Photo, france24
உள்ளூராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை. தேர்தல் ஆணைக்குழுவினால் முன்கூட்டியே கொடுப்பனவு செய்யப்படாவிட்டால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடமுடியாது என்று அரசாங்க அச்சகர் மறுத்ததன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் தாமதம் மற்றும் தபால்மூல வாக்களிப்பை உரியகாலத்தில் நிறைவுசெய்வதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலின் விளைவாக தேர்தல்களை ஒத்திவைக்கவேண்டிய தேவை ஏற்படலாம் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியிருக்கிறது.
இந்த எதிர்பாராத நிகழ்வுப்போக்குகள் நாட்டின் ஜனநாயக செயல்முறையை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. அரசாங்க திணைக்களங்கள் கடன் மூலம் கொள்வனவுகளைச் செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் எடுத்த முடிவை எடுத்தது. முன்கூட்டிய கொடுப்பனவுகள் இல்லாமலேயே வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணியை அரசாங்க அச்சகர் பொறுப்பேற்கும் ஒரு நீண்டகால நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இது அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் நிதியளிக்கப்படுகின்ற இரு அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு உள்ளக பிரச்சினையாக இருப்பதால் இந்த சிக்கல் ஒரு அபத்தமாகும். இந்த நேரத்தில் தேர்தலுக்குப் போவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் தயக்கத்தை இது வெளிக்காட்டுகிறது. அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மற்றும் அதன் நியாயப்பாடு மீதான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் பரவலாக நோக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்தல்கள் தொடர்பாக அதன் முன்னால் வந்த இரு வழக்குகளில் ஒன்றை உயர்நீதிமன்றம் இவ்வாரம் விசாரணைக்கு எடுக்கிறது. முதல் வழக்கில் தனது தீர்மானத்தை அறிவித்த உயர்நீதிமன்றம் தேர்தல்களுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழு அவ்வாறு ஏற்கெனவே செய்திருப்பதால் தலையீடு செய்யவேண்டிய தேவை இல்லை என்று கூறியது.
ஆனால், மனுவில் இருந்த குறைபாடுகள் காரணமாக இரண்டாவது வழக்கை உயர்நீதிமன்றம் பரிசீலிக்காமல் அந்த குறைபாடுகள் திருத்திக்கொள்ளப்படுவதற்கு வசதியாக பெப்ரவரி 23 ஆம் திகதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. இந்த வழக்கில் மனுதாரர் தற்போதைய பொருளாதார நிலைவரம் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு உகந்தது அல்ல என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்.
இது தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அந்த நோக்கத்துக்கு அவசியமான அரசியல் உறுதிப்பாட்டை பேணுவதற்குமே முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கிறது என்ற அரசாங்கத் தலைவர்களின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கான செலவினம் சுமார் 1000 கோடி ரூபா என்று மதிப்பிடப்படுகிறது. இந்தத் தொகையை இந்த வருடத்துக்கான தேசிய பட்ஜெட்டில் அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. ஆனால், அவ்வாறு ஒதுக்கியிருந்தாலும் தற்சமயம் தேர்தல்களுக்கான செலவினங்களுக்குக் கொடுப்பதற்கு தன்னிடம் நிதியில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
திரும்பவும் ஆர்ப்பாட்டங்கள்
அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதில் ஐந்து துறைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் காரணமாக திறைசேரி அதற்கு இருக்கும் இக்கட்டுநிலையை விளக்கிக்கூறியிருக்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே நிதியைப் பெறுவது என்று அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என்று திறைசேரி செயலாளர் கூறினார். அத்தகைய சேவைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான செலவினங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு, போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்குதல், சேவைகாலக் கொடுப்பனவு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் செயற்திட்டங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் ஆகியவையே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரியவையாக உள்ளன. இந்த பட்டியலுக்கு வெளியே உள்ள ஏதாவது செலவினத்துக்கு நிதி தேவை என்றால் விசேட அனுமதி பெறப்படவேண்டும். உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவது ஜனநாயக முறைமையின் அடித்தளமாகும். அதுவும் ஒரு அத்தியாவசிய சேவையாகவே கருதப்படவேண்டிய தேவை இருக்கிறது.
தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் அல்லது தேர்தல்களுக்கான புதிய திகதியொன்று நிர்ணயிக்கப்படாவிட்டால் அரசியல் உறுதிப்பாடின்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த சில வாரங்களாக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சகர் மற்றும் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் தேர்தல்களை நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதையே வெளிக்காட்டுகின்றன என்று கூறியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அந்த முயற்சி இலங்கை மக்களின் வாக்குரிமையை வலுவிழக்கச்செய்து அவர்களின் இறையாண்மையை ஆபத்துக்குள்ளாக்குகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது.
சட்டத்தினால் கட்டாயமாக்கப்பட்ட தேர்தல்களைத் தடுப்பதற்கான அத்தகைய முயற்சிகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான முன்னென்றும் இல்லாத வகையிலான ஒரு தாக்குதலாக அமைவதுடன் எதிர்காலத்தில் தேர்தல் செயல்முறைக்கு பாரதூரமான அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். அத்தகைய நடவடிக்கைகள் மக்கள் செல்வாக்கில்லாத நிறைவேற்று அதிகார பீடமோ அல்லது நாடாளுமன்றமோ தேர்தல் ஒன்றுக்காக வளங்களை ஒதுக்கீடு செய்வதை குழப்பி தங்களது பிரதிநிதிகளையும் தலைவர்களையும் தெரிவுசெய்வதிலிருந்து இலங்கை மக்களை தடுக்கும் பயங்கரமான முன்னுதாரணம் ஒன்றை வகுத்துவிடக்கூடும்.
இத்தகைய பின்புலத்தில், தேர்தல்களை நடத்துவதற்கு தவறுவது எதிரணி கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் கடந்த வருடம் காணப்படக்கூடியதாக இருந்த கொந்தளிப்பான நிலைவரமாக மாறக்கூடிய பரந்தளவிலான போராட்ட இயக்கத்தின் நேரடி நடவடிக்கைக்கும் வழிவகுக்கலாம். அரசாங்கங்கள் தேர்தல்களை ஒத்திவைத்ததால் இலங்கைக்கு ஏற்பட்ட இரு எதிர்மறையான அனுபவங்கள் மீண்டும் நாட்டை அச்சுறுத்துகின்றன
முதலாவது, 1970 பொதுத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் அதற்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி 1972ஆம் ஆண்டில் கொண்டுவந்த புதிய ஒரு அரசியலமைப்பின் மூலமாக மேலதிகமாக இரு வருடங்களுக்கு அதாவது 1977 வரை நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்தது. இரண்டாவது, 1977 பொதுத் தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் 1982ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களுக்கு (ஒரு முழுப் பதவிக்காலத்துக்கு) நீடித்தது. அதன் விளைவாக நாட்டில் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டன.
நியாயப்பாட்டை மீளப்பெறுதல்
ஒரு அரசாங்கத்துக்கும் அதன் கொள்கைகளுக்குமான ஆதரவை அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் மக்களுக்கு வழங்குகின்றன. உணர்வுகளை அடக்கிவைக்காமல் மக்கள் அவற்றை வெளிப்படுத்துவதற்கு தேர்தல்கள் உதவுகின்றன. சர்வஜன வாக்கெடுப்புக்கு பிறகு ஒரு வருடத்திற்குள் மக்கள் மனங்களில் குமுறிக்கொண்டிருந்த விரக்தி 1983ஆம் ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து பாரிய இன வன்செயலாக வெடித்தது. அது முழு அளவிலான இனக்கிளர்ச்சிக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்தது. அந்த இரு சந்தர்ப்பங்களிலும் தேர்தல் செயல்முறைகளை சீர்குலைத்த அரசாங்கங்கள் அவற்றின் அதிகாரத்தின் உச்சியில் இருந்த வேளைகளிலேயே அந்த விதிவசமான தீர்மானங்களை எடுத்தன.
ஆனால், தற்போதைய நிலைவரம் அதற்கு முற்றிலும் மாறபட்டதாக இருக்கிறது. தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணையின் அடிப்படையிலான ஒன்று என்று கருதப்படமுடியாததாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசாங்கம் அது பதவியில் இருப்பதற்கான நியாயப்பாட்டை வலுப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஜனநாயக செயற்பாடுகளுடன் தொடர்புடைய கருமங்கள் உட்பட சட்டங்களை நேர்மையான முறையில் பின்பற்றுவதன் மூலமாகவே அதைச் செய்யமுடியும்.
கடந்த வருடம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை பதவிவிலக நிர்ப்பந்திப்பதில் மக்கள் போராட்ட இயக்கம் வெற்றியடைந்த வேளையில் இருந்து அரசாங்கத்தின் நியாயப்பாடு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது. தேர்தலுக்கு போகாமல் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் தன்னை மீள வடிவமைத்துக்கொண்டமையே அரசாங்கத்தின் சாதனையாகும். இது அதிகாரத்தில் இருப்பதற்கு அரசியலமைப்பை பின்பற்றிய ஒரு சட்டபூர்வ அரசாங்கம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அரசாங்கத்தின் நியாயப்பாடு கேள்விக்குரியது. சட்டபூர்வத்தன்மை என்பது சட்டத்துக்கு பொருத்தமாக அமைவதேயாகும். ஆனால், நியாயப்பாடு என்பது பொதுவில் மக்களுக்கு ஏற்புடைய தார்மீக மற்றும் நேர்மையான பாதையைப் பின்பற்றுவதுடன் சம்பந்தப்பட்டதாகும். தேர்தல்களை தாமதிப்பது அரசாங்கத்தின் நியாயப்பாட்டை பலப்படுத்தப்போவதில்லை. மாறாக அதை மேலும் அரித்துச்சென்று ஜனநாயகத்துக்குப் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும். தேர்தலை நடத்தத் தவறுவது இரண்டாவது மக்கள் போராட்ட இயக்கத்துக்கு வழிவகுக்கலாம். அதை அரசாங்கத்தினால் சமாளிக்கமுடியாமல் போகும்.
கடந்த கால ஜனநாயக சிதைவுகளினதும் அவற்றைத் தொடர்ந்து வந்த தோல்விகளினதும் அனுபவங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியதாகவே தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவம் இருக்கிறது. திடீரென்று ஆபத்தானதாக மாறக்கூடிய எத்தகையதொரு சூழ்நிலையில் தாங்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். இத்தகைய பின்புலத்தில் அரசாங்கம் அதன் அடுத்த நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்த்திருக்கக்கூடியது சாத்தியம். அரசாங்கத்தின் எதிர்வினையை வடிவமைப்பதில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் முக்கியமானதாக அமையக்கூடியது சாத்தியம்.
ஒரு குறுகியகால ஒத்திவைப்புக்குப் பின்னர் என்றாலும் கூட, உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தேசிய நலன்களுக்கு உகந்ததாக இருக்கும். ஜனநாயக செயல்முறையின் முதன்மை போற்றிப் பேணப்படுவது அவசியம். அதனுடன் கூடவே, பொருளாதார மீட்சிக்குத் தேவையான அரசியல் உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்வதில் அரசாங்கத்தினதும் எதிரணியினதும் பங்கேற்பை வேண்டிநிற்கும் மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக நெருக்கடியை மாற்றுவதற்கான சாத்தியம் வரும்.
கலாநிதி ஜெகான் பெரேரா