Photo, REUTERS

மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது.

தற்போது புதுவருடம் பிறந்த நிலையில் வரி அதிகரிப்புகளின் விளைவாக பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மக்களினால் தாக்குப் பிடிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்த வர்ணனை எவ்வளவு கச்சிதமானது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

பெறுமதிசேர் வரியை (வற்) அரசாங்கம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்ததுடன் ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த பெருவாரியான பொருட்களும் அந்த வரிவிதிப்பு வீச்சுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து (ஏற்கெனவே, வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு பல்வேறு சிக்கன உபாயங்களை கடைப்பிடித்துவந்த) பெரும்பாலான மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

செலவினங்களைக் குறைத்து அரச வருவாயை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு நேரக்கூடிய இடர்பாடுகளைப் பற்றி சிந்திக்காமல்  நடைமுறைப்படுத்துவதே இதற்குக் காரணமாகும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கு அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. பிச்சைக்காரர்களுக்குத் தெரிவு இல்லை.

இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருந்தாலும் கூட முன்னரைப் போன்று அரசியல் கட்சிகளிடம் இருந்து இனிப்பான பொருளாதார நிவாரண உறுதிமொழிகளைப் பெரிதாக எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால், முக்கியமான எதிரணி கட்சிகளும் கூட ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைத்துச் செயற்படப் போவதாகவே கூறுகின்றன.

நிபந்தனைகளை குறித்து நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அந்த கட்சிகள் கூறினாலும் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வி இருக்கிறது.

எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய எந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடனான உதவித்திட்டத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தமுடியும். ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் பாதையையே தொடர்ந்து பின்பற்றவேண்டியிருக்கும் என்று சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார்.

“தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாதையில் இருந்து விலகினால் சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டம் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி தொடங்கியது. கடனுதவியின் முதலாவது தவணைக் கொடுப்பனவு வழங்கப்பட்ட பிறகு அடுத்த தவணைக் கொடுப்பனவுக்கு முன்னதாக எமது கடப்பாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது அடுத்த நான்கு வருடங்களுக்கு எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், காலப் பொருத்தமான முறையில் கொள்கைகளில் மாற்றத்தைச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும்.

“பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இதே திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். அந்த விளக்கப்பாட்டின்  அடிப்படையில்தான் வெளிநாடுகளின் அரசாங்கங்களும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் நிவாரணத்துக்கு இணங்கியிருக்கின்றன. இதே கடன் மறுசீரமைப்பு பாதையில் அடுத்த பத்து வருடங்களுக்கு பயணம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது.

“இதில் மாற்றத்தைச் செய்தால் அவர்களும் கடன் நிவாரணம் தொடர்பான தீர்மானத்தை மாற்றிவிடலாம். அதனால் தற்போதைய பாதையில் இருந்து விலகினால் தங்களால் தொடர்ந்து ஆதரவை வழங்கமுடியாது என்று அவர்களால் கூறமுடியும். அதற்கு பிறகு வருடாந்தம் நாம் 600 கோடி அமெரிக்க டொலர்கள் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

இலங்கை அகப்பட்டிருக்கும் சிக்கலின் பாரதூரத்தன்மையை கலாநிதி வீரசிங்கவின் விளக்கம் தெளிவாக உணர்த்துகிறது.

புதிய வருடத்தில் கடுமையான இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறியிருந்தார். பொருளாதார நிலைவரம் தொடர்பில் மக்களுக்கு பொய் கூறவிரும்பவில்லை என்றும் மக்களால் விரும்பப்படாத தீர்மானங்களை எடுப்பதற்கு தயங்கப்போதில்லை என்றும் கூறுவதன் மூலமாக அவர் தன்னை ஒளிவுமறைவற்ற தலைவராக காட்டிக்கொள்ளலாம்.

ஆனால், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவான சுமையை சாதாரண மக்களினால் எவ்வளவு காலத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியும்? அந்த சுமை சமுதாயத்தின் சகல பிரிவுகள் மீதும் ஒப்புரவான ஒரு முறையில் பகிரப்படுவதாகவும் இல்லை. மறைமுகமான வரிகளின் விளைவான சுமை சாதாரண மக்களையே கடுமையாக அழுத்துகிறது.

நிலவர அறிக்கை

இத்தகைய பின்புலத்தில், குடிசன மதிப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையை நோக்குவது அவசியமானதாகும். நாட்டின் தற்போதைய நிலைவரம் மாத்திரமல்ல எதிர்கால நிலைவரமும் கூட இருள் கவிழ்ந்ததாகவே இருக்கப்போகிறது என்பதை அறிக்கை தெளிவாகப் புரிந்து கொள்ளவைக்கிறது.

கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 4.70 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டாவது காலாண்டில் 5.20 சதவீதமாக அதிகரித்தது. இன்று ஒரு குடும்பத்தின் அடிப்படை மாதாந்த வேதனம் 40 ஆயிரம் ரூபாவுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. அது வெறுமனே உணவுத் தேவைக்கு மாத்திரமே போதுமானது. பிள்ளைகளின் கல்வி, உடை, மருத்துவ பராமரிப்பு, பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கு செலவினங்களுக்கு புறம்பாக பணம் தேவை.

தாய், தந்தையையும் இரு பிள்ளைகளையும் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது.

60.5 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த சராசரி வருமானம் கடுமையாகக் குறைந்துவிட்டது. அதேவேளை, 91 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த செலவின மட்டம் கடுமையாக உயர்ந்துவிட்டது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக 22 சதவீதமான குடும்பங்கள் வங்கிகளிடம் அல்லது தனியாரிடம் கடன் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

75.2 சதவீதமான குடும்பங்களின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 97.2 சதவீதமான குடும்பங்கள் செலவினங்களைச் சமாளிக்க பல்வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அதேவேளை 46.4 சதவீதமான குடும்பங்கள் சேமிப்பைக் குறைத்திருக்கின்றன அல்லது சேமிப்புக்களை அன்றாட தேவைக்கு செலவு செய்கின்றன.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு வறியவர்களின் தொகை சுமார் 40 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கிறது. சனத்தொகையில் 31 சதவீதத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கொழும்பில் இயங்கும் ‘லேர்ண்ஏசியா’ என்ற சிந்தனைக்குழாம் கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பிரிவினர் அல்லது 33 சதவீதமானோர் தினம் ஒருவேளை உணவைத் தவிர்ப்பதாகவும் 47 சதவீதமானவர்கள் உணவின் அளவுகளைக் குறைத்திருக்கும் அதேவேளை வயது வந்தவர்களில் 27 சதவீதமானவர்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்பதற்காக தங்களது உணவை கணிசமாகக் கட்டுப்படுத்திக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

குறைந்த வருமானம் காரணமாக போதுமான உணவுப் பொருட்களைப் பெறமுடியாததால் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற சவால்களை சமாளிக்க பல குடும்பங்கள் உணவைக் குறைத்திருப்பது மாத்திரமல்ல, வழக்கமாக சாப்பிடுகின்ற உணவு வகைகளைக் கைவிட்டு மலிவான வேறு வகை உணவுகளை நாடியிருப்பதாக சில சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன.

வழமையான உணவு வகைகளை வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் கிரமமான உணவுளைத் தவிர்ப்பதாகவும் தங்களது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்பது தெரியாத நிலையில் சிறுவர்கள் வெறுவயிற்றுடன் படுக்கைக்கு செல்கிறார்கள் என்றும் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லாறியீ அட்ஜே 2022 ஆகஸ்டில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிறுவர்கள் மத்தியிலான மந்தபோசாக்கைப் பொறுத்தவரை தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும் அறிக்கைகள் கூறின.

இது இவ்வாறிருக்க, இவ்வருடத்தின் முதல் காலாண்டின் இறுதியில் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதம் குறைவடையக்கூடியதாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கடந்த வாரம் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் உறுதிமொழிகளை அளிப்பார்கள். பிறகு அவற்றை நிறைவேற்றமுடியாமல் போய்விட்டால் அதற்கும் காரணங்களை தயாராகவே வைத்திருப்பார்கள். வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதக் குறைப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது முக்கியமான கேள்வி.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியில்லாமல் அரசாங்கத்தினால் எதையும் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால், அதனால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றபோது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கடுமுனைப்பான நடவடிக்கைகள் சமூக அமைதியின்மையை தோற்றுவிக்கக்கூடியவை.

அறகலயவைப் போன்ற மக்கள் கிளர்ச்சி மீண்டும் மூளுவதற்கு சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் மெத்தனமாக நினைக்கிறது போலும். அவ்வாறு மூண்டாலும் கூட படைபலம் கொண்டு ஆரம்பத்திலேயே அடக்கிவிடலாம் என்று அதற்கு நம்பிக்கை இருக்கக்கூடும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இறுக்கமான கடனுதவி நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் மூண்ட அரசியல் – சமூக எழுச்சிகளில் இருந்து எமது அரசாங்கம் மாத்திரமல்ல நாணய நிதியமும் பாடத்தைப் படிக்கவேண்டும். லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலும் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டன. எமது பிராந்திய நாடான பாகிஸ்தானும் அதே பிரச்சினையை எதிர்நோக்குகிறது.

மனித உரிமை மீறல்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் அசமத்துவத்தை அதிகரித்து அமைதியின்மையை தூண்டுவதாக பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை்முன்வைத்திருக்கின்றன.

“சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் மீதான அரசாங்கத்தின் செலவினக் குறைப்பும் பிற்போக்கான பெருமளவு வரிவிதிப்புகளும் மனித உரிமைகளை மலினப்படுத்தியிருக்கின்றன என்பதற்கு வரலாற்றில் தாராளமான சான்றுகள் இருக்கின்றன. வறுமையையும் அசமத்துவத்தையும் மேலும் தீவிரப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் மலினப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும் கொள்கைகளை சர்வதேச நாணய நிதியம் நாடுகள் மீது திணிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சொந்த உள்ளக ஆய்வுகளே அதன் கொள்கைகள் நாடுகளின் கடன்களைக் குறைப்பதில் பொதுவில் பயனுறுதியுடைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன. 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட நிதியத்தின் ‘உலகப் பொருளாதார நோக்கு’ என்ற அறிக்கையில் சிக்கனத் திட்டங்கள் கடன் விகிதங்களை ஒரு சராசரி அடிப்படையில் குறைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) ‘சர்வதேச நாணய நிதியம்; சிக்கன கடன் நிபந்தனைகளினால் உரிமைகள் மலினப்படுத்தப்படும் ஆபத்து – அதிகரிக்கும் அசமத்துவம் குறைபாடுடைய நிவாரண முயற்சிகளும்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.

சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது அரசாங்கங்களும் நிதி நிறுவனங்களும் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்து மதிப்பீட்டைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டல் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளும் நிபந்தனைகளும் அந்தக் கோட்பாடுகளுக்கு இசைவானவையாக இல்லை என்பதை அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஐ.எம்.எவ். கலகங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்ற ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து  இலங்கை அரசாங்கம் படிப்பனைகளைப் பெற்று நிதானமாக நடந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அந்த நாடுகளில் மக்கள் மத்தியில் தோன்றிய அமைதியின்மையை ‘சர்வதேச நாணய நிதியக் கலகங்கள்’ (IMF Riots) என்றே அழைக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய கலகம் ஒன்றைக் காணுமா இல்லையா என்பது அடுத்து வரும் நாட்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலேயே முற்றிலும் தங்கியிருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்