“சூரியன் உதிக்கும் போது மட்டுமல்ல, கருமையான இருளிலும் கூட, ஓடுங்கடா என்ற குரல். குண்டுகள் மற்றும் மோட்டார் தாக்குதல்களின் சத்தம் கேட்கும்போது, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி சிந்திக்க கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. நாங்கள் காடுகளுக்குள்ளும், பதுங்குக் குழிகளுக்குள்ளும் பதுங்கிக்கொள்வோம். விடியும்வரை கொசுக்களின் (நுளம்பு) கடியுடன் கண்விழித்திருப்போம். துப்பாக்கிச் சூடுகளின் சத்தம் முடிந்தவுடன் அல்லது சூரியன் தன்  தலையை உயர்த்த ஆரம்பிக்கும்போது பயத்துடன் எங்கள்  வீடுகளை நோக்கி நடையெடுப்போம். சில சமயங்களில் வீட்டிற்குத் திரும்பும்போது, நாங்கள் ஓடும்போது விட்டுச் சென்ற வீடா இது வீடு என்று எங்களுக்குள்ளேயே கேள்வி கேட்போம். முன்பின் அறிந்திராத ஒரு நபரை கண்டாலே பயந்து நடுங்கிப்போன நாங்கள் இப்போது, அமைதி, அன்பு, நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐயங்கேணி கிராம சேவகர் பிரிவின் இருபுறங்களிலும் வாழும் பல தமிழ் மற்றும் முஸ்லிம் குடிமக்கள் கூறிய ஆழமான  வார்த்தைகள் இவை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால், “போர் காலம் மற்றும் போருக்குப் பிந்தைய காலம்” தொடர்பாக சிறந்த  பார்வைக் கொண்ட ஒருவரால் அதன் ‘உண்மையை’ தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

யுத்தம் ஒரு பிளவு கோடு

30 வருடகால யுத்தமானது நாட்டிலுள்ள அனைத்து உயிர்களையும், உடைமைகளையும் பாரபட்சமின்றி அழித்தது. குறிப்பாக வடக்கு கிழக்கில் மிக மோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் உட்பட  சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஆரம்பத்திலிருந்த நம்பிக்கையும், நல்லெண்ணமும் சிதைந்து, உடைந்து போயுள்ளது. அவர்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் மற்றும் நட்புறவும் சிதைந்துபோயுள்ளது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐயங்கேனி பிரதேசம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

“அந்தக் காலத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைவரும் நிம்மதியாக வாழ்ந்தோம். அந்தப் போருக்கு முன்பு அனைவரும் ஒரே சந்தையில் வியாபாரம் செய்தோம். கொடுக்கல் வாங்கல் செய்தோம். ஒன்றாக பண்டிகைகளை நடத்தினோம். இந்துக்களாகிய எங்களின் பண்டிகைகளுக்கு முஸ்லிம் மக்கள் வந்தார்கள். ரமழான் பண்டிகைக்கு நாங்கள் சென்றோம். உணவு பரிமாற்றிக்கொண்டோம். நாங்கள் அன்புடன் வாழ்ந்தோம்” என்று ஐயன்கேணி  கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மூத்த பெண்மணி முத்துமாரி கூறினார்.

10 வயதிலிருந்தே போரை அனுபவித்த மற்றும் கணவனை இழந்த ஒரு பிள்ளைக்கு தாயான ஜோசப் மயூரா கூறுகையில், “துப்பாக்கிச் சத்தமும் வெடிகுண்டு சத்தமும் எனக்கு மிகவும் பரிச்சயம். எங்கள் தாய்மார்கள் தங்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு எங்களையும் இழுத்துக்கொண்டு பாடசாலைகள் மற்றும் முகாம்களுக்கு ஓடியது இன்றும் நினைவில் இருக்கிறது. துப்பாக்கிச் சத்தம், குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதும், நாங்கள் பயந்தோம்.

இதற்கிடையில், இரு தரப்பிலிருந்தும் சிலர் பாதுகாப்புப் படையின் சில அதிகாரிகளுடன் சேர்ந்து பொய்யான வதந்திகள் பரப்பி ஒருவர் ஒருவரை துன்புறுத்தினார்கள், கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளைச் சேதப்படுத்தினர், நிலத்தைக் கைப்பற்றினர், விலங்குகளைத் திருடிக் கொன்றனர்.

இந்தப் பின்னணியில் ஐயங்கேணி  கிராமத்தில் மட்டும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 198 பேரின் வாழ்வில் மிகக் கொடூரமான முடிவுகளை ஏற்படுத்தியது. அவர்கள் காணாமல் போயிருக்கிறார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை – அவர்களில் 145 பேர் பல்கலைக்கழக மாணவர்கள்,  உயர்கல்வி படித்தவர்கள், உயர் வேலைகளில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களுமாகும். அரச படைகளுக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து அசைய முடியாது ஒரே இடத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும் உள்ளனர். அவர்கள் எவருக்கும் போரிட்ட தரப்பினரிடமிருந்தோ, அரசாங்கத்திடமிருந்தோ எந்தவித  நிவாரணமும்  கிடைக்கவில்லை.

யுத்தத்தின் பரிசாக கிடைத்த ஆதரவற்ற நிலை

யுத்த வெற்றியானது  எதிரிக்கும் அதன் செயல்களுக்குமானதே தவிர நாட்டு  பொதுமக்களின் உயிர்களுக்கான  வெற்றி அல்ல.  யுத்தமானது, தொடர் வலியையும், நொறுங்கிய இதயங்கள் மற்றும் முடிவில்லாத உயிர் மற்றும் சொத்து இழப்புக்களையே விட்டுச் சென்றது.

ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி, மே 18, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீடித்த ஆயுத மோதலின் “இறுதி மாதங்களில்” வடக்கு – கிழக்கில் 40,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் இறந்தனர், மேலும் 30 ஆண்டுகால கொடூரமான யுத்தத்தினால்  150,000 கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட சுமார் 65,000 ஆண்களும் பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020இன் வடக்கு கிழக்கு பிரதேச செயலகத் தரவுகளின்படி கிழக்கில் குடும்ப தலைமைத்துவ பெண்கள் 127,000 ஆயிரம். அவர்களில் 51,000 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் வாழ்கின்றனர். இவ்வாறு குடும்ப தலைமைத்துவ பெண்களாக மாறியவர்களுக்கு நிலையான உதவிகள் எதுவும் இன்மையால் மிகவும் துன்ப நிலையில் வாழ வேண்டியுள்ளது.

போருக்குப் பிறகு ஐயங்கேணி பிரதேச தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் அச்சத்தில் வாழ்ந்தனர். மேலும், தமிழ் பிரதேசத்துக்குள் முஸ்லிம்கள் நுழைவது, முஸ்லிம் பிரதேசத்துக்குள் தமிழர்கள் நுழைவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. இதை இருதரப்பு இளைஞர்களும் செய்ததனால் சாதாரண பொது மக்களுக்கு  மிகவும் கவலையளித்திருந்தது. இந்த நிலைமையினால் இரு இனத்துக்கும் இடையில் விரிசல் தீவிரமடைந்து, “இரு தரப்பினருக்கு இடையேயான அன்புறவு பாதிப்படைந்து  வெறுப்பு உருவாகியது” என்கிறார் ஐயன்கேணி பாரதிபுரத்தில் வசிக்கும் 38 வயதான கணேசமூர்த்தி மைதிலி.

மீளெழுவதற்கு உதவிய கரங்கள்

போருக்குப் பின்னர், இலங்கை அரசாங்கமானது  வெளிநாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளை பெற்று, “மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பல்வேறு திட்டங்களின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் பிற இடங்களில் வசித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணங்களை வழங்கியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐயங்கேணி கிராமத்தில் வசிக்கும் 35 முஸ்லிம், தமிழ், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் மற்றும் ஆண்களிடம் நடத்திய நேர்காணல்களில், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமுர்த்தி உதவி மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓரளவு நிதியுதவி கிடைத்த போதிலும் தற்கால வாழ்க்கைச் செலவுக்கு எந்தவகையிலும் போதுமானதாக இல்லை என்று கூறினர். தொற்றுநோய், இயற்கை அனர்த்தம் போன்ற விஷேட சந்தர்ப்பங்களில் அரசு நிவாரணங்கள் ஏதும் கிடைக்கப்பெற்றாலோ தவிர தற்போதைய நிலைக்கு அரசின் எந்த உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் முன்னாள் தேசிய இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் விளக்கமளிக்கையில், “எனது அனுபவத்தின்படி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நேரடி எதிர்பார்ப்புடன் எவரும் அந்த மக்களுக்கு உதவவில்லை. நிறுவனங்கள் அவர்களது சொந்தத் திட்டங்கள் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். அவை நீண்டகால இலக்குகள் அல்ல. எனினும், யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நிதித் தேவைகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்திசெய்யப்பட்டன. அவை தற்காலிக பலமும் ஆறுதலுமாகும்.

“நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயர்த்தப்பட வேண்டும், ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்”, என்ற விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆனால், நிலையான நீண்டகால இலக்குகளாக உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தொடங்கப்படவில்லை. தெற்கில் இருந்து அமைப்புகள் வட கிழக்கு பிரதேசங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முன்வைக்கின்ற உண்மையான நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பங்கள் எதுவும் இவர்களின் வேலைத்திட்டங்களில் இல்லை என்பது தெளிவாக  அவதானிக்கப்படுவதாக அவர் மேலும் விளக்கினார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது குறிப்பிட்ட மட்டத்தில் அபிவிருத்தி நிலையில் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கான புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்கள் தெரிவித்தன.

அரசசார்பற்ற நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் வழங்கிய மற்றும் தற்போது அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்ற பொருளாதார உதவிகளினால் சற்று தலை நிமிர்ந்து வாழ்கின்ற போதிலும் தற்போதைய அரசாங்கம் அல்லது முன்னாள் அரசாங்கத்தினால் பொருளாதார ரீதியில் அல்லது கல்வி கற்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கான நிலையான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதிபுரத்தில் வசிக்கும் உதய ராஜிதாவின் கூற்றுப்படி, போருக்குப் பிறகு நீண்டகாலத்துக்குப் பின்பு  ஐயங்கேணி கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினருக்கும் இடையே சில புரிதல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. அரசு மற்றும் அரசசார்பற்ற பல்வேறு  நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களே அதற்கு காரணமாகும்.

“அந்தத் திட்டங்கள் அனைத்திலும் பார்க்கிலும் அண்மையில் மட்டக்களப்பு கரித்தாஸ் நிறுவனம் செயற்படுத்திய ஒரு செயற்திட்டமானது நாம் மீள முன்னேறுவதற்கு எமக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கியது. யுத்தத்தின் போது முஸ்லிம், தமிழ் எம்மிடையே ஏற்பட்ட பல காயங்களை ஆற்றுவதற்கு இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டுத்தோட்ட செயற்பாடுகள் மிக உந்து சக்தியாக அமைந்தது என்று மிக்க மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

அழிந்த  வாழ்க்கையை பன்முகத்தன்மையினுள்  மீள கட்டியெழுப்புதல்

ஐயங்கேணி தமிழ் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் விஜயா கூறியதாவது: கரித்தாஸ் நிறுவனத்தின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை வீட்டுத்தோட்ட திட்டமானது ஐயங்கேணி  மக்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

“நாங்கள் ஒரு குழுவாக இயற்கை வீட்டுத்தோட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். அந்தக் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக வாழ்கிறோம். எங்களது தேவைகளைப் பூர்த்திசெய்த பின் அயல் கிராமங்களுக்கு எங்களது இயற்கை காய்கறிகள் மற்றும் பழங்களை  குறைந்த விலையில் விற்கிறோம். இதனால் இப்போது எங்களிடம் நிதிச் சேமிப்பு உள்ளது” என்றார் விஜயா.

மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வானுயர்ந்து காணப்படுகின்ற அதேவேளை,  நாட்டில் உணவுப் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், கரித்தாஸ் மட்டக்களப்பு தனது கிராமத்தில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு உதவி கரம் நீட்டியது மாத்திரமல்லாது பிரிந்திருந்த உறவுகளை இணைக்கவும் பாலமாக அமைந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஐயங்கேணி  கிராமத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் குடியேற்ற முறைப்படி, இரண்டு பகுதிகளாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இஸ்லாமிய பகுதியைச் சேர்ந்த 31 குடும்பங்களும், கரித்தாஸுடன் தொடர்புடைய தமிழ் பகுதியைச் சேர்ந்த 26 குடும்பங்களும் நேரடியாகவும், மறைமுகமாக பல குடும்பங்களும்  இயற்கை வீட்டுத்தோட்ட திட்டத்தினால் பெரிதும் பயனடைந்துள்ளனர் என மட்டக்களப்பு கரித்தாஸ் – மனித மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் அருட்திரு செம்சன் ஜெயநிக்ஷன் தெரிவித்தார்.

“இந்தப் பெண்கள் தங்கள் வீடுகளில் இயற்கை தோட்டம் செய்கிறார்கள், முஸ்லிம் மற்றும் தமிழ் குழுவினர் இணைந்து 04 பொதுவான பண்ணைகளையும் நடத்துகின்றன. அவர்கள் பண்ணையின் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள், நாட்களையும் நேரத்தையும் ஒதுக்குகிறார்கள் மற்றும் பண்ணையின் வளர்ச்சிக்கு தாராளமாக பங்களிக்கிறார்கள். ஏனெனில், இந்தப் பண்ணைகள் மூலம் கிடைக்கும் வருமானம் சரி சமமாக பிரிக்கப்படும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை தெரிவித்தார்.

“இந்தத் திட்டங்களின் மூலம், அவர்கள் போரின் போது இழந்த செல்வம், மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் பெறுமதிமிக்க வாழ்க்கையை அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள். அது தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், மக்களைக் குணப்படுத்துவதும் அவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் மதங்களின் மைய கருப்பொருளாகும் என்று அருட்தந்தை மேலும் கூறினார்.

ஐயங்கேணி கிராமத்தில் பெண்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கின்ற இயற்கை விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளைப் பாராட்டிய கிராம சமாதான குழுவின் அதிகாரி என்.கமல், தனது கிராம மக்கள் மத்தியில் சமாதானத்தை மீள கட்டியெழுப்புவதற்கு மற்றும் வலுவான பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற ஏனைய கிராமங்களிலும் இச்செயற்பாட்டை முன்னெடுப்பது மிக முக்கியம் என்றார்.

இவ்வாறானதொரு நடவடிக்கையானது இயற்கை விவசாயத்தின் மூலம் நொறுங்கிய  இதயங்களுக்கு ஒரு சிறப்பான பங்களிப்பாகும் என ஏறாவூர் அல் மத்ரஸல் முஹம்மதியாவின் கே.எம்.எம்.கபீர் மௌலவி தெளிவாகக் கூறினார்.

விஷமில்லா இயற்கை  உணவைப் பயன்படுத்துவது பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் நோய்வாய்ப்படாமல் ஆரோக்கியமாக இருக்க விஷமில்லாத இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று முஹம்மது நபி தெளிவாகக் கூறியுள்ளார் என்று மேலும் கபீர் மௌலவி கூறினார்.

பொருளாதார நன்மைகள், சமூக சந்தைகள் மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிக்கொள்ளல்

தற்போது உள்ளூர் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த ஏறூர் விகாரையின் (புண்யாராமயின்) விகாராதிபதி  தம்பகல்லே வனரதன தேரர், இயற்கை வீட்டுத்தோட்டங்கள்  போன்ற நல்லதொரு செயற்பாட்டின் மூலம் இரு தரப்பினரையும் ஒன்றிணைத்த கரித்தாஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

“பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும், இவ்வளவு காலம் நாம் நச்சான உணவுகளையே சாப்பிட்டு வருகிறோம். இதனால் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் பல நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால், நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மையால் இப்போது நாம் அனைவரும் நச்சற்ற புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால், எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே ஒரு பெரிய தொடர்பு, ஒருமைப்பாடு உருவானது, அது  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” மட்டக்களப்பு ஐயங்கேணி முஸ்லிம் பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்களான சுல்பிகா மற்றும் மர்ஷுகா  ஆகியோரின்  மகிழ்ச்சியின் வெளிப்பாடு இது. இவர்கள் கரித்தாஸ் இயற்கை வீட்டுத்தோட்டத்தினால் பயனடைகின்றனர்.

ஐயங்கேணி முஸ்லிம் பகுதியில் வசிக்கும் 31 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த சுல்பிகா மற்றும் மர்ஷுகா  ஆகியோர் மிக மகிழ்ச்சியுடன் போஞ்சி, கத்தரி, பயிற்றங்காய், பீக்கங்காய் கருவேப்பிலை, முருங்கைக்காய், கீரைகள் மற்றும் நிலக்கடலை போன்ற புதிய காய்கறிகளை ஜூன் 29 அன்று முதல் முறையாகத் திறந்த மக்கள் சந்தையில் தங்களின் மற்றொரு வெற்றியாக விற்பனைக்கு வைத்தனர். மேலும், அவர்களின் தோட்டத்திற்கு  தேவையான உரங்கள், விதைகள் மற்றும் உபகரணங்களையும் வைத்திருந்தனர்.

ஐயங்கேணி  முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த துமுரி, சுல்பிகா, ஹம்ஷியா, மர்ஷுகா போன்றோரும், தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த ராஜிதா, மைதிலி, மயூரா, விஜயா போன்றோரும் இத்திட்டமானது சமூக, பொருளாதார ரீதியில் தங்கள் வாழ்வில் உண்மையான வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும், ஆன்மீகத்தையும், அமைதியையும் கட்டியெழுப்புவதில் வெற்றி பெற்றுள்ளது என்றனர்.

“ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம் – தமிழர்களாகிய நாங்கள் வீட்டுத் தோட்டத்தின் மூலம் எங்கள் நொறுங்கிய இதயங்களில் மறைந்த பழைய அன்பை மீட்டெடுக்க முடியும். நாங்கள் இப்போது ஒன்றாக வேலை செய்கிறோம். குழந்தைகள் ஒன்றாக பள்ளிக்குச் செல்கின்றனர், ஒன்றாக விளையாடுகின்றனர், ஒன்றாக மகிழ்ச்சியாக இருகின்றோம், ஒன்றாக வாழ்வை வெல்கின்றோம்” இது மட்டக்களப்பு, ஐயங்கேணி கிராமத்தின்  தமிழ், முஸ்லிம் சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் உண்மைக் குரல்.

மெலனி மானெல் பெரேரா