Photo, FORTUNE
மெட்டா நிறுவனம் தனது உண்மை – சரிபார்ப்பு திட்டத்தை உடனடியாக முற்றிலுமாக கலைக்க எடுத்த முடிவானது, நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதை துரிதப்படுத்துவதாக அமையும். இந்த துஷ்பிரயோகம் தவிர்க்க முடியாமல் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும், இது மார்க் சக்கர்பெர்க்கின் கரங்களில் ஏற்கனவே படிந்து இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த கணிப்பு போலியானதோ அல்லது பொய்யானதோ அல்ல. இது கீழைத்தேய நாடுகள் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் முகம்கொடுத்ததன் எதிர்கால பிரதிபலிப்பு மட்டுமே. மேலும், மேற்கத்திய நாடுகளில் கணிசமான பாதிப்புகள், வன்முறை மற்றும் ஜனநாயக நிலைமைகளின் சீரழிவுக்கு நிறுவனத்தின் தொழில்நுட்பம் தொடர்புபடுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்தது.
மார்க் சக்கர்பெர்க்கின் இந்த முடிவானது, அமெரிக்க அரசியல் தேவைகளின் அடிப்படையிலும், பதவியேற்ற ஜனாதிபதியின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகவும் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது. 2021இல் கெபிட்டல் ஹில் கலவரத்தைத் தூண்டிவிட்ட ஜனாதிபதி டிரம்ப்பின் செயல்பாடு காரணமாக மெட்டா நிறுவனம் உண்மை – சரிபார்ப்பில் முதலீடு செய்யத் தொடங்கியது. ஆனால் இப்போது அது உலகிற்கு ஒரு நகைப்புக்குரிய விடயமாக வெளிப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இப்போது, மெட்டா நிறுவனத்திற்கும் அதன் உலகளாவிய கொள்கைப் பணிகளுக்குமான புதிய நியமனங்களைப் பார்க்கும்போது, மெட்டா நிறுவனம் அமெரிக்க நிர்வாகத்திற்கு மிக நெருக்கமான சார்பு நிலையைக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள பலருக்கு, இந்த அணுகுமுறை ஆச்சரியமோ புதிய விடயமோ அல்ல. 2019 ஜனவரியில், இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொதுக் கொள்கை பணிப்பாளர் உட்பட முக்கிய பேஸ்புக் அதிகாரிகள் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். அப்போது இந்தச் சந்திப்பு சிவில் சமூகக் குழுக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இது ஆளும் கட்சியின் வன்முறையான சிங்கள – பௌத்த தேசியவாதத்தால் ஊக்குவிக்கப்பட்ட நாட்டின் மோசமான முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் நடந்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் நடந்தது. முஸ்லிம்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் எதிரான வன்முறையை தீவு முழுவதும் தூண்டிவிடவும் பரப்பவும் காரணமான வெறுப்புணர்வு கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவதில் பேஸ்புக் நேரடியாக தொடர்புபட்டிருந்தது. இந்தக் கலவரத்தால் இரண்டு பேர் உயிரிழந்தமையுடன் மேலும் பத்து பேர் பலத்த காயத்திற்கு உள்ளானார்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு, வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான கட்டுரையால் ஒரு பெண் அதிகாரி இராஜினாமா செய்தார். அந்தக் கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாரதீய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்குவது பிராந்தியத்தில் நிறுவனத்தின் வணிக நோக்கங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்று அவர் கவலை வெளியிட்டிருந்தார்.
இந்தியா பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. 2021ஆம் ஆண்டில், பேஸ்புக்கின் விசில்பிளோவரான பிரான்சிஸ் ஹோகன் சமர்ப்பித்த ஆவணத் தொகுப்பு குறித்து நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த கட்டுரையொன்றில், நிறுவனம் தான் உருவாக்கிய பிரச்சினைகளை, குறிப்பாக முஸ்லிம் எதிர்ப்பு உள்ளடக்கத்தை கையாள போதுமான வளங்கள் இல்லாதிருந்ததை சுட்டிக்காட்டியது. அதே கட்டுரையில் மியான்மாரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதில் பேஸ்புக்கின் பங்கு, இலங்கையில், பயனர்கள் குறித்த ஒரு வெறுப்புணர்வு கொண்ட பேஜ் ஒன்றை பின்தொடர்வதன் மூலம் அதனோடு தொடர்புடைய, அதனையொத்த பேஜ்கள், பேஸ்புக் மூலமே தானியங்கி முறையில் பின்தொடரப்படுதல் மற்றும் எத்தியோப்பியாவில் ஆயுதக் குழுக்கள் வன்முறைக்காக அணிதிரட்ட இந்தத் தளத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திய விதம் ஆகியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன, ஒவ்வொன்றிலும் மரணம் மற்றும் அழிவு உட்பட கணிசமான வன்முறை இடம்பெற்றிருக்கிறது.
எவ்வாறாயினும், மெட்டாவின் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையின் அத்தியாவசிய அங்கமாக மாறியுள்ளது, இது நமது அரசியல், சமூகம், தொழில், வர்த்தகம், கலை மற்றும் செயல்பாடுகளுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. எனினும் வன்முறைக்கு எரிபொருளை வழங்கும் அதே தொழில்நுட்பம், நிலைமைகளை அறிக்கையிடவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பலரால் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மெட்டா அண்மைய அறிவிப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நிறுவனங்களினது தயாரிப்புகளின் பயன்பாட்டை கணிசமாக பலவீனப்படுத்துவதாக உள்ளது. மேலும், உண்மை – சரிபார்ப்புகளை அசௌகரியமாகக் கருதிய, தவறான தகவல்கள் (Disinformation) உட்பட பிற்போக்கான உள்ளடக்கங்களை பரப்பிய சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பொய்யான தகவல்களையும் தவறான தகவல்களையும் ஊக்குவிக்க அனுமதிப்பதன் மூலம் சர்வாதிகாரத்திற்கு சாதகமாக அமையும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.
திருத்தப்பட்ட கொள்கைகள் ஒன்லைன் மற்றும் ஒல்லைன் அல்லாத வலயங்களில் விளைவுகளை ஏற்படுத்துவதோடு, வெறுப்பு மற்றும் வன்முறை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, சில சந்தர்ப்பங்களில் இரத்தம் சிந்திய சான்றுகள் இருந்தபோதிலும் கூட இது நடைபெறுகிறது. சக்கர்பெர்க்கின் அறிவிப்பு கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தை – அவர்களில் பலர் வன்முறையின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் – எந்த ஆதாரமும் இல்லாமல், தற்போதைய உண்மை சரிபார்ப்பு கட்டமைப்பு “அரசியல் ரீதியாக பாரபட்சமானது” என்றும், “நம்பகத்தன்மையை இழந்துவிட்டது” என்றும், டுவிட்டர்/எக்ஸ் போன்றனவே எதிர்கால பாதை என்றும் கூறி ஏமாற்றுகிறார்கள். இது முன்னுதாரணமற்ற ஒன்றாகும், மேலும் சக்கர்பெர்க் கூறுவதை செயல்படுத்த நிறுவனத்திற்கு உள்ள திறன்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் முன்வைக்கப்படும் அடிப்படை கொள்கை மறுசீரமைப்பாகும்.
இந்த மாற்றம் முக்கியமானது. இது முறையான அமைப்புகள் மற்றும் தொழில்முறை உண்மை சரிபார்ப்புக்குப் பதிலாக மக்களின் தலையீடுகள் மற்றும் முறைசாரா பதில்கள், தளத்தின் ஒருமைப்பாடு குறித்த மையப்படுத்தப்பட்ட கண்காணிப்புக்கு பதிலாக ஊக்கமளிக்கப்பட்ட பயனர்களை அடிப்படையாகக் கொண்ட மேலும் பரவலான மாதிரி மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய தரநிலைகளுக்கு பதிலாக யதார்த்தம் பற்றிய தன்னிச்சையான முன்வைப்புகளை பயன்படுத்துகிறது.
தொழில்முறை உண்மை சரிபார்ப்பாளர்கள் மூலங்களை ஆய்வு செய்து, நிபுணர் ஆலோசனை, மற்றும் நிலையான மதிப்பீட்டு அளவுகோல்களை உள்ளடக்கிய சரிபார்ப்புகளுக்கான முறையான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நிறுவப்பட்ட முறைமைக் கட்டமைப்புகளுக்குள் செயல்படுகின்றனர். மக்களின் தலையீடுகளுக்கு மாறுவது உண்மை சரிபார்ப்பு தரநிலைகளில் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை உருவாக்குகிறது, மேலும் உண்மைக்கு பதிலாக பிரபலமான கருத்துக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது.
நடுநிலையான கண்காணிப்பு, அதன் வரம்புகள் இருந்தபோதிலும், உள்ளடக்க தலையீட்டு முடிவுகளுக்கான ஒத்திசைவான கட்டமைப்பை வழங்குகிறது, மேலும் தவறான தகவல் முறைகள் குறித்த முறையான கண்காணிப்பு மற்றும் எழும் அச்சுறுத்தல்களுக்கான ஒருங்கிணைந்த பதில்களை செயல்படுத்தும் திறனை வழங்குகிறது. பரவலான மாதிரி, பரந்த அளவில் செயல்படுத்தக்கூடியதாக இருந்தாலும், செயல்படுத்தல் தரநிலைகளில் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை உருவாக்குகிறது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் பிரச்சாரங்களை அடையாளம் காணவும் அவற்றுக்கு பதிலளிக்கவும் உள்ள நிறுவன திறனை குறைக்கிறது.
உலகளாவிய தரநிலைகளில் இருந்து பயனர்-உருவாக்கப்பட்ட விளக்கங்களுக்கு மாறுவது குறிப்பாக பன்மைவாத ஜனநாயகங்களில் தளத்தின் நேர்மைத் தன்மைக்கு குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குகிறது. இங்கு ஆய்வு செய்யும் ஊடகவியலாளர்கள் அல்லது சிவில் சமூகத்தால் வெளியிடப்படும் உண்மைகளை அடக்க அரசு மற்றும் சர்வாதிகாரிகள் பயனர்களைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் இந்தக் காரணிகள் பகிரப்பட்ட உண்மைகள் மற்றும் யதார்த்தங்களின் சீரழிவுக்கு வழிவகுக்கும், பொது விவாதம் தனிமைப்படுத்தப்பட்ட தகவல் குமிழ்களாகப் பிரிவதை துரிதப்படுத்தும், இது சமூக ஒற்றுமையை சிதைக்கும்.
கீழைத்தேய நாடுகளின் சந்தைகளுக்கான தாக்கங்கள் ஆழமானதாகவும், உடனடியானதாகவும் இருக்கும் – ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்முறை உண்மை-சரிபார்ப்பாளர்கள் பல ஆண்டுகளாக மெட்டாவுடன் இணைந்து ஆதரித்து, வலுப்படுத்திய அனைத்தையும் பின்னோக்கி நகர்த்தும். வரலாற்று ரீதியாக விளிம்பு நிலையில் உள்ள குழுக்கள், அடையாளங்கள் மற்றும் சமூகங்கள் மிகவும் பாதிக்கப்படும், மேலும் வேரூன்றிய வலைப்பின்னல் இயக்கவியல் மற்றும் வெறுப்பின் விரைவான பரவலுக்கும், தீங்குகளின் எட்டுகைக்கும் உதவும் செயல்முறைகள் காரணமாக இது கடந்த காலத்தை விட மிகவும் மோசமாக இருக்கும்.
புதிய மதிப்பீட்டு கட்டமைப்பு (அல்லது அதன் குறைபாடுகள்) “நாங்கள் குறைந்த தீமைகளை பிடிக்க வேண்டியிருக்கும்” என்று சக்கர்பெர்க் ஒப்புக்கொள்கிறார். நிறுவனம் நடவடிக்கை எடுக்காத உள்ளடக்கம் மற்றும் கருத்துக்கள் காரணமாக நமது உயிர்கள் ஆபத்தில் இருக்காது என்றே அவர் கருதுகிறார்.
நிலைமை மேலும் மோசமாகிறது.
மெட்டாவின் குறைந்தபட்ச தலையீட்டின் புதிய கொள்கை உள்ளடக்க கட்டுப்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் Machine Learning அதிகபட்ச பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தோல்வியடையும். 2019 ஏப்ரலில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வை தூண்டுவது குறித்த கலாநிதி ஆராய்ச்சி, பதற்றங்களை அதிகரிக்கவும் பரந்த பொது கருத்தை மாற்றவும் மீறல் மீம்களை பரவலாக பயன்படுத்திய விதத்தை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். மீம்களை புரிந்துகொள்ள ஆழமான சமூக – அரசியல், கலாச்சார மற்றும் மொழியியல் பரிச்சயம் தேவை. மேலும், வேடிக்கையாகத் தோன்றும் காட்சி வழங்கல்கள் பெரும்பாலும் கணிசமான வன்முறையை தூண்டுபவையாக இருக்கின்றன.
ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவுக்கு பில்லியன் கணக்கான முதலீடுகள் செய்திருந்தாலும், குறிப்பாக தொழில்நுட்பம் அல்லாத கலவரங்களுக்கு முன்னரும் அதன்போதும் ஆயிரக்கணக்கில் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உருவாக்கப்படும் மீம்கள் மற்றும் அவற்றை உருவாக்குபவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள மெட்டாவிடம் எந்த தொழில்நுட்பமும் இல்லை. கீழைத்தேய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களைப் பாதிக்கும் உள்ளூர் மொழி கருத்துக்களுடன் இணைந்து, புதிய கொள்கை மாற்றம் தானியங்கி கண்காணிப்பு (Automated Oversight) மற்றும் மனித அறிக்கையிடலில் இருந்தும் கூட தப்பிக்கும் வகையில் மற்றும் பரவுவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். எந்த நல்ல விளைவும் ஏற்படாது.
நாம் எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம். அங்கு மெட்டாவின் தளங்கள் – அரசுடன் இணைந்த கணக்குகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வலைப்பின்னல்கள், கட்டுப்பாடற்ற, கணிசமான வளங்களுடன் கூடிய தொழில்முறை ட்ரோலிங் நடவடிக்கைகள், தள கட்டமைப்புகளின் முறையான கையாளுதல் மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் நுணுக்கமான பொய்மைகளால் வரையறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் கீழைத்தேய நாடுகளில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே மிகவும் பரிச்சயமானவை. ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் பிரச்சாரங்கள், வன்முறை அல்லது குற்றச்சாட்டுகளை தவறாக சுமத்துதல் உள்ளிட்ட தவறுகள் குறித்த ஆதாரங்கள் மற்றும் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட ஊடகங்கள் – கற்பனை செய்ய முடியாத வகையில் வளர வாய்ப்புள்ளது. ஜனநாயக மதிப்புகள் குறைந்த நாடுகளில் இனி மெட்டா நிறுவனம் சர்வாதிகாரத்தைத் தடுப்பதற்கு உதவுவதை விட மனித உரிமைகளின் சீரழிவுக்கு உதவும் வகையில் காணப்படலாம்.
நான் இதை அச்சத்துடன், அதிர்ச்சியுடன், நம்பிக்கையின்மையுடன் மற்றும் கோபத்துடன் எழுதுகிறேன். நான் மிகவும் வருத்தத்திலும் இருக்கிறேன். பத்தொன்பது வயதான சக்கர்பெர்க் தனது பயனர்களை ‘dumb fucks’ என்று கூறியது, இப்போது நோக்கம் கொண்ட விடயமாகவே தோன்றுகிறது. நமது நேரம், உழைப்பு, புரிதல், ஆராய்ச்சி மற்றும் தரவைப் பயன்படுத்தி கட்டமைக்க பல ஆண்டுகள் எடுத்த பாதுகாப்பு வழிமுறைகளைவேண்டுமென்றே உடைத்தெறிவதை நாம் காணும்போது, மெட்டாவின் புதிய கொள்கை கட்டுப்பாட்டு செலவைக் குறைப்பது அல்லது அமெரிக்காவின் MAGA-வை அமைதிப்படுத்துவது மட்டுமல்ல – நிராகரிக்க முடியாத வகையில் எதிர்கால இனப்படுகொலைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றே எடுக்கப்பட்ட தேர்வாகும். ஒருகாலத்தில் உலகை ஒன்றிணைக்க வாக்குறுதியளித்த நிறுவனம் அதற்குப் பதிலாக ஒரு உயிர், ஒரு சமூகம், வன்முறை, மோதல் மற்றும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்து லாபம் ஈட்டுவதை தேர்ந்தெடுத்துள்ளது.
கலாநிதி சஞ்சன ஹத்தொடடுவ
Enabling Atrocity by Design: Meta’s Dangerous New Direction என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். தமிழ் மொழிபெயர்ப்பில் புரிந்துகொள்வதற்கு கடினமான ஏதேனும் இருப்பின் மேல் வழங்கப்பட்டிருக்கும் மூல ஆங்கில கட்டுரைக்குப் பிரவேசிக்கவும்)