இந்த நாட்டில் மீட்கப்படுகின்ற தொல்லியல் எச்சங்கள் எங்கு மீட்கப்பட்டதோ அந்த இடத்திலேயே வைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளுக்கோ, மரபுரிமை சார்ந்த மக்களுக்கோ அதுபற்றி விளங்கப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலையே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு இது தலைகீழாக இடம்பெற்றுவருகிறது. குருந்தூர்மலையில் மீட்கப்பட்ட தொல்லியச் எச்சங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு அங்கு புதுவிதமான விகாரை நிர்மாணிக்கப்படுகிறது. அதேமாதிரிதான் வெடுக்குநாரிமலை விவகாரமும். அந்தப் பகுதியில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் மக்களின் நம்பிக்கையை சிதைத்து கோயில்களை சேதமாக்கி தொல்லியல் திணைக்களம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் அந்த நிலப்பகுதியை கொண்டுவந்திருக்கிறது.
வடக்கில் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் பௌத்த தொல்லியல் எச்சங்களைக் கொண்ட மையங்களுக்கு பெரும் நிதியை செலவிடும் தொல்லியல் திணைக்களம், அநுராதபுரத்திலோ – தென்னிலங்கையிலோ இவ்வளவு பெரும் நிதியை செலவிடுவதில்லை. அநுராதபுரத்தில் எத்தனையோ சைவ ஆலயங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. வெறும் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகை மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஆலயங்களை மீள் புனருத்தாபனம் செய்வதோ, இருக்கிற அளவுக்காவது பராமரிப்பதையோ இந்தத் திணைக்களம் செய்வதில்லை என்று கூறுகிறார் ஆவணப்பட இயக்குனரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஜெரா.
இப்படி தொல்லியல் திணைக்களம் தெற்குக்கு ஒரு முகமும் வடக்குக்கு ஒரு முகமும் காட்டுவதென்பது ஒரு அரச திணைக்களம் பாராபட்சமாக நடந்துகொள்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். அதுவும் இந்த நாட்டில் வாழும் இரண்டு இனங்களுடைய மரபுரிமை சார்ந்த விடயத்தில் பாராபட்சம் காட்டுவதன் ஊடாக வரலாற்றிலேயே ஒரு இனத்தை மாத்திரம் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகின்ற வேலையைத்தான் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.
வடக்கு கிழக்கில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டுவரும் அத்துமீறல் குறித்து மாற்றத்துடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை முழுமையாக கீழ் உள்ள லிங்கினூடாகப் பார்க்கலாம்