Photo, Counterpoint

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு தனது தேசிய நல்லிணக்கத்திட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வதற்கு ஜூலை 26 நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய எந்த விடயத்திலும் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், இவ்வாரம் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிடவிருப்பதாக அவரின் ஐக்கிய தேசிய கட்சி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஜனாதிபதியின் இத்தகைய அறிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பதே வழமையாகும். ஆனால், இத்தடவை ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து அறிவிப்பு வந்திருக்கிறது.

மாகாண சபைகளுக்கு  பொலிஸ் அதிகாரத்தை  தவிர்த்து மற்றைய சகல அதிகாரங்களையும் எவ்வாறு பரவலாக்கம் செய்வது என்பது குறித்து விளக்கம் அளிப்பார். 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதுடன் தொடர்புடைய சகல யோசனைகளும் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இலங்கையின் முன்னைய எந்தவொரு ஜனாதிபதியையும் விட கூடுதலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் ஜனாதிபதியாக விக்கிரமசிங்க விளங்குகிறார். அவர்  பதவிக்கு வந்து ஒரு வருட காலத்திற்குள் இரு தடவைகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களை ஒத்திவைத்து புதிய கூட்டத்தொடர்களை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவரை சில அரசியல் அவதானிகள் ‘நாடாளுமன்ற ஜனாதிபதி’ என்று நகைச்சுவையாக வர்ணிப்பதுண்டு.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் இரு வருடங்களில் கட்டங்கட்டமாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து விக்கிரமசிங்க செய்த அறிவிப்பு தென்னிலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் சக்திகளின் கடுமையான எதிர்ப்பை கிளப்பிய பிறகு இரு தடவைகள் அவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளை நிகழ்த்தினார்.

ஒன்று இலங்கையின் 75ஆவது சுதந்திரதினத்தன்று (பெப்ரவரி 4) மாலை தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை. மற்றையது நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து நிகழ்த்திய (பெப்ரவரி 8) கொள்கை விளக்க உரை. இரண்டு  உரைகளிலுமே அவர் 13ஆவது திருத்தம் குறித்து வாய்திறக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பௌத்த பிக்குமார் 13ஆவது திருத்தத்தின் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டோம்.

இப்போது அவர் சிங்கள தேசியவாத சக்திகளின் எதிர்ப்பைக் குறைக்கும் ஒரு தந்திரோபாயமாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அந்தத் திருத்தத்தை பலவீனப்படுத்தும் யோசனையை முன்வைத்துவிட்டு அது குறித்து சபையில் விசேட உரையாற்றவிருக்கிறார். நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் உரையாற்றியபோது இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் குறிப்பாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முழுப்பொறுப்பும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று கூறிய இரு வாரங்களுக்குள் அவரின் இந்த கருத்து வருகிறது.

இந்த இரு வாரங்களில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சிங்கள அரசியல் கட்சிகளினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தனது முயற்சிகளுக்கு முன்னால் வரக்கூடிய சவால்களின் பாரதூரத்தன்மையை ஜனாதிபதிக்கு மீண்டும் உணர்த்தியிருக்கும். 13ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் குறித்து விக்கிரமசிங்க பேசத்தொடங்கிய பிறகு கடந்த ஏழு மாதங்களில் அந்தத் திருத்தத்துக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு முன்னரையும் விட அதிகமாகியிருக்கிறது.

ஆனால், அது பற்றி எதையும் கூறாமல் ஐக்கிய தேசிய கட்சியின் கடந்தவாரத்தைய அறிக்கை தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்படுகின்ற வேறுபட்ட அபிப்பிராயங்கள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு இடையூறாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

இது விடயத்தில் அந்தக் கட்சி தமிழ்க்கட்சிகளை குறைகூறுவது இது முதற்தடவையல்ல.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றபோது மெய்நிகர் வழியாக உரையாற்றிய ஜனாதிபதி தமிழ்க்கட்சிகள் ஒத்துழைப்பதற்கு தயங்குவதன் காரணமாக தன்னால் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக்காண முடியாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதுபோக இடைப்பட்ட காலத்தில் தமிழ்க்கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகளின்போது அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து தனது அசௌகரியத்தை அவர் வெளிக்காட்டி வந்திருக்கிறார்.

இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத்தீர்வை காணக்கூடிய ஒன்று அல்ல. ஆனால், விக்கிரசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு தீர்வைக் காண்பதற்கு திகதிகள் குறித்து அடிக்கடி பேசுகிறார். முதலில் இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு குறித்து பேசிய அவர் இறுதியாக இணக்கப்பாட்டை காண்பதற்கு  ஜூலை 31ஆம் திகதியையும் குறித்தார். இவ்வாறாக திகதிகள் குறிப்பதன் மூலமாக தன்னை ஒரு பொருந்தத்தன்மைக்கு ஏன் ஜனாதிபதி உட்படுத்துகிறார் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைக்கும் அவரது அவசர அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வசதியான முறையில் பல தசாப்தங்களாக தீர்வுகாணப்படாமல் இருக்கும் சிக்கலான இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்க்கட்சிகளினால் நடந்துகொள்ளமுடியாது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கு தமிழ்க்கட்சிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்லாத – சிங்கள அரசியல் சமுதாயத்தின் குறிப்பாக சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் நிபந்தனைகளின் அடிப்படையில் அரைகுறைத் தீர்வொன்றுக்கு தமிழர்களின் பிரதிநிதிகளினால் இணங்கமுடியாது என்பதே யதார்த்த நிலை.

தமிழ்க்கட்சிகள் மத்தியில் காணப்படும் வேறுபட்ட கருத்துக்கள் தனது முயற்சிகளுக்கு ஒரு இடையூறாக இருப்பதாகவும் அந்தக் கட்சிகள் தன்னுடன் ஒத்துழைக்கத் தயங்குவதாகவும் குற்றம்சாட்டும் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையின் வரலாற்றில் இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் சிங்கள பௌத்த மேலாதிக்கப்போக்கும் தென்னிலங்கை கட்சி அரசியலுமே என்பதை தெரியாதவரல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தகைய தீர்வு முயற்சியொன்றின் தோல்விக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவேளையில் அவரும் கூட பெருமளவுக்கு  பொறுப்பாக இருந்தார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது விருப்பத்துக்கு தடையாக இருக்கும் சக்திகளையும் விக்கிரமசிங்க தெளிவாக அறிவார். அதனால் அரசியல் தீர்வைக் காண்பதற்கு தமிழ்க்கட்சிகள் ஒத்துழைக்காமல் இடையூறாக இருப்பதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு எந்த அடிப்படையும் அற்றது என்பது மாத்திரமல்ல உண்மையில் இடையூறாக இருந்துவரும் சக்திகளிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்த அவர் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடுமாகும்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு காலங்காலமாக முட்டுக்கட்டையாக இருந்துவரும் தென்னிலங்கை சக்திகளையும் ஜனாதிபதியும் அவரது கட்சியும் குற்றஞ்சாட்டியிருந்தால் அவர்களின் முயற்சிகளில் ஒரு நேர்மையின் சாயல் இருக்கிறது என்று நம்பமுடியும்.

தமிழ்க்கட்சிகளைப் பொறுத்தவரை, ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய உருப்படியான அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற முழுமையான நம்பிக்கையில் அவருடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லவில்லை. இதுவரையான சந்திப்புக்களில் காணப்பட்டிருக்கக்கூடிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச இயந்திரத்தை வழிக்குக் கொண்டு வரமுடியாதவராகவே அவர் இருக்கிறார்.

ஆனால், அதேவேளை சிங்கள தேசியவாத சக்திகளின் நெருக்குதல்கள் காரணமாக இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான தனது முன்னைய நிலைப்பாடுகளில் தான் செய்யும் தளர்வுகளுக்கு தமிழ்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்.

என்றாலும், அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற பழி தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதாக தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாக கூறுகிறார்கள். உருப்படியான எந்த முன்னேற்றமும் இல்லாமல், பழியைக் காரணம் காட்டி எவ்வளவு காலத்துக்கு இந்தத் தலைவர்கள் இந்தப் போக்கில் செல்லமுடியும் என்ற ஒரு கேள்வி எழுகிறது.

தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் சிங்கள அரசியல் சமுதாயத்திற்குள், பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு கருத்தொருமிப்பு காணப்படுகிறது. ஆனால், தமிழ்  மக்களுக்குத் தேவையானதை கேட்பதில் தமிழ் அரசியல் சமுதாயம் ஒருமித்து நிற்கமுடியாமல் முன்னென்றும் இல்லாத அளவுக்கு சிதறுண்டு போயிருக்கிறது. அது விடயத்தில் தமிழ்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அருகதை தமிழ் மக்களுக்கு இருக்கமுடியுமே தவிர ஜனாதிபதிக்கோ அல்லது சிங்கள கட்சிகளுக்கோ கிடையாது.

வீரகத்தி தனபாலசிங்கம்