Photo, Selvaraja Rajasegar

இலங்கையில் குடியேறி இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து பல தலைமுறைகளுக்குப் பின்பும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என அடையாளப்படுத்தல் ஒரு இனத்திற்குரிய அடையாளம் அல்ல. இந்த அடையாளம் இலங்கையில் உள்ள ஏனைய இன சமூக மக்களிடமிருந்தும் தேசியத்திலிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும்.

குடியுரிமை பறிக்கப்பட்டதற்குப் பின்பாக அதைப் பெறுவதற்கான செயல் வடிவம் தோன்றி இருக்கவேண்டும். தேசிய இன எழுச்சி எழாமல் போனதற்கு பல காரணங்கள். உழைப்பைத்தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. வாழ்வாதாரத்தின் மூல ஊற்றாக தினக் கூலிமுறை. தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் நிலை, கல்வி கற்ற சமூகம் தோன்றவில்லை. இந்தக் காலப்பகுதியில் தொழிற்சங்கங்கள் இருந்தன. தோட்ட நிர்வாகத்துடன் தொழில்ரீதியாக ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதில் அதன் பணிகள் தொடர்ந்தன.

1940 காலம் முதல் இந்திய காங்கிரஸ் தலைவர்களின் வருகையும் இந்திய தேசியம் பற்றிய பரப்புரையும் அமைப்பு ரீதியாக மலையகத்துக்குள் முன்னெடுத்தமையும் நிகழ்ந்தன. தேசியத்திலிருந்து ஒட்டுமொத்தமாக ஒரு இன சமூகம் தூக்கி எறியப்பட்டுள்ள நிலையில் அந்த மக்கள் சமூகத்திலிருந்து வெளிப்படவேண்டிய அதிர்வுகள் வெளிப்படவில்லை.

1950 காலங்களில் மலையகத்தமிழர் அடையாளம் வெளிப்பட்டதுடன் அறுபதுகளுக்குப் பிறகு, மலையகத்தில் தோன்றிய கல்வி கற்ற வட்டத்தினரால் மலை நாட்டு வாலிபர் சங்கம், மலையக இளைஞர் முன்னணி, மலையக இளைஞர் பேரவை மலைநாட்டு எழுத்தாளர்கள் சங்கம், மலையக மக்கள் இயக்கம் என அரசியல் வடிவம் பெருவதைக் காண முடிகிறது.

வரலாற்றுத் தேவையையொட்டி மலையகத்தில் தோன்றிய அமைப்புகள் அதன் பணியைத் தொடராமல் போவதற்குப் புறக்காரணங்களை நோக்கலாம். 1948 தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தல், 1964 உடன்படிக்கையும் மக்கள் வெளியேற்றமும், 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் அடக்குமுறைகளும், தோட்டங்கள் தேசியமயமும் தோட்டங்கள் துண்டாடலும் மக்கள் வெளியேற்றமும், 1973இல் ஏற்பட்ட உணவுப்பஞ்சம், 1977-81-83 காலங்களில் நிகழ்ந்த இன வன்முறையும் மலையக மக்கள் சிதறடிப்பும், ஈழ விடுதலைப் போராட்டமும் மலையக மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் போன்றவைகளால் இன அடையாளத்தின் முன்னெடுப்பு பின்தள்ளப்பட்டிருந்த நிலையில் “மலையக மக்கள் முன்னணி” அடையாளத்துடன் அரசியல் இயக்க வடிவம்கொண்டெழுந்ததைக் காணலாம்.

1948 குடியுரிமை பறிப்புக்கெதிராகவும், 1964 உடன்படிக்கை காலத்திலும் எழுச்சிக்கொள்ளும் தேவை இருந்தும் அரசியல் விழிப்புணர்வு இல்லாமையால் இம்மக்கள் மத்தியிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் தோன்றவில்லை. மலையகத்தை வழிநடத்திய தொழிற்சங்கத்தலைமைகளும் அரசியல் தொலைநோக்கற்றிருந்தன.

தேசிய இன அடையாளம் உதிரியாக வாழும் மக்களிடமிருந்து வெளிப்படுவதில்லை. மொழி, பண்பாடு, கலை இலக்கிய வெளிப்பாடுகள் உற்பத்தியோடு கூடிய நிலப்பகுதியுடன் தொடரும் இருப்பும் தலைமுறைகளின் வரலாற்றையும் அவர்களின் பங்களிப்பும் கல்வி மற்றும் பொருளாதாரத் தேவையுடன் முன்னேறிய சமூகத்திடமிருந்தே இது போன்ற கோரிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

சமத்துவம், பொருளாதாரம், அரசியல், ஜனநாயகம் என மறுக்கப்பட்டுவரும் உரிமைகளைப் பெறுவதற்காக தங்களின் தேசிய அடையாளத்தை முன்னெடுக்கத் தோன்றுவது, வரலாற்றில் தவிர்க்க இயலாத நிலை மலையகம் என்பதும், மலையக தமிழர்கள் எனக் கூறுவதும், சந்ததி சந்ததியாக உழைத்த இம்மக்களின்  உழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு சமூகத்தின் வரலாற்று குறியீடே மலையகமாகும். தங்களின் தேசிய இன அடையாளத்தின் முகம் இந்த மலையகம் என்பதை மறுப்பதற்கில்லை.

1964 உடன்படிக்கையும், 1988ஆம் ஆண்டின் 39ஆம் இலக்கச்சட்டம் மற்றும் 2003 ஆண்டின் 35ஆம் இலக்கச்சட்டங்கள் மூலம் இந்திய வம்சாவழியின நாடற்றோர் பிரச்சினை தீர்வை எட்டின. இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய இனங்களின் வரிசையில் மலையகத் தமிழரும் தங்களுக்கான இன அடையாளத்தை முன்நிலையாக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் “இந்திய வம்சாவழி” என்ற அடையாளம் பூர்வீகத்தை குறிக்குமே தவிர ஒருநாட்டின் தேசிய இன அடையாளத்தை அல்ல. மாறாக ஏனைய தேசிய இனங்களிலிருந்து அந்நியமாக்கும். தங்களை அந்நியப்படுத்த விரும்பாத மலையகத்தைச் சார்ந்த பல்லாயிரக் கணக்கானோர் வாக்காளர் பதிவில் தங்களை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

உழைக்கும் சமூகமாக மட்டுமல்லாமல் வரலாறு முழுவதும் உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் இனம் தனது தேசிய இன அடையாளத்தை வெளிப்படுத்தும் அதேவேளை, தங்களுக்கான உரிமைகளையும் முன்நிறுத்த வேண்டும்.

இலங்கையில் பெருந்தோட்ட உருவாக்கத்தால் நில உடைமை சமூக அமைப்பு தகரவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டு தோன்றிய புதிய தொழிற்சாலைகள், நகரங்களில் தொழிலாளர்களின் உதயம், அரசு, அதிகார அமைப்பு, சாலைகள் அமைப்பு, நகரங்களின் தோற்றம், வணிக வளர்ச்சி என தேசம் என்ற கட்டமைப்பு வடிவம்கொள்ள பெருந்தோட்ட உற்பத்தி காரணியானது.

இந்தியர் வருகையில் தொடங்கி, இந்திய வம்சாவளிகளாக பரிணமித்து, மலையகத் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் இனத்தினரின் முன்னோர்களின் உழைப்பாலும் உருவானதே நவீன இலங்கை.

பெருந்தோட்ட உற்பத்தி, காலனிய ஆதிக்க நலன் பொருளாதாரம் என்றாலும் நாட்டின் நிர்வாக கட்டமைப்புகளை கட்டமைப்பதிலும், முதலாளி வர்க்கம் தோன்றவும், தேசம், தேசியம் என்ற படிநிலை மாற்றங்களை தோற்றுவித்தன.

மலையகத் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுபோல், ஏனைய இன சமூகத்தினருக்கும் தேசிய விடுதலை, தேசிய இனவிடுதலை மறுக்கப்பட்டுள்ளது, மறுக்கப்பட்டு வருகிறது. “தேசியம் என்பது முதலில் சுயம் பற்றியது. அத்தகைய சுயம் முதலில் தனிமனித உரிமையில் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு நபருக்கும் சுயகெளரவம் உண்டு; சுயமான உரிமைகள் உண்டு. இதனை தனிமனித உரிமை என்பர். ஒரு மக்கள் கூட்டம் சார்ந்த உரிமை சம்பந்தப்படும்போது அதனை கூட்டுரிமை என்பர். தனிமனித உரிமை கூட்டுரிமையும் சரிவர இணைந்த ஒன்றுதான் தேசியம் என்பதாகும்”

கடந்‌த நூறு ஆண்‌டுகளுக்‌கு முன்‌பாக தமிழர்‌ தேசியத்‌திற்‌கெதிரான கருத்‌துரு, ஏனைய சிறுபான்‌மை இனத்‌திற்‌கு எதிராகவும் நிலைகொண்‌டு தொடர ஆரம்பித்‌தன. குறிப்‌பாக மலையகத் தமிழர்களுக்‌கு எதிரான இனவாதம் சர்‌வசன வாக்‌குரிமை தொடர்‌பான விவாதத்‌தில் சட்‌ட நிருபன சபையில் வெளிப்பட்டு இந்தியர்‌ எதிர்‌ப்பு, இந்‌தியர் வெளியேற்‌றம், குடியுரிமை பறிப்‌புடன் மேல் எழ ஆரம்‌பித்‌தன.

நாடு விடுதலைக்‌குப்‌ பின்‌பு மொழி தேசிய இனங்‌களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்‌டு வரும் நிலையில், மலையகத் தமிழர்‌களின் சிதறடிப்‌புகள் 1964ஆம் ஆண்‌டு உடன்‌படிக்கையுடன் ஆரம்‌பமாகின.

1964ஆம் ஆண்‌டு உடன்படிக்கைக்குப் பிறகு இதைப் பற்றி மேலவையில் உரையாற்றிய சிரிமாவோ பண்டாரநாயக்க “இந்தியர்களிடையே காணப்பட்ட உறுதியான இனரீதியான பிணைப்புகள் மற்றும் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக சுதேச மக்களுடன் கலந்து வாழ்வதற்கான எந்த அறிகுறியும் இந்த மக்களிடத்தில் காணப்படாமை, தமது தாய் நாட்டிற்கு இவர்கள் தொடர்ச்சியாக காட்டிவரும் விசுவாசம் மற்றும் அதன் நிமித்தம் ஏற்கனவேயுள்ள சிறுபான்மை இனங்களின் எண்ணிக்கைக்கு மேலும் ஒன்றைக் கூட்ட வேண்டிய நிலை அதன் நிமித்தம் அவர்களின் இன எண்ணிக்கையானது மிகையான அரசியல் அதிகாரங்களுக்கு அவர்களை உரித்துடையவர்களாக்கும். பிரஜா உரிமையைப் பொறுத்த வரையில் இந்தியர்களை சுதேச மக்களுடன் சம அந்தஸ்தில் வைக்கக் கூடிய சலுகைகளை வழங்குவதில் இலங்கையானது எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளது” (இலங்கை நாடாளுமன்ற இல.6 ப13) என பதிவுசெய்துள்ளார்.

நாடு விடுதலையாவதற்கு முன்னமே தேசிய சிறுபான்மை இனங்களுக்கெதிராக விதைக்கப்பட்டுள்ள இனவாதம் பெளத்த மதத்துடன் நிர்வனமயமாகியுள்ளதால் இந்த அமைப்பின் நிலைப்பாட்டை  சிரிமாவோ பண்டாரநாயக்கா வெளிப்படுத்தி உள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

“சுதேச மக்களுடன் சம அந்தஸ்தில் வைக்கக்கூடிய சலுகைகளை வழங்குவதில் இலங்கையானது எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளது” என்ற நிலைப்பாடு, 1964ஆம் ஆண்டுக்குப் பின்பு தேசியத்தில் (குடியுரிமை) உள்வாங்கிய பின்பும், மலையகத் தமிழ் சமூகத்தினரை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்திவரும் நிலையை இரண்டு அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் தொடர்வதை அறியலாம்.

இந்தியர்களின் வருகை என்பது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்நாட்டை வழங்கொழிக்க செய்யவும் அழைத்து வரப்பட்டவர்களின் வருகையாகும். பிற்காலப் பகுதியில் கூலிகள் ஏற்றுமதி தடைச்சட்டத்தை இந்திய அரசு கொண்டுவந்தபொழுது இத்தடையை நீக்கக்கோரி இலங்கையில் இருந்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்ற தூதுக் குழுவில் டீ.எஸ்.சேனநாயக்கா, எஸ்.டபிளியூ.ஆர்டி.பண்டாரநாயக்க (சிரிமாவின் கணவர்) ஆகிய இருவரும் சென்றிருந்தனர். வரலாறு இவ்வாறு உள்ளது.

இம்மக்கள் மற்றவர்களின் உழைப்பில் வாழ வரவில்லை. மாறாக உழைத்து கொடுக்க வந்தவர்களாகவே வாழ்ந்துள்ளனர். இவர்களின் வரவு என்பது வரலாற்றில் நிகழக்கூடாத ஒரு விபத்தாகும். காரணம் மனிதர்களாக இங்கு இவர்கள் நடத்தப்படவில்லை. இந்நாட்டு வளர்ச்சிக்காகவே பல தலைமுறையினரை இம்மண்ணில் உரமாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. இம்மக்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யதார்த்த நிலைக்கு மாறாது. ஒரு சமூகத்தின் தன்மானம் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக்கப்படும் நிலை மாறவேண்டும்.

இலங்கையை ஆண்ட அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இனவாதம் ஒரு மனநோயாக மாறிவிட்டது. இவர்களைத்தொற்றிய இந்நோய் தேசமக்களையும் விட்டு வைக்கவில்லை.

இந்த ஆண்டு (2022) தொடக்க முதல் காலிமுகத்திடலில் நிகழ்ந்து வந்த போராட்ட களத்தில் “எழுபத்தி நான்கு ஆண்டுகளாக நாங்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம். இனியும் நாங்கள் ஏமாற மாட்டோம். இலங்கையராக ஒன்றுபடுவோம்!” என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. தேசிய சிறுபான்மை இனங்களுக்கெதிராக இனவாதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை இந்த முழக்கம் அடையாளப்படுத்துவதாக உள்ளது.

பெரும்பான்மை இன சமூகத்தினரால் இலங்கை வரலாற்றில் முதல் முதலாக, (இடது இயக்கங்களைத் தவிர்த்து) அனைத்து இனத்தினரையும் தேசத்தை காக்க ஒன்று கூட முன்னெடுக்கப்பட்டிருக்கும் முழக்கமாக இதைக் காணலாம். ஆனால், இது தேசியளவில் இயக்கமாக வடிவம்கொள்ளாத வரையும் உணர்ச்சி மிகுந்த முழக்கங்களாக ஆகிவிடக்கூடாது என்பது சிறுபான்மை தேசிய இனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மலையகத் தமிழர்களின் இன அடையாளம் என்பதும் சொல்லாடல் மட்டுமல்ல. ஒரு இன சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கு, அரசியல் அமைப்பு சட்ட விதிகளில் உள்வாங்கக் கோருவதாக அமையவேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு சட்டவிதிகளை உருவாக்கும் கருத்துக்கேற்பு குழுவிடம் மலையக இன அடையாளம் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை மலையகத்தை சேர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

நிறைவாக,

  • மலையகத் தமிழர்களின் 200 ஆண்டு நிகழ்வில் வலியுறுத்தப் படவேண்டிய விடயங்கள்;
  • மறுக்கப்பட்டுவரும் ஜனநாயக உரிமைகளைக் கோருவதற்கு இந்த நிகழ்வை பேசும் பொருளாக மாற்றுவது.
  • மலையகத்தில் உள்ள சிவில் சமூக இயக்கங்கள் ஒரு புள்ளியில் ஒன்றிணையக் கோருவது.
  • மலையக சமூகத்தின் மீது பற்றுகொண்ட அறிவுஜீவிகள், தனிநபர்கள்.
  • அரசியல் கட்சிகள்,
  • தொழிற் சங்கங்கள், வணிகர் நல அமைப்புகள் என ஒன்றுபட கோரும் கோரிக்கையாக 200 ஆண்டு நிகழ்வு அமைய வேண்டும் என்பதே முறையாகும்.

மலையக இன அடையாளத்துக்குள் மலையக வரலாற்றுடன் வழி வந்த தலைமுறைகள் மட்டுமல்ல, இந்திய வம்சாவழியினராக பல்வேறு இடங்களில் உள்ளவர்களையும் உள்வாங்கலாம்.

மு.சி. கந்தையா