Photo, THE TELEGRAPH
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர ஹோட்டல்கள் ஆகியவை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இலக்குகளில் உள்ளடங்குகின்றன. இதன் போது 40 வெளிநாட்டவர்கள் மற்றும் 45 குழந்தைகள் உட்பட சுமார் 315 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, இது இலங்கையில் போருக்குப் பிந்தையதான மிகப் பாரிய அளவிலான படுகொலைச் சம்பவமாகும்.
சேதமடைந்த தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் விரைவாக புனரமைக்கப்பட்டன. ஆனால், உயிர் பிழைத்த மற்றும் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இன்னும் மருத்துவ ரீதியான, உணர்வு ரீதியான மற்றும் நிதி ரீதியான உதவிகள் தேவைப்படுகிறது. அவர்களின் கண்ணீர், சோகம், வலி என்பன அவர்களின் வாழ்க்கை மீளக் கட்டமைதலை விட்டும் வெகு தொலைவில் இருப்பதை உணர்த்தி நிற்கின்றன.
இத்தாக்குதல்கள் இஸ்லாமிய போராளிகளால் மேற்கொள்ளப்பட்டன. தாக்குதலுக்குப் பின் ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம்களது வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு நீதியற்ற முறையில் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக ஏராளமான முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டனர். தாக்குதல்களுக்குக் காரணமான முஸ்லிம்கள் பற்றிய கடுமையான விமர்சனங்களையும், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டின் வெளிப்பாட்டையும் கொண்ட கவிதைகளையும் எழுதிய ஆசிரியரும் இளம் முஸ்லிம் கவிஞருமான அஹ்னப் ஜஸீம் இவ்வாறான தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்த நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்தவர்களில் ஒருவராவார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் பகிரங்கமாக கண்டித்தவரும் முஸ்லிம் வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இவ்வாறான மற்றுமொருவராவார். தங்கள் நாடுகளில் நிலவும் அடக்குமுறைகள் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தற்காலிக தஞ்சம் கோரி இங்கு வந்தவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் தாக்குதல்களுக்குப் பின்னான சில நாட்களில் முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டு, மீண்டும் இடம்பெயர்க்கப்பட்டு வீடற்றவர்களாக்கப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நீதி வழங்கப்படுவதில் இவர்களும், மறக்கப்பட்டவர்களும் மற்றும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டவர்களும் – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் பாதிப்புக்குள்ளானவர்களும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
ஐந்து ஆண்டுகளாக புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை உட்பட்ட இலங்கை குற்றவியல் சட்டக் கட்டமைப்புக்கு தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை கைது செய்ய முடியவில்லை. பாதுகாப்புத் தரப்புக்கு சாட்சியமளிக்காமலேயே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோர், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் தாக்கல் செய்த ஏனைய குற்றவியல் வழக்குகள் இன்னும் நடந்து வருகின்றன.
அக்கறையுள்ள சில பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் தாக்குதல்களைத் தடுக்காதமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படை உரிமைகள் வழக்குகளில் அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்திரவதைக்கு இலக்கானவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகளில் விதிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகச் சொற்பம் என்பதுடன் குற்றத்துக்கு பொறுப்பான யாரையும் சிறைப்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 15 மாதங்கள் கடந்தும் உச்ச நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத் தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. ஜனாதிபதியின் விலக்குரிமையைக் காரணம் காட்டி அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவை வழக்கிலிருந்து அகற்றுமாறு தீர்ப்புக்கு முன்பதாகவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அலட்சியமாக செயற்பட்டமைக்காக அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் சிபாரிசு செய்திருந்தது. ஆயினும், அது இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. 2022 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடு மற்றும் 2022 மே மாதத்தில் அவரைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் என்பவற்றுக்கும் எந்த எதிர்வினையும் ஆற்றப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதாகக் குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக 2022 செப்டெம்பர் மாதம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இதுவரை நிலுவையிலேயே உள்ளது. அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூலம் தாக்குதல்களைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்ததாகக் கண்டறியப்பட்ட போதிலும், அது குறித்து பொறுப்புக் கூறுவதற்குப் பதிலாக அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் விசாரணைகளை மேற்பார்வையிட்ட முன்னாள் சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ‘பெரும் சதி’ நடந்திருப்பதாக 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். மேலும் மார்ச் 2022 இல், ஜெனீவாவில் நடத்தப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் போது, இந்தப் படுகொலை மாபெரும் அரசியல் சதியொன்றின் ஒரு பகுதியாகும் என விசாரணைகள் குறிப்பிடுகின்றன என்று கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தெரிவித்தார். சர்வதேச உதவியுடனான சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான விசாரணை ஒன்றிற்கு மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.தாக்குதல்களில் தொடர்புபட்ட ISIS ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக அமெரிக்காவில் (USA) பதிவு செய்யப்பட்ட வழக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனக்குத் தெரிந்தவரை இது இலங்கையில் போர்க் காலகட்ட த்தில் மற்றும் அதற்குப் பின்னரான காலகட்டத்தில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்ட மிகப்பெரிய படுகொலை சம்பவமாக இருந்த போதும் வேறு எந்த ஒரு நாடும் இது தொடர்பான குற்றவியல் வழக்குகளைத் தொடரவில்லை.
உண்மையையும் நீதியையும் தேடுபவர்கள் பழிவாங்கல்களை எதிர் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு நீர்கொழும்பில் நீதி கோரி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டத்தை நிறுத்த முயன்ற பொலிஸார் அதற்கு நீதிமன்றத் தடையுத்தரவைக் கோரிய போதும் தடையுத்தரவை வழங்க பதில் நீதவான் மறுத்துவிட்டார். கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று பொப்பிட்டிய புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் வரை (தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தேவாலயம்) உண்மை மற்றும் நீதி கோரும் வாகன அணிவகுப்பில் பதாகைகள், கறுப்புக் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் என்பவற்றைப் பயன்படுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்திருந்தனர். சத்தியம் மற்றும் நீதிக்காக குரல் கொடுக்கும் மூன்று முக்கிய கத்தோலிக்க பாதிரியார்கள் மீது கொழும்பு கத்தோலிக்க பேராயருக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என ஊடக அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியது.
அரசியல் சதி என்று பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்த, வெளிப்படையாக குரல் கொடுக்கக்கூடிய செயற்பாட்டாளரான ஒரு இளைஞரான ஷெஹான் மாலக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், யுத்தத்தின்போது, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டங்களில் அமைந்துள்ள குருநகர், அல்லைப்பிட்டி மற்றும் பேசாலை போன்ற இடங்களில் அமைந்துள்ள பல தேவாலயங்கள் கடற்படை மற்றும் ஆயுதப்படைகளால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் படுகாயமடைந்தனர். இவற்றுக்கும், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போதான சட்டத்திற்கு புறம்பான பல்லாயிரக்கணக்கான மரணதண்டனைகள் மற்றும் பலவந்தமான காணாமலாக்கப்படுதல்கள் உட்பட்ட பல கடுமையான குற்றங்களுக்கும் குற்றவியல் சட்ட ரீதியான பொறுப்புக்கூறல்களோ போதுமான இழப்பீடுகளோ இதுவரை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் கத்தோலிக்க தமிழ்ப் பாதிரியார்களான 1985இல் இராணுவத்தால் கொல்லப்பட்ட Fr.மேரி பாஸ்டியன், 2006ஆம் ஆண்டு கடற்படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும் சோதனைச் சாவடியில் கடைசியாகக் கண்டதன் பின்னர் காணாமல் போன Fr.ஜிம் பிரவுன் மற்றும் 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போன பலரில் உள்ளடங்கி இருந்த Fr. பிரான்சிஸ் ஜோசப் ஆகியோர் அடங்குவர்.
யுத்தத்தின் போது எல்.ரீ ரீ ஈ யினர் பள்ளிவாசல்கள் மற்றும் பௌத்த விகாரைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான மரணங்களுக்கு வழிவகுத்தனர். இலங்கையில் போருக்குப் பிறகு சுவிசேஷக் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள போதும் அவற்றுக்கான பொறுப்புக் கூறல்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறுக்கு முன்னதான 11 ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலய சேவைகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதுடன் 9 மாவட்டங்களில் குறைந்தது 13 தேவாலயங்கள் பாதிப்புக்குள்ளாயின. 2019ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக சுமார் 35 சம்பவங்கள் மற்றும் 70 அத்துமீறல்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதில் இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று முழுமையான நீதியைப் பெறுவது, மற்றது, நீதிக்கான போராட்டங்களுக்கான ஒரு ஐக்கிய முன்னணியை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உருவாக்குவது.
முழுமையான நீதி என்பதில் உண்மையைத் தேடுதல் மற்றும் குற்றவியல் ரீதியான, விசேடமாக சூத்திரதாரிகளின், பொறுப்புக்கூறல்கள் என்பவை உள்ளடங்கி இருத்தல் வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இவை இரண்டுமே மிக முக்கியமாகும். நீதியானது இழப்பீடுகள் உட்பட உள மற்றும் உடல் ஆரோக்கியம், கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றிற்கான உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நீண்டகால மற்றும் போதுமான மீள் கட்டமைத்தல்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் சர்வதேச சமூகமும் இரு முனைகளிலுமே தோல்வியையே அடைந்துள்ளன. அனேகமான உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழப்பீடுகள் குறித்து அவநம்பிக்கையைக் கொண்டிருந்தபோதிலும். கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர்களின் மற்றும் சிவில் சமூகத்தின் குரலெழுப்பல்களானவை உண்மை, குற்றவியல் ரீதியான பொறுப்புக்கூறல்கள் மற்றும் இழப்பீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துகின்றன.
கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட இலங்கையர்களுக்கு உள்ள மற்றுமொரு சவாலானது இன, மத, புவியியல் மற்றும் இன்னபிற பிரிவினைகளுக்கு அப்பால், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகிய அனைவருக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு கைகோர்ப்பதாகும்.
தமிழர்கள் தம் நீதிக்கான குரல் கொடுத்தல்களில் பெரும்பாலும் போர்க்கால அட்டூழியங்களில் கவனம் செலுத்தினாலும் சிங்களவர்கள் பெரும்பாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பொருளாதார குற்றச் செயல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றில் கவனம் செலுத்துகின்றனர். 2012ஆம் ஆண்டில் அன்றைய மன்னார் கத்தோலிக்க ஆயர், தமிழ் பேசும் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர், பல்லாயிரக்கணக்கான படுகொலைகள், காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் பிற குற்றங்களுக்கான நீதியைப் பெறுவதில் சர்வதேச பங்களிப்பைக் கோரியபோது, கர்தினால் ரஞ்சித் அவர்கள் “இவ்வாறான முயற்சிகள் இலங்கை மக்களின் அறிவுத்திறனை அவமதிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டு சர்வதேச தலையீட்டை எதிர்த்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான நீதியைப் பெற சர்வதேச பங்களிப்பைக் கோருவதில் கர்தினால் முன்னணியில் நிற்கிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 5 வருடங்கள், யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகக் காணப்படும் பொருளாதார நெருக்கடியானது பாரிய மக்கள் போராட்டங்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்து ஊழல் மிகுந்த, சர்வாதிகார மற்றும் இனவாத ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை இலங்கையில் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியன இந்த வருடமும் அடுத்த வருடமும் நடாத்தப்படவுள்ளதுடன், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களும் விரைவில் நடாத்தப்படலாம். சாட்சியங்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தல் பற்றிய இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்த செயல் திட்டத்தை புதுப்பித்தல் சம்பந்தமாக இந்த வருட இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முக்கிய அமர்வின்போது பரிசீலிக்கப்படவுள்ளது. அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து முழுமையான நீதிக்கான வலுவான மற்றும் ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.
ருக்கி பெர்னாண்டோ