“எங்கட பள்ளிமுனை (மன்னார்) கிராமத்தில மட்டும் 13 பிள்ளைகள பிடிச்சுக் கொண்டுபோய் வச்சிருக்கீங்க. விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள், கடைக்கு போன பிள்ளைகள், சொந்தக்காரர் வீட்ட போன பிள்ளைகள், மீன் வேண்டப் போன பிள்ளைகள் என்டு 13 பேர பிடிச்சுக் கொண்டு போயிருக்கீங்க. அப்படி பிடிச்சுக்கொண்டு போன பிள்ளைகள என்ன செய்திருக்கீங்க? எங்க வச்சிருக்கீங்க? உயிரோட பிடிச்சுக் கொண்டு போன பிள்ளைகள உயிரோட தரச்சொல்லிதான் கேட்கிறம். அவங்கள என்ன செய்தனீங்கள்?
சரி, பிள்ளைகள பிடிச்சுக் கொண்டு போனம், பிடிச்சுக் கொண்டு போய் அடிச்சம், நடக்கக்கூடாத ஒன்டு நடந்திட்டுது என்டா, அவங்கள எங்க தாட்டு வச்சிருக்கீங்க என்டாவது காட்டுங்களேன். இதுக்குப் பிறகாவது, உண்மையிலேயே எங்கட பிள்ளைகள் இல்ல, எங்கட பிள்ளைகளுக்கு என்னமோ நடந்துபோயிருச்சி என்டு போட்டோ ஒன்டயாவது கொலுவி செய்யவேண்டிய காரியங்கள செய்வம்தானே. 16 வருசமா மகனுக்கு என்ன நடத்தது என்டு தெரியாம ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைச்சுக்கொண்டிருக்கன்” என்கிறார் மனுவல் உதயசந்திரா.
2008 நவம்பர் மாதம் 11ஆம் திகதி தனது மகன் அன்ரன் செனிஸ்டர் பீறாடோவை (வயது 24) கடற்படையினர் கடத்திச் சென்றதை பலர் கண்டுள்ளனர் என்று தாய் உதயசந்திரா கூறுகிறார். “மகனுடைய பைக்கை அவரே ஓடிக்கொண்டு போயிருக்கார், வெறும் மேலோடு. நேவிக்காரன்தான் கூட்டிக்கொண்டு போயிருக்கான். அவன் கூட்டிக் கொண்டு போன ரோட்ல மூன்டு பொயின்ட் (Navy Check Point) இருக்கு. அத தாண்டாம எப்படியும் போகமுடியாது. அப்படியென்டா மகன எங்க கூட்டிட்டுப் போயிருப்பாங்க? தெளிவா தெரிந்தும் ஒன்டும் செய்ய முடியேல்ல என்கிறார் உதயசந்திரா.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடுவோர் சங்கத்தின் தலைவியான மனுவல் உதயசந்திரா, வடக்கு கிழக்கில் 7 வருடங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டம், நீதிகோரிய போராட்டத்தை மழுங்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மாற்றம் தளத்திற்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். முழுமையான நேர்க்காணலை கீழே பார்க்கலாம்.