Photo, THE HINDU

உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் சாதுரியமான முறையில் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஆதரவாளர்கள் திருப்திப்படுகிறார்கள் போன்று தெரிகிறது. ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் ஒன்று இருக்கவேண்டும், அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர்கள் நிராகரிக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்கள் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும் கூட அந்தத் திகதி குறித்து தீர்மானிப்பதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தின் பதிவுகளை வைத்திருக்கவில்லை என்றும் கூட்டத்தில் குறைந்தபட்ச நிறை எண் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் அரசாங்க ஆதரவாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவை குறைகூறுகிறார்கள்.

தேர்தல் செலவினங்களுக்கு ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று இரண்டாவது வாதம் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. இருக்கின்ற சொற்ப பணத்தை ஒதுக்குவதற்கான அத்தியாவசிய சேவைகள் என்று குறிப்பிட்டு சில சேவைகளை அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கிறது. அவற்றில் ஒன்றாக உள்ளூராட்சி தேர்தல்கள் இல்லை. வங்குரோத்து நிலையில் இருக்கும்போது தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பது நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்று அரசாங்கம் வாதிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரு வாதங்களும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டியவைதான் என்று மக்களில் பெரும்பான்மையானவர்களை நம்பவைக்கப்போதுமானவை என்று அரசாங்கம் நம்பிக்கைகொள்ளக்கூடும். உள்ளூராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி மார்ச் 9 நடத்தப்பட்டால் அரசாங்கக் கட்சிகள் படுமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடம் நாடு சந்தித்த பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்களில் அதிகப் பெரும்பாலானவர்களை மோசமாகப் பாதிக்கின்ற வகையில் ஏற்றத்தாழ்வாக செய்யப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளுக்கு பிறகு அரசாங்கத்தின் செல்வாக்கு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துகொண்டே வந்திருக்கிறது.

அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றின் பிரகாரம் அந்த வீழ்ச்சி பத்து சதவீதத்துக்கும் அதிகமானதாகும். தங்களது மக்கள் செல்வாக்கு தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதை அரசாங்கத் தலைவர்கள் அறிவார்கள். கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அப்பால் புலனாய்வு சேவைகளிடம் இருந்தும் அவர்களுக்கு அறிக்கைகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு குறைந்துகொண்டுபோகிறதோ அந்தளவுக்கு அது பாதுகாப்பு படைகளில் தங்கியிருக்கும் போக்கும் அதிகரிக்கும்.

அதன் விளைவாக, தேர்தல்களை ஒத்திவைப்பதில் அரசாங்கம் கண்ட வெற்றி அதற்காக அது மேற்கொண்ட முயற்சிகளுக்கு தகுதியானதல்ல. அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்குப் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியது எனலாம். தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தவறியதை எதிர்த்து எதிரணி கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பது சாத்தியம். ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகளின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது.

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு காட்டும் எதிர்ப்பு பற்றிய சர்வதேச ஊடகங்களின் பார்வை அனுகூலமானதாக இல்லை. “வங்குரோத்து அடைந்த இலங்கை தேர்தல்களை ஒத்திவைக்கிறது” என்பதே சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்காக அரசாங்கம் தொடர்ந்து காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், அது தொடர்ந்து பிற்போடப்பட்டுக்கொண்டே போகிறது. இந்த நிலைமை நாட்டின் உறுதிப்பாடு குறித்து பொதுவில் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை தோற்றுவிக்கப்போவதில்லை.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி

அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகரித்துக்கொண்டுபோகும் நிலையில் தீவிர போக்குடைய கட்சிகளுக்கே மக்களின் ஆதரவு அதிகரிக்கும். தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் பெருமளவில் வெற்றியைப் பெறக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி வீதிப் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றது.

அவர்களது ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் தடுத்து தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் மக்களின் தனிப்பட்ட கைத்தொலைபேசிகளிலும் வேதனைதரும் காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக செல்வதற்கு தெரிந்தெடுக்கும் வீதிகளுக்கு குறுக்கே பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிந்து நிற்கிறார்கள். பிறகு கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நீ்ர்ப்பீரங்கி தாக்குதல்களையும் நடத்துகிறார்கள். இறுதியாக தடியடி நடத்தும் பொலிஸார் துரதிர்ஷ்டவசமாக பிடிபடும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றுகிறார்கள்.

மக்கள் கிளர்ச்சியும் பயங்கரவாதமும் கலந்த போராட்ட முறை மூலமாக கடந்த காலத்தில் இரு தடவைகள் அரசாங்கத்தை எதிர்கொண்ட வரலாற்றையுடைய ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)இன் அவதாரமான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கணிசமானளவு  தப்பெண்ணங்கள் தொடருகின்றன. அந்த இரு கிளர்ச்சிக் காலகட்டங்களிலும் அரசாங்க சொத்துக்கள் தீக்கிரையாகின. அரசாங்கமும் கிளர்ச்சிக்காரர்களும் படுமோசமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள் – அரசாங்கமும் எதிர்க்கட்சியும் – கடந்தகால பயங்கரங்களை சாத்தியமானளவுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அமைதிவழி போராட்டங்களைச் செய்பவர்களுக்கு எதிரான கடந்த பல மாதகால  பொலிஸாரினதும் பாதுகாப்புப் படைகளினதும் தாக்குதல்களின் காட்சிகள் மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருப்பாரேயானால் முதலில் கைதுசெய்யப்படுபவர்களில் ஒருவராக அவரும் இருப்பார். அவர் மக்களின் சீற்றத்தை தூண்டியிருப்பார். அடக்குமுறையாளர்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பவும் அவர் முயன்றிருப்பார். தேசிய மக்கள் சக்தி இன்று அத்தகைய ஒரு பாத்திரத்தையே வகிக்கிறது. ஜனநாயகத்துக்கான போராட்டம் அகிம்சை வழியிலானதாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும்.

நாட்டு மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை அரசாங்கம் இழந்துகொண்டுபோவது இலங்கையின் ஜனநாயகத்துக்கோ அல்லது அதன் பொருளாதார நலனுக்கோ உதவப்போவதில்லை. தினமும் காலை வேளையில் பாடசாலைக்குச் செல்லும் வழியில் தனது மூன்று சிறிய பிள்ளைகளுக்கு ஒரு பக்கெட் மாரி பிஸ்கட்டையும் ஒரு பக்கெட் பாலையும் வாங்குவதற்கு தான் படுகின்ற பாட்டைப் பற்றி முச்சக்கரவண்டி சாரதியொருவர் வெளிப்படுத்திய ஆதங்கத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்போது அந்தப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் அதேவேளை அவரது வருமானத்தில் எந்த முன்னேற்றமும் கிடையாது.

அதனால் அவர் மூன்று பிள்ளைகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பக்கெட் பிஸ்கட்டையும் பாலையும் இப்போது வாங்கிக்கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. அவர்களில் பெரிய பிள்ளையினால் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். மற்றைய இரு பிள்ளைகளும் நிலைமையை விளங்கிக்கொள்ளக்கூடியவர்கள் இல்லை. அந்தத் தந்தை அரசாங்கத் தலைவர்களை சபித்தார். இது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். இப்போது அவரை நான் சந்தித்தால், வறியவர்களுக்கான மின்சாரக்கட்டணம் மூன்று மடங்கிற்கு அதிகமாகவும் பணவசதியுடையவர்களுக்கான மின்சாரக்கட்டணம் சுமார் 50 சதவீதத்தினால் மாத்திரமும்  அதிகரித்திருக்கும் நிலையில் அவர் அரசாங்கத் தலைலர்களை மேலும் கூடுதலாக சபிப்பார் என்பது நிச்சயம்.

ஒத்திவைப்பை மீளாய்வு செய்க

அந்த முச்சக்கர வண்டிச்சாரதி போன்ற மக்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்கள் யாருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதைப் பொறுத்தவரை எந்தக் கேள்விக்கும் இடமில்லை.கடந்த வார இறுதியில் நான் இரத்தினபுரியில் இருந்தேன். ஊழல்தனமான உள்ளூர் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக நான் சந்தித்த சமூகத்தலைவர்கள் கூறினார்கள். இத்தகைய அபிப்பிராயத்தை வடக்கில் சமூக மட்ட ஆய்வுகளைச் செய்கின்ற ஒரு கல்விமானிடம் இருந்தும் நான் கேட்டேன். பழையவர்களை அகற்றிவிட்டு புதியவர்களைக் கொண்டுவருவதற்கு மக்கள் தேர்தலை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ளூர் மட்டத்தில் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையிலான இந்த சங்கமத்தை நான் கண்டேன். அவர்கள் மார்ச் 9 உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து நிச்சயம் வெறுப்பும் விரக்தியும் அடைவார்கள். வடக்கிலும் தெற்கிலும் தங்களது உள்ளூர் மட்டங்களில் இருந்து முறைமை மாற்றத்தைத் தொடங்க மக்கள் விரும்புகிறாரகள்.

கடந்தகால ஜே.வி.பி. கிளர்ச்சிகளுக்கும் தற்போது வீதிப்போராட்டங்களில் இறங்கியிருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டங்களுக்கு வருகின்ற இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த காலத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது. அவர்கள் ஒரு முறைமை மாற்றத்துக்காக (System Change) – பிரதானமாக கடந்த நான்கு தசாப்தகாலமாக ஆட்சிமுறையை உருவகப்படுத்தி நிற்கும் ஊழலுக்கும் தண்டனையின்மைக்கும் ஒரு முடிவைக் கட்டுவதற்காக அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களை அவர்கள் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான செயன்முறையின் ஒரு அங்கமாக பார்க்கிறார்கள். முறைமை மாற்றம் பல மட்டங்களில் இருக்கலாம். அத்தகைய மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டுவருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசியல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான அவர்கள் மீதான அண்மைய பொலிஸ் தாக்குதல்களை கண்டனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதை  காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலைகளில், உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான பணத்தை அரசாங்கம் தேடிக்கொடுக்கும் என்று மக்களுக்கு உறுதியளிப்பதன் மூலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதிர்ச்சியும் விவேகமும் உடைய ஒரு மதிப்பார்ந்த அரசியல் தலைவராக தன்னை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் துடிப்பான ஆதரவை வழங்கவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்கமுடியும்.

உள்ளூராட்சி தேர்தல்களுக்கான புதிய திகதியொன்றை மார்ச் 3ஆம் திகதி தருவதாக தேர்தல் ஆணைக்குழு கூறியிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கப்படக்கூடிய திகதியே உண்மையில் அந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்ற திகதியாக இருக்கவேண்டியது தேசிய நலன்களுக்கு உகந்ததாகும். சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களே ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதை பேணிப்பாதுகாத்து போற்றுவதன் மூலம் அரசாங்கத்தின் ஜனநாயக சான்றாதாரங்களை வலுப்படுத்தமுடியும். அதன் மூலமாக சர்வதேச சமூகம் அதன் ஒருமைப்பாட்டையும் பணத்தையும் இலங்கையில் முதலீடு செய்யக்கூடியதாக நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும்.

கலாநிதி ஜெகான் பெரேரா