Photo, AFP

“தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம்.

அப்படித் தேசமாகத் தமிழ் மக்கள் திரண்டால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றி அவர்கள் எங்கேயும் எதுவும் சொன்னதில்லை. (சொல்லப்போவதுமில்லை. ஏனென்றால் அதைப்பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாது). அதைச் சொல்ல வேண்டுமானால், அதற்குரிய செயலுக்குச் செல்ல வேண்டும். அதொரு போராட்டம். அதைப்பற்றி முறையாகத் திட்டமிட வேண்டும். அதொரு பெரும்பணியாகும். அதற்கான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கொடுக்க வேண்டியதாகும்.

இப்போதுள்ளதைப்போல தேர்தல் கூட்டுக்காக (பதவிகளுக்காக) மட்டும் கட்சிகள் கூடிப் பேசுவதோ, அதே தேர்தல் விடயங்களுக்காக உடைந்து உடைந்து பிரிந்து செல்வதோ அல்ல.

அதைப்போல “சிவில் சமூகப் பிரதிநிதிகள்”, “பல்கலைக்கழக சமூகத்தினர்” என்ற போர்வையில் அரசியற் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதாலோ, அவர்களுடைய மேடைகளைப் பகிர்வதாலோ எந்தப் புத்தாக்கமும் நிகழ்ந்துவிடாது. அல்லது புலம்பெயர் ஊட்டங்களுக்காகவும் சில தொண்டு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்காகவும் ஓடித்திரிவதாலும் தமிழரின் அரசியலில் முன்னேற்றத்தைக் காண முடியாது.

இந்தத் தரப்புகளோடு மல்லுக்கட்டுவதை விட மக்களிடம் சென்று வேலை செய்தால், அது அந்த மக்களுக்கான ஆறுதலாகக் கூட இருக்கும்.

யுத்தம் முடிந்த கையோடு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பாதிக்கப்பட்ட மக்களோடு உளஆற்றுகைப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களோடு வேலை செய்கின்ற அனுபவத்தில் சொல்கிறேன், லட்சக்கணக்கான மக்கள் உள நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி, அரசியல் நெருக்கடி எனப் பல பிரச்சினைகளிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றனர். சொந்த மக்கள் (உடன்பிறந்தவர்களைப் போன்றவர்கள்) இப்படி நெருக்கடியில் தவிக்கும்போது எப்படி உங்களால் இந்த மக்களிடம் இறங்கி வர முடியாமல், தலைவர்களையும் பிரமுகர்களையும் மதபீடங்களையும் மட்டும் சுற்ற முடிகிறது? எப்படி பிறருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடியதாக உள்ளது? உண்மையான மக்கள் நேயம் (மனித நேயம்) என்பது என்ன? “தேசமாகச் சிந்தித்தல் என்று சொல்கிறீர்களே!” அது இந்த மக்களை அடிப்படையாகக் கொண்டதுதானே! அதாவது, தேசம் என்பது பிரதானமாக மக்களை உள்ளடக்கியதுதானே! அந்த மக்களின் உளநிலையை அறிந்த மருத்துவர்களிடமும் மெய்யான சமூகச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடி அறிந்து பாருங்கள், உண்மை என்னவென்று தெரியும். யதார்த்த நிலை என்னவென்று புரியும். அதை அப்படியே ஒரு வர்ணமாகத் தீட்டிப் பாருங்கள். தேசம் இருண்டுபோயிருக்கும். அந்தளவுக்குத் துயரும் அவலமும் நிரம்பிய பரப்பு அது. எளியதொரு (வலிய) உண்மை.

வடக்குக் கிழக்கில் சாப்பிடாமல் தினமும் பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து பாருங்கள். உங்களுடைய பிள்ளை ஒரு வேளையாவது உண்ணாமல் பாடசாலைக்குச் சென்றதா? என்பதையும் ஒரு தடவை உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள்.

இப்படிப் பல விடயங்கள் உண்டு. இதையெல்லாம் ஒரு போதுமே இவர்கள் சிந்திக்கப்போவதில்லை.

ஆனாலும் தேசமாகத் திரண்டால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை இந்தக் கட்டுரையில் எழுப்புவோம். இனியாவது பதில்  சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

தவிர, தமிழ் மக்கள் தேசமாக – ஒன்றாகத் திரள்வதொன்றும் புதிய விசயமேயல்ல.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் அப்படித் தேசமாகத் திரண்டே  உள்ளனர். தமிழரசுக் கட்சியை, பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியை, பிறகு இயக்கங்களை, பிறகு விடுதலைப்புலிகளை, கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அது உடைந்து சிதறிய பிறகும் தமிழ்த் தேசியக் கட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் ஆதரித்து நிற்பது தேசமாகத் திரண்ட (அந்த உணர்வின்) அடிப்படையில்தானே!.

ஏன், 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தையும் வாக்களித்த முறையையும் ஒரு தடவை படமாக வரைந்து பாருங்கள். தமிழீழ வரைபடம் அப்படியே தெரியும்.

அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைய – தேசமாகத் திரண்டு வாக்களித்ததால்தானே வந்தது.

இந்த 60 ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள், சவால்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இழப்புகள், அலைச்சல்களின் மத்தியிலும் தங்கள் விடுதலை வேட்கையையும் அரசியல் உணர்வையும் தமிழ் மக்கள் விட்டு விடவில்லை. (இதைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுக் கண்ணை இன்று சிலர் இழந்து விட்டனர் போலும்). இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசமாகத் திரண்டு நிற்கும் மக்களுக்கு கிடைத்தது என்ன? தமிழ்த்தலைமைகள் பெற்றுக் கொடுத்தது என்ன? இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரையாளரும் தனக்குள் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்.

இப்படித் திரண்டு நிற்கும் தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார விடுதலையையும் மேம்பாட்டையும் (தேவைகளையும்) நிறைவேற்ற முடியாத போதுதான், மக்கள் இந்த அரசியலை விட்டு (தமிழ்த்தேசியத் தரப்பை விட்டு) விலகிச் செல்ல முற்படுகிறார்கள். இது ஆபத்தான ஒரு நிலையே.

ஆனால், இதைப் புரிந்து கொண்டு, நம்மைச் சுய விமர்சனத்துக்கு உட்படுத்தி, மாற்றங்களை நிகழ்த்தாத வரையில் மக்கள் மாறிச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியாது.

தங்களை வைத்து அல்லது தங்களை ஏமாற்றி இந்தத்  தலைமைகளும் அவர்களுக்குத் தொண்டு செய்வோரும் அரசியற் பிழைப்பு நடத்துகின்றனர் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அது இவர்களின் மீது சலிப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கோபத்தை உண்டாக்குகிறது.

இதைச் சமாளித்துக் கொள்வதற்கு இன்னொரு பெரிய புரட்டைச் செய்ய முற்படுகின்றன தமிழ்த் தலைமைகள். நடக்கவே நடக்காத இன்னொரு பெரிய புலுடாவை விடுகின்றன.

ஆம், தமிழ் தலைமைகளும் அவர்களுக்குக் காவடி தூக்குகின்ற தமிழ் ஊடகர்களும் இப்படியான தோல்விச் சூழலில்தான் மக்களைத் திசை திருப்பும் புதிய தந்திரோபாயங்களைச் செய்கிறார்கள்.

இதற்கு ஒரு எளிய உதாரணத்தையும் வரலாற்று உண்மையையும் கூறலாம்.

1970 களில் தமிழரசுக் கட்சியின் “வாய்ச் சவாடல்” அரசியலுக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது. அதுவரையிலும் வீராவேசப் பேச்சுகளையும் பெரும் பிரகடனங்களையும் (பார்க்க – அன்றைய சுதந்திரன் பத்திரிகையை) செய்து வந்த தமிழரசுக் கட்சியினால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது (இப்போது தமிழ்த் தேசிய அரசியற் தரப்புகளின் மீது ஏற்பட்டிருப்பதைப் போன்ற நிலை அது).

தமிழரசுக் கட்சிக்கான மதிப்பு என்பது அது 1950, 60 களில் நடத்திய மக்கள் போராட்டங்களினாலும் மலையக மக்களுக்கான உரிமையைப் பற்றிப் பேசியதாலும் உருவானதுதான். பின்னாளில் அது அவ்வாறெல்லாம் செயற்படாமல் பிரமுகர் அரசியலுக்குள் தேங்கிவிட்டது).

இதனால் அதன் மீது மக்களுக்குச் சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியை விட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடும் கொம்யூனிஸ்ற் பாட்டியோடும் ஐக்கிய தேசியக் கட்சியோடும் மக்கள் சாயத் தொடங்கினர்.

அது அரசியல் ரீதியான தீர்வை எட்டமுடியாதென்று தெரிந்தாலும் தமது ஏனைய பிரச்சினைகள், தேவைகளாவது தீர்க்கப்படும் என்ற நிலையில் உருவாகியது. மக்களுக்கு இது தவிர்க்க முடியாததாக இருந்தது.

இதைத் திசைமாற்றுவதற்கே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. கூடவே தமது அரசியலுக்கு எதிராகச் சிந்திப்போரைத் துரோகிகளாகக் கட்டமைக்கவும் கூட்டணியினர் முற்பட்டனர்.

தமிழ் விடுதலைக் கூட்டணியை அப்பொழுது அதொரு புதிய உள்ளடக்கமாக – மாற்று ஏற்பாடாகத்  தமிழரின் அரசியலில் நோக்கப்பட்டது. அதுவரையிலும் எதிரெதிராக  நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகியது இந்தப் புதிய பார்வையைக் கொடுத்தது.

ஆனால், அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் அதனுடைய வரட்சியை – பிம்ப உடைவை –  மக்கள் இனங்கண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அத்தனை பேச்சுகளும் பொய்த்துப் போயின. அரசியல் உள்ளடக்கமற்ற, செயலற்ற, நாடாளுமன்றக் கதிரைகளையும் பதவிச் சுகங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியற் போக்கின் தோல்வியாக அது அமைந்தது.

இதுதான் 2009 க்குப் பிறகு தமிழ் அரசியல் அரங்கிலும் நிகழத் தொடங்கி, இப்பொழுது உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளது. 2009 க்குப் பிறகான – போருக்குப் பிந்திய காலத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தவறியதன் விளைவே இதுவாகும். 2009 க்குப் பிறகான காலம் முற்றிலும் வேறு. அது தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் மிகமிகக் கடினமானதாகும். நினைத்துப் பார்க்கவே முடியாத பேரவலப் பரப்பு அது. போரின் தோல்வியை முழுதாகவே தலையிற் சுமந்து கொண்டிருந்த காலம் அது. இழப்பின் துயரமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையும், வாழ்வை மீளக் கட்டியெழுப்பப்படுகின்ற பெரும்பாடுகளும் மக்களை அழுத்திக் கொண்டிருந்தன. இதை விட பல்லாயிரக்கணக்கான போராளிகள் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து (தடுப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டு வந்தவர்களுக்கும் அடுத்து என்ன என்ற கேள்வியே முன்னின்றது. அவர்களைக் கண்காணிக்கும் படைத்துறையும் புலனாய்வாளர்களும். மறுபக்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீராத்துக்கமாக நின்றது. மாற்றுத் திறனாளிகள் என்ன  செய்வதென்று தெரியாதிருந்தனர் (இன்னும் அப்படித்தான் உள்ளனர்). போதாக்குறைக்கு ஊர்கள் எல்லாம் இராணுவமயமாகியிருந்தது. இந்தச் சூழலில் அடுத்த கட்ட அரசியல் எத்தகைய வடிவத்தை எடுப்பது, எவ்வாறான முன்னெடுப்பைச் செய்வது என்று தெரியாத தேக்கத்துக்குள்ளாகியிருந்தது. அதைப்பற்றிய ஆய்வுகளோ உரையாடல்களோ எதுவும் செய்யப்படவே இல்லை. இவ்வாறான சூழலைச் சந்தித்த உலக அனுபவங்கள் உள்வாங்கப்படவும் இல்லை. மேலும் மக்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தரப்பின் உருப்படியான எந்த வேலைத்திட்டங்களும் களப்பணிகளும் ஆற்றப்படவே இல்லை.

இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எந்தக் கட்சியாவது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏதாவது திட்டங்களை உருவாக்கியதா? பணிகளைச் செய்ததா? இந்தக் கேள்விகளும் இங்கே பேசப்படும் விடயங்களும் யாரையும் குறை சொல்லுவதற்காகவோ குற்றம்சாட்டி நிராகரிப்பதற்காகவோ சொல்லப்படவில்லை.

இவற்றைக் குறித்து இப்போதாவது சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நேச விமர்சனமாக – ஒரு திறந்த உரையாடலுக்கான முன்வைப்பாக இங்கே சுட்டப்படுகிறது.

எவரையும் நிராகரிப்புச் செய்வதன் மூலம் நம்மை – மக்களையே பலவீனப்படுத்த முடியும். மக்களைப் பலப்படுத்துவதாக இருந்தால் அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். கவனிக்கவும், செயற்பட வேண்டும் என்பதை.

இந்த நிலைமையைக் குறித்துச் சீரியஸாகக் கவனமெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், அந்தச் சுட்டுதல் – கவனப்படுத்தல் – புறக்கணித்து ஒதுக்கப்பட்டது. அவர்கள் வேறு எதிராளர்களாகவே நோக்கப்பட்டனர். இப்போது கூட இவ்வாறான போக்கே தொடர்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்?

பதிலாக அத்தனை சுமைகள், தேவைகள், அவலங்களின் மத்தியிலும் மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தையும் அதிருப்தியையும் கொண்டிருந்தனர். இதை (அரசின் மீதான எதிர்ப்புணர்வை) பயன்படுத்தி, அரசியல் அறுவடையைச் செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (அப்பொழுது அனைத்துத் தமிழ்த் தேசிய லேபிலாளர்களும் ஒன்றாகவே இருந்தனர்). மக்கள் வழங்கிய பேராதரவையோ, மக்களின் அவல நிலையையோ அவர்களுடைய பிரச்சினைகளையோ புரிந்துகொண்டு, மக்களுக்கான அரசியலைச் செய்வதற்கு கூட்டமைப்பும் அதனோடு இசைந்து நின்ற தரப்புகளும் முன்வரவில்லை.

முக்கியமாகக் காலகாலமாகத் தமிழ்த் தலைமைகளின் அரசியல் விருப்புகளுக்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையையும் உயிரையும் உடல் உறுப்புகளையும் கொடுத்த மக்களுக்காக இவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணி செய்யவேயில்லை. அவர்களுடைய பேரிடர் காலமாகிய அந்தக் காலச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு ஒன்று கலந்து நிற்பதற்குப் பதிலாக, அரசு எதையும் செய்ய மறுதலிக்கிறது – தடுக்கிறது என்று சாட்டுப் போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொண்டனர்.

அரசு தடுத்தால், அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். அந்த நெருக்கடியை உடைத்தெறிந்திருக்க வேண்டும். அதுதானே போராட்ட அரசியல் – விடுதலைக்கான அரசியல்!  பதிலாகப் “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபட்டன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந்தவறை இழைத்தனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு  (Declaratory politics)த் தாவிச் சென்றனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல்  (Declaratory politics) தானே வசதி! ஆனால், அதொரு அபாயமான சுருக்குக் கயிறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறினர்.

அந்தச் சுருக்குக் கயிறு இப்பொழுது இவர்களுடைய கழுத்தில் விழுந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த நிலையைத் திசை திருப்பவுமே ‘பொதுவேட்பாளர்’ என்ற “அதிசயக் கிளியை” இப்பொழுது “அலாவுதீனின் அற்புத விளக்காக”க் காட்ட முற்படுகின்றனர்.

இதற்குத்தான் ஐக்கியம், ஒருங்கிணைவு, தேசமாகத் திரள்வோம், சர்வதேசத்துக்கும் தென்னிலங்கைக்கும்  எம்மை நிரூபிப்போம் என்ற “சவாடல்கள்” எல்லாம்.

“இதனுடைய அரசியற் பெறுமானம், அடுத்த கட்ட அரசியல் என்ன என்று கேட்டால், “இதொரு பரீட்சார்த்த முயற்சி. வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம், இதை விட சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து என்ன பயனைக் காண்பீர்கள்? எந்த அடிப்படையில் – எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களிப்பது?…” என்றெல்லாம் வினோதமாகக் கேட்கிறார்கள்.

போராட்ட அரசியலில் தம்மை அர்ப்பணித்து, இழப்புகளைச் சந்தித்து நிற்கும் மக்களை, மேலும் விசப்பரீட்சைக்கு உட்படுத்த முயற்சிக்கும் குரல் மனநிலையை எப்படி அனுமதிக்க முடியும்? இது கடந்த காலத்தில் இவர்கள் இழைத்த தவறையும் விட மோசமானதாகும்.

பழகிய, பழைய அரசியற் சிந்தனையில் இப்படித்தான் இவர்களால் சிந்திக்க தோன்றும். மாற்றுச் சிந்தனையில் கேள்விகள் எழும்.

போருக்கு முந்திய – போர்க்கால அரசியல் மனநிலையைக் கொண்டிருந்தால் இப்படித்தான் கேட்கவும் தோன்றும்.

போருக்குப் பிந்திய – புத்தாக்க அரசியலுக்கான – நிலைமாறு காலகட்ட அரசியற் சிந்தனையில் நாம் புதிய தந்திரோபயங்களைக் குறித்துச் சிந்தித்தால், இந்தக் கேள்விகள் முட்டாள்தனமானவை என்றே விளங்கும்.

அதற்குச் செல்லாதவரையில் பழைய குப்பைக்குள் பொன்முட்டையைத் தேடுவதாகத்தானிருக்கும்.

“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார், ஏமாற்றுவார்…? என்ற பாடல்தான் இந்த வரிகளை எழுதும்போது நினைவில் வருகிறது.

ஏனென்றால், ஒரு பக்கம் தீவிரவாதப்படுத்தப்பட்டுள்ள இனவாத அரசின் தீராத ஒடுக்குமுறை. மறுபக்கம் நம்முடைய தலைமைகளே நம்மைப் பலியிடும் அவலம். இரண்டு அபாய நெருக்குவாரங்களின் மத்தியில்தான் தமிழ் மக்களுடைய விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

சிந்திப்போம்.

கருணாகரன்