Photo, GETTY IMAGES

மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது.

கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்த சில பொதுத் தேர்தல்களில் கூட  நாடுபூராகவும் பெற்ற மொத்த வாக்குகளைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியே முன்னணியில் இருந்ததுண்டு.

ஆனால், இன்று அதே ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்கவின் 30 வருட கால தலைமைத்துவத்தின் கீழ் படுமோசமாக பலவீனமடைந்த நிலையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இடதுசாரிக் கட்சி கூட்டணி என்ற சாதனையைப் படைத்த  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி முன்னர் விளங்கியதால் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார் என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், அதே தேர்தல் முறையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கூட நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படாத பொதுத் தேர்தலையும் நாம் கண்டோம்.

அதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் வெறுமனே மூன்று சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக அரசியல் நிலைவரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் முற்றுமுழுதாக மாற்றம் கண்டன.

கடந்த ஒரு வருடமாக பதவியில் இருந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக  தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த பழைய கட்சிகளில் எந்த ஒன்றுமே கட்டுறுதியான கட்டமைப்புக்களை கொண்டவையாக இன்று இல்லை. ஆனால், கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவற்றுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்ள வேண்டிய அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்பதும் அதன் விளைவான மக்களின் வெறுப்பை கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி வெளிக்காட்டியது என்பதும் உண்மை.

ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவனவாக இல்லாமல் முன்னைய அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் அரச பணத்தில் அனுபவித்துவந்த வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவந்த வேளையிலும் கூட எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது.

ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது விக்கிரமசிங்க தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்துக்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவையும் ஒருமைப்பாட்டையும்  வெளிக்காட்டிய எதிர்க்கட்சிகள் பிறகு நாளடைவில் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரளுவதற்கான முயற்சிகளில் இறங்கின. முன்னைய அரசாங்கங்களில் பதவிகளை வகித்த அரசியல்வாதிகளில் பலர் எந்த நேரத்திலும் தாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்படக்கூடும் என்ற பீதியில் இருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ‘அரசியலமைப்பு சர்வாதிகாரம்’ என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.

செப்டெம்பர் முற்பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது வருடாந்த மகாநாட்டை விக்கிரமசிங்க எதிர்க்கட்சிளை ஓரணியில் கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் அக்கறை காட்டினார். அந்த மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளை விடவும் மற்றைய கட்சிகளின் அரசியல்வாதிகளே கூடுதல் எண்ணிக்கையில் காணப்பட்டார்கள்.

நவம்பர் 21ஆம் திகதி தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரமாண்டமான பேரணியொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன. இந்த பேரணியில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி, சந்திரிகா தலைமையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மக்கள் முன்னணியின் பெயரில் தங்களை அடையாளப்படுத்தும் சில அரசியல்வாதிகள் மற்றும் பிவிதுறு ஹெல உறுமய ஆகியவை பங்கேற்கவிருப்பதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக  அறிவித்திருக்கிறது.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மீள் எழுச்சிக்கு வழிவகுப்பதற்கு நேசக்கட்சிகளின் தலைவர்கள் ‘மகிந்த காற்று’ என்ற பெயரில் சில வாரங்களிலேயே நுகேகொடையில்தான் மிகவும் வெற்றிகரமான பேரணியொன்றை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அரசியல் பிரசாரங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கும் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வழிவகுத்தன. அதனால் நுகேகொடையில் முதல் பேரணியை நடத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தால் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நம்புகிறார்கள் போலும்.

2015 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதன் காரணத்தினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. சிங்கள மக்களின் வாக்குகள் பெருமளவில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைத்தன. சிறிசேனவுக்கு கிடைத்தவை ‘ஈழம் வாக்குகள்’ என்று ராஜபக்‌ஷ கூறவும் தவறவில்லை. இலங்கை அரசியலில் இரு துருவங்களாக இருந்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் முதல் தடவையாக  கூட்டுச் சேர்ந்து அமைத்த ‘நல்லாட்சி’ அரசாங்க பரீட்சார்த்தம் படுதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனவாத அணிதிரட்டலை முன்னெடுத்து ராஜபக்‌ஷர்களினால் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு இடம்பெற்றவை அண்மைக்கால வரலாறு.

ஆனால், அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இல்லை. முன்னென்றும் இல்லாத நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்துடன் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்து ஒரு வருடம் மாத்திரமே கடந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷவை மையப்படுத்தி அன்று ‘நல்லாட்சி’ அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிகரமான பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்றைய அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு மக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பலம்பொருந்திய அரசியல் தலைவர் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.

ஒரு வருட காலத்திற்குள் நடைபெற்ற மூன்று தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய வாக்கு வங்கியைக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியே விளங்குகிறது. மக்கள் ஆதரவை இழந்த மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமாக பெரிய அரசியல் அனுகூலம் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயத்தை அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. அத்துடன், எதிர்க்கட்சிகள் கூட்டாக ஏற்பாடு செய்கின்ற பேரணியில் தனது தலைமைத்துவ ஆளுமைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் அவர் சந்தேகத்தைக் கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுடனும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுடனும் ஒரே மேடையில் தோன்றுவதில் பிரமேதாசவுக்கு அசௌகரியம் இருக்கும் என்பது நிச்சயம். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியையும் தனது கட்சியையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விரும்பவில்லை. அத்தகைய ஒரு இணைவு தனது அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டி விடக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். தனது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டே நகர்வுகளைச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அறிவித்திருக்கும் பிரேமதாச, கூட்டணிகளில் இணைந்து கொள்வதை தவிர்கிறார். அதனால் கணிசமானளவுக்கு மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய எதிர்க்கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொள்கை ரீதியில் பெருமளவுக்கு ஒற்றுமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஆதரிக்காத உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளின் ஈடுபாடு இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

தற்போதைய நிலைவரம் காரணமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால், தேர்தல் ஒன்று வரும்போது இந்தக் கட்சிகள் ஒரு கூட்டணியாகச் செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் அரசியல்வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு என்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

அதேவேளை, அரசியலமைப்பு சர்வாதிகாரம் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் இந்தக் கட்சிகள் அதற்கு அடிப்படைக் காரணமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை (புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை காத்திராமல்) அரசாங்கம் அதற்கு இருக்கும் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தும் இயக்கத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டலாமே.

வீரகத்தி தனபாலசிங்கம்