Photo, TAMILGUARDIAN

இறுதியாக எஞ்சியிருந்த முதுபெரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவரும் கடந்த வாரம் இவ்வுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலுமாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள்.

அவர் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால், சிங்கள தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக இறுதிவரை சம்பந்தன் விளங்கினார். அந்த வகையில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கிறது. அவரது அரசியலை விமர்சிப்பவர்களும் கூட இதை ஏற்றுக்கொள்வார்கள்.

1977 ஜூலை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பாக திருகோணமலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான சம்பந்தன் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் காலஞ்சென்ற தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியபோதிலும், 2001ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வந்த பின்னரே தமிழர்களின் மிதவாத அரசியலின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டார்.

தாங்களே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று உரிமை கோரிய விடுதலை புலிகளை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்  2009ஆம் ஆண்டில் உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழர் அரசியலின் தலைமைத்துவம் இயல்பாகவே வந்துசேர்ந்தது. புதிய சூழ்நிலைகளின் கீழ் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வரலாற்று முக்கியத்தவ கடமை கூட்டமைப்புக்கு இருந்தது.

சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், கடந்த 15 வருடகாலமாக அவரின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர் அரசியல் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்தது என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.

போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் கூட்டமைப்பு கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான முழுப்பொறுப்பையும் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியுமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாகப் பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக போர் வெற்றிக் களிப்பில் குதூகலித்துக் கொண்டிருந்த சிங்கள அரசியல் சமுதாயத்துடனேயே சம்பந்தன் தமிழர் பிரச்சினையைக் கையாள வேண்டியிருந்தது.

ஆனால், அவர் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்யாமல் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதேவேளை, தமிழ் மக்களின் சமகால நிலையை உணர்ந்தவராக உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையை காட்டுவதற்கு ஒருபோதும் முயன்றதில்லை.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறையே என்ற நிலைப்பாட்டில் சம்பந்தன் உறுதியாக நின்ற அதேவேளை நிரந்தரத் தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது  வலியுறுத்திவந்தார். சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின்போதும் தனது இந்த நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்த தவறியதில்லை.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று கூறுவதையும் சம்பந்தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். மரணமடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலிலும் அதை அவர் கூறியிருந்தார். அதை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஏதாவது மூலோபாயம் அவரிடம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம்  நெருக்குதலைப் பிரயோகிக்கவேண்டும் என்பதும் அவரது இடையறாத கோரிக்கையாக இருந்து வந்தது.

 

1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை காரணமாக இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வைக் காண்பதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய கடப்பாடு இருக்கிறது என்று இந்திய தலைவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்திக்கும் வேளைகளில் எல்லாம் சம்பந்தன் வலியுறுத்தினார். அதேவேளை சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீரவைக் காண்பது சாத்தியமில்லை என்பதும் அவரின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.

அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கினார். அரசியல் தீர்வைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்படவேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

தனது காலத்தில் இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற  எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சம்பந்தனுக்கு இருந்திருக்கக்கூடும். அவரின் தலைமுறையைச் சேர்ந்த பல தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுயான வாழ்வை உறுதிசெய்யக்கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்ற கவலையுடனேயே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும் வெளியில் அரசாங்க தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் சம்பந்தன் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட  முயற்சிகள் குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்காலத்தில் 1991ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார்.

சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அரசாங்கங்கள் அரசியல் தீர்வை நோக்கிய இந்த செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலம் 13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டன என்பதை நிரூபிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தார்.  இது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய சுமுக உறவைக் கொண்டிருந்தாலும் அந்த சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுடடிக்காட்டும் துணிச்சல் சம்பந்தனிடம் இருந்தது. அவரது நீண்டகால அரசியல் அனுபவமும் வயதுமூப்பும் அதற்கு காரணமாக இருந்திருக்ககலாம்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி தமிழர் விரோத உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பி தமிழர்கள் நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள் என்று பிரசாரங்களை முன்னெடுத்தது குறித்து அவருக்கு முன்னாலேயே சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கண்டனத்தை அவரின் மறைவுக்கு பின்னர் பல அவதானிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

“மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் செய்துவருகின்ற பிரசாரங்கள் கேடுவிளைவிக்கும் நோக்குடனானவை என்பதை இந்த நாட்டில் உள்ள சகலரும் புரிந்து கொள்ளவேண்டும். இந்த பிரசாரத்தை பொதுஜன பெரமுனவும் நீங்களும் தொடர்ந்து செய்வீர்களேயானால், தமிழீழம் எமது நடவடிக்கைகளினால் அல்ல உங்களது தாமரை மொட்டில் இருந்துதான் மலரும் என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன். உங்களது கட்சியின் சின்னமான தாமரை மொட்டு ஈழமாக மலரும். இறுதியில் அதுவே நடக்கும். தவறான  பிரசாரங்களைச் செய்து மலிவான அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்காதீர்கள்” என்று சம்பந்தன் சபையில் கூறினார்.

இந்திய – இலங்கை சமாதான உடன்டிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக தமிழ்த் தலைவர்கள் இந்திய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சம்பந்தன் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்தார். அமிர்தலிங்கம்,  சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகிய மூவரையும் கொண்ட குழுவே அந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

அவர்கள் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தன் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கடந்த வாரம் சென்னை ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் அதன் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் நினைவுபடுத்தினார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மொழிரீதியான நிலத்தொடர்ச்சி இல்லாதவை என்று ராஜீவ் காந்தியின் விசேட தூதுவர் ரொமேஷ் பண்டாரியை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன நம்பவைத்திருந்தார் என்று மூன்று தமிழ் தலைவர்களும் அறிந்துகொண்டார்கள்.

அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் சென்னையில் இருந்த சம்பந்தன் பிரதமர் ராஜீவ் காந்தியை  சந்தித்து உண்மை நிலையை விளக்க விரும்பினார். திருச்சிக்கு பிரதமர் வரவிருப்பதாகவும் அவர் டில்லி திரும்பும் அதே விமானத்தில் சேர்ந்து பயணம் செய்வது மாத்திரமே அவரைச் சந்தித்து பேசுவதற்கான ஒரே வழி என்று பிரதமர் அலுவலகம் சம்பந்தனுக்கு அறிவித்தது.

மூன்று தமிழ் தலைவர்களும் இரவோடிரவாக சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்று  அங்கிருந்து பிரதமரின் விமானத்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

கையில் ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு ராஜீவ் காந்தியுடன் பேசிய சம்பந்தன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான  மொழிரீதியான நிலத்தொடர்ச்சி குறித்து தெளிவாக விளக்கமளித்தார். டில்லியில் விமானத்தில் இருந்து இறங்கியபோது பிரதமருடன் கைகுலுக்கி விடைபெற்ற சம்பந்தன் “நான் கூறியவை எல்லாம் முழுவதும் உண்மை” என்று கூறினார்.

சில மாதங்களுக்கு பிறகு இலங்கை ஜனாதிபதியுடன் ராஜீவ் காந்தி கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முக்கியமான ஏற்பாடாக உள்ளடக்கப்பட்டது. இந்திய பிரதமருடன் சேர்ந்து விமானத்தில் பயணம் செய்தது குறித்து பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திய சம்பந்தன், “வடக்கு, கிழக்கு  இணைப்பு ஆகாயத்தில் உறுதிப்படுத்தப்பட்டது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இவ்வாறு மீரா ஸ்ரீனிவாசன் எழுதியிருக்கிறார்.

சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஆம் ஆண்டு  தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரையும்  பிறகு சம்பந்தன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையும் அந்தப் பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்குப் பிறகு உள்நாட்டுப் போர் மூண்டது. அதே உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தார். ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல் சிறிசேன – ரணில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒருவராகவே சம்பந்தன் நடந்துகொண்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரையும் செயன்முறையை முன்னெடுத்ததால் அதில் ஒத்துழைத்து தேசிய இனப்பிரச்சினைக்கு உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றைக் காணலாம் என்ற நம்பிக்கையில் சம்பந்தன் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடும். ஆனால் இறுதியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்னைய தமிழ்த் தலைவர்களுக்கு நேர்ந்த அனுபவமே சம்பந்தனுக்கும் ஏற்பட்டது. அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு சிங்கள தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர்.

இது இவ்வாறிருக்க, தமிழ் அரசியல் கட்சிகளை  ஒற்றுமையாக வைத்திருக்க சம்பந்தன் தவறிவிட்டார் என்பதே தமிழர் அரசியல் அவரின்  தலைமைத்துவத்தின் கீழ் இருந்த கடந்த இரு தசாப்தங்களில் அவரின் செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனமாகும்.

போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்கவில்லை. அடுத்து வந்த சகல தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதை தவிர வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு வேறு அரசியல் மார்க்கம் இருக்கவில்லை.

தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு  இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்று பொறுப்பைக் கொண்டிருந்த கூட்டமைப்பு சம்பந்தனின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது இலங்கை தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் சக்தியாக வைத்திருக்கவும் முடியாமல் போய்விட்டது.

இன்று தமிழர் அரசியல் சமுதாயம் சிதறுண்டு கிடக்கிறது. பல கட்சிகள், பல தலைவர்கள். முன்னென்றும் இல்லாத வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை அவசியமாக இருக்கின்ற ஒரு நேரத்தில் அவர்கள் இயன்றவரை பிரிந்து நின்று செயற்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறார்கள். இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து  சம்பந்தன் கவலையடைந்த ஒரு மனிதனாகவே இறுதிமூச்சை விட்டிருக்கக்கூடும்.

வீரகத்தி தனபாலசிங்கம்