Photo, Selvaraja Rajasegar

கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சியை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், விபச்சாரம் செய்பவர்கள், முறைகேடான பாலியல் பழக்கவழக்கமுடையவர்கள் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சமூகவிரோத கும்பலின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தவறான போராட்டமாக காண்பிக்கும் நோக்குடன் அரசாங்க அரசியல்வாதிகள் அவதூறு பரப்பும் செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அண்மைய நாட்களாக அவர்களில் சிலர் அத்தகைய செயல்களை தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சில தினங்களுக்கு ஓரிரு குழந்தைகள் அனாதரவாக விடப்பட்ட சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகின. ரயில் பாதையிலும் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டது. அதையடுத்து அறகலய செயற்பாட்டாளர்கள் முறைகேடாக நடந்துகொண்டதால் தங்களுக்கு பிறக்கும்  குழந்தைகளை தண்டவாளத்தில் விட்டுச்செல்கிறார்கள் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். நடமாடும் விபச்சார விடுதியை நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் முக்கியமான அறகலய செயற்பாட்டாளர் என்று கூறும் செய்திகள் வெளியாகியிருந்தன.

களுத்துறையில் ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே 16 வயது யுவதி இறந்துகிடந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரை அந்த மாவட்டத்தின் அறகலய பிரதம அமைப்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

அறகலயவின்போது சடங்கு ஒன்றைச் செய்த மாந்திரீகர் மின்னல் தாக்கி மரணமடைந்தார். இன்னொருவர் ரயில் மோதிப் பலியானார். வேறு ஒருவர் மனநோயாளியாகி அலைந்து திரிகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் மரணமடைந்தார் என்று கூறிய அபேகுணவர்தன இவர்கள் எல்லோருக்கும் இந்த பிறப்பிலேயே தண்டனை கிடைத்துவிட்டது என்று ஒரு வக்கிரமான திருப்தியை வெளியிட்டார்.

அறகலயவில் பங்கேற்றவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடைத்துவருகிறது என்ற அவரின் கூற்றின் தர்க்கத்தின்படி பார்த்தால் இன்னும் சில மாதங்களில் நாட்டு சனத்தொகையில் ஒரு கணிசமான எண்ணிக்கையானவர்கள் உயிருடன் இருக்கவாய்ப்பில்லை என்றாகிறது.

அறகலயவை இலங்கை வரலாறு காணாத மக்கள் எழுச்சி என்று வர்ணித்த ஊடகங்கள் கூட அதற்கு களங்கம் கற்பிக்கும் அரசியல்வாதிகளின் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் காண்கிறோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்த அரசியல்வாதிகளை பொறுப்புக்கூறவைப்பதற்கு நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படாமல் இருக்கும் நிலையில், தகுதியற்ற ஒரு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விரட்டியடித்த மக்கள் கிளர்ச்சி தொடர்பில் ஒரு புறத்தில் சதிக்கோட்பாடுகள் புனையப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை மறுபுறத்தில் அறகலய செயற்பாட்டாளர்களை ஒரு சமூகவிரோத கும்பலாக காண்பிக்கும்  நோக்குடன்  அவதூறுப் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படுகிறது.

அறகலயவின்போது கொழும்பு காலிமுகத்திடலில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து முறைமை மாற்றத்தைக் கோரிநின்ற இலங்கை சமூகத்தின் உலகறிந்த ஒரு சின்னமாகும். சமூகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் அங்கு வந்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள். சமூக விரோத சக்திகளும் கூட அங்கு ஊடுருவியிருக்கக்கூடும். ஆனால், அதை பொதுமைப்படுத்த முடியாது. ஆட்சியதிகார வர்க்கத்தை ஆட்டங்காணச் செய்த அந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை விரும்பத்தகாத சக்திகளின் ஒரு திரட்சி என்று மக்களை நம்பவைக்கலாம் என்று இலங்கையின் வரலாறு முன்னென்றுமே கண்டிராத படுமோசமான ஊழல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகள் நினைத்துவிடக்கூடாது. தங்களது ஆட்சிமுறையின் மோசமான தவறுகளே மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை இந்த அரசியல்வாதிகள் இன்னமும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களின் ஆட்சியின் தோல்விக்குப் பொறுப்பானவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களுக்கு  மக்கள் கிளர்ச்சி பற்றிய பீதி எப்போதும் இருக்கவே செய்யும். அறகலய கிளர்ச்சி படைபலம் கொண்டு ஒடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதற்கு பின்னரான இலங்கை அரசியல் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை. நாட்டு மக்கள் இப்போதைக்கு ஒரு கிளர்ச்சிக்கு தயாரில்லாமல் இருக்கலாம். ஆனால்,  உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் மக்களின் கண்கள் முன்னாலேயே தாங்கள் செயற்படவேண்டியிருக்கும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றதை அடுத்து பொருளாதார மறுசீரமைப்பு என்று கூறிக்கொண்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் அண்மைய மாதங்களாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களின் பொருளாதார இடர்பாடுகளில் ஒப்பீட்டளவிலான ஒரு தளர்வை ஏற்படுத்தியிருக்கின்ற போதிலும், சனத்தொகையில் அதிகப்பெரும்பாலானவர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்கமுடியாமல் தொடர்ந்தும் திணறிக்கொண்டேயிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஸ்டீவ் ஹேங்க் நாடுகளின் பொருளாதார நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தம் மதிப்பீடு செய்கின்ற துன்பக்குறியீட்டு (Annual Misery Index) வரிசையில் 2022 இல்  மிகுந்த துன்பம் கொண்ட முதல் 15 நாடுகளில் இலங்கை 11ஆவது இடத்தில் இருக்கிறது.

157 நாடுகளின் பொருளாதார நிலைவரங்களை மதிப்பிட்டு அவர் தயாரித்த அந்தப் பட்டியலில் சிம்பாப்வே, வெனிசூலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜென்டீனா, யேமன், உக்ரெய்ன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹெய்டி, அங்கோலா, ரொங்கோ மற்றும் கானா ஆகிய நாடுகளே மக்கள் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் நாடுகளாக காணப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கி, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உணவு, விவசாய நிறுவனம் ஆகியவற்றின் அண்மைய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இலங்கை தற்போது மிகவும் வேதனையான நிலைவரத்தை எதிர்நோக்குகிறது.

மத்திய வங்கி இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் உள்ள விபரங்களின்படி நாட்டு சனத்தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் செலவிடும் தொகையை கடுமையாகக் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். உணவுக்கான செலவினத்தின் சுமையே இதற்குக் காரணமாகும். இதனால் கல்வி முறை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மீது அக்கறை காட்டுவதற்குப் பெரும்பாலான குடும்பங்களினால் இயலாமல் இருக்கிறது. சிறுவர்கள் மந்தபோசாக்கிற்கு இரையாவதால் நாளடைவில் பாரதூரமான சமூக – பொருளாதார பிரச்சினைகள் தோன்றும் ஆபத்து இருக்கிறது.

தற்போது நாட்டில் உள்ள ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களில் 43 சதவீதமானவர்களும் 14 இலட்சம் பாடசாலை சிறுவர்களும் மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினை அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பாடசாலை சிறுவர்களில்  மூன்றில் ஒரு பங்கினருக்கு உகந்த உணவு கிடைப்பதில்லை. அதேவேளை, சிறுவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த இரு வருடங்களாக உணவு மற்றும் நானாவித பொருட்களுக்கான குடும்பத்தின் சராசரி செலவினம் 75 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது. கணிசமான எண்ணிக்கையில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிட்டன. ஏற்கெனவே வறுமை நிலையில் இருந்த குடும்பங்கள் மோசமான வறுமையில் மூழ்கிவிட்டன. சிறுவர்கள் மாத்திரமல்ல பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பிணிகளும் கூட மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் ஏழு குழந்தைகள் அவற்றின் ஐந்தாவது பிறந்ததினத்தைக் காண உயிருடன் இருப்பதில்லை. 2021ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகையில் 12.7 சதவீதமானவர்களே வறுமைப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வறுமைப்பட்ட குடும்பங்கள் 26 சதவீதமாக அதிகரித்தன. இவ்வருடம் இது 37 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

உலகில் பணவீக்கத்தில் நான்காவது இடத்திலும் சிறுவர்கள் மத்தியிலான மந்தபோசாக்கில் ஆறாவது இடத்திலும் இலங்கை இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்கக்கூடும் என்ற பீதி அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாக ஏற்படவே செய்யும். மீண்டும் ஒரு அறகலயவுக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் உறுதியாகவே இருக்கிறார்கள். சிறிய ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கூட அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொலிஸாரையும் படையினரையும் பயன்படுத்தி அரசாங்கம் அடக்குகிறது.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து கிளர்ச்சிக்கான சூழ்நிலைகளை இல்லாமல் செய்வதென்பது அதிகார வர்க்கத்தினால் சாதிக்கமுடியாத ஒன்று. பதிலாக அடக்குமுறையின் ஊடாக  கிளர்ச்சி மூளாமலிருப்பதை உறுதிசெய்வதிலேயே அவர்கள் முழுமூச்சாக செயற்படுவார்கள்.

இன்று வீதிகளில் அறகலய இல்லாமல் இருக்கலாம். ஆனால், விலைவாசி காரணமாக ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் ஏதோ ஒரு வகையில் அறகலய நிகழ்ந்துகொண்டயிருக்கிறது. பொருளாதார இடர்பாடுகளில் காணப்படுவதாகக் கூறப்படும் தளர்வின் பயனை பெரும்பாலும் வசதியுடைய குடும்பங்களினாலேயே அனுபவிக்கக்கூடியதாக இருக்கிறது.

மக்கள் கிளர்ச்சிக்கு வெளிநாட்டுச் சதியே காரணம் என்றும் சமூகவிரோத சக்திகளே அறகலயவை வழிநடத்தியதாகவும் அவதூறு பரப்பும் அரசியல்வாதிகள் தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவான பொருளாதார நெருக்கடியின் துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதிகளில் இறங்கிய மக்களையே உண்மையில் அவமதிக்கிறார்கள்.

மீண்டும் ஒரு அறகலய மூளாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியது. ஒரு அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்த மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை ஆணைக்குழுவை நியமித்துத்தான் அறிந்துகொள்ளவேண்டுமா என்ன?

வீரகத்தி தனபாலசிங்கம்