? Language, discrimination, and disaster communication in Sri Lanka என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.