Photo, @anuradisanayake

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாக கடந்த வருடம் தேசிய தேர்தல்களில் இலங்கை  மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த பிறகு அதற்கான செயன்முறை மூன்று வருடங்களுக்குப் பின்னரே முன்னெடுக்கப்படும் என்று அறிவித்தபோது அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் அவ்வாறு செய்வதில் எழக்கூடிய பிரச்சினைகளை அரசியலமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அரசியலமைப்பை மாற்றும் செயன்முறைகளை பொதுவில் அரசாங்கங்கள் அவற்றின் பதவிக் காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் செய்வதே வழமை. சுதந்திர இலங்கையில் இரு குடியரசு அரசியலமைப்புகளும்   அரசாங்கங்களின் பதவிக்காலங்களின் முற்பகுதியிலேயே கொண்டுவரப்பட்டன.

1970 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே மாதம் முதலாவது குடியரசு அரசியலமைப்பை கொண்டுவந்தது. 1971 ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) ஆயுதக் கிளர்ச்சியினால் இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால் அந்த அரசாங்கம் முன்கூட்டியே அரசியலமைப்பை கொண்டுவந்திருக்கவும் கூடும். 1977 ஜூலையில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 15 மாதங்களுக்குள் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அதனால், மூன்று வருடங்களுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அறிவிப்பின் அரசியல் விவேகம் குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது.

ஆனால், அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த வாரம் (ஜூலை 25) பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முற்பகுதியிலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் காலவரிசை ஒன்றை குறிப்பிட்டிருந்தார்.

“புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக அரசாங்கம் அவசரமாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அதிகாரத்துக்கு வந்தபோது அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதிலும் பல வருடங்களாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்வதிலும் முழுமையாக கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. மாகாண சபை தேர்தல்களை நடத்திய பிறகு புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை அரசாங்கம் தொடங்கும்” என்று அவர் கூறினார்.

அதேவேளை, இந்த வருடம் இந்தச் செயன்முறையை முன்னெடுப்பதற்கு பட்ஜெட்டில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்ட பிரதமர் பொதுக் கலந்துரையாடல்கள் மூலமாக முன்னைய அரசாங்கத்தினால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடருவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கிறது என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் (2015 – 2019) அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்திருந்த வாக்குறுதியையே பிரதமரும் மீண்டும் நாடாளுமன்றத்தில் கூறினார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியை அடுத்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தற்போதைக்கு அரசாங்கம் அவரசம் காட்டப்போவதில்லை என்று பரவலாக நிலவிய அபிப்பிராயத்துக்கு மத்தியில் கடந்த வாரம் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் நடத்தும் என்று அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதன் பிரகாரம் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அடுத்த வருட முற்பகுதியில் இருந்து அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்கலாம்.

முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்குப் பிறகு அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை ஒன்றை 2017 செப்டெம்பரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கும்போது அந்த இடைக்கால அறிக்கையில் இருந்தே மீண்டும் செயன்முறையைத் தொடங்க வேண்டும். அரசாங்கம் அது தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதை செயன்முறை தொடங்கும்போதுதான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கட்டத்தில் முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் என்ன? மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவருவதாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய அம்சங்கள் எவை?

இலங்கை இன்று தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறது. பல தசாப்தகால அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதார நெருக்கடி, நிறுவனங்களின் சிதைவுகளுக்குப் பிறகு கடந்தகால தவறான பாதையில் இருந்து விடுபட்டு புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அடுத்ததாக, பல தசாப்தங்களாக நாட்டின் அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்றை அரசியலமைப்பில் உள்ளடக்கவேண்டும். இந்த இரு நடவடிக்கைகளையும் தவிர புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை பொறுத்தவரை கூடுதல் முன்னுரிமைக்குரிய வேறு விடயங்கள் இருக்க முடியாது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது வெறுமனே குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனம் அல்ல. அது முன்னேறிச் செல்வதற்கு இலங்கைக்கு இருந்த ஆற்றல்கள் மற்றும் வாய்ப்புக்கள் சகலதையும் பாழ்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தை உருவகப்படுத்தி நிற்கும் ஒரு நிறுவனமாகும். இனமோதல், பொருளாதார அனர்த்தம், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று இலங்கை அனுபவித்து வந்த பேரிடர்களை எல்லாம் மேலும் மோசமாக்கிய மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறுவனமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியாகும்.

இலங்கையின் அரசியல் வரலாறு ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த சகல பிரதான அரசியல் கட்சிகளுமே அதை மீறிச்செயற்பட்ட கவலை தருகின்ற ஒரு முரண்நிலையைக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்தக் கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை வசதியாக மறந்ததுடன் மாத்திரமல்ல, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மேலும் அதிகரித்ததை நாம் கண்டோம்.

அநுரகுமார திசாநாயக்கவே நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறியதை மக்கள் மறந்துவிடவில்லை. புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமானது என்றும் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்றும் கடந்த வாரம் பிரதமர் அமரசூரியவும் நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பிலான வாக்குறுதி மீறல்கள் வட்டத்தை முறிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை தற்போதைய தருணம் தருகிறது. அதை தேசிய மக்கள் சக்தி தவறவிடுமானால், அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறிய இன்னொரு கட்சி என்று வரலாற்று அபகீர்த்திக்குள்ளாக வேண்டியிருக்கும்.

கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு மானசீகமாக விரும்பிய அரசாங்கங்களிடம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கவில்லை என்கிற அதேவேளை, போதிய பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்களிடம் அந்தப் பதவியை ஒழிப்பதற்கான அரசியல் விருப்பம் இருக்கவில்லை.

சொந்த அரசியல் நலன்களை மனதிற்கொண்டு செயற்படாமல் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதில் உறுதியாகச் செயற்படக்கூடிய தலைவர்கள் இதுவரையில் இலங்கை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதி திசாநாயக்க அத்தகைய தலைவர்களின் வரிசையில் தானும் இணைந்துகொள்வதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார் என்று நம்புவோமாக!

13ஆவது திருத்தத்தின் கதி

அடுத்ததாக, புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக எத்தகைய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டை அரசாங்கம் கொண்டுவரும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்துவந்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதனால் புதிய அரசியலமைப்பில் அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகளை உள்ளடக்குவதில் அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு அக்கறை இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதுவரையில் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான சட்டரீதியான ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தமே விளங்குகிறது. இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் கடந்த 38 வருடங்களாக பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே அந்தத் திருத்தத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாக அபகரித்து வந்திருக்கின்றன.

13ஆவது திருத்தத்தில் எஞ்சியிருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுமா? அதில் இருப்பவற்றை விடவும் கூடுதலான அதிகாரங்களை புகுத்துவதற்கு அரசாங்கம் முன்வரும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிரிவினைக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்று கூச்சலிடும் தென்னிலங்கை தேசியவாத சக்திகள் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை முன்னெடுக்கப்படும்போது அந்தத் திருத்தத்தை இல்லாமல் செய்து விடுமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற ஏனைய அரசியல் கட்சிகளும் அதிகாரப்பரவலாக்கல் விடயத்தில் தற்போதைய சூழ்நிலையில் அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பைப் போன்றே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பதே புதிய அரசியலமைப்பு முயற்சியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், புதிய அரசியலமைப்பு நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என்பது நிச்சயமானது.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே கடந்த வாரம் ‘இலங்கைக்கு புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம்’  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியிருக்கும் முக்கியமான சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

“தற்போதைய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் சிலவற்றை உறுதிசெய்கின்ற போதிலும், சிங்களம் தமிழை விடவும் மேலானதாகவும் பௌத்த மதம் மற்றைய மதங்களை விடவும் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யாத இந்த அரசியலமைப்பு இனங்களுக்கு இடையில் பிளவுக்கும் இன மோதல்களுக்கும் வழிவகுத்தது.

“புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும்.

“13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால்,  உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.

“அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தனது பதவிக்காலத்தின் பிற்பகுதியில் முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தாமதமான தொடக்கம் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை வரலாறு எங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறது. தேர்தல்கள் நெருங்கும்போது அரசியல் துணிவாற்றல் இல்லாமல் போய்விடும். முன்னர் அவ்வாறு நடந்தது. மீண்டும் அதேநிலை ஏற்படக்கூடாது.

“இலங்கையை நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்திருக்கிறது. சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற புதியதொரு ஜனநாயக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அதில் பங்குபற்றுவதாக உணரக்கூடிய முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இது எளிதான செயன்முறை அல்ல.

இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது.”

வீரகத்தி தனபாலசிங்கம்