உலகில் அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் முறையான ஆவணங்களூடான பதிவுகள் எதுவும் இல்லை. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மோதல்களின் போதும், 30 ஆண்டுகால போரின்போதும், அதன் பின்னரான காலப்பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டார்கள். இதுவரை காலமும் அரசாங்கத்தினால் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

2009ஆம் ஆண்டு போர் நிறைவுற்றதன் பின்னர் தங்களுடைய அன்புக்குரியவர்களை தேடியலைந்த 200இற்கும் மேற்பட்ட உறவுகள் நீதி கிடைக்கப்பெறாத நிலையில் – அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே உயிரிழந்துள்ளார்கள். அவர்களுடைய நீதிக்கான போராட்டமும் அத்தோடு முற்றுபெறுகிறது. அதேபோல, நூற்றுக்கணக்கான போராட்டங்களில் பங்கேற்று, காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கிடைக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் மீது அழுத்தம் கொடுத்து, தற்போது போராட்டத்தை தொடர முடியாத நிலையில் பொருளாதார நெடிக்கடிக்கு, நோய், குடும்ப சூழ்நிலை, புலனாய்வாளர்களின் கெடுபிடி காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.

எனவே, அவர்களையும் அவர்களின் நீதிக்கான போராட்டத்தையும் தொடர்ந்து மேற்கொள்ளவும் காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கவும் மெய்நிகர் நினைவகம் (Virtual Memorial) உருவாக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும், எதிர்காலத்தில் கொண்டுவரப்படவிருக்கும் சட்டங்களால் மக்கள் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும் நினைவுகூருவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை மோசமடைந்தால் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தொடர முடியாத நிலை கூட உருவாகலாம். அவ்வாறான நிலையில், இந்த மெய்நிகர் தளம் அவர்களின் குரலுக்கும் அவர்களை நினைவில் கொள்வதற்கும், போராட்டத்தை தொடரவும் வாய்ப்பை வழங்குவதோடு உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்வதற்கான அவர்களது போராட்டத்திற்கு உறுதுணையாகவும் இருக்கிறது.

Virtual Memorial இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழ் உள்ள படத்தை கிளிக் செய்வதன் ஊடாகவும் பார்க்கலாம்.

Vikalpa தளத்தில் வௌியான Virtual Memorial சிங்கள மொழிபெயர்ப்பு

Groundviews தளத்தில் வௌியான Virtual Memorial ஆங்கில மொழிபெயர்ப்பு