Photo, National Institute of Mental Health
சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது.
தற்கொலை ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 72,0000 க்கும் அதிகமானோர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை (73%) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன. இதற்கு அப்பால் தற்கொலை என்பது சமூகங்கள், நண்பர்கள் மற்றும் தற்கொலையால் நேசிப்பவரை இழந்த குடும்பங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது (உலக சுகாதார அமைப்பு – 2024).
இலங்கை பொலிஸ் தரவின் படி 2022 இல் இலங்கையில் தற்கொலை விகிதம் (மக்கள் தொகை) ஆண் மற்றும் பெண்களில் 27 பேர்/100,000 மற்றும் 5 பேர்/100,000 ஆக இருந்தது. அண்ணளவாக 15 பேர்/100,000.
உளநலம் என்பது தற்போதைய உலகத்தின் மிகவும் அடிப்படையான அவசியமான தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள உளநலன் சார்ந்த சவால்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உளநல சுகாதாரத்தை மேம்படுத்த ஆதரவான செயற்பாடுகளை ஒன்றுதிரட்டுவதையும் நோக்கமாக அடிப்படையாக கொண்டு உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி உலக உளநலன் தினமாக அனுஷ்டிக்கிறது. உளநல ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளால் நமது நல்வாழ்வு, பணிபுரியும் திறன், தனிநபர், குடும்பம் மற்றும் சமூகத்துடன் உறவுநிலையிலும் பாரிய சவால்களையும் சிக்கல்களையும் முகம்கொடுக்கவேண்டி ஏற்படுகிறது.
உள ஆரோக்கியம் என்னும் உள நலன் எனப்படுவது, மக்கள் அவர்களது வாழ்க்கையின் அழுத்தங்களைச் சமாளிக்கவும், அவற்றை முகம் கொடுக்க தமது திறன்களை உணர்ந்து, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவும், வேலை செய்யவும், அவர்களின் சமூகத்திற்கு பங்களிக்கவும் உதவுகிறது. உள நல சிக்கலானது எந்த நேரத்திலும் ஒரு தனிநபரையோ, குடும்பத்தையோ, சமூகத்தையோ, வறுமை, வன்முறை, இயலாமை மற்றும் சமத்துவமின்மை உள்ளிட்ட பாதகமான சூழ்நிலையால் உள்ளாக்கப்படுவதுடன் உளநல சிக்கல் நிலையை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தில் உள்ளாக்கப்படுகின்றனர்.
பல உளநல சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் திறம்பட சிகிச்சையளிக்கப்படலாம். இருப்பினும், சுகாதார அமைப்புகளில் வளங்கள் குறைவாகவே உள்ளன மற்றும் வழங்கப்படும் சிகிச்சை கால இடைவெளிகள் உலகம் முழுவதும் பரவலாக உள்ளன. வழங்கப்படும் உளநல சிகிச்சைகள் பெரும்பாலும் கணிசமாக தரத்தில் இருக்கும். இதனால் உளநல சிக்கல் நிலைமைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் பாகுபாட்டிற்கு உள்ளாக்குவதுடன் மனித உரிமை மீறல்களை அனுபவிக்கின்றனர்.
உள நோய்கள் குணப்படுத்தக்கூடியவை. மேலும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்கலாம். இருந்தபோதிலும், சிகிச்சையின் பற்றாக்குறை அல்லது தரம் குறைவாக உள்ளது. மேலும் பலர் தங்கள் அறிகுறிகளை சுகாதார நிபுணர்கள் அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சங்கடத்தை உணர்கிறார்கள்.
3 பெண்களில் ஒருவரும் 5 ஆண்களில் ஒருவரும் தங்கள் வாழ்நாளில் பெரும் மன அழுத்தத்தை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது (Our World in Data).)
2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 8 பேரில் ஒருவர் அல்லது உலகில் 970 மில்லியன் மக்கள் கவலை, உளச்சோர்வுக் கோளாறுகள் மற்றும் உளநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். 2020ஆம் ஆண்டில், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கவலை மற்றும் உளச்சோர்வுக் கோளாறுகளுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது (உலக சுகாதார அமைப்பு – 2022)
பதற்றம், உலகில் 284 மில்லியன் மக்களை பாதிக்கிறது. உளச்சோர்வு 264 மில்லியன் மக்களை பாதிக்கிறது. மது பயன்பாட்டுக் கோளாறு 107 மில்லியன் மக்களை பாதிக்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறு 71 மில்லியன் மக்களை பாதிக்கிறது. (உளநலப் புள்ளிவிவரங்கள் 2024 – The Checkup)
உளநலம் சார்ந்த கள நிலவரம், சவால்கள், எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி வடகிழக்கு இலங்கையில் இது சார்ந்து மக்களுடன் இணைந்து களத்தில் பலகாலமாக பணிபுரிகின்றவர்களின் தகவல் பரிமாற்றங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு மேலாக உளசமூக ஆலோசகர் மற்றும் உள நலம் சார்ந்த பயிற்றுவிப்பாளர், வவுனியா மாவட்ட மேற்பார்வையாளர், இலங்கை பொது சுகாதார பரிசோதகர் ஆக பணியாற்றுகின்ற ரவீந்திரன் சண்முகதாஸ் பகிர்ந்து கொண்ட விடயங்கள்:
எமது சமூகத்தை பின்வருமாறு வகைப்படுத்தலாம். அதாவது, சிறுவர்கள் (ஆரம்பகால குழந்தைப் பருவம், ஆரம்ப பள்ளி அதாவது தரம் 5ற்கு முன்), தரம் 6 இலிருந்து 8, தரம் 9 இலிருந்து 11, உயர்தரம் பயிலும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலை அல்லது பயிற்சிகளுக்கு செல்பவர்கள், திருமணமானவர்கள் (புதிதாக திருமணமானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ள பெற்றோர் ) என்று வகைப்படுத்தலாம். விசேடமாக நடுத்தர வயதுடையவர்கள் முக்கியமானவர்கள். ஏனெனில் அவர்கள் தமது பிள்ளைகளையும் பெற்றோர்களையும் பராமரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்கள். அதிலும் சமூகத்திலும் சிறியோரை நெறிப்படுத்தும் பொறுப்பிலும் உள்ளார்கள். அதை நடுத்தரவயது நெருக்கடி (Middle Age Crisis) என்பர். அதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய வயது பராயம். அடுத்ததாக வயதானவர்கள், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்தோசமாக இறக்க மட்டும் அவர்களுடைய காலப்பகுதி ஆக வகைப்படுத்தலாம்.
மாற்றமடையும் உலகில் இளைஞர்களும் உள ஆரோக்கியமும்
இதில் பாடசாலை பருவத்திற்கு உட்பட்ட பல்கலைக்கழகத்திற்கு செல்லும் 25 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் அதாவது, இளம் வயதினர் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அனுபவிக்கும் உள சமூக பிரச்சினைகள் பெருவாரியாக இருக்கிறது. ஏனெனில், தமது உளசமூக பிரச்சனைகளுக்கு யாரை அணுகுவது என்று தெரியாமல் உள்ளனர். அதேபோல் சமூகத்தால் இகழப்படக்கூடும் என்ற காரணங்களால் தமது பிரச்சினைகளை சொல்ல கூச்சப்பட்டு மறுத்தல், இதனால் தமக்கு தெரிந்த முறையில் இப்பிரச்சினைகளை கையாள முனைதல், அது முடியாத சந்தர்ப்பத்தில் தற்கொலை போன்ற முடிவுகளை எடுத்தல் அல்லது போதைப்பொருள் மதுபாவனை போன்றவற்றுக்கு அடிமையாதல், சரியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம், உதாரணமாக இரு நபர்களுக்கு இடையில் வரும் உறவுச்சிக்கல், இருவரும் இணைந்து தொடர்ந்து வாழமுடியாது என்று தெரிந்தும் எவ்வாறு விலகுவது, அதிலுள்ள தயக்கம், அவ்வாறு விலகுவது என்பது ஒரு பாவச்செயல் என்று மோசமான ஒரு நிலையில் வாழ்க்கையை தொடர்வது போன்ற உளநலச் சிக்கல்கள் காணப்படுகிறது. படித்தவர்களாக இருந்தாலும் அதை எவ்வாறு தீர்ப்பது என்ற அறியாமை. ஏனெனில் இவ்வகையான முரண்பாடுகளை தீர்த்தல் சம்பந்தமாக சிறுவயதில் கற்றுக்கொடுக்காததால் இவ்விடயங்கள் பாடப்பரப்பில் சேர்க்கப்படாததால் அல்லது பாடப்பரப்பில் சேர்க்கப்பட்டிருந்தாலும் சரியாக படிப்பிக்க பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் இல்லாததால் இந்தப் பிரச்சனைகள் இவர்களுக்குள் ஏற்படுகிறது.
ஒன்று, நிதியை எவ்வாறு கையாள்வது, சாதாரணமாக எமக்கு ஏற்படும் உள சமூக பிரச்சினைகளை எப்படி பகுப்பாய்வு செய்வது என்பவற்றை உள்ளடக்காது விஞ்ஞானம், கணிதம் போன்றவை மட்டும் முக்கிய பாடங்களாக படிப்பித்தல் இலங்கையின் கல்விக்கொள்கையில் உள்ள பெரிய குறைபாடு ஆகும்.
இப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய…
பாடசாலையில் உள்ள பிரச்சினையை ஆலோசக ஆசிரியர் அதை கையாண்டாலும் உள சமூக பிரச்சினைகள் பாடசாலையில் மட்டுமன்றி வீட்டில், வெளியில், வீதியில், விளையாட்டுத்திடலில், சமூகத்தில் இருக்கின்றன. பாடசாலை சமூக சேவகர் என்ற பதவி வேறு பல நாடுகளில் உள்ளது போல் இலங்கையிலும் உருவாக்கப்படவேண்டும். தற்போதுள்ள நிதி நெருக்கடி நிலை காரணமாக பல காரணிகள் இருந்த போதிலும் தற்போது அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தியுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 10 – 25 பாடசாலைக்கு ஒருவர் என இது சார்ந்த பயிற்சிகளை வழங்கி இப்பொறுப்பில் அமர்த்தலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேசிய நிறுவனங்களில் முறையாக சமூக பணியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை இப்பொறுப்பில் அமர்த்தலாம்.
திருமணத்தில் ஏற்படும் பிரச்சினைகள், குடும்ப வன்முறை, இதனால் குடும்பமாக தற்கொலை, உதாரணமாக தாய் தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தல், ஆற்றில் குதித்தல் போன்றன காணப்படுகின்றன. மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்ற மகளிர் மேம்பாட்டு அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், சிறுவர் மேம்பாட்டு அதிகாரிகள் வினைத்திறனாக களத்தில் சேவையாற்றுவதை உள சமூக பயிற்சி பெற்ற கண்காணிப்பாளர்கள் அல்லது மருத்துவ உளநல ஆலோசகர் உறுதிசெய்தல். இதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் குறைபாடுகளை குறைக்கலாம்.
மது மற்றும் போதைக்கு அடிமையாகி உள்ளானவர்களுக்காக இலங்கை உள ஆரோக்கிய கொள்கையின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மதுவிலக்கு மறுவாழ்வு மையம் இருந்தபோதிலும் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகிறது. குறைந்தது 3 கிழமைகளாவது மது மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும். மற்றும் அவர்கள் குடும்பத்தவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் பதின்மவயதில் உள்ள இவர்களின் பிள்ளைகளுக்கும் வெவ்வேறான ஆலோசனைப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இதன் மூலமே பூரண குணமடைந்து இதிலிருந்து வெளிவர முயற்சி செய்வதுடன் குடும்பமும் ஒத்துழைக்க வேண்டும். இது முழுமையான சிகிச்சையாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மதுவிலக்கு மறுவாழ்வு மையம், ‘குருந்தம்’ என்ற பெயருடன் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஊழியர் பற்றாக்குறை இருந்த போதிலும் ஒரு நாள் ஏழு நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
ஒவ்வொரு பெரிய வைத்தியசாலையிலும் உளசமூக ஆலோசனை சேவைக்காக தனி இடம் ஒதுக்கப்படவேண்டும். வைத்தியசாலைக்கு வரும் 50% தமது உள சமூக பிரச்சினைகளுக்காகவே வருகின்றனர். பேராசிரியர் தயா சோமசுந்தரமும் இதை பற்றி கதைத்துள்ளதோடு இதை பற்றி எழுதியும் உள்ளார். இவர்களுக்கு தளர்வு பயிற்சிகள் வழங்கி மசாஜ் செய்து அவர்கள் சொல்வதை செவிமடுக்கவும் அவர்களை ஆசுவாசப்படுத்தல் வேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சிகள் தேவைப்படுவதில்லை. வெளி நோயாளர் பிரிவிற்கு வருபவர்களை வைத்தியர் இனங்கண்டு இவை தேவைப்படுவதாக உணர்ந்தால் இப்பிரிவிற்கு அனுப்பக்கூடியதாக இருத்தல்
பாடசாலையிலிருந்து இடைவிலகி அல்லது வெளியேறியவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக காணப்படுகிறது. இதனால் இவர்களுடைய சக்தியை சமூக விரோத நடவடிக்கைகளில் செலவிடுகின்றனர் இல்லாவிடில் பல இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். அரசாங்கம் இதை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, வவுனியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பயிர் செய்யக்கூடிய பல நிலங்கள் காணப்படுகிறது. அரசாங்கம், விவசாய திணைக்களத்தின் உதவியுடன் அவர்களுக்கு நிதி வழங்கி விலங்கு வேளாண்மை, பயிரிடுதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இவ்விளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
தரம் 9 -12 இல் பாலியல் கல்வி சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதை கற்றுக்கொடுப்பதுடன் அதன் சார்பாக பரீட்சைகள் நடத்தப்படவேண்டும். அதனால் மாணவர்கள் ஆர்வமாக படிப்பதோடு ஆசிரியர்களுக்கும் அதனை வலியுறுத்துவதுடன் வலயக்கல்வி தொடர்ச்சியாக மேற்பார்வை செய்ய வேண்டும்.
பெற்றோர்களும் உள ஆரோக்கியமும்
பெற்றோர் எவ்வாறு இருக்க வேண்டும், பிள்ளைகளைப் புரிந்து கொள்கிறார்களா, பிள்ளைகளின் உணர்வுகள் என்ன போன்றவை புறக்கணிக்கப்படுகின்றன. உணவு உட்கொள்ளுதல், கற்றல் என்பவற்றை தவிர ஒரு பெற்றோராக நான் எவ்வாறு இருக்க போகிறேன், நான் சரியான முறையில் இருக்கிறேனா, பிள்ளைகளின் முன்னிலையில் நாம் இருவரும் சரியான கணவன் மனைவியாக இருக்கிறோமா அல்லது வன்முறையில் ஈடுபடுகிறோமா என்பன குழந்தை வளர்ப்பு என்பவற்றுக்குள் உள்வாங்கப்படுகிறது.
இதற்காக உளநல மருத்துவர்கள், மருத்துவ உளவியலாளர்கள், ஆலோசகர்கள், நாடக வல்லுநர், பால்நிலை நிபுணர் போன்ற குழுவினர் இணைந்து ‘மனோகரி’ என்ற 25 பிரிவுகள் கொண்ட கையேடு எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 1 – 2 மணித்தியாலங்கள் கொண்டது. இவை எவ்வாறு உணர்வுகளை கையாளுதல், சிறந்த பெற்றோராக இருத்தல் பற்றி ஆழமாக விளக்கியுள்ளது. இதை பாடசாலையிலும், சமூகத்திலும் பெற்றோர்களுக்கும் செய்தல் நன்று. இதற்கு பயிற்சி கொடுக்க தயாராகி உள்ளோம்.
பாடசாலை சமூகமும் உள ஆரோக்கியமும்
இன்னொரு தரப்பினர், முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை கற்றுக்கொடுப்பதுடன் சிறுவர்களின் உளநிலையைப் புரிந்துகொள்வதில்லை. சிறுவர்கள் தவறு செய்யும் போது எவ்வாறு அணுகுவது, சிறுவர்களை எவ்வாறு மதிப்பிடல் போன்றவை பற்றி குறைவாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நல்ல காத்திரமான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். அரச கல்வி நிர்வாக அமைப்பிற்குள் உள்வாங்கப்படாவிட்டாலும் அவர்களின் பங்கு சிறுவர்களின் வளர்ச்சியில் இன்றியமையாதது. அவர்களுக்கு பயிற்சி கொடுத்து மருத்துவ உளவியலாளரின் கண்காணிப்பில் மாவட்ட இணைப்பாளரின் ஊடாக நடத்தலாம்.
பாடசாலை மாணவர்களை எடுத்துக்கொண்டால் விளையாட்டு போட்டிகளில் நல்ல திறமையாக செயற்படுபவர்களையே ஆசிரியர்கள் தெரிவு செய்கின்றனர். பெரும்பாலான பாடசாலைகளில் மற்ற மாணவர்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை அற்றே உள்ளனர். ஆனால், விளையாட்டு என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். எல்லா மாணவர்களும் விளையாட்டுத் திடலில் விளையாடி ஏதாவதொரு விளையாட்டில் ஈடுபடுவதை விளையாட்டு ஆசிரியர்கள் அதனை உறுதிப்படுத்த வேண்டும். இதை கொள்கையிலும் கொண்டு வர வேண்டும்
பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் சுகாதார திணைக்களம் சிற்றுண்டிச்சாலை கொள்கையை தயாரித்துள்ளது. அதில் 15 உணவுக்கான செய்முறை உள்ளது. ஆனால், உப்பு மற்றும் கொழுப்பு கூடிய உணவுகள், சீனி கூடிய மென்பானங்கள் விற்கப்படுகின்றன. பழவகைகளை கொடுப்பது இல்லை. கல்வித் திணைக்களம் இதை கண்காணிக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறும் போது இதே வகையான உணவு கட்டுப்பாட்டை பேணுவர். இல்லாவிட்டால் உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்கள் சிறுவர்கள் மத்தியில் தவிர்க்கலாம். உதாரணமாக, வைத்தியர்கள் தற்போது உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு கொழுப்பு நிறைந்த கல்லீரல் கண்டறிகின்றனர்.
தரம் 5 இன் பிறகு மாணவர்கள் ஏதாவது இசைக்கருவிகள் (மிருதங்கம், நரம்பிசைக்கருவிகள், காற்று வாத்தியங்கள்) கற்றுக்கொள்ள வேண்டும். இவை மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த உணர்வுகள் நீண்டகாலத்திற்கு மனதில் நீடிக்கும். இதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.
பணியிடங்களில் உள ஆரோக்கியம் – 2024 இவ்வாண்டின் உலக உளநலன் தினத்தின் தொனிப்பொருள்
எந்தத்துறையாக இருந்தாலும் உளநல பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். தபால் திணைக்களம், தொலைத்தொடர்பு திணைக்களம், நீர்பாசனத்திணைக்களம், கல்வித்திணைக்களம், விவசாய மற்றும் மீன்பிடி திணைக்களம் என்று எதுவாக இருப்பினும் ஊழியர்களுக்கு ஒரு ஒழுங்கு முறையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனினும் உளநல பயிற்சி கொடுப்பது அவசியம் ஆகும். பிராந்திய சுகாதார சேவைகள் அமைப்பிலுள்ள உளநல அலகின் ஊடாக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து இது ஒழுங்கமைக்கப்படவேண்டும். இதில் மனோகரி என்ற உளநல கையேட்டைப் பயன்படுத்தலாம்.
இளம் பருவத்தினரின் உள நலம் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் அதிக தற்கொலைகள், அதிக போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கெதிரான வன்முறைஇ, பாடசாலை இடைவிலகல் மற்றும் பதின்மவயது கர்ப்பம் என்பவற்றை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது, சமூகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாக வலய மற்றும் மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக ஆசிரியர்களுக்கு வாழ்க்கைத்திறன் பயிற்சிகள், விவசாய இரசாயன துறையில் பணிபுரிபவர்களுக்கு இரசாயனங்களை கொள்வனவு செய்ய வருபவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கான மற்றும் கொள்வனவு செய்வதற்கான நோக்கங்களை சரியாக அடையாளம் காண்பதற்கான பயிற்சிகள், பாலியல் சுகாதாரம் மற்றும் உளநலம் தொடர்பாக சுகாதார அமைச்சு மற்றும் பொது சுகாதார ஆய்வகம் ஊடாக பயிற்சிகள், சிறுவர்கள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பினூடாக நிகழ்வுகள் போன்ற செயற்பாடுகள் முன்னெடுப்பதாக உளநல மருத்துவர், கல்லடி மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தின் பிராந்திய இயக்குனர் நிறுவனத்திலும் 20 வருடங்களுக்கு மேலாக உளநலத்துறையில் பணியாற்றுகின்ற டான் சௌந்தரராஜா அவர்கள் தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் மட்டக்களப்பில் வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் தன்மை அதிகமாக உள்ளதால் ஆண்களிடம் தங்கி வாழ்ந்த பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. தமது பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஒருவேளை சாப்பாட்டை போதுமானதாக வழங்க முடியாமை மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கோ அல்லது தனியார் வகுப்புகளுக்கோ பணச்சிக்கலால் அனுப்ப இயலாத சந்தர்ப்பத்தில் பெற்றோர்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
யுத்தத்தின் போது எவ்வாறான மனநிலை இருந்ததோ அவ்வாறே தற்போது மனநிலை உள்ளது. இவ்வாறான நிலையில் ஏற்படுகின்ற குடும்ப கஷ்டம் மற்றும் நுண் கடன் பிரச்சினைகள் (நாள் மற்றும் கிழமை வட்டிக்கான கடன் ) மேலும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, முன்பு தீபாவளி மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கு 1000 ரூபா அல்லது 2000 ரூபாவிற்கு புடைவையை கொள்வனவு செய்த குடும்பம் தற்போது 750 ரூபாவிற்கே ஈடுகொடுக்க கூடியதாக உள்ளது. அத்தோடு தமது நகைகளை அடகு வைத்தே வாழ்வாதாரத்தை நடத்த முடிகிறது. ஆண்கள் போதைவஸ்து மற்றும் வெற்றிலை பாவனைக்கு அடிமையானதுடன் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். மேலும் தற்போது வெளிநாட்டுக்கு செல்லும் மோகம் அதிகரித்துள்ளதுடன் ருமேனியா போன்ற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுகின்றனர். இதனால் குடும்ப வன்முறை அதிகரிக்கிறது. பெண்களும் வேலைக்கு வெளியே போவதால் வீட்டிலுள்ள சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.
திருநர்களுக்கான பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்துள்ளன. சமூக வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் ஊடாக பாலியல் ரீதியான கருத்துக்களை இட்டு தொந்தரவு செய்தல், உதாரணமாக இரு பெண்கள் நடனமாடி சமூக வலைதள செயலியில் பதிவிட்டிருந்தால் அவர்களை கொச்சையாக வர்ணித்து கருத்திடுவதன் மூலம் சைபர் குற்றம் இழைத்தல். இதன் மூலம் அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் என தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற மன உளைச்சலை ஏற்படுதல். அதிலும் அரசியலுள்ள பெண்கள் இவ்வாறான தாக்குதல்களுக்கு பெரிதும் முகம் கொடுக்கின்றனர். இந்தக் காலத்தில் பெண்களுக்கு சம உரிமை இருக்கிறது என்ற பேச்சுக்கள் இருந்த போதிலும் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறையால் இன்றும் பாதிப்படைகின்றனர்.
ஆசிரியர்களும் பாரிய வேலைப்பளு காரணமாக வீடுகளுக்கும் வந்து ஒப்படைகள் போன்ற வேலைகள் செய்வதால் பாரிய மனஅழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். வயது முதிந்தவர்களும் அவர்களை பராமரிக்க யாருமின்றி தனிமையிலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கவனிப்பாரின்றி அவதியுறுகின்றனர். முந்தையகாலத்தில் பத்தில் நான்கு அல்லது ஐவர் உளநல பாதிக்குட்பட்டவர்கள் என்று எடுத்துக்கொண்டால் தற்போது பத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அதிகாரசபை பொருளாளரும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் உளசமூகவியல் அமைப்பின் உறுப்பினரும் சமூகத்தில் 20 வருடங்களுக்கு மேலாக பெண்கள் மேம்பாடு தொடர்பாக கள அனுபவம் கொண்ட சர்மிளா வசந்தராஜா பகிர்ந்து கொண்டார்.
தேசிய உளநல நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் இயக்குநரான ஆலோசகர் உளநல மருத்துவர் டாக்டர் ஜெயன் மெண்டிஸ் இம்மாதம் டெய்லி மிரருக்கு கொடுத்த செவ்வியில், உளச்சோர்வினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தங்கள் சிரமங்களைப் பற்றி கலந்துரையாட அல்லது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் சேவை பெறக்கூடிய சிறுவர் கிளினிக்கிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். உளநலம் பற்றிய களங்கம் குறைய வேண்டும். பதின்வயதினர் தங்களுடைய உணர்ச்சிகள் மற்றும் கஷ்டங்களைப் பற்றி பேசுவதற்கு வசதியாக ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உளநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தற்கொலை எண்ணங்களை அனுபவித்தால் தயவுசெய்து தேசிய உள நல நிறுவனம் – 1926, இலங்கை சுமித்ரயோ +94112682535/ 0112 692909/ 0112 696666 ஐ தொடர்பு கொள்ளவும்.
வினைத்திறனான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு உளநலன் தவிர்க்கப்பட முடியாததாகும்!
ஷகீதா பாலச்சந்திரன்