Photo, TWITTER, @kumanan93

மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

மிகுந்த மனவேதனையில் இருந்ததாலேயே அவ்வாறு பேசியதாகவும் ஊடகவியலாளர்கள் சிலர் தன்னை வம்புக்கு இழுக்கும் நோக்கில் செயற்பட்டதால் தான் ஆவேசமடைந்ததாகவும் காணொளியில் கூறிய அவர் அந்த வேளையில் தான் தெரிவித்த சில கருத்துக்களை சில தமிழ் கட்சிகள் தமிழ் மக்களைக் குழப்புவதற்குப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுமணரத்ன தேரர்  இனங்களுக்கு இடையில் வன்முறையை தூண்டிவிடக்கூடிய கூச்சலைப் போட்டது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கெனவே அவர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். சில தடவைகள் அவர் ஆபாச வார்த்தைகளைக் கூட பேசியதை காணொளிகளில் நாம் பார்த்திருக்கிறோம். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவரை அவர் தாக்கிய சம்பவமும் உண்டு. அவர் அட்டகாசம் செய்த பல சம்பவங்கள் பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் நடந்துகொள்வது பெரும்பாலும் அவரது வழக்கமாக இருக்கிறது.

மதகுரு ஒருவருக்கு இருக்கவேண்டிய பண்புகளுடன் சுமணரத்ன தேரர் நடந்துகொள்வதில்லை என்றாலும் அத்தகைய நடத்தைகளுக்காக அவர் எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்கியதாக இல்லை. அவரது அட்டகாசங்களும் ஆவேசப்பேச்சுக்களும் மகாசங்கத்துக்குப் பெரும் அவமானம் என்பது குறித்து பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட கவலைப்படுவதாக தெரியவில்லை.

வழமை போன்றே இத்தடவை அவர் தென்னிலங்கையில் உள்ள தமிழர்களைத் துண்டுத்துண்டாக வெட்டிக்கொலை செய்வேன் என்று பேசியது தொடர்பிலும் எந்தப் பிரச்சினையும் அவருக்கு வரவில்லை.

தேரரைப் போன்று வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தால் பொலிஸார் எவ்வாறு நடந்துகொண்டிருப்பார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தேரரின் பேச்சு குறித்து அவருக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தமிழ் அரசியல் தலைவர்கள் குரலெழுப்பியபோதிலும் அரசாங்கத் தரப்பில் இருந்து எந்தப் பிரதிபலிப்பையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. அவரின் அட்டகாசம் குறித்து சிங்கள அரசியல்வாதி எவரும் கண்டனம் தெரிவித்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

ஆனால், திடீரென்று சுமணரத்ன தேரர் அந்தக் கொலைவெறிப் பேச்சுக்காக தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவரது நடத்தை சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்துவிடக்கூடியதல்ல என்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கிளப்பினால் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தேயாகவேண்டிவரும் என்றும் அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது மகாசங்க உயர்பீட வட்டாரங்களில் இருந்தோ கூறப்பட்டிருக்கக்கூடிய பின்னணியில் தான் அவர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பலாம்.

தமிழ் மக்கள் எளிதில் மறந்துவிடவோ மன்னித்துவிடவோ கூடியதல்ல தேரரின் ஆவேசக்கூச்சல். இனங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய ஆவேசப் பேச்சுக்களை நிகழ்த்திவிட்டு எவரும் மறுநாள் மன்னிப்புக் கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்கிற அளவுக்கு ஒரு தவறான உதாரணத்தை வகுப்பதற்கு தேரர் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவத்தை அனுமதித்துவிடக்கூடாது.

இத்தகைய ஒரு பின்புலத்தில், அண்மைக்காலத்தில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குரோதத்தைத் தூண்டிவிடக்கூடியதாக அமைந்ததாகக் கருதப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.

கடந்த வருடம் டிசம்பரில் தலதா மாளிகையை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்க என்பவர் யூரியூப் மூலமான தனது நிகழ்ச்சிகளில் கருத்து வெளியிட்டதற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பௌத்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய தனது செயலுக்காக அவர் மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கேட்டதை அடுத்தே அவர் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கிறிஸ்தவ மதப்போதகரான ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் பௌத்த மதத்தை மாத்திரமல்ல, இந்து, இஸ்லாமிய மதங்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிட்டு பிரசங்கம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து பெரும் சர்ச்சை மூண்டது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க விசாரணைக்கு  உத்தரவிட்டபோதிலும், தனக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக போதகர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இன்று வரை அவர் நாடு திரும்பவில்லை. அவர் நிதிமோசடிகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பின் பிரபலமான பெண்கள் கல்லூரியொன்றில் கடந்த ஏப்ரில் முதலாம் திகதி ‘ஏப்ரில் முட்டாள் தினச்சவால்’ என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மேடைப் பேச்சாளரான நடாஷா எதிரிசூரிய என்ற இளம் பெண் கலைஞர் புத்தபெருமானின் குழந்தைப் பராயத்தை கிண்டல் செய்யும் தொனியில் கருத்துக்களை தெரிவித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.

அதையடுத்து மூண்ட சர்ச்சைக்கு மத்தியில் நடாஷா வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தபோது விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். சில வாரகால விளக்கமறியலுக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவங்களின்போது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக கிளம்பிய குரல்கள் தமிழர்களைத் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று மட்டக்களப்பு விகாராதிபதி செய்த இனவெறிக் கூச்சலிட்டபோது ஒலிக்கவில்லை. பொதுவில் பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் புண்படுத்துபவையாகக் கருதப்படும் செயற்பாடுகளுக்கு வெளிப்படுத்தப்படும் ஆவேசமான எதிர்வினையை மற்றைய இனங்களையும் மதங்களையும் புண்டுத்தும் செயற்பாடுகள் விடயத்தில் காணமுடிவதில்லை.

சுமணரத்ன தேரர் மாத்திரமல்ல, அரசியல்வாதிகள் சிலரும் கூட அண்மைக்காலத்தில் இனங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருந்த விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க இவ்வருட முற்பகுதியில் வெளியிட்டபோது அவ்வாறு செய்ய முயற்சித்தால் இலங்கை இதுகாலவரையில் கண்டிராத படுமோசமான இனக்கலவரம் மூளும் என்று முன்னாள் அமைச்சர்களான விமல் விரவன்ச, சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி எச்சரிக்கை செய்தார்கள்.

இனக்கலவரம் மூளும் என்று  எச்சரிக்கை செய்வதை விடவும் நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை தூண்டிவிடும் மோசமான செயல் எதுவும் இருக்கமுடியாது. ஆனால், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் அவர்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னாள் பொதுப்பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் சிங்கள மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லையுண்டு என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். உள்நாட்டுப் போர் மூளுவதற்கு காரணமாக அமைந்த 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஒரு இனக்கலவரம் குறித்து இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கறுப்பு ஜூலையில் இருந்தும் மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரில் இருந்தும் இவர்கள் எந்த படிப்பினையையும் பெற்றதாக இல்லை.

வியட்நாம் போர்க்காலத்தில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு இவர் உலக வங்கியின் தவைராகவும் பதவி வகித்தார்) ஒரு தடவை கூறிய கூற்று ஒன்றே இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.வரலாற்றில் இருந்து பாடம் படித்துக்கொள்வதில்லை என்பதே நாம் வரலாற்றில் இருந்து பெற்றுக்கொண்ட பாடமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

சுமணரத்ன தேரரின் கொலைவெறிக் கூச்சல் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது குறித்து கண்டனம் தெரிவித்த தமிழ் அரசியல் தலைவர்கள் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் தேரரின் செயல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதமும் எழுதினார்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் (International Covenant on Civil and Political Rights Act – ICCPR Act) பாரபட்சத்தை, பகைமையை அல்லது வன்முறையை தூண்டிவிடும் வகையில் அமையக்கூடியதாக போர் அல்லது தேசிய, இன, மத வெறுப்புணர்வுகளைப் பிரசாரப்படுத்துவதை குற்றச்செயலாகக் கருதுகிறது. அத்தகைய குற்றச்செயல்களை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் எவரையும் மேல்நீதிமன்றத்தை தவிர கீழ் நிலையில் உள்ள எந்த நீதிமன்றமும் பிணையில் விடுவிக்க முடியாது.

ஆனால், அந்தச் சட்டம் வியாக்கியானப்படுத்தப்படுகின்ற அல்லது  பிரயோகிக்கப்படுத்தப்படுகின்ற விதம் எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்குவதற்கும் சிறுபான்மை இனத்தவர்களைக் கொடுமைப்படுத்துவதற்கும் அரசாங்கங்களினால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறதே தவிர உண்மையில் அதன் மூலமாகத் தண்டிக்கப்படக்கூடியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்