Photo, SCROLL

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அண்மிக்கும் நிலையில், அதில் வெற்றிபெறுபவர் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி மாத்திரமல்ல, தேர்தலே நடத்தப்படுமா என்பது பற்றியும் ஊகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படத்தான் வேண்டுமா என்று ஒரு விவாதமும் கூட மூண்டிருக்கிறது.

நாட்டை அபிவிருத்திப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று உணரும் பலர் இருக்கிறார்கள். தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் டொனால்ட் லூ அத்தகைய ஒருவராக இருக்கலாம். இலங்கையின் பொருளாதார மீட்சி உலகின் இந்தப் பகுதியில் மிகப்பெரிய மீட்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மறுபுறத்தில், ஜனாதிபதி ஆட்சிமுறையை சாத்தியமானளவு விரைவாக ஒழித்துவிடுவதற்கு ஆதரவாக வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டியதில்லை என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜனாதிபதி பதவி மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதற்கு தெரிவுசெய்யப்படுபவர்களினால் அந்த அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடியவையாக இருப்பதாகவும் பொதுவில் நம்பப்படுவதால் அதை ஒழித்துவிடவேண்டும் என்று வலுவாக முறையில் வாதிடப்படுகிறது. இந்த வாதம் கடந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளராக களத்தில் நின்றவர்களில் சிலரால் தேர்தல் பிரசார தொனிப்பொருளாகவும் முக்கியத்துவப்படுத்தப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக உறுதியளித்தவர்கள் தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு அவ்வாறு செய்யத் தவறியதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் தங்களால் இயன்றவரை நீண்டகாலத்துக்கு  அந்தப் பதவியில் நீடிப்பதற்கு விடாமுயற்சியையும் மேற்கொண்டனர். ஜனாதிபதி ஆட்சிமுறை இன்று வரை நீடிப்பதற்கு அதுவே காரணம் எனலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வருபவர்கள் அந்தப் பதவியை ஒழிக்க விரும்புவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்ற நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படவேண்டும் என்ற ஒரு அபிப்பிராயமும் முன்வைக்கப்படுகிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையே நாட்டை பொருளாதார அனர்த்தத்துக்கு இட்டுச்சென்றது என்ற உண்மையும் இந்த அவசரத்துக்கு காரணம். ஆனால், அதை ஒழிப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்பதே கேள்வி.

அரசியலமைப்பு மத்திய வகிபாகத்தை ஜனாதிபதி பதவிக்கு வழங்குவதால் தற்போதைய ஆட்சிமுறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை என்று அழைக்கப்படுகிறது. இந்த மத்திய பதவியை இல்லாமல் செய்வது தற்போதைய ஆட்சிமுறைக் கட்டமைப்புக்கு மரண ஆபத்தை தோற்றுவிப்பதற்கு சமமானதாகும். ஜனாதிபதி பதவி மீது செய்யக்கூடிய சத்திரசிகிச்சையின் விளைவாக தோன்றக்கூடிய ஓட்டையை கைதேர்ந்த முறையிலான அரசியலமைப்பு செயன்முறையின் மூலமாக நிரப்பிவிடமுடியும் என்று வாதிடப்படலாம்.

ஆனால், அரசாங்கத்தையும் எதிரணியையும் உள்ளடக்கிய அரசியல் கருத்தொருமிப்பு இல்லாமல் இந்த சீர்திருத்தங்களை விரைவாகச் செயயக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. நாடு தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பொறுத்தவரை அத்தகைய கருத்தொருமிப்பை காணமுடியவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதானால், அதைப் பதிலீடு செய்யக்கூடிய புதிய ஆட்சிமுறை பற்றி மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்தாலோசனை அவசியம். அந்த ஆட்சிமுறை இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் நிறைவுசெய்கின்ற ஒன்றாகவும் இருக்கவேண்டும். தற்போதைய தருணத்தில் அத்தகைய ஒரு கருத்தொருமிப்பு இல்லை.

மக்கள் செல்வாக்கு இல்லாத அரசாங்கம்

புதிய அரசியலமைப்பு குறித்தும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்தும் பல சந்தர்ப்பங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலத்தைய அரசியலமைப்பு வரைவுத் திட்டங்களினால்  தற்போது மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசனை நடத்தவேண்டிய தேவையைப் பதிலீடு செய்யமுடியாது. ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி மற்றும் பொருளாதார வங்குரோத்து அனுபவங்களுக்கு பிறகு சூழ்நிலைகள் தீர்க்கமான முறையில் மாறிவிட்டன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன, மத சிறுபான்மைச் சமூகங்களை ஆட்சிமுறைக்குள் சேர்த்துக்கொள்வது தொடர்பிலும் கருத்தொருமிப்பு இல்லாத பட்சத்தில் மாற்றங்கள் மந்த கதியிலானவையாகவே இருக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும். இதை மாகாண சபைத் தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு  2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட செயன்முறை இன்னமும் கூட பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதில் இருந்து புரிந்துகொள்ள முடியும். ஐந்து வருடங்களாக மகாண சபைகளுக்குத் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கிறது.

அரசியலமைப்பின் ஒரு பகுதியாக 36 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட பின்னரும் மாகாண சபைகள் செயற்படாமலேயே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. மாகாண சபைகளின் பொலிஸ் அதிகாரங்கைளை இல்லாமல் செய்வதற்கு அரசியலமைப்புக்குத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான யோசனையும் முன்வைக்கப்படுகிறது. சகலரும் தேர்தல் மீது கவனத்தைத் திருப்பியிருக்கும் நிலையில் அரசியலமைப்பு மாற்றத்தை துரிதப்படுத்துவது என்பது ஒரு உகந்த தெரிவாகத் தோன்றவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் எதிரணி வேட்பாளர்கள் கணிசமான இடைவெளி வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் திரும்பத் திரும்ப காட்டுகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் யதார்த்த நிலைக்கு நெருக்கமாக இருக்குமானால், அதிகப் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்  என்றே ஊகிக்கமுடியும். ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் அதிகாரத்தில் காலூன்றியிருக்கும் அரசாங்கத்தை வேறு எதையும் விட தேர்தல் ஒன்றின் மூலமாகவே பதவியில் இருந்து அகற்றமுடியும் என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கூட்டத்தின் ஆவேசத்துக்கு பயந்து அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் பொதுவெளியில் வருவதற்கு தயங்கும் அளவுக்கு அரசாங்கம் பலவீனமாக இருந்தது. திருமண வைபவங்களில் கலந்துகொண்ட அரசாங்க உறுப்பினர்களை நோக்கி மக்கள் கூச்சல் போட்டு கேலி செய்த பல சம்பவங்கள் இடம்பெற்றன. மங்களகரமான வைபவங்கள் என்றும் பார்க்காமல் மக்கள் அரசியல்வாதிகளை நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்ததற்காகக் கண்டனம் செய்தனர்.

தற்போது அரசியல்வாதிகள் பிரச்சினை ஏதும் வந்தால் பாதுகாப்புத் தரப்பினர் அதைக் கையாளுவார்கள் என்ற நம்பிக்கையில் பயனமின்றி பொது வைபவங்களில் பங்கேற்கிறார்கள்.

அதிகாரத்தில் இருப்பதிலேயே குறியாக இருக்கும் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அதிகாரத்தை இழக்கும் சாத்தியம் ஒருபோதும் மகிழ்ச்சி தருவதாக இருக்காது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் கூட இதுவே நிலைவரமாக இருக்கிறது.

2020 ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்கமறுத்து தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டினார். வளர்முக நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் பதவியில் இருந்து இறங்கினால் பழிவாங்கப்படக்கூடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.

அரசாங்கத்தில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, தேர்தல் தோல்விக்கு பின்னர் தாங்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கும் முன்பின் தெரியாத சூழ்நிலை எப்போது அவர்களுக்கு  அச்சம் தருவதாகும்.  அதுவும் புதிய அரசாங்கத்துக்கு வருகிறவர்கள் மிகவும் வேறுபட்ட அரசியல் கோட்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தால் தோல்வி கண்டவர்களின் பயம் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

கையாளமுடியாத பிரச்சினை

தற்போதைய அரசாங்கத்தின் பெரும்பகுதி நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கில் திரண்டுவந்து மக்கள் பங்கேற்ற போராட்ட இயக்கத்தின் முன்னால் மண்டியிட்ட அரசாங்கத்தின்  ஒரு தொடர்ச்சியே. அந்த மகிழ்ச்சியானதும் அமைதியானதுமான போராட்ட நாட்களில் இளையவர்களும் முதியவர்களுமாக நடையாகவும் வாகனங்களிலும் வந்து அணிதிரண்ட மக்கள் நெருங்கிவிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சியொன்றின் அங்கமாக தங்களின் செயற்பாடுகளை நினைத்தனர்.

பல்வேறு போராட்டக்களங்களுக்கும் வந்து அர்ப்பணிப்புச் சிந்தையுடன் பங்கேற்க மக்களைத் தூண்டிய ‘முறைமை மாற்றம்’ ஒன்றுக்கான இலட்சிய நோக்கு அவர்கள் மனதில் தொடர்ந்து இருக்கிறது. வரவிருக்கும் தேர்தல்களில் பிரதானமாக பயனடையப் போகிறவர்கள் ஊழலை ஒழித்து வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு செலுத்தவேண்டிய விலை நேர்மையான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்யக்கூடிய முறைமை மாற்றத்துக்கான நம்பிக்கையை சிறந்த முறையில் வெளிக் காட்டக்கூடியவர்களே.

அரசாங்க மாற்றத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டியிருக்கும் அக்டோபர் மாதத்தில் வரும். அரசாங்கத்தில் உள்ளவர்கள் அந்தத் தேர்தல் இடம்பெறாதிருப்பதை அல்லது சாத்தியமானளவு நீண்டகாலத்துக்கு ஒத்திவைக்கப்படுவதை விரும்புவர்.

2022 மார்ச்சில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்தது. அந்த தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தேவையான பணத்தை வழங்க மறுத்ததன் மூலம் அரசாங்கத்தினால் அவ்வாறு செய்யக்கூடியதாக இருந்தது.

அந்தத் தேர்தல்களை நடத்தக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகுந்த உறுதிப்பாட்டுடன் இருந்தது. தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணத்தைக் கிடைக்கச்செய்யுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அரசாங்கம் மதிக்கவில்லை. அது ஜனநாயகக் கோட்பாடுகளை மலினப்படுத்தும் அடாவடித்தனமான நடவடிக்கையாகும். அதே காரணத்தை அல்லது வேறு காரணங்களைக் காட்டி ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படலாம் என்ற கவலையும் உண்டு.

ஆனால், அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பிரிவு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் அதற்குத் தேவையான நிதி 2025 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

தேர்தல்களை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் தேவைப்படும்போது  அது குறித்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படப்போவதில்லை என்றும் அண்மையில்  தன்னைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். “ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தேசம் எதுவும் எனக்கு கிடையாது  என்பதை பல தடவைகள் நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். அதற்குத் தேவையான பணம் இருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது  பற்றிய கதைகளை பிரதான எதிர்க்கட்சியே கட்டிவிடுகிறது” என்று அவர் கூறினார்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அவசர அவசரமாக ஒழித்துவிடமுடியாது என்பது எதிர்க்கட்சியை விடவும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதைச் செய்வதற்கு ஒழுங்கமைவான நடைமுறை ஒன்று இருக்கிறது. அவர்களின் பொறியில் நாம் விழுந்துவிடக்கூடாது. இதில் வீணாக நேரத்தை விரயம் செய்யாதீர்கள். நாம் முன்னெடுக்கின்ற பொருளாதார மீட்சி நடவடிக்கைகளைப் பற்றி பேசுங்கள்”  என்றும்  ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அதேபோன்றே, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதன் மூலமாக ஜனாதிபதி நாட்டின் மிகவும் கையாள முடியாத பிரச்சினையாக இருந்துவரும்  இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதில் நாட்டத்தைக் காண்பிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலமாக அடுத்த தேர்தலில் தேர்தலில் வெற்றிபெறுபவர் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதைச் எளிதாக்க முடியும். இதில் அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ தான் இணங்கிக்கொண்டதையும் பொறுப்பேற்றுக் கொண்ட பணியையும் செய்ததாக ஒரு திருப்தியை உணரமுடியும்.

கலாநிதி ஜெகான் பெரேரா