Photo, Tamil Guardian

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா போன்ற சிவில் சமூகத் தலைவர்களே மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று அடிக்கடி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தனர். தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அவ்வாறு கோருவதில்லை. மாகாண சபைகளை ஒழித்துவிடுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

ஆனால், திடீரென்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் குழுவொன்று மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்ததை காணக்கூடியதாக இருந்தது. மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தன்னிச்சையாக செலவிடுவதாக ஆளுநர்கள் மீதும்  மாகாண சபை தேர்தல்களை தாமதிப்பதாக அரசாங்கத்தின் மீதும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, “ஆளுநர்கள் தற்போது தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதுடன் தங்களது விருப்பத்தின் பிரகாரம் மாகாண சபைகளின் நிதியை செலவிடுகிறார்கள். உதாரணமாக, வடமேல் மாகாண ஆளுநர், உகந்த மேற்பார்வையின்றி 300 கோடி ரூபாவை செலவிட்டிருக்கிறார்” என்று கூறினார்.

மாகாணங்களின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்ற பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவது குறித்து பிரச்சினை கிளப்பிய ஜெயசேகர, ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட்ட விடயதானமாக கல்வி இருப்பதால் பாடசாலைகளை மூடுவது போன்ற தீர்மானங்களை ஒருதலைப்பட்சமாக எடுக்கமுடியாது என்று சுட்டிக்காட்டிய அவர் தேர்தல்களை உடனடியாக நடத்தி மாகாண சபைகளை இயங்கவைத்தால் அவை பிராந்தியப் பிரச்சினைகளை தீர்த்துவைக்கக்கூடிய களமாக அமையும் என்று கூறினார். நாடாளுமன்றத்தில் ஒரு எளிமையான திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியும் அல்லது எல்லை நிர்ணயத்தை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் மூலம் புதிய முறையின் கீழ் அந்தத் தேர்தல்களை நடத்த முடியும் என்பது ஜெயசேகரவின் நிலைப்பாடாக இருக்கிறது.

புதியதொரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சியின் மூலமாக அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களுக்கான தேவையை அலட்சியம் செய்யக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கூறிய அதேவேளை, முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற புத்திக்க பத்திரன அரசியலமைப்பு ரீதியான கடப்பாடுகளின் பிரகாரம் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை அரசாங்கம் மதித்துச் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மாகாண சபை தேர்தல்கள் குறித்தும் பிராந்திய பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு மாகாண சபைகளின் அவசியம் குறித்தும் திடீரென்று அக்கறை வந்ததற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக அர்த்தம் கற்பிப்பதை விடுத்து அவர்களது கருத்துக்களை வரவேற்க வேண்டியது இன்றைய கட்டத்தில் முக்கியமானதாகும். எட்டு வருடங்களாக மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்துவருகின்ற போதிலும், மாகாண சபைகள் செயலிழந்துகிடப்பது குறித்து தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பெரும்பாலான அரசியல்வாதிகள் வெவ்வேறு காரணங்களுக்காக கவலைப்படுவதாக இல்லை. அத்தகைய ஒரு பொறுப்பற்ற அலட்சியப் போக்கில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டியது அவசியமானதாகும்.

மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த தயாசிறி ஜெயசேகரவும் மற்றைய இருவரும் மாகாண சபைகள் தொடர்பில் தங்களது அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான  நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்படும் ஆளுநர்களின் கீழ் மாகாணங்கள் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் காட்டும் அக்கறையை வரவேற்க வேண்டும்.

தேர்தல்களில் மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் மாகாண சபைகளின் நிர்வாகத்தை கையளிக்காமல் பல வருடங்களாக ஆளுநர்களின் பொறுப்பில் விடுவது உண்மையில் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டையே கொச்சைப்படுத்துவதாகும். மாகாண சபைகள் பல வருடங்களாக இயங்கவில்லை என்பதால் எதுவும் கெட்டுப்போகவில்லை என்று கூறும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள்.

2017ஆம் ஆண்டில் மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பிறகு இலங்கை நான்கு ஜனாதிபதிகளையும் மூன்று அரசாங்கங்களையும் கண்டிருக்கிறது. அந்தத் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான பொறுப்பை அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கூட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீதமான ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்திற்குள் (நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது) மாகாண சபை தேர்தல் முறையை மாற்றும் நோக்கில் இடையில் சொருகப்பட்ட சில பிரிவுகள் காரணமாகவே தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டதை விடவும் பெருமளவுக்கு வேறுபட்ட சட்டமூலமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதே உண்மையாகும்.

சிறிசேன – ரணில் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 – 2019) அந்தத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்றைய ஆளும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் உட்பட சகல கட்சிகளும் ஆதரித்தன.

தற்போது உள்ளூராட்சி தேர்தல்களில் கடைப்பிடிக்கப்படுவதைப் போன்று (விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய) கலப்பு முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்காக எல்லை நிர்ணயக்குழு சமர்ப்பித்த அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்த காரணத்தினாலேயே இன்று வரை தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. புதியதொரு எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீரித்தால் மாத்திரமே தேர்தல்களை நடத்தக்கூடியதாக இருக்கும். அதனால் அவ்வாறு செய்வது மீண்டும் தாமதத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதனால், முன்னையதைப் போன்றே முழுமையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே தற்போதைக்கு நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவந்த திருத்தச் சட்டமூலத்தை அன்று நாடாளுமன்றம் நிறைவேற்றியிருந்தால் மாகாண சபை தேர்தல்களை ஏற்கனவே நடத்தக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்த காரணத்தினால் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் சுமந்திரனின் சட்டமூலம் நிறைவேறுவதற்கு இருந்த வாய்ப்பை விக்கிரமசிங்க குழப்பியடித்தார். அந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பது குறித்து சிந்திக்கக்கூடிய அளவுக்கு தமிழரசு கட்சியிடம் அரசியல் தந்திரோபாயம் இருக்கவில்லை.

சுமந்திரன் கொண்டு வந்ததைப் போன்றே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனிநபர் பிரேரணையாக சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் மாகாண சபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் விரைவாக நடத்துவதற்கு வழிவகுக்க முடியும். அரசாங்கமே அத்தகைய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றும் என்று சபையில் அரசாங்கத் தரப்பில் ஒரு தடவை உறுதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற உண்மையான அரசியல் விருப்பம் அரசாங்கத்துக்கு இருந்தால், நாடாளுமன்றத்தில் சாணக்கியனின் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்கலாம் அல்லது அரசாங்கம் தானே ஒரு திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்து நிறைவேற்ற முடியும். அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பிமல் இரத்நாயக்க அண்மையில் அறிவித்த அதேவேளை அந்தத் தேர்தல்களை நடத்துவதில் இருக்கும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வைக் காண்பது முற்றுமுழுதாக நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அவசரம் காட்டுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்ற பரவலான ஒரு அபிப்பிராயமும் இருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முற்று முழுதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். அதைத் தட்டிக்கழிப்பதற்கு உருப்படியான எந்த காரணத்தையும் அரசாங்கத்தினால் கூறமுடியாது.

வீரகத்தி தனபாலசிங்கம்