Photo, DW.COM
ஆட்சியாளர்கள் விரும்பவில்லையென்றால் ஜனநாயக செயன்முறைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற நடைமுறைகளிலும் அரசாங்க நிருவாகத்திலும் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பதற்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இடையறாது செய்துவருகின்ற கெடுபாடிகள் சிறந்த உதாரணமாகும்.
தேர்தல் ஒன்றை, அதுவும் உள்ளூராட்சி தேர்தல்களைத் தடுப்பதற்கு தற்போதைய இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசாங்கம் ஒன்று செய்திருப்பதாக இதுவரையில் நாம் அறியவில்லை.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கென்று 2023 பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திறைசேரி நிறுத்திவைப்பதை தடுத்து உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை அரசாங்கம் மதித்துச் செயற்படும் என்று முதலில் அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும், உள்ளூராட்சி தேர்தல்களுக்கான புதிய திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்ற போதிலும் அந்தத் தேர்தல்கள் தொடர்பிலான நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது.
உள்ளூராட்சி தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்று மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார்கள். தபால் மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுக்களை ஐந்து தினங்களுக்குள்ளும் தேர்தல் தினத்துக்கான வாக்குச்சீட்டுக்களை 20 – 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு தருவதற்கு அரசாங்க அச்சகர் இணங்கியிருப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகளுக்குப் பாதுகாப்பு வழங்க போதியளவில் பொலிஸாரை கடமையில் அமர்த்துவதற்கு தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்திருப்பதாகவும் தேவையான எரிபொருட்களை சில தினங்களுக்குள் வழங்குவதற்கு சக்தி, வலு அமைச்சும் பெற்றோலியம் கூட்டுத்தாபனம் இணக்கியிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.
தேர்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் வெள்ளியன்று தேர்தல் ஆணைக்குழு நடத்திய சந்திப்பில் இந்த இணக்கப்பாடுகள் காணப்பட்டன.
ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நாடாளுமன்றத்தின் அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் மீறுவதாக அமைந்திருக்கிறது என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை கிளப்பியதை காணக்கூடியதாக இருந்தது.
தேர்தல்களுக்கு நிதியை விடுவிப்பதில் உள்ள சாத்தியமின்மை குறித்து திறைசேரி செயலாளர் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அலட்சியம் செய்திருப்பது நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறிய ஒரு செயலாகும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதியமைச்சு அரசாங்க நிதியைக் கட்டுப்படுத்தும் நாடாளுமன்றத்துக்கே பொறுப்புக்கூறவேண்டும். உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நிதி அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக அமைகிறது என்று தொலவத்த சபையில் குறிப்பிட்டார்.
அவர் கிளப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசாரணையொன்றை நடத்தவிருப்பதாக அரசாங்கம் வெள்ளியன்று சபையில் அறிவித்தது. இந்த பிரச்சினை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும்வரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய எந்த நடவடிக்கையும் பாரதூரமான குற்றச்செயலாக அமையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறினார்.
இன்னொரு நிதி இராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய ஒரு சில தினங்களுக்கு முன்னர் நிதியமைச்சாக இருந்தாலென்ன அரசாங்கத்தின் வேறு எந்த நிறுவனமாக இருந்தாலென்ன நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதித்து அதற்கேற்ப செயற்படவேண்டிய பொறுப்புக்குரியவை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
அதேவேளை, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சகல நாடாளுமன்ற குழுக்களிலும் ஆதிக்கம் செலுத்தும் கட்சி அல்லது கூட்டணி அதன் நலன்களுக்கு உதவக்கூடிய முறையில் அவற்றைப் பயன்படுத்துவதே வழமை என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாடாளுமன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை பயன்படுத்தி அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் எதிரணி கட்சிகள் இந்தப் பிரச்சினை நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் அநாவசியமான முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்றும் எச்சரிக்கை செய்திருக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கென்று 2023 பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாவை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்தது. நாடாளுமன்றத்தின் அந்தத் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டு நிதியை விடுவிக்காமல் இருப்பதற்கு எந்த அரசாங்க அதிகாரிக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்துக்கு அரசாங்க அதிகாரிகள் கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எவ்வாறு நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையமுடியும் என்பது விளங்கவில்லை.
நாடாளுமன்ற சிறப்புரிமை குழு இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்குமோ எவருக்கும் தெரியாது. புதிய தேர்தல் திகதியை அறிவித்திருக்கும் தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முட்டுக்கட்டைகளை போடுவதில் முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை என்பது மாத்திரம் நிச்சயம்.
இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்திருக்கக்கூடிய எந்தவொரு அரசாங்கமும் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்க இந்தளவுக்கு அஞ்சியதாக கூறமுடியாது. அதுபோக ஒரு லிபரல் ஜனநாயகவாதியாக இதுகாலவரை தன்னைக் காட்டிக்கொண்ட நீண்டகால நாடாளுமன்ற அனுபவத்தைக் கொண்ட ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சியில் மக்களின் வாக்குரிமைக்கும் ஜனநாயக செயன்முறைகளுக்கும் இந்தளவுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்பது அவரின் இதுகாலவரையான அரசியல்வாழ்வுக்கு பெரும் களங்கமாகும். ஆனால், அரசியல் அதிகாரம் களங்கத்தைப் பற்றியோ அல்லது நெறிமுறையைப் பற்றியோ எல்லாம் சிந்திப்பதற்கு இடந்தருவதில்லை. அல்லாவிட்டால் மக்கள் கிளர்ச்சியினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட இலங்கையின் முதல் ஆட்சியாளர்கள் என்ற அவமானத்துக்கு உள்ளான ராஜபக்ஷர்கள் மீண்டும் தங்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்ற நினைப்புடன் செயற்படுவார்களா?
இலங்கை அதன் வரலாற்றில் காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முட்டுக்கட்டைகளை போடுவதற்கு பிரதான காரணம் பொருளாதார நெருக்கடிதான் என்று என்று கூறிவிடமுடியாது.
உள்ளூராட்சி தேர்தல்களில் ஏற்படக்கூடிய படுதோல்வி ஏற்கெனவே பதவியில் இருப்பதற்கான நியாயப்பாட்டைப் பொறுத்தவரை பெரும் சவாலை எதிர்நோக்கும் தங்களது அரசாங்கத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அவருக்கு நாடாளுமன்ற ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷர்களும் நன்கு அறிவார்கள்.
உள்ளூராட்சி தேர்தல்கள் ஆட்சியை மாற்றுவதில்லை. 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான ‘ நல்லாட்சி ‘ அரசாங்கம் படுதோல்வியடைந்த போதிலும் அன்றைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும்வரை பதவியில் இருந்தது. அந்த உள்ளூராட்சி தேர்தல்களில் பெருவெற்றி பெற்ற பொதுஜன பெரமுன பிறகு ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரமாண்டமான வெற்றிகளைப் பெற்றது வேறு கதை.
தற்போது அதுவும் கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் அவற்றுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக நம்பும் ஆதரவை நிரூபிப்பதற்கான ஒரு உடனடி சந்தர்ப்பமாக உள்ளூராட்சி தேர்தல்களை நோக்குகின்றன.
இவ்விரு சக்திகளும் உள்ளூராட்சி தேர்தல்களில் பெரு வெற்றியடையும் பட்சத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத்தேர்தலில் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்று அவற்றிடம் இருந்து கோரிக்கை கிளம்பி வீதிப்போராட்டங்கள் தீவிரமடையக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. இதை அரசாங்கம் நன்கு அறியும்.
அதன் காரணத்தினால்தான் அண்மையில் திருகோணமலை விமானப்படை தளத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க நாடாளுமன்ற தேர்தல்கள் போன்ற உகந்த வழிமுறைகள் மூலமாக மாத்திரமே அரசாங்கத்தை மாற்றமுடியும் என்றும் வீதிப்பேராட்டங்கள் நாடாளுமன்றத்துக்கான மாற்றுத் தெரிவு அல்ல. ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறைகளை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த ஒரு முயற்சியும் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாக அமையும் என்றும் ஒரு எச்சரிக்கைத் தொனியில் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமே அரசாங்கத்தை மாற்றமுடியும் என்ற ஜனாதிபதியின் கூற்று உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று அரசாங்கக் கட்சிகள் அதில் பெருந்தோல்வியைச் சந்தித்தாலும் கூட உரிய காலத்துக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படப்போவதில்லை என்று எதிரணி கட்சிகளை நோக்கி அவர் விடுக்கும் ஒரு எச்சரிக்கை என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
அதேவேளை மீண்டும் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு இடமளிக்கப்போவதில்லை என்பதிலும் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கிறார். எந்தவொரு வீதிப்போராட்டத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு பொலிஸாரும் படையினரும் தொடர்ந்து மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் இதை உணர்த்துகின்றன. ஆனால், மக்கள் கிளர்ந்தெழுவதென்பது எந்தவொரு அரசியல்வாதியினதும் விருப்புவெறுப்பில் தங்கியிருப்பதில்லை. கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சி பல பாடங்களை புகட்டியிருக்கிறது.
இறுதியாக, வீதிப் போராட்டங்களினால் அல்ல, நாடாளுமன்ற தேர்தலினால் மாத்திரமே அரசாங்கத்தை மாற்றமுடியும் என்று கூறிய ஜனாதிபதி அரசாங்கத்தை மாற்றுவது வேறுவிடயம். ஆனால், மாற்றவேண்டிய நிர்ப்பந்தச் சூழ்நிலையை மக்களின் வீதிப்போராட்டங்களினால் தோற்றுவிக்க முடியும் என்பதை நன்கு அறிவார். மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தன்னிடமிருந்து நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இறுதியில் அவர் அடைவதற்கான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது மக்கள் வீதிகளுக்கு இறங்கி நடத்திய கிளர்ச்சியேயயாகும். ஆனால், மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்குவதில் மூர்க்கமான உறுதிப்பாடு கொண்ட ஆட்சியாளராக அவர் இன்று மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்