Photo, Colombo Telegraph
அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு.
அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் அரசியல் பதவிகளை வகிப்பதை தடைசெய்யும் ஏற்பாடாகும்.
இதன் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை கொண்ட எவரும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கமுடியாது. ஆனால், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களாக இருப்பதாக கூறப்பட்ட போதிலும், இதுவரை எவரும் தாங்கள் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களாக இருப்பதால் நாட்டின் சட்டத்தை மதித்து பதவிகளை துறப்பதாக அறிவிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பத்து பேர் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சில வாரங்களுக்கு முன்னர் கூறினார். அவர் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால், அரசியலமைப்பு திருத்தத்தின் புதிய ஏற்பாட்டின் பிரகாரம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் இருந்துதான் கோரிக்கை வரவில்லை என்றால், சிவில் சமூக அமைப்புக்களும் கூட இதுவரை குரல் கொடுக்கவில்லையே.
இரட்டைக்குடியுரிமைப் பிரச்சினை முன்னர் ராஜபக்ஷ சகோதரர்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக நோக்கப்பட்டது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுயைில் இருந்தபோது 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்தார்.
பிறகு அவரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தம் இரட்டைக் குடியுரிகொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கு மீண்டும் அனுமதித்ததால் 2021இல் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்த பசில் ராஜபக்ஷ மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் பதவியைத் துறந்தார். மீண்டும் 21ஆவது திருத்தம் காரணமாக அவர் இனிமேல் நாடாளுமன்றம் வரமுடியாது.
அதனால் இது ராஜபக்ஷ சகோதரர்களுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதைத் தாண்டி அரசியலமைப்பை மீறி இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறிவிட்டது.
சம்பிக்க ரணவக்க கூறுவது போன்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இப்போது சட்டவிரோதமாகவே சபையில் ஆசனங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபைக்குள்ளேயே சட்டவிரோத பிரதிநிதிகள்…..!
இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஊடகங்கள் கேட்டபோது அதைக் கண்டுபிடிப்பது நாடாளுமன்றத்தின் பொறுப்பு அல்ல, தேர்தல் ஆணைக்குழுவே அதைச்செய்யவேண்டும் என்று பதிலளித்தார். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்பவர்களின் குடியுரிமை குறித்து விசாரணை செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு அல்ல என்று அதன் தலைவர் நிமால் புஞ்சிஹேவா கூறினார். போதுமான சான்றுகள் இருந்தால் எவரும் இந்தச் சர்ச்சையில் நீதிமன்றத்தை நாடலாம் என்பது அவரது நிலைப்பாடு.
2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோட்டபாய தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டபோது முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் இதே நிலைப்பாட்டையே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து ஆராய்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது பற்றி பிறகு எந்த கதையையும் காணவில்லை.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரிட்டிஷ் குடியுரிமையை மறைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இலங்கை கடவுச்சீட்டை பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் இருக்கிறது.
அவர் பிரிட்டிஷ் குடியுரிமையைக் கொண்டவர் என்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் அதனால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்படமுடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதமொன்றில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்திருப்பதாக கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
அந்தக் கடிதத்தை சபையில் தாக்கல்செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 2004ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் குடியுரிமையைக் கொண்டிருக்கும் டயனாவின் ஐக்கிய இராச்சிய கடவுச்சீட்டின் இலக்கத்தையும் 2014 அவர் பெற்றுக்கொண்ட இலங்கை கடவுச்சீட்டின் இலக்கத்தையும் வெளியிட்டார்.
டயனா 2018 நவம்பர் 5 இராஜதந்திர கடவுச்சீட்டொன்றையும் பெற்றிருந்தார். பிரிட்டிஷ் குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும் ஆவணமெதையும் அவர் காண்பிக்கவில்லை என்பதால் புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகிப்பது சாத்தியமில்லை என்று கட்டுப்பாட்டாளர் தனது கடிதத்தில் தெரிவித்திருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அந்த வேளையில் சபையில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டயனாவின் கடவுச்சீட்டு விவகாரத்தை பரபரப்பாக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். “டயனா நீங்கள் எல்லோரும் நாடாளுமன்றம் வருவதற்கு தனது கட்சியை தந்தவர் அல்லவா. அதனால் அவரின் கடவுச்சீட்டு விவகாரத்தை ஒரு பிரச்சினையாக்க வேண்டாம்” என்று விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரைப் பார்த்து கூறினார்.
ஜனாதிபதியின் இந்த ‘நகைச்சுவையான’ கூற்றை நோக்கும்போது இலங்கை குடியுரிமையை கொண்டிராதவர் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பது மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக இருப்பதெல்லாம் அவருக்கு ஒரு பிரச்சினையாக தெரியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. அதனால், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி எவ்வாறு நோக்குவார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் 2020 ஆகஸ்ட் நாடாளுமன்ற தேர்தலில் தெரிவானவர்கள். அவ்வேளையில் இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறையில் இருந்தது. இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தபோது உண்மையைக் கூறவில்லை என்பது வெளிப்படையானது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாத்திரமல்ல, தங்கள் கட்சிகளின் தலைவர்களுக்கும் அவர்கள் உண்மையை மறைத்தார்கள் அல்லது உண்மை தெரிந்திருந்தும் அவர்களை தலைவர்கள் வேட்பாளர்களாக நியமித்தார்கள் என்பதே அர்த்தம்.
இந்த விவகாரத்தில் உள்ள பெரிய பிரச்சினை இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதில் நாடாளுமன்றம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் முகங்கொடுக்கும் சிக்கலாகும். தேர்தல் ஆணையாளர் கூறுவதை நோக்கும்போது இந்த விவகாரத்தில் எவராவது நீதிமன்றத்தை நாடினால் தவிர, வேறு வழியில்லை என்றாகிறது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றவேண்டிய சட்ட மற்றும் தார்மீக ரீதியான கடமை தங்களுக்கு இருக்கிறது என்று அவர்களில் எவராவது இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாக இருக்கிறாரா என்பதை கண்டறிந்து அவர்களை பதவிவிலகுமாறு தலைவர்கள் கேட்கவேண்டும்.
எந்தவொரு கட்சியின் தலைவரும் கூட தங்கள் மத்தியில் இருக்கக்கூடிய இரட்டைக்குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களை இதுவரையில் அடையாளம் கண்டார்களோ என்றும் தெரியவில்லை அல்லது அவர்களும் சேர்ந்து உண்மையை மறைக்கிறார்களா?
இரட்டைக் குடியுரிமையுடன் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தாங்களாக முன்வந்து உண்மையை அறிவித்து பதவி விலகும் அளவுக்கு அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது. அதுவே எமது அரசியல்வாதிகளின் நேர்மையின் இலட்சணம்!
டயனா கமகேயின் குடியுரிமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கடந்தவாரம் பிரச்சினை கிளப்பியபோது சபையின் நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக சபாநாயகர் அபேவர்தன உறுதியளித்ததை காணக்கூடியதாக இருந்தது. டயனாவின் பிரச்சினையை மாத்திரமல்ல, அரசியலமைப்புக்கு விரோதமாக இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் சகலரையும் கண்டறிய அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வழமையாக இது போன்ற பிரச்சினைகளில் நீதிமன்றத்தை விரைந்து நாடுகின்ற மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் போன்ற முக்கியமான சிவில் சமூக அமைப்புக்கள் இது விடயத்தில் ஏன் இதுவரை நடவடிக்கையில் இறங்கவில்லை?
வீரகத்தி தனபாலசிங்கம்