Photo, NEWSFIRST

தமிழ்த் தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று,  தீவிரத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே (குரைக்கிற நாய் கடிக்காது).

மற்றது, மென்தேசியவாத நிலைப்பாடுடையது. யதார்த்தம், நடைமுறை போன்றவற்றின் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற விளைவது. முடிந்தளவுக்கு மக்களின் நலன், மக்களுடைய தேவைகள், மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசுடன் இணையக் கூடிய புள்ளிகளில் இணைந்தும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் செயற்படுவது. பிற இன, மதப் பிரிவினரோடு புரிந்துணர்வின் அடிப்படையில் இணங்கியிருக்கவும் கூடியது.

முதலாவது பிரிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், அரியநேத்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா போன்றோருள்ளனர். இதில் சுரேஸ் பிரேமச்சந்திரனைத் தவிர, ஏனையோர் விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டுத் தீவிரத்தை இவர்களிடத்தில் காண முடியும். சுரேஸ் பிரேமச்சந்திரன், புலிகளுக்கு வெளியே நிற்கும் தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டாளராக இருக்கிறார். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்வதில்லை. இதற்குக் காரணங்கள் உண்டு. அவை பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

இரண்டாவது தரப்பில், இரா. சம்பந்தன், ஆபிரகாம் சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், துரைரத்தினம், சி.வி.கே சிவஞானம், சத்தியலிங்கம், சயந்தன் போன்றோருள்ளனர். இவர்கள் புலிகளின் நிழலில் அரசியல் செய்வதைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்குப் பிறகான அரசியலைச் செய்ய வேண்டும் என்ற புரிதல் உள்ளவர்கள். இதில் சிலர் இடையிடையே புலிகளை விமர்சித்தும் புலிகளுக்கு அப்பாலான முறைகளைத் தொட்டும் தமது அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவை இரண்டுக்கும் இடையில், சிலபோது தீவிரத் தேசியவாதிகளாக மேலுயர்ந்தும் சட்டெனக் கீழிறங்கி அரசு தரப்புடன் சமரசம் செய்வோராகவும் இங்குமங்குமாகத் தளம்பிக்கொண்டு சிலர் உள்ளனர். இந்தப் போக்கில் மாவை சேனாதிராஜா, சி.விக்னேஸ்வரன், சரவணபவன் போன்றோர் முக்கியமானவர்கள். அடிப்படையில் இவர்கள் மக்கள் நலனை விட்டுத் தூர விலகித் தனித்திருப்போர். ஆனால், அங்குமிங்குமாகச் சரிந்தாடித் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் வல்லவர்கள்.

இந்தப் பிரிவு அல்லது பிளவு வெளிப்படையாகத் தெரியாது விட்டாலும் கூர்மையாக அவதானிப்போருக்கு நன்றாக விளங்கும். தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் நடந்து கொண்டிருக்கிற ஆதரவு – எதிர்ப்பு என்பதிலும் இதுவே தொழிற்படுகிறது. செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், துரைரத்தினம் போன்றோர் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் மெய்யான ஈடுபாட்டோடும் உண்மையான தெளிவோடும் இதனை ஏற்கவில்லை என்பது பகிரங்கமான விடயம்.

இருந்தாலும் தாம் சார்ந்திருக்கும் கூட்டணி, கட்சி போன்றவற்றின் நலன், கட்டுப்பாடு போன்றவற்றுக்காக மெல்ல அசைந்து கொடுத்திருக்கின்றனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து நிற்கின்ற ஒரே காரணத்துக்காகவே ரெலோவும் புளொட்டும் பொதுவேட்பாளரை ஆதரிக்கின்றன. அதுவும் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு அரை மனதோடு வெளியிடப்பட்ட ஆதரவுக் கருத்தாகும்.

இவர்களுக்கு களச்சூழலும் நிலைமையும் புரியும். இதற்குப் பிரதான காரணம், இவர்கள் யாழ்ப்பாணச் சூழலுக்கு வெளியே தமது அரசியல் இருப்பையும் மனதையும் கொண்டிருக்கின்றனர்.

அதனால் யாழ்ப்பாணச் சூழலை மனதிற் கொண்டு தீர்மானங்களை எடுப்பதில்லை. தாங்கள் செயற்படும் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான நிலைமைகளைக் கவனத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர் அல்லது இவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான வன்னி மற்றும் கிழக்கு மாகாண நிலவரங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

எனினும், நிலைமைகளின் போக்கில் இவர்களுடைய பொதுவேட்பாளர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு. காரணம், இவர்கள் யதார்த்தத்தின் வழியில், நடைமுறைச் சாத்தியங்களைக் குறித்து விடயங்களை அணுகும் தன்மையைக் கொண்டவர்கள் என்பதேயாகும்.

முதலாவது தரப்பு புலிகளின் தொடர்ச்சியாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முற்படுவது. ஆனால், அது புலிகளின் தொடர்ச்சிக்குரியதோ அடையாளத்துக்குரியதோ அல்ல. தம்மைத் தாமே அவ்வாறு உருவகித்துக் கொள்வது. கவனிக்கவும் அப்படி உருவாக்கிக் கொள்வதல்ல; உருவகித்துக் கொள்ளல் என்பதை. மற்றும்படி புலிகளுடைய செயற்பாட்டுப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதல்ல.

இரண்டாவது தரப்பு புலிகளிடமிருந்து, அவர்களுடைய அரசியற் தொடர்ச்சியிலிருந்து நீங்கிச் செல்ல முயற்சிப்பது. புலிகளின் அரசியலுக்கு ஒரு காலகட்டம் உண்டு. அது வேறு. இப்பொழுது வேறு காலட்டம். எனவே இதற்குரிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனச் சிந்திப்பது.

அதனால் தமிழ் மக்களுடைய அரசியல் நலனைப் பற்றி ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திக்க முடிகிறது. அடிப்படையில் மற்றத் தரப்பிலிருந்து இதனுடைய வேறுபாடு இங்கேதான் நிகழ்கிறது. தங்களுடைய வழியில் முடிந்தளவுக்கான செயற்பாட்டு விளைவுகளை உருவாக்க இது முயற்சிக்கிறது.

தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்துக்கு அப்பாலான அரசியல் தீர்மானங்களிலும் செயற்பாடுகளிலும் மேற்சொன்ன இருவகை நிலைப்பாடே இனி வரும் காலத்திலும் செல்வாக்குச் செலுத்தப்போகிறது. இந்தப் போக்கு வரவரத் தீவிரமடையும். இது தவிர்க்க முடியாத அடிப்படையான குணாம்ச வேறுபாடாகும். இதற்குள் சில உப பிரிவுகள் – சிறு கட்சிகள், தனியாளுமைகள் உண்டு. அவை இந்த இரண்டு பெரும்போக்குகளுக்குள்ளும் அடங்கக் கூடியன.

இந்த அடிப்படை வேறுபாட்டிலேயே  தமிழ்த் தேசியவாதச் சக்திகள் பிளவுண்டு, உடைந்து, புதுப்புது அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறிக் கொண்டிருக்கின்றன. இது தவிர்க்கவே முடியாத விளைவு. இதனைக் கட்டுப்படுத்துவது கடினம். அப்படிக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைவுக்குக் கொண்டு வரவேண்டுமானால், ஆளையாள் பழித்துரைப்பதை விட, யதார்த்த நிலைமை எப்படியுள்ளது என்ற தெளிவோடு வெளிவெளியாக உரையாட வேண்டும். அந்த உரையாடல் கற்பனைக்கும் – நடைமுறைக்குமிடையிலான மோதலாகவே நிகழும். அதில் ஈடுபடுவோரின் அரசியல் முதிர்ச்சியும் மக்கள் நலனில் உள்ள அக்கறையும் அந்த மோதலைத் தணித்து, மெல்ல மெல்ல ஒரு புதிய விஞ்ஞானபூர்வமாக அரசியலின் பக்கமாகக் கொண்டுவரக் கூடியதாக இருக்கும்.

ஆனால், தீவிர நிலைப்பாட்டையுடையோர் எப்போதும் கற்பனையிலும் தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் பாவனை செய்தலிலும் (உருவகித்தலிலும்) பிடிவாதமாக இருப்பதால் எளிதில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு. காலம் கரையுமே தவிர, உருப்படியாக எந்தக் காரியங்களும் நிகழாது. இது மேலும் பின்னடைவுகளையே சமூகத்திற்கு அளித்து நிற்கும். மறுதரப்பை இவர்கள் கடுமையாக எதிர்த்துக் குற்றம் சாட்டுவர். தேவையெனில் கடுமையாக விரோதிக்கவும் கூடும்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளத் தவறி, தமிழ்த் தேசியச் சக்திகளுக்கிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கொண்டு வரப்போகிறோம் என்றால் அதை விட அறியாமை வேறில்லை.

சரி, இந்தப் பிரிவு – பிளவு எப்படி உண்டானது? ஏன் உருவாகியது?

வரலாற்றுச் சூழலே எதையும் தீர்மானிப்பதுண்டு. ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான அரசியற் போராட்டங்களை மேற்கொள்ள வைத்தது ஒரு வரலாற்றுச் சூழல். அதற்கடுத்து ஆயுதப்போராட்டத்தை உருவாக்கியது இன்னொரு வரலாற்றுச் சூழல். அது முடிவுக்கு வந்தது அல்லது முடிவுறுத்தப்பட்டது இன்னொரு வரலாற்றுச் சூழல். இதில் உள்நாட்டு  நிலவரங்களும் பிராந்திய, சர்வதேசப் போக்குகளும் செல்வாக்குச் செலுத்தியதையும் நாம் கவனிப்பது அவசியம்.

அதைப்போன்றதே ஆயுதப்போராட்டத்துக்குப் பிறகான இன்றைய நிலைவரம். இது இன்னொரு வரலாற்றுச் சூழல். இந்தச் சூழல் எதையெல்லாம் கோரி நிற்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசியலாளர்களின் பொறுப்பு – கடமை.

முக்கியமாக யுத்தத்திற்குப் பிறகு, யுத்தத்தினால் அழிவடைந்த (அழிக்கப்பட்ட) பிரதேசங்களையும் மக்களையும் (சமூகத்தையும்) மீள்நிலைப்படுத்த வேண்டிய அவசியமிருந்தது. அழிவடைந்த பிரதேசங்களை எந்த அடிப்படையில் மீள்நிலைப்படுத்துவது என்று தமிழ்த்தரப்பு ஒரு போதுமே சிந்திக்கவில்லை. மிகப் பெரிய இது வரலாற்றுத் தவறாகும். உண்மையில், அழிவடைந்த – அழிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தும்போது அவற்றின் பண்பாட்டுத் தொடர்ச்சியும் வரலாற்றுத் தொடர்ச்சியும் அறாதவகையில் புதிய வடிவத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். இதற்கு சமூகவியல், புவியியல், பண்பாட்டியல், வரலாற்றியல், பொருளாதாரத்துறை சார்ந்த அறிஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ‘மீள்குடியேற்றம்’ என்ற பெயரில் அரசு எதை எண்ணியதோ அதன்படியே மீள்நிலைப்படுத்தல் நடந்தது.

அவ்வாறே சமூகத்தை மீள்நிலைப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் அதற்குரிய கட்டமைப்புகளும் தமிழ்த்தரப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. இப்பொழுது போதைப்பொருள் பாவனை, சமூக வன்முறைகள், தொழிலின்மை, இயற்கை வள அழிப்பு – அபகரிப்பு, பண்பாட்டுச் சீரழிவு போன்றன அதிகரித்திருப்பதற்குக் காரணம் சமூகத்தைக் கைவிட்டமையே ஆகும். இங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே வேலை செய்தது.

இப்படி இரண்டு அவசிய நிலைகளில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், அதை அரசின் கைகளில் விட்டதன் விளைவுகளே இன்றைய பின்னடைவுகளாகும். இவற்றைப் பற்றிய மறுபரிசீலனைகளை தமிழ்ச் சமூகம் (அரசியற்கட்சிகள், அரசியல் அபிலாஷையைக் கொண்டிருக்கும் மத அமைப்புகள் உட்பட அனைத்துத் தரப்பினரும்) செய்வது அவசியம்.

இவ்வாறே மக்களுடைய உளநிலையை மேம்படுத்துவதற்கும் தமிழ்த்தரப்புகள் முயற்சிக்கவில்லை. தமிழ்த்தரப்பின் யுத்தத் தோல்வி, போராட்டத்தோல்வியாக அரசினால் மடைமாற்றம் செய்யப்பட்டது. அதை மறுதலிக்கும் விதமாக புதிய அரசியற் போராட்ட முறையை மக்களுக்குள் இறக்கவும் இல்லை. அதைத் தமிழ்த் தலைமைகள் கண்டறியவும் இல்லை.

பலவீனப்படுத்தப்பட்ட தமிழ்ச்சமூகத்தைப் பலப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்திருக்க முடியும். முக்கியமாக அரசியல் காரணங்களால் பிளவுண்ட முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்தியிருக்க வேண்டும். கூடவே முடிந்தளவுக்கு மலையக மக்களோடும் சிங்களத் தரப்பிலுள்ள ஜனநாயக – முற்போக்கினரோடும் இணைந்து செயற்பட விளைவதன் மூலமாக பரந்தளவிலான அரசியற் திரட்சியை உருவாக்கியிருக்க முடியும். சமவேளையில் சர்வதேச சமூகத்தோடும் பிராந்திய சக்திகளாகிய இந்தியா, சீனா போன்றவற்றோடும் உறவை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அந்த உறவு சம்பிரதாயமானவையாக அமையாமல், அரசியல், பண்பாட்டு, பொருளாதார உறவாக வளர்த்தெடுத்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு புலம்பெயர் சமூகத்தின் வாய்ப்பு பெரிதாக இருந்தது.

ஆனால், குழுக்களாகவும் அணிகளாகவும் பிளவுண்டு, ஆளையாள் சந்தேகிப்பதிலும் வசைபாடுவதிலும்தான் கடந்த 15 ஆண்டுகளையும் தமிழ்ச்சமூகம் கழித்தது. உள்நாட்டிலும் வெளியே புலம்பெயர் சூழலிலும் இதுதான் நிகழ்ந்தது. கடந்த 15 ஆண்டுகால நிலவரங்களை அறிய வேண்டுமானால், தமிழ்ச் சமூகம் எப்படிச் செயற்பட்டிருக்கிறது? அதனுடைய சிந்தனைப்போக்கு எப்படியிருந்திருக்கிறது? அதற்குள் என்ன நிகழ்ந்திருக்கிறது? என்பதை அறிய இணைய வெளியிலும் ஊடகப் பரப்பிலும் தேடினால், அதிகமாகக் கிடைப்பது குப்பைகளேயாகும். ஆக்கபூர்வமான – விஞ்ஞான பூர்வமான விளைவுகள் மிக மிகக் குறைவு.

மக்களுக்குத் தலைமை தாங்குவதென்பது கட்சித் தலைமை, கூட்டணிகளின் தலைமை போன்ற பெயரை வைத்திருப்பதில் நிகழ்வதல்ல. அதொரு தகுதியுமல்ல. அது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, மானுட, வரலாற்று அடிப்படைகளில் இதயமும் மூளையும் இணைந்து நிகழ்த்தும் ஒரு ஆழமான செயலாகும். பரந்த மனப்பாங்கோடும் கூர்மையான அறிவுத்திறன், உணர்திறன் போன்றவற்றோடும் செயற்படுமிடத்தே இதன் வெற்றியை எட்ட முடியும்.

போர்க்காலத்தில் ஒரு தொகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஏனைய மக்கள் அரச கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். இருநிலைகளில் மக்கள் வாழ நேர்ந்தாலும் அரசுக்கு எதிரான உளநிலையையே கொண்டிருந்தனர். போரின் முடிவுக்குப் பிறகு இந்த உளநிலை மேலும் தீவிரமடைந்தது. அதாவது, அரசும் சிங்களப் பேரினவாதமும் தம்மைத் தோற்கடித்து, நிர்க்கதியாக்கியுள்ளது என்ற கோபம் மக்களிடமிருந்தது. இதனைத் தமது அரசியலுக்கான முதலீடாக மாற்றுவதிலேயே தமிழ்த் தலைமைகள் தீவிர கரிசனையைக் கொண்டிருந்தன. பதிலாக மக்களைப் பலப்படுத்துவதிலும் பிரதேசங்களை வளர்த்தெடுப்பதிலும் கரிசனை கொள்ளவில்லை.

மக்கள், தங்கள் வாழிடங்களில் வாழ்க்கையைத் தொடர்வதற்கு அங்கே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்வாய்ப்பு, நீர்வசதி உள்ளிட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் மக்கள் அந்தந்தப் பிரதேசங்களில் நம்பிக்கையோடு வாழ்வர். இல்லாதபோது மக்கள் வாய்ப்பான சூழலை நோக்கிப் பெயரவே முற்படுவர். இது உயிரியல் இயல்பு. இதை உணரத் தவறியது தமிழ்த்தலைமை. பதிலாக அது அரசை விமர்சிப்பதன் மூலம் மக்களின் கோபத்தையும் கவலைகளையும் திசைமாற்ற முற்பட்டது.

இதற்கு எண்ணெய் விடுவதிலேயே கவனம் கொண்டிருந்தனர் தமிழ்த் தேசியக் கருத்து நிலையாளர்களான பத்தியாளர்களும் ஊடகர்களும் எழுத்தாளர்களும். பதிலாக எதையும் ஆய்வு ரீதியாகப் பார்ப்பதற்கும் உணர்வதற்கும் தவறினர்.

அதன் விளைவுகளே தமிழ்த் தேசியம் என்ற கருதுகோளும் அதனுடைய கட்டமைப்பும் இன்று பலவீனப்பட்டிருப்பதாகும். இதற்கு தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற ஒற்றை முடிச்சு ஒருபோதும் நிரந்தரப் பயனைத் தராது. அதற்கப்பால் செய்யப்பட வேண்டிய பணிகளிலேயே அதனுடைய பயனும் விளைவும் உண்டு.

இதைப் புரிந்து கொண்ட அணி ஒன்றாகவும் புரிந்து கொள்ள மறுதலிக்கும் அணி இன்னொன்றாகவும் உள்ளது. ஒன்று வரலாற்றை முன்னோக்கித் தள்ள முயற்சிக்கிறது. மற்றது பின்னிழுத்துக் கடந்ததிற்குள் சென்று சேரத் துடிக்கிறது. ஒன்று எதிர்காலத்துக்கு நீரூற்றுவதில் அக்கறைப்படுகிறது. மற்றது, இறந்த காலத்தை உயிர்ப்பிக்க உடுக்கடிக்கிறது.

கருணாகரன்