Photo, THE HINDU

இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையாக பெப்ரவரி தொடக்கத்தில் கூடிய பௌத்த பிக்குகள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றை தீயிட்டுக் கொளுத்தினர். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதற்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டினர். தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிறைவேற்று அதாகாரத்தைக் கொண்டவர் என்ற வகையில் தனது பொறுப்பு என்று அவர் சர்வகட்சி மகாநாடொன்றில் கூறியிருந்தார்.

“சுமார் 37 வருடங்களாக 13ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது. நான் அதை நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது எவராவது அதை இல்லாதொழிக்கவேண்டும்” என்று  ஜனாதிபதி தெரிவித்தார். எந்த வகையிலும் நாட்டைப் பிளவுபடுத்த தான் தயாரில்லை என்றும் சிங்கள தேசத்துக்கு துரோகம் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறியபோதிலும் பிக்குகள் அந்தத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

நிறைவேற்றப்படாத ஒரு உறுதிமொழி

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதிமொழியோ அல்லது பிக்குகளின் எதிர்ப்போ ஒன்று இலங்கைக்கு புதியவையல்ல. மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட முன்னைய ஜனாதிபதிகளும் பல  தடவைகள் அதே உறுதிமொழியை வழங்கினார்கள். அந்த வேளைகளிலும் பிக்குகளும் ஏனைய பிற்போக்கு குழுக்களும் இதேபோன்று ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.

அதேவேளை, சமத்துவம், கௌரவம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்துப் போராடிவருகின்ற இலங்கை தமிழர்களுக்கும் 13ஆவது உறுதிமொழி உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எதைப்போன்று இருக்கக்கூடும் என்பது தெரியாது. அதிகாரப் பரவலாக்கம் அரசியலமைப்பில் சுமார் நான்கு தசாப்தங்களாக இருந்து வருகின்ற போதிலும் (1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவு அது) அந்தத் திருத்தச்சட்டம் அதன் எழுத்திலும் உணர்விலும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதை அவர்கள் ஒருபோதும் கண்டதில்லை.

13ஆவது திருத்தம் எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. எதிர்க்கின்ற சிங்களவர்களைப் பொறுத்தவரை அது இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்றே நோக்குகிறார்கள். மாகாண மட்டத்தில் தமிழர்களுக்கு ‘அளவு கடந்த அதிகாரங்களை’ அந்தத் திருத்தம் வழங்குகின்றது என்றும் அதனால் கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் சிங்களவர்கள் நம்புகிறார்கள். இலங்கையின் சகல ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரேயளவான அதிகாரங்களையே திருத்தம் பரவலாக்குகிறது என்ற உண்மையை கருத்திற்கொள்ளாமல் அவர்கள் அந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஏழு மாகாணங்கள் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவையாகும்.

மறுபுறத்தில் தமிழர்கள்  இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் 13ஆவது திருத்தம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டளவு அதிகாரங்களையே தருகிறது என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கத்தை அது செய்யவில்லை என்று அவர்கள் குறை கூறுகிறார்கள். அதேவேளை தமிழர்களில் சிலர், திருத்தம் போதுமான அதிகாரங்களை தரவில்லை என்று பரவலாகக் கருதப்பட்டாலும் கூட ஒருவகையான அதிகாரப்பகிர்வை உத்தரவாதம் செய்கின்ற ஒரேயொரு சட்ட ஏற்பாடாக தற்போது இருப்பதால் அதை முழுமையானதும் நிலைபேறானதுமான அரசியல் இணக்கத்தீர்வொன்றுக்கான பேச்சுவார்த்தையில் ‘தொடக்கப்புள்ளியாக’ நோக்குகிறார்கள்.

அந்தத் திருத்தம் மாகாணங்களுக்கு விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, உள்ளூராட்சி, திட்டமிடல், வீதிப்போக்குவரத்து மற்றும் சமூக சேவைகளில் சட்டவாக்க அதிகாரத்தை  கொடுத்த போதிலும் பல பொருள்படக்கூடியதாக அமைந்திருக்கும் பொதுப்பட்டியல் மற்றும்  அரசியலமைப்பின் விஞ்சிய மதிப்புடைய சில பிரிவுகள்  காரணமாக மத்திய அரசாங்கமே மிகவும் பலம்பொருந்தியதாக இருக்கிறது.

தமிழர்களின் ஈடுபாடுகள்

எதிர்பாராத முறையில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மாதங்களில் விக்கிரமசிங்க நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கையின் சுதந்திரதினமான 2023 பெப்ரவரி 4 திகதிக்கு முன்னதாக அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிசெய்யப்போவதாக அறிவித்தார். ஒரு மிகவும் குறுகிய கால அவகாசத்தைக் கொண்ட அவரது அந்த அறிவிப்பு ‘இப்போது அல்லது  ஒருபோதுமில்லை’ என்ற தொனியில் அமைந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இணங்கியது. என்றாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  ஜனாதிபதியின் நேசக்கரத்தில் ஐயுறவு இருந்தது. கூட்டமைப்பின் போட்டிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வு குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக முன்வராதபட்சத்தில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற  தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.

முதலில் இருந்தே தொடங்குவதற்கு பதிலாக ஐந்து அம்சங்களில் அரசாங்கம் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றது. தேசிய காணி ஆணைக்குழுவையும் மாகாணப் பொலிஸ் படையையும் அமைத்தல்; மாகாண சபைகளுக்கு மீண்டும் அதிகாரங்களைக் கொடுப்பதற்கு குறிப்பிட்ட சில சட்டங்களை மாற்றியமைத்தல் அல்லது  திருத்துதல்; பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் நிருவகிப்பதற்கு அவசியமான நிருவாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குதல் என்பவையே அந்த யோசனையாகும். ஆனால், அந்த விவகாரங்கள் தொடர்பில் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காத நிலையில் பேச்சுவார்த்தைகளை தொடருவதில் அர்த்தமில்லை என்று கூட்டமைப்பு கூறியது.

கூட்டமைப்பின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான இரா.சம்பந்தன் 2019 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடந்த காலத்தில் பல்வேறு அரசங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் 1987ஆம் ஆண்டின் 13ஆவது திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டிருப்பவற்றுக்கும் அப்பால் அதிகாரங்களை வழங்கக்கூடிய யோசனைகளைக் கொண்டிருந்தன என்று விளக்கமளித்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்காலத்தில் 1991ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தெரிவுக்குழு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிகாரத்தில் இருந்தபோது 2000ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்தபோது நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமயிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள், மைத்திரபால சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கக் காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றை சம்பந்தன் தனது அந்த உரையில் சுட்டிக்காட்டினார்.

அரசியல் உரிமைகளுக்கான தமிழச் சமூகத்தின் நீண்டகால போராட்டங்களை விளக்கி மிகவும் மனதை நெகிழவைக்கும் வகையில் உரையாற்றிய அவர், “தமிழர்கள் தனித்துவமான மொழியையும் கலாசார அடையாளத்தையும் கொண்ட தனித்துமான மக்களாவர். வரலாற்று ரீதியாக நாம் வடக்கு, கிழக்கில் வாழ்ந்துவந்திருக்கிறோம். இரண்டாம்தர குடிமக்களாக எம்மால் வாழமுடியாது. நாம் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழவேண்டும். சாத்தியமாளவுக்கு கூடுதல்பட்ச அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். ஐக்கியப்பட்ட, பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கையொன்றுக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எமது விதியை தீர்மானிப்பவர்களாக நாமே இருக்கவேண்டும்” என்று கூறினார்.

“இதை எவ்வளவு விரைவாக நீங்கள் செய்கிறீர்களோ அந்தளவுக்கு நல்லது. இதை செய்யவில்லையானால், நல்ல காரியத்தை செய்வதை நீங்கள் தவிர்த்தால் தமிழ் மக்கள் நீண்டகாலத்துக்கு அமைதியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று சபையில் சம்பந்தன் முழங்கினார்.

ஆனால், மேற்கூறப்பட்ட முயற்சிகள் சகலதினதும் முடிவுகள் கடதாசியில் அல்லது நிறைவேற்றப்படாத நீண்ட உறுதிமொழிகளின் வரிசையில் இன்னொன்றாகவே இருந்தன. வழங்கிய எந்த உறுதிமொழி தொடர்பிலும் ஆளும் சிங்கள அதிகாரவர்க்கம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. பாரிய மனித இழப்புகளுடனும் தமிழர்களுக்கு சொல்லொணா அவலங்களுடனும் உள்நாட்டுப் போர் 2009 ஆண்டு முடிவுக்கு வந்தபோது நீதியான அரசியல் தீர்வுடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்துக்கு வாய்ப்பொன்று தோன்றுவதாக நோக்கப்பட்டது.

தவறவிடப்பட்ட பல வாய்ப்புக்கள் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரேயொரு விடயத்தை தெளிவாக உணர்த்தியது. இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான அரசியல் துணிவாற்றல் இல்லை என்பதே அதுவாகும். நாட்டுப் பிரிவினை யோசனையை தமிழர்கள் கைவிட்டு இப்போது பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பிரிவினைப் பூச்சாண்டியை சில சிங்கள அரசியல்வாதிகள் இன்னமும் காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அல்லது போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஒரு மாற்று தீர்வாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.

இந்திய தலையீடு

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க தனக்குத் தானே விதித்த காலக்கெடு ஒருமாதத்துக்கு முன்னர் காலாவதியாகிவிட்டது. சில இலங்கையர்கள் தாங்கள் இன்னமும் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுவதாக உணர்கின்ற போதிலும் 75ஆவது சுதந்திர தினத்தை அரசாங்கம் பெரும் எடுப்பில் கொண்டாடியது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி ஏற்கெனவே மங்கிப்போய்விட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி, கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இன்னமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள் பிரிவினரின் புதிய ஆர்ப்பாட்ட அலை என்பனவே இலங்கையில் இன்று பிரதான தலைப்புச் செய்திகள். இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கு சீனா இணங்கியதை அடுத்து நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கையின் கைக்கு எட்டக்கூடியளவுக்கு அண்மையாக வந்துவிட்டது எனலாம்.

‘ஏனைய விவகாரங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக பொருளாதார மீட்சி ‘ என்ற அணுகுமுறையை அரசாங்க ஆதரவாளர்கள் கடைப்பிடிக்கும் நிலையில் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியை கையாளுவதில் விரைவில் அக்கறை காண்பிக்கப்படக் கூடியதற்கான அறிகுறியை காணமுடியவில்லை.

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் வரலாற்று ரீதியாக இந்தியா ஒரு பிணக்குத்தீர்க்கும் பங்கை வகித்துவந்திருக்கும் அதேவேளை இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் அக்கறையும் செல்வாக்கும் அருகிக்கொண்டே போகிறது என்று  தமிழ் அரசியல்வாதிகளிலும் தமிழ்ச் சமூகத்திலும் பலர் கூறுகிறார்கள். இலங்கையில் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிர கவனத்தைச் செலுத்தும் புதுடில்லி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை குறித்து வழமையான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர வேறு எதையும் அது விடயத்தில் பெரிதாக செய்வதில்லை என்று அவதானிகள் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய நிலைமை இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை எங்கு கொண்டுபோய்விடும்? பல்தசாப்த கால போராட்டங்கள், ஆயுத மோதல்களுக்குப் பிறகு இன்னமும் தமிழ் மக்கள் நீதி, சமத்துவம் மற்றும் கௌரவத்தைக் கோருகிறார்கள். அரசியல் தீர்வு  நீண்டகாலமாக நழுவிக்கொண்டே செல்கிறது.

மீரா ஸ்ரீனிவாசன்

The elusive political solution in Sri Lanka என்ற தலைப்பில் ‘த இந்து’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.