Photo, TamilGuardian
உண்மையான நல்லிணக்கம் கடந்த காலத்தை மறப்பதன் மூலம் உருவாகாது… – நெல்சன் மண்டேலா
அன்பின் சந்திரிக்கா அம்மையாருக்கு,
எனது பெயர் மொறீன் எர்னஸ்ட். நான் யாழ்ப்பாணம் நவாலி எனும் ஊரைச் சேர்ந்தவள், 1995 ஆவணி 9ஆம் திகதி நவாலி குண்டு வீச்சிலிருந்து உயிர் தப்பியவள்.
1995 ஆவணி 9ஆம் திகதி இடம்பெற்ற முன்னேறி பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கம் பொது மக்களை பாதுகாப்புக்காக கோயில்களிலும், தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தல் வழங்கியது. அன்றைய ஜனாதிபதியான உங்களது அறிவுறுத்தல் படி பொது மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் பாடசாலையிலும், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி சின்ன கதிர்காமர் கோவிலிலும் தஞ்சம் புகுந்தனர்.
சிறீலங்கா விமான படைக்குச் சொந்தமான புக்கார விமானத்திலிருந்து எட்டு குண்டுகள் வீசப்பட்டதை வீட்டு வாசலிலிருந்து நான் பார்த்தேன். குண்டு வீச்சினால் பாடசாலையிலும், கோவிலிலும், ஆலயத்திலும் தஞ்சம் புகுந்தோர் கொல்லப்பட்டனர். அன்று பல அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதில் எனது மாமியும் ஒருவர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நவாலி படுகொலை குறித்து 11ஆம் திகதி ஆவணி 1995 இல் வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதியாகிய நீங்கள், உயிர்களையும் உடமைகளையும், பாதுகாக்க மக்கள் தஞ்சம் கோரும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் வலியுறுத்தியிருந்தது.
பொதுமக்களை நோக்கி தாக்குவதும், விசேடமாக பாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் புனித ஸ்தலங்களை தாக்குவதும் போர் குற்றமாகும். இவ்வாறு குறித்த இனத்தை குறிவைத்து தாக்குவது இனப்படுகொலையாகும். ஆனால், நீங்கள் இந்தத் தாக்குதலை இனப்படுகொலையாக அங்கீகரிக்க மறுத்துவிட்டீர்கள்.
யாழ்பாணம் பேராயர் தோமஸ் செளந்தரநாயகம் தொடர்ந்து இது குறித்து சிறீலங்கா அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் எடுத்து கூறினார். அன்றைய ஜனாதிபதியாகிய நீங்கள் நவாலி படுகொலை குறித்தான உண்மையைப் பகிர்வது உங்களது கடமை. ஒரு நாள் நீங்கள் மக்களை கொன்றதற்கு மன்னிப்பு கேட்பீர்கள் என நான் நம்புகிறேன்.
நீங்கள் 2015ஆம் ஆண்டு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகம் (ONUR) அமைப்பின் தலைவராக நியமனம் பெற்றீர்கள். 2019 ஆண்டு சமாதானமும் நல்லிணக்கமும் நோக்கிய உங்கள் செயல்பாடுகளுக்கு பொது நல விருது வழங்கப்பட்டது.
21ஆம் திகதி சித்திரை 2019 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்ற போது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையர்களை ஆலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நடைபெற்ற குண்டுதாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெருவிக்குமாறு அழைக்கிறேன்” எனக் கூறினீர்கள்.
உயிர்த்த தாக்குதலை அடுத்து சர்வதேசம் இலங்கை மீது அனுதாபம் கொண்டது. ஆனால், நவாலி குண்டு வீச்சின் பின் நாம் வெளியேற்றப்பட்டோம். யாரும் நமக்காக பரிதாபப்படவில்லை. 28 வருடங்களின் பின் நான் எனது கதையை கூறுகிறேன். பலர் நவாலி குண்டு வீச்சு பற்றி கேள்விபட்டிருக்க மாட்டார்கள். நவாலி தேவாலயத்தின் மீதான தாக்குதல் மௌனமாக மறைக்கப்பட்டுவிட்டது.
இன்று 28 வருடங்களின் பின் நவாலி குண்டுவீச்சில் உயிர் தப்பியோர் சார்பில் உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்கிறேன். ஒன்றுபட்ட சிறீலங்கா நாட்டை உருவாக்க வேண்டுமாயின் நாம் நடந்தவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐனாதிபதியாக இருந்த நீங்கள் இப்போதாவது உண்மையை பேசுவது அவசியம்.
இறுதியாக நான் கூற விரும்புவது மொறீன் எர்னஸ்ட் ஆகிய நான் எனது கிராமத்தை குண்டுவீசி அழித்து கொத்துக் கொத்தாக எமது மக்களை கொன்று குவித்த சிறீலங்கா அரசாங்கத்தையும் அதன் ஜனாதிபதி உங்களையும் மன்னிக்கிறேன். என்னையும் எனது மக்களையும் அன்றிலிருந்து மன அழுத்தத்தினால் அவதிக்குட்படுத்திய சிறீலங்கா அரசாங்கத்தையும் உங்களையும் மன்னிக்கிறேன். இளைஞர்கள் துப்பாக்கியைத் தூக்கி போராடத் தூண்டிய சிறிலங்கா அரசாங்கத்தையும் உங்களையும் மன்னிக்கிறேன்.
நீங்கள் எமது பாதிப்பை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரு நாள் நீங்கள் நவாலி மக்களிடம் மன்னிப்பை கேட்கும் போது நாம் நல்லிணக்க பாதையில் ஒற்றுமையுடன் பயணிக்கலாம்.
என்றும் உங்கள் உண்மையுள்ள
நவாலியூர் தாமா (மொறீன் எர்னஸ்ட்)