Photo, @anuradisanayake
உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை.
கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி மிகுந்த உத்வேகத்துடன் அதன் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தங்களுக்குப் பெற்றுத் தந்ததைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றியைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்கத் தலைவர்களும் நாட்டு மக்களைக் கேட்கிறார்கள்.
தென்னிலங்கை எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தைய இரு தேசியத் தேர்தல்களிலும் அடைந்த தோல்வி, உள்முரண்பாடுகள் மற்றும் கட்சிக் கட்டமைப்புகளின் குறைபாடுகள் காரணமாக அவற்றின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களை தலைமைதாங்கி முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததில் இருந்து அந்தக் கட்சியின் இன்றைய பரிதாபமான நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க மீணடும் ஜனாதிபதியாக ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தனியொரு உறுப்பினராக இருந்துகொண்டு ஜனாதிபதியாக வந்த சூழ்நிலையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் போன்று ஒருவிதமான மருட்சிக்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறைபாடுகளைப் பற்றி பேசுவதைத் தவிர, தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு முன்னால் சென்று கூறுவதற்கு உருப்படியாக எதுவும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ராஜபக்ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற மற்றைய எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசாமல் விடுவதே நல்லது.
எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு குழப்பமான நிலையில் இருப்பது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும், நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் அள்ளிவீசிய எண்ணற்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றமும் விரக்தியும் உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.
புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அதன் அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலில் முன்னெடுக்கின்ற பிரசாரங்களை நோக்கும்போது அதில் முன்னைய அரசாங்கங்கள் நடந்துகொண்ட முறையில் இருந்து எந்த விதமான வேறுபாட்டையும் காணமுடியாமல் இருக்கிறது.
உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது; மேலும் நான்கு இலட்சம் குடும்பங்களைச் சேர்த்து அஸ்வேசும சமூக நலன்புரித்திட்டம் விரிவாக்கப்படும் என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்திருக்கிறார்; ஏற்கனவே ஊழியர்களால் நிரம்பி வழியும் அரசாங்க சேவைக்கு மேலும் 35 ஆயிரம் பேரைச் சேர்க்கப்போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
முன்னைய அரசாங்கங்கள் தேர்தல் காலங்களில் மேற்கொண்ட இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தாங்கள் மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்ததை ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் சுலபமாக மறந்து விட்டார்கள் போலும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றைய அரசியல் கட்சிகளின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது குறித்து அரசாங்கத் தலைவர்கள் அதுவும் குறிப்பாக ஜனாதிபதி திசாநாயக்க விடுத்திருக்கும் அச்சுறுத்தல் மிகவும் பாரதூரமான ஒரு சட்டமீறலாகும்.
தேசிய மக்கள் சக்தியின் நிருவாகத்தில் இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான நிதித் தேவைகள் தாமதிக்கப்படும் அல்லது அந்தச் சபைகளினால் முன்வைக்கப்படும் நிதிக் கோரிக்கைகள் ஒன்றுக்கு பத்து தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறிய ஜனாதிபதி திசாநாயக்க ஆளும் கட்சியின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளின் நிதிக் கோரிக்கைகளை அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனாதிபதியின் இந்தப் பேச்சு உள்ளூராட்சித் தேர்தல் ஒழுங்கு விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருக்கும் எதிரணி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பு சிவில் அமைப்புக்களும் இதுவரையில் எட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவ்வாறு ஜனாதிபதி பேசியதாக சுட்டிக் காட்டியிருக்கின்றன. ஆனால், அவற்றின் முறைப்பாடு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியான நடவடிக்கையை எடுப்பதில் உண்மையான அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.
இதனிடையே, முன்னைய இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் இருக்கும் நிலையில் ஜனாதிபதி திசாநாயக்க தற்போது தேர்தல் பிரசாரங்களில் மேலும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.
கடந்த வருடம் தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி திசாநாயக்க பொருளாதார இடர்பாடுகளைத் தணிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முழு நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பாக, இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பொதுமக்களின் காணிகள் திருப்பி கையளிக்கப்படுவதுடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். அவரின் கடந்த ஏழு மாதகால ஆட்சியில் அந்த வாக்குறுதிகளுக்கு நேர்ந்திருக்கும் கதி என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.
தையிட்டி விகாரை பிரச்சினை
இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் தையிட்டி பௌத்த விகாரை பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் கூறிய யோசனை அந்தப் பிரச்சினையை அவர் ஒழுங்கான முறையில் கையாளுவதற்கு அவர் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.
தையிட்டி விகாரை பிரச்சினையைப் பயன்படுத்தி வடக்கிலும் தெற்கிலும் முன்னெடுக்கப்படும் இனவாத அரசியலை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட்டால், அந்த விகாரையின் பௌத்த மதகுரு அந்தப் பகுதி காணிகளின் உரிமையாளர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்று வடக்கிற்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த திசாநாயக்க கூறினார்.
மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அந்த விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் நிலைப்பாட்டையும் அதே விகாரையை அகற்றக்கூடாது என்று தென்னிலங்கையில் குரலெழுப்பும் கடும்போக்கு தேசியவாத சக்திகளின் நிலைப்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜனாதிபதி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இரு நிலைப்பாடுகளையும் சமாந்தரமான இனவாதம் என்று அவர் அடையாளப்படுத்துவது உண்மையில் தவறு.
தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று அண்மைக் காலங்களில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினார்கள். அவ்வாறாக விகாரையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு விபரீதமான முயற்சியினாலும் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடிய எந்த ஆற்றலும் இல்லாத தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்களை வட பகுதி மக்களே வெறுத்தார்கள். அது வேறு விடயம்.
ஆனால், கடந்தகால ஆட்சியாளர்களைப் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஆட்சியாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளின் கலாச்சார தனித்துவத்தையும் குடிப்பரம்பலையும் மாற்றியமைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் தன்னை வேறுபட்டவராகக் காட்டிக்கொள்ள முன்வந்திருக்க வேண்டும்.
தையிட்டி விகாரை தங்களது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டு அதேவேளை முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுவிட்ட அந்த விகாரையை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறியிருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் வருத்தத்தை தெரிவிப்பதுடன் அவர்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளோ அல்லது வேறு மதத்தலங்களோ நிருமாணிக்கப்படுவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி கூறியிருந்தால் அவர் உரத்துப் பேசும் புதிய அரசியல் கலாசாரத்துக்கு ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யக்கூடிய அரசியல் துணிச்சல் அவரிடம் இருக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்ததைப் போன்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய சாத்தியம் பெரும்பாலும் இருக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஏழு மாதகாலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளை வடக்கில் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு இனிமேல் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கத் தலைவர்கள் செய்துவரும் பிரகடனங்கள் மாத்திரம் நாட்டில் இனவாதத்தை ஒழித்துவிடப்போவதில்லை. கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இனவாத அரசியல் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டியது முக்கியமானதாகும். இனவாதத்தின் கைதிகளாக இருக்கும் நிலையில் இருந்து ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் விடுபட வேண்டும். அத்தடன், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் வாக்களித்தார்கள் என்ற மருட்சியில் இருந்தும் அதன் தலைவர்கள் விடுபட வேண்டும்.
இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் அவற்றின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதற்கு பெரும் போராட்டத்தை நடத்தும் ஒரு களமாக உள்ளூராட்சி தேர்தல்கள் மாறியிருக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு யானையைப் பார்த்த குருடர்கள் போன்று தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொரு காரணத்தைக் கூறினாலும் கூட, உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருடகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சமகால நிலைவரம் வேண்டி நிற்பதற்கு இசைவாக அடுத்த கட்டத்துக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் நகர்த்துவதற்கு தவறியதே அந்த மக்களின் அதிருப்திக்குப் பிரதான காரணமாகும். தங்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்பதை சில தமிழ்த் தலைவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள்.
இன்று சகல தமிழ்க் கட்சிகளுமே தேசிய மக்கள் சக்தியை ‘பொது அரசியல் எதிரியாகக்’ கருதி அதற்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டு ஓரணியில் நிற்பதற்கு அவற்றின் தலைவர்கள் தயாராக இல்லை. தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதி செய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கே தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஒருபோதுமே நேர்மறையான கொள்கையையோ அல்லது அணுகுமுறையையோ கடைப்பிடிக்காத ஒரு தேசிய (தென்னிலங்கை) கட்சிக்கு வாக்களிப்பதில் இருந்து தமிழ் மக்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல் தலைவர்களின் தோல்வியை அல்லவா அம்பலப்படுத்துகிறது?
தமிழ்க்கட்சிகள் அல்லது கூட்டணிகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதுவதற்கான ஒரு ஆளுமைப் போட்டிக் களமாகவும் அவர்கள் இந்தத் தேர்தலை நோக்குகிறார்கள் என்பதை பிரசாரங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கின்ற அதேவேளை தங்களது கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்றும் மறுபுறத்தில் அவர்கள் கூறுகிறார்கள்.
சகல சமூகங்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சமத்துவமாக நோக்குவதே தங்களது கொள்கை என்று கூறுகின்ற ஜே.வி.பியின் தலைவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பது வரலாறு. அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கின் தமிழ்ப் பகுதிகளில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினால், தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாகத் தீர்வொனறைக் காண்பதற்கு தமிழ் மக்கள் நடத்திவந்த நீண்டகாலப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை ஏற்கெனவே ஒரு தடவை சுட்டிக்காட்டியிருந்தோம்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை அதிகாரப்பரவலாக்கத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முயற்சித்தார்களே தவிர, அந்த மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதிலோ அல்லது அதற்கான உகந்த சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு தென்னிலங்கை பெரும்பானமையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதிலோ அக்கறை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தங்களது பல தசாப்தகாலப் போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டை மலினப்படுத்தக்கூடிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தக்கூடாது. அதேவேளை, கற்பனாவாத சுலோகங்களில் தங்கியிருக்கும் பழையபோக்கை மாற்றி, சமகால நிலைவரத்துக்கு ஏற்ற முறையில் தமிழ்க் கட்சிகள் தங்களை தகவமைத்துக் கொள்வதில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.
தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து எதுவும் பேசுவதில்லை.
சொந்த மண்ணைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டாம் என்று எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாக நாம் அறியவில்லை. அவர்களில் பலர் தங்களது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வசதியாக குடியமர்த்திவிட்டே தீவிரமாக தமிழ்த் தேசியவாதம் பேசுகிறார்கள்.
இலங்கையில் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாகாணமாக விளங்கும் வட மாகாணம் மிகவும் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டதாக இருக்கிறது. வடக்கில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 131 பேர்தான் வாழ்கிறார்கள் என்று 2021 குடிசன மதிப்பீடு கூறுகிறது. மக்கள் இல்லாத மண்ணில் செய்யக்கூடிய அரசியலின் இலட்சணம் எத்தகையதாக இருக்கப் போகிறது?
சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது சந்ததிகளுக்கும் நல்ல எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற வலுவான நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நடைமுறைச் சாத்தியமான -விவேகமான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். அதைச் செய்யத்தவறினால், ஏற்படக்கூடிய ஆபத்து தெளிவாகத் தெரிகிறது.
போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப்பகுதியில் நிலைவரங்கள் பெருமளவுக்கு மாறிவிட்டன என்பதை தமிழ்க் கட்சிகள் உணராத பட்சத்தில், உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமல்ல, சகல தென்னிலங்கை கட்சிகளையும் நிராகரித்து தமிழ்க்கட்சிகளை மீண்டும் ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து எழுகின்ற சந்தேகம் நியாயமானதே.
வீரகத்தி தனபாலசிங்கம்