Photo, CNN

அரசாங்கத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இரு கிளைகளுக்கும் நியாயப்பாடு இருக்கும் நிலையில் அல்லது முற்றாகவே நியாயப்பாடு இல்லாதிருக்கும் ஒருநேரத்தில், மக்களால் தெரிவுசெய்யப்படாத கிளை நியாயப்பாட்டை பெற்றுவருகிறது. அரசாங்கம் பிரதானமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களினால் அமைக்கப்பட்ட காரணத்தினால் பெருமளவுக்கு அதன் நியாயப்பாட்டை இழந்துவிட்டது.

அண்மைய வழக்குகளில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் போற்றத்தக்கவை. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம்  தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தீவிர மதவாத கோட்பாடுகளில் இருந்து ஆட்களை விடுவிப்பதற்கான 2021ஆம் ஆண்டின் ஒழுங்குவிதி (இது சந்தேகநபர்களை நீதிமன்ற விசாரணையின்றி கட்டாய புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு அனுமதித்திருக்கக் கூடியது), மற்றும் வெறுப்புப் பேச்சுக்காக ராசிக் முஹம்மட் றம்சியை கைதுசெய்தமை சட்டவிரோதமானது என்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவை மக்களின் ஜனநாயக உரிமைகளின் பக்கம் நீதிமன்றம் உறுதியாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முன்னோடியான ஒன்றாகும். 2019 – 2022 காலப்பகுதியில் பொருளாதாரத்தை தவறாக முகாமை செய்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட ஒரு குழுவினர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிமன்றம் கூறியது.

பொருளாதாரத்தை அவர்கள் முகாமை செய்த முறையின் மூலமாக பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் அரசியலமைப்பையும் மீறியதாக நீதிமன்றம் கூறியது. ஆனால், குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடிய தண்டனையை வழங்கும் அளவுக்கு நீதிமன்றம் செல்லவில்லை. அதனால் இது குற்றவாளிகளின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களுக்கு நிதியியல் தண்டனைகளும் வழங்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதற்கு வழிவகுத்திருக்கிறது.

ஆனால், உயர்நீதிமன்றத்தினால் வெளிக்காட்டப்பட்ட முற்போக்கான சிந்தனை அரசாங்கத்தின் ஏனைய இரு கிளைகளினாலும் வெளிக்காட்டப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அறகலய போராட்ட இயக்கத்தின் வேண்டிநின்ற ‘முறைமை மாற்றம்’ எதுவும் ஏற்படவில்லை. நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து அணிதிரண்டுவந்து அறகலயவுக்கு தார்மீக ஆதரவை வழங்கிய மக்களின் அபிலாசையும் முறைமை மாற்றமாகவே இருந்தது.

மாற்றத்துக்குப் பதிலாக முன்னைய போக்கை கூடுதலாகக் காணக்கூடியதாக இருக்கிறது. போராட்ட இயக்கத்தில் இருந்து வசதிபடைத்த உயர் வர்க்கத்தினரையும் வர்த்தக சமூகத்தினரையும் வெற்றிகரமாக அரசாங்கம் பிரித்துவிட்டமையே ஏற்பட்டிருக்கும் மாற்றமாகும். வர்த்தக சம்மேளனத்தின் ஆதரவைப் பெற்றிருக்கும் அண்மைய பட்ஜெட் பிரித்தாளும் கொள்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஒப்புரவற்ற வரி அறவீட்டு முறை

பெறுமதிசேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்தமையும் தனவந்தர்களினாலும் வறியவர்களினாலும் கொள்வனவு செய்யப்படுகின்ற அனேகமாக சகல பாவனைப் பொருட்களுக்கும் ஒத்தமுறையில் அந்த வரி அதிகரிப்பின் பிரயோகமும் பொருளாதாரப் படிநிலையில் உச்சத்தில் இருப்பவர்களை விடவும் அடிமட்டத்தில் இருக்கிறவர்களையே மிகவும் கடுமையாகப் பாதிக்கும். 2022ஆம் ஆண்டில் சனத்தொகையின் சகல பிரிவுகளும் எரிபொருட்களைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் இரவுபகலாக கால்கடுக்க நின்று அனுபவித்த அவலமும் மின்வெட்டினால் ஏற்பட்ட பாதிப்பும் ஒரு ஐக்கிய உணர்வுக்கு வழிவகுத்தது.

கொழும்பு காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் தனவந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறியவர்கள் என்று வேறுபட்ட பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள் அருகருகாக நின்று இடர்நிலையை அனுபவித்தார்கள். ஆனால், இன்று பொருளாதாரச் சவால்கள் எல்லோரினாலும் பொதுவில் பகிர்ந்து கொள்ளப்படுபவையாக இல்லை.

தற்போது பொருளாதாரப் படிநிலையின் கீழ் அரைவாசியில் இருப்பவர்களையே பிரதானமாக இடர்பாடுகள் பாதிக்கின்றன. கூட்டு ஒருமைப்பாட்டு உணர்வு இல்லாமல் போய்விட்டது. உயர்மட்டத்தில் உள்ளவர்களினால் நிலைவரத்தை சமாளிக்கக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை சனத்தொகையில் அரைவாசி எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் இடர்பாடுகளுடன் அல்லற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுநன்மைக்கு முதல்நிலையைக் கொடுக்கும் நோக்குடன் அரசாங்கத்தின் கொள்கைச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படாதமையே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கான அதன் அணுகுமுறையில்  உள்ள அடிப்படைப் பிரச்சினையாகும். இதை அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வரிக்கொள்கை விடயத்தை விடவும் வேறு எதிலும் தெளிவாகக் காணமுடியாது.

நேரடி வரிகளை விடவும் மறைமுக வரிகளில் அதீதமாக தங்கியிருக்கின்றமையும் மூலதனத்தை விடவும் தொழிலாளர் மீது வரி அறவிடுவதற்கு முன்னுரிமை கொடுப்பதுமே பொருளாதார சீர்திருத்தத்தில் இலங்கையின் குறைபாடுகளின்  முதலாவது குறிகாட்டி என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி ஷார்மினி குரே கூறுகிறார்.

மூலதன வருமானம்  பிரதானமாக  தனவந்தர்களின் வளங்களை பெருக்குகின்ற அதேவேளை, மறைமுக வரிகள் தங்களது வருவாயின் பெரும்பகுதியை பொருட்களுக்கும் சேவைகளுக்கும் செலவிடும் வறியவர்கள் மீதே வரிச்சுமையை ஏற்றுவதால் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் மேற்குறிப்பிட்ட இரு குறைபாடுகளும் நேர்மைக் கோட்பாட்டை மீறுவதாக அமைகின்றன என்று என்று அவர் இலங்கை மத்திய வங்கியின் 73 வது வருடாந்த சொற்பொழிவை நிகழ்த்தியபோது குறிப்பிட்டார்.

கணிசமான அளவில் வரி விடுமுறைகள் வழங்கப்படுவதிலும் வரிக் கோட்பாடுகள் மீறப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 2022 அக்டோபர் வரி சீர்திருத்தத்தை அடுத்து பெரும்பாலான கம்பனிகள் ஒரு சராசரியான கோர்ப்பரேட் வரி வீதத்திற்கு இப்போது உட்படுத்தப்படுகின்றன. ஆனால் விரும்பப்படும்  செயற்திட்டங்கள் மூலோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் சட்டத்தின் கீழ் பரந்தளவிலான வரி விலக்கீடுகளை தொடர்ந்து பெறுகின்றன.

தெளிவில்லாததாக அமைந்திருக்கும் பிரமாணங்களின் அடிப்படையில்,  செயற்திட்டங்கள் கோர்ப்பரேட் வரி, தனிப்பட்ட வரி, பெறுமதிசேர் வரி, கலால் வரி மற்றும் சுங்கவரி உட்பட எட்டு வேறுபட்ட வரிச் சட்டங்களில் இருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு வரி விலக்கீடுகளை பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.

வரி விலக்கீடுகள் பிரதானமாக வெறுமனே தனவந்தர்களாக மாத்திரமல்ல மீமிகையான தனவந்தர்களாகவும்  ( Super Rich ) இருக்கும்  கோர்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கே பயனளிப்பவையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இலங்கை அஸ்வேசும போன்ற திட்டங்களின் மூலமாக வறியவர்களுக்கு வழங்கும் சிறிய கொடுப்பனவுகளை விடவும் தனவந்தர்களுக்கும் மீமிகையான தனவந்தர்களுக்குமே இயல்பாகவே கூடுதல் நன்மைகளைச் செய்கிறது.

அரசின் பொறுப்பு

சகலருக்கும் இலவசக் கல்வி, சகலருக்கும் இலவச சுகாதார சேவை என்று நாட்டின் தாபகத் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்ட நீண்டகாலக் கொள்கையை கைவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது என்பதை அரசாங்கத் தலைவர்களின் அண்மைய அறிவிப்புக்கள் உணர்த்துகின்றன.

பொருளாதாரப் படிநிலையில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சகல மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடு புதிய சுதந்திர நாட்டின் தலைவர்கள் அதன் குடிமக்களுக்கு செய்த ஆசீர்வாதமாகும். மலையக பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு செய்த அநீீதியே ஒரு கொடூரமான விதிவிலக்காகும். அதன்  மரபு இன்னமும் கூட ஓயாது நினைவில் ஊடாடுகிறது.

பின்தங்கிய குடும்ப பின்னணிகளில் பிறந்தவர்களுக்கு சமூக அசைவியக்கத்துக்கான வாயிலைத் திறந்துவிட்ட இலவச கல்வியும் இலவச சுகாதார சேவையும் ஊழலினாலும் குறந்தளவு நிதியொதுக் கீடுகளினாலும் இப்போது  மீட்டெடுக்கமுடியாத அளவுக்கு ஆபத்துக் குள்ளாகின்றன.

கட்டுப்படியாகக்கூடியவர்களுக்கு தனியார் வைத்தியசாலையையும் தனியார் பல்கலைக் கழகங்களையும் வழங்குவது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால் வசதி குறைந்தவர்களுக்கு பயன்தருகின்ற அரசாங்க வைத்தியசாலை களையும் பல்கலைக் கழகங்களையும் படிப்படியாக செயலிழக்கச் செய்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

பணம் அறவிடும் தனியார் கல்வி நிறுவனங்களில் இணைவதற்கு வசதியாக மாணவர்களுக்கு பண மானியத்தை அல்லது  வவுச்சரை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்வதாக அண்மையில் உயர்வர்க்க  தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றின் வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் பெருந்தன்மையான நோக்கங்களுக்காகவோ அல்லது பொதுநன்மைக்கான நோக்கங்களுக்காகவோ அல்ல, தனியாரின் இலாப நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகின்றன.

பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனோ அல்வது பொருளாதார ரீதியில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனோ அரசாங்கத்தின் மானியத்தை அல்லது வவுச்சரை பெற்றுக்கொண்டு பணம் அறவிடும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைவதற்கு மிகுதிப் பணத்தைச் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை.

சகலருக்கும் இலவச கல்வியின் மூலமாக தனது பாடசாலைக் காலத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை பயனடைந்தவர் ஜனாதிபதி விக்கிரமசிங்க. அரசாங்க கல்வி நிறுனங்கள் மூலமாக தரமுயர்ந்த கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழிக்கக்கூடாது. அரசாங்க கல்வி நிறுவனங்கள் மூலமாக ஜனாதிபதியும் ஏனையவர்களும் பெற்ற அந்த தரமான கல்வியே அவர்களை அரசியலிலும் கல்வி மற்றும் பொருளாதாரத்திலும் சர்வதேச மட்டத்தில் போட்டியிடக்கூடியவர்களாக வளர்த்து என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

பொது நன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்குவிதிகளையும் உட்கட்டமைப்புக்களையும் வழங்குவதற்கு அரசாங்கத்துறை அவசியம். சமூக நலன்புரி சேவைகள் மீதான பற்றுறுதியும் அவசியம். அரசினால் வழங்கப்படுகின்ற இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைக்கு வகைமாதிரிகளாக பல நாடுகள் விங்குகின்றன. அவற்றில் இலங்கை ஒன்று. ஆனால் இந்த அந்தஸ்து இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

தனியார்துறைக்கு மேலும் மேலும் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கொடு்ப்பது நாட்டினதும் அதன் மக்களினதும் முழுமையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கான அரசின் பொறுப்பை துறப்பதற்கு சமமானதாகும்.

இன்றைய அரசாங்க தலைவர்களும் வரவிருக்கும் தலைவர்களும் உச்சபட்ச அக்கறையுடனும் நேர்மையுடனும் பொதுநன்மைக்காக பாடுபடும் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அரசாங்கம் சம்பந்தப்பட்ட அண்மைய  சகல வழக்குகளிலும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் நல்லாட்சி மற்றும் தார்மீகப் பொறுப்புக் கோட்பாடுகளில் இருந்து இலங்கையின் தலைவர்கள் எந்தளவுக்கு விலகிச் சென்றிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

கலாநிதி ஜெகான் பெரேரா