Photo, COLOMBO TELEGRAPH

அரசியலில் பாலின சமத்துவத்திற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டமானது திட்டமிடப்பட்ட தடைகளாலும் ஆணாதிக்க அணுகுமுறைகளாலும் மீண்டும் சிதைந்து போயுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கான 25% ஒதுக்கீடு எப்படி நிரப்பப்படும் என்பது உள்ளடங்கலாகப் புதிய தடைகளைப் பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். அதிலும் பெண்கள் தெரிவு செய்யப்படும் வாய்ப்பினைக் கட்டுப்படுத்துவதில் அரசியல் கட்சிகளில் உள்ள ஆண்கள் அதிகளவு உறுதி பூண்டுள்ளதைக் காண முடிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் அரசியல்வாதி ஒருவர், பெயர் குறிப்பிடாது, தனது மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டபோது, “புதிய பிரச்சார நிதிச் சட்டத்தின் கீழ் நான் தனியாக எனக்கான தேர்தல் செலவுக் கணக்கு அறிக்கையை சமர்ப்பர்த்திருக்க வேண்டும். ஆனால், எனக்காகத் தாமே அதனைக் கையாள்வார்கள் என எனது கட்சி நிர்ப்பந்தித்தது. கட்சியே எனது பயண செலவுகளையும் ஏனைய செலவுகளையும் பார்த்துக்கொண்டதால் நான் நிதி திரட்டவுமில்லை; தனிப்பட்ட வகையில் செலவு செய்யவுமில்லை. எனது பிரத்தியேக பிரச்சாரச் செலவுகளுக்கு எவ்வளவு நிதி செலவளிக்கப்பட்டது என்பது எனக்குச் சரியாகத் தெரியாது. வாக்குக் கேட்டு என்னைப் பல இடங்களுக்கு அனுப்பியதற்கு ரூபா 20,000 கூட எனது கட்சி செலவழித்திருக்காது என நினைக்கிறேன். ஆகவே, எனது தனிப்பட்ட செலவு அறிக்கையையும் கட்சி சமர்ப்பித்திருக்கும் என நான் நினைத்தேன். இப்போது, மிக நீண்ட பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், எனது தேர்தல் செலவுகளுக்கான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப் போனால் உள்ளூராட்சித் தேர்தலில் எனது தேர்தல் விண்ணப்பத்தை நான் தாக்கல் செய்ய முடியுமா என்பதே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இன்னுமொரு முன்னாள் உள்ளூராட்சி பெண் உறுப்பினர் ஒருவர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளைப் பிரகடனப்படுத்தும் பத்திரங்களை முன்வைப்பது குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார், “மத்திய கிழக்கில் பணியாற்றும் எனது மகன்தான் எமது குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார் என்பதால் அவரது வருமானத்தை படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என எனது கட்சியின் செயலாளர் கூறினார். இப்போது நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு எனது மகன் அனுமதிப்பானா என்பதே எனக்கு நிச்சயமில்லை.”

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிவிப்பும் பிரச்சார நிதி பற்றிய புதிய விதிமுறைகளும் ஊழலைத் தடைசெய்து, நீதியான தேர்தல்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளாகவே ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன. ஆனாலும் இவை சில சமயங்களில் பெண்களைப் பயமுறுத்தி, விலக்கி வைக்க ஆண்களின் ஆயுதங்களாக மாறிக் கொண்டுள்ளன. ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் கூறுவதற்கு அமைய இச்சட்டங்களினூடாக தேர்தல் செலவுகளை கட்டுபடுதுவதன் மூலம் ஓரளவேனும் பெண்களுக்கு அரசியலில் சமதளங்களை உருவாக்க முடியும்.

இலங்கை அரசியலில் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது பெண்களின் அரசியல் பங்களிப்பிலே கட்சிக் கட்டமைப்புகளின் சிக்கலான உட்தொடர்புகள் மற்றும் சட்டக் கட்டமைவுகளால் உருவாக்கப்பட்ட, சமூக விழுமியங்கள் ஆழமாக வேரூன்றிக் காணப்படும் பரந்துபட்ட விடயத்தினை முன்னிலைப்படுத்தி நிற்கிறது. பெண்களின் அரசியல் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தும் இலக்குக் கொண்டதாக பெண்களுக்கான ஒதுக்கீட்டின் சட்டத் தேவை அமையும் அதேவேளையில், பிரச்சார முறைகளில் கெடுபிடிகள் போன்ற பரந்தளவிலான தடைகளும் அதிற் காணப்படுகிறது. நாடாளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களின் போது வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்யத் தடை என்பது ஒரு வகையான சட்டக் கெடுபிடி ஆகும். இப்படி வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வதானது வரலாற்று ரீதியாக வினைத்திறன் மிக்கதாகக் காணப்படுகிறது. அத்துடன், பிரத்தியேகமானது. பெண்களைப் பொறுத்தவரையில் சிறிய தொகுதிகளில் வாக்காளர்களைக் கவர்வதற்கான செலவு குறைந்த வழியுமாகும். பெண்கள் தமது சமூகத்தில் உள்ளவர்களோடு நேரடியாக, நட்பான சூழலில் தொடர்பு கொள்வதை இச்சட்ட அமைவு தடைப்படுத்துகிறது. இதனால் அவர்கள் மாற்று வழிகளை நாடத் தள்ளப்படுகிறார்கள். அரசியல் ஆதரவைத் தேடுவதற்கான அவ்வழிகள் அனேகமாக செலவு கூடியதாகவே காணப்படுகின்றன. அத்துடன், இக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு மட்டுமானவை. உள்ளூராட்சித் தேர்தலுக்கு உரியவையல்ல எனும் போது தேர்தல் ஆணைக்குழுவின் பரந்த பொருள்கோடல் காரணமாகத் தாம் வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்ய முடியாது எனும் அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடப் போகும் பெண்கள்.

“வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்யக்கூடாது என என்னிடம் கூறப்பட்டது. ஆயினும், உள்ளூராட்சித் தேர்தல்களின் போது சிறிய, நெருக்கமான சமூகங்களில் இந்த முறை தான் வினைத்திறனானது” என இன்னுமொரு பெண் போட்டியாளர் தெரிவித்தார். “பேரணிகளை ஒழுங்கு செய்வதற்கான வளங்களையும் எமது கட்சிகள் எமக்குத் தருவதில்லை. அப்படித்தான் வழங்கினாலும் அவை ஆண்களுக்கே ஒதுக்கப்படும். இதில் நாம் பிரச்சாரம் செய்வதை எப்படித் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது?”

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தொகுதிகள் மிகச் சிறியவை; வாக்காளர்களை நேரடியாகச் சந்திப்பது இலகுவானது. வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்வது அனுமதிக்கப்பட்டால், வாக்காளர் பொருத்தமான உறுப்பினரை நேரிற் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. போட்டியாளர்களை இலகுவாக மதிப்பிடலாம். போட்டியாளர்களும் மிகக் குறைந்த செலவிலும் செயற்பாடுகளிலும் விடயத்தை முடித்துக் கொள்ளலாம். வழமையான நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகள் அத்துணை குழம்பாது, பாரிய செலவில் பேரணிகள் ஏதுமில்லாது, சூழலும் ஒலியால் மாசுபடுத்தப்படாது. வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பெண்கள் களத்தில் இறங்கக்கூடிய சந்தர்ப்பத்தைக் குறைந்தபட்ச அளவிலாவது தேர்தல் ஆணையம் வழங்கக் கூடியதாக இருக்கும்.

தான் தேர்தல் விண்ணப்பம் தாக்கல் செய்யவுள்ளதால் தற்போதைய தேர்தல் சட்டங்களின் பிரகாரம் தான் இஃப்தாரை (நோன்பு திறத்தல்) ஒழுங்கு செய்ய முடியுமா என்பது கூட தனக்கு உறுதியாகத் தெரியாது என முஸ்லிம் பெண் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார். “எனது பிரதேசத்தில் எல்லோருக்கும் என்னை ஓர் அரசியல்வாதியாகத் தெரியும். பெண்களுக்காக இஃப்தார் மற்றும் தராவீப் (நோன்பு திறந்த பின்னர் இரவுப் பிரார்த்தனை) போன்றவற்றை எனது இல்லத்தில் நான் ஒழுங்கு செய்வது வழக்கம். இவையெல்லாம் இப்போது எனது அரசியல் பிரச்சாரமாகக் கொள்ளப்படலாம். தேர்தலுக்கான விண்ணப்பத் தாக்கலும் புனித ரமழான் மாத்தில் கோரப்பட்டுள்ளது. ரமழான் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் மத ரீதியாக முக்கியமானதொரு புனித மாதம். அதன்போது நாம் சில மத சடங்குகளைப் பின்பற்றி வருகிறோம். அவற்றைப் பின்பற்ற வேண்டும். நான் எப்படி இவற்றைச் செய்யாமல் விடுவது, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செய்யப்படுகிறது எனக் கொள்ளப்படுவதிலிருந்து எப்படித் தப்பிப்பது? எனது கட்சி ஆண்களே எனக்கு எதிராக முறைப்பாடு செய்வார்கள்.”

எதிர்க்கட்சி ஆண்கள் மேற்கொள்ளும் அவமானங்கள் மற்றும் பாலியல் அடிப்படையான தாக்குதல்களுடன் சேர்த்துத் தமது சொந்தக் கட்சி ஆண்களும் தம்மை ஒதுக்கி வைப்பதையும் பாலியல் அடிப்படையில் தாக்குவதையும் பற்றிப் பெண் அரசியல்வாதிகள் மிகவும் அவதானத்துடன் முறைப்பாடுகளை முன்வைக்கத்தான் செய்கிறார்கள்.

“இலகுவாகக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கும் பெண்களைக் கட்சியில் சேர்க்கிறது எனது கட்சி. பெண்களை வலுப்படுத்துவதல்ல நோக்கம், மாறாக ஆணதிக்கக் கட்டுப்பாட்டில் பெண்களை வைத்திருப்பது தான் அவர்களது இலக்கு. தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, கட்சியில் தமது கருத்தை வலுப்படுத்தப் பெண்கள் மிகவும் போராட வேண்டியுள்ளது. ஆணாதிக்க வலைக்குள் சுழியோட வேண்டியுள்ளது” எனக் கூறினார் தனது கட்சியில் முடிவுகளை எடுக்கும் குழுவிலேயே அங்கத்துவராக இடம்பிடித்த ஒரு பெண்.

இச்சவால்கள் மத்தியிலும், பெண்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் 2018 லிருந்து 2023 வரை உள்ளூராட்சி சபைகளில் சேவையாற்றிய பல பெண்கள் குறிப்பிடத்தக்களவு அனுபவத்தையும் கள அறிவையும் பெற்றுள்ளனர். ஆனாலும், 2023 தேர்தல்கள் திட்டமிடப்பட்டு நடைபெறாமற் செய்யப்பட, இனி வரும் தேர்தலுக்கான போட்டியாளர் பட்டியல் தயாராகும் இவ்வேளையிலும் இப்பெண்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் உறுப்பினர் ஒருவர் தனது கவலையைப் பகிர்ந்து கொள்கையில், “எனது தொகுதியில் தொடர்ந்து வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளக் கடுமையாகப் பணியாற்றினோம். ஆனால், இப்போது எனது கட்சியில் உள்ள ஆண்கள் புதிய முகங்களைத் தேடுகிறார்கள். அனுபவம் மிக்க மூத்த பெண்கள் நாம் அவர்களுக்கு சவாலாகி விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு. தற்போதைய தேர்தலில் 25% வீதம் இளைஞர்கள் போட்டியாளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது அவர்களது சாக்கு. ஆனால், எமது அனுபவ முதிர்ச்சியும் பிரபலமும் கண்டு அவர்களுக்குப் பயம் என்பதுதான் உண்மை.”

இப் பயத்தைத் தெளிவாக உணரலாம், குறிப்பாக இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக அல்லது பெண்களை முன்னேற்றும் எந்தவொரு காத்திரமான செயற்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் இதனைக் காணலாம். சிலர், குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள், உள்ளூராட்சி மட்டத்தில் பெண்களுக்கான 25% ஒதுக்கீட்டினை வழங்குவதில் மிகுந்த தயக்கம் கொண்டுள்ளார்கள். ஆரம்பத்தில் கட்சித் தலைவர் ஒருவர் இந்த ஒதுக்கீட்டிற்கான சட்ட முறைமைக்கு எதிராகச் செயற்படக் கூட எத்தனித்தார். ஆனாலும், சட்டம் இயற்றப்பட்டு, தேர்தல் விண்ணப்பம் சம்ர்ப்பிக்கபப்டும் வேளையில், 2018ஆம் ஆண்டு பட்டியல் கையளிக்கப்படும்போது இச்சட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பெரிதும் அவதிப்பட்டார்கள். சில இடங்களில் தேர்தலில் போட்டியிட விரும்பாத பெண்களின் பெயர்களைக் கூடப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்.

“சில கட்சிகள் கையெழுத்துக்களில் கூட மோசடி செய்தார்கள். தமது மனைவிமார், மகள்கள், தாய்மாரை விண்ணப்பங்களில் முன்வைத்தார்கள்” என இம்மோசடிக்குப் பலியான ஒருவர் கூறினார். “இந்த இட ஒதுக்கீட்டிலே மோசடிகள் இடம்பெறுகின்றன. பெண் பிரதிநிதித்துவத்திற்கென உருவாக்கப்பட்ட அதன் அர்த்தமே தலைகீழாகிவிட்டது.”

இவ்வாறான தடைகள் மத்தியிலும் “பின் இருக்கைக்குரியவர்கள்” அல்லது “டோக்கன் பிரதிநிதிகள்” என முத்திரை குத்தப்பட்ட பல பெண் அரசியல்வாதிகள் தமது தைரியத்தை நிரூபித்துக் கொண்டுள்ளார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் ஊடாக அரசியலில் பிரவேசித்த இப்பெண்கள் தமது சமூகங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் உண்மையான தாக்கத்தை செதுக்கிக் கொள்ளத் தமது பதவிகளை உபயோகித்துக் கொண்டுள்ளனர். அதிலும் சிலர் பால் நிலை சார்ந்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடு குறித்த உதவிக்காகப் பெண்கள் அமைப்புகளை நாடியுள்ளதுடன் புதிய விதிமுறைகளை முன்னெடுத்துத் தமது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றகளில் நான்கு வருடங்களுக்கும் மேலாகச் சேவையாற்றிய அனுபவத்துடன் காணப்படும் இப்பெண்களில் பலர் இப்போது அவர்களது கட்சியினர் அவர்களை தேர்தல் விண்ணப்பப் பட்டியலிலிருந்து ஒதுக்கி விட்டதன் காரணத்தால் புதிய கட்சிகள் ஊடாக அல்லது சுயாதீனமாகத் தேர்தலிற் போட்டியிட முயல்கிறார்கள். உறுதியாகக் காணப்படும் இப் போட்டியாளர்களின் புதிய தாக்க அலையானது அரசியல் தளத்திலே குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொணரும் இவ்வேளையில் கேள்வி என்னவென்றால், பாலின சமத்துவத்தை அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா அல்லது ஆணாதிக்க மரபுகளை நிலைநிறுத்தத் தலைப்படுமா?

பெண்கள் அரசியல் அனுபவத்தைப் பெறவேண்டும், அதன் மூலம் சாதாரண வழிகள் ஊடாக அரசியல் பதவிகளுக்கு வர வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதே பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஆகும். இந்த இட ஒதுக்கீடு இல்லாமற் பெண்கள் அந்நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வது அதன் இறுதி இலக்கு ஆகும். ஆனால், பெண்களுக்குத் தொடர்ச்சியான அரசியல் அனுபவம் கிடைப்பதை அல்லது கட்சிக்குள் தலைவர்களாக அவர்கள் உருவாவதை அரசியல் கட்சிகளில் உள்ள ஆண்கள் வேண்டுமென்றே தடுக்கிறார்கள். மாறாக இப்பெண்கள் கட்சிகளின் அந்தஸ்து நிலைகளுக்காக நிரப்பப் பாவிக்கப்படுவதுடன் கீழ்ப்படிந்தவர்காளாகவே நோக்கப்படுகின்றனர்.

தேர்தல் களம் சூடு பிடிக்கும் இவ்வேளையில், அனுபவம் மிக்க பெண் போட்டியாளர்களை முன்னிறுத்த அரசியல் கட்சிகள் தயாராக உள்ளனவா? அல்லது பால்நிலை சமத்துவம் என்ற போர்வையின் கீழ் தொடர்ந்து டோக்கன் பிரதிநிதிகள் பட்டியலை நிரப்ப பெண்களை பாவிக்கப் போகின்றனவா என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது.

ஷ்ரீன் அப்துல் சரூர்