படம் | Eranga Jayawardena, AP/ Canada

இந்த விடயம் மிகப் பாரதூரமானது என்ற வகையில் ஆரம்பத்திலேயே காத்திரமானதும் நிச்சயமாக யதார்த்தபூர்வமானதுமானதொரு வரலாற்று ரீதியான தோற்றுவாய் நிகழ்ச்சித் தொடரினை அழுத்தி உரைத்து வைப்பது அவசியமாகிறது. அதாவது, தனிநாட்டுக் கோரிக்கை என்றாலும் சரி, இன அழிப்பு யுத்தம் என்றாலும் சரி தமிழர் மீது திணிக்கப்பட்டன என்பதாகும்.

2009 மே மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தோற்கடிக்கப்பட்ட கையோடு, கொடிய 26 வருடகால உள்நாட்டு யுத்தம் முற்றுப்பெற்றதும் சமாதானம் மலர்ந்துவிட்டதென்றொரு மாயை தென்னிலங்கையில் தோன்றியது.

கடந்தகால இலங்கை அரசுகள் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு என்ற அதிமுக்கியமான விடயத்தினை சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனை காரணமாக, மாற்றாந்தாய் மனப்பான்மையில் தட்டிக்கழித்து வந்துள்ளன என்பது வரலாறு. அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தரப்பிலான சாத்வீக போராட்டங்களையும் பொலிஸ், இராணுவ பலம்கொண்டு முறியடிக்க பயங்கர அடக்குமுறைகளையும் அழித்தொழிப்புகளையும் தாங்கமுடியாமையாலேயே தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது வரலாறு. அதாவது, பழைய தமிழ் தலைமைகளினால் பயன் எதுவும் இல்லை என்றும் – ஆயுதம் ஏந்தி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் – எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து முற்றுமுழுதான அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையிலேயே யுத்தம் வெடித்தது. இத்தகைய வரலாற்று ரீதியான காரணியை ஆளும் வர்க்கங்கள் ஏற்கமறுத்த நிலையிலேயே அதாவது, அரச பயங்கரவாதமே முழுமுதற் காரணி என்பதை சிஞ்சிற்றும் உணர மறுத்து, அன்று ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சந்திரிக்காவின் சமாதானத்துக்கான யுத்தம்

பின்பு, தமிழரை விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கு “சமாதானத்துக்கான யுத்தம்” என்ற போர்வையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இருந்த பொதுஜன முன்னணி அரசினால் யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட்டது. உண்மையில் அது முன்னைய தசாப்தகால யுத்தத்தைக் காட்டிலும் மோசமாக நடத்தப்பட்டது. சந்திரிக்கா அரசு விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சுகள் அர்த்தபுஷ்டியற்ற, அரைவேக்காடானதாய் இருந்தபடியால் அவை தோல்வியடைந்தன. 2002இல் ரணில் விக்கிரமசிங்க அரசு மேற்கொண்டு வந்த யுத்த நிறுத்தத்துடன் கூடிய சமாதான முயற்சியை முறியடிக்கும் நோக்கங் கொண்டு, அவ் அரசிற்கு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மூடுவிழா நடத்திவைத்தார்.

பின்புதான், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கைக்கு ஆட்சி மாறியது. ஜனாதிபதி ராஜபக்‌ஷ அரசு சிறிது காலம் ஒப்பனைக்காக விடுலைப்புலிகளுடன் பேச்சுகளை நடத்தவந்ததாயினும், எதிர்பார்த்தது போல் கிடைத்ததொரு பிரச்சினையை, அதாவது மாவிலாறு தொடர்பாக விடுதலைப் புலிகள் உருவாக்கிய சர்ச்சையை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ராஜபக்‌ஷ அரசு நடத்தியதுதான் கொத்துக் கொத்தாக தமிழர் அழிக்கப்பட்டகோர யுத்தமாகும்.

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சில ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, சீனா அடங்கலாக பல நாடுகளின் ஆதரவுடனேயே ராஜபக்‌ஷ அரசு யுத்தத்தில் வெற்றியீட்டியது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் யுத்த வெற்றி உரை

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் ஆற்றிய வெற்றி உரையில் சிறுபான்மையினத்தவர் என்றொரு பிரிவினர் இல்லை என்றும் – அரசை எதிர்ப்பவர்கள்தான் எதிரிகள் அல்லது துரோகிகள் என்றும் – அர்த்தப்பட தனது உரையில் கூறிவைத்தார். அத்தோடு, மே 19 நாள் வருடந்தோறும் வெற்றி நாளாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். அரசின் அதிகளவு படை பலத்தையும், ஆட்சி இராணுமயப்படுத்தலையும் பறைசாற்றும் நோக்கி​லேயே அது நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இன்று ஒரு புறத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், மறுபுறத்தில் வெகு சுவாரசிமானது போல் ஒரு காரியம் நடநதேறியுள்ளது. அதாவது, இவ்வருட வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்த அழைப்பாகும். அதுவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அது அனுப்பப்பட்டதானது ஒரு மலினமான செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது.

மறுபுறத்தில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் (முழுவதுமான யுத்த காலத்திலுமல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டியதாகும்) முள்ளிவாய்க்காலில் பலியாகிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, குறிப்பாக தாய்மார்களை, சிறார்களை பகிரங்கமாக நினைவு கூர்வதற்கு அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ராஜபக்‌ஷ அரசின் வெற்றிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தகைய வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் மனங்களை மென்மேலும் புண்படுத்த வல்லவை என்ற வகையில் அவை நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருவதற்கு குந்தகமானவை என்று சில சிங்கள புத்திஜீகள் கூட அறிவுறுத்தியுள்ளராயினும், அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காவே காணப்படுகின்றன.

காலாவதியாகிவிட்டது, 2006இல் ஜனாதிபதி ராஜபக்‌ஷ வெளியிட்ட நிலைப்பாடு

இதற்கு முன்னையதொரு காலகட்டத்தில், அதாவது 2006 ஜனவரி மாதமளவில் சமாதானத்தை நோக்கிய செயற்பாடு என்ற வடிவத்தில் சில முயற்சிகளை ஜனாதிபதி ராஜபக்‌ஷ மேற்கொண்டதைக் குறிப்பிட வேண்டும். அதாவது, ஜனாதிபதி தலைமையில் நடத்தப்பட்ட மாநாடொன்றில் அரசியல் தீர்வு விடயமாக ஆராய்ந்து அறிக்கை செய்வதற்கு ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல் நிபுணத்துவம் உடையவராகக் கணிக்கப்படுபவரும் தமிழரசுக் கட்சியின் (ITAK) மறைந்த தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 37 வருட ஞாபகார்த்த உரையை (26.04.2014 பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில்) நடத்தியவருமான ஜயம்பதி விக்ரமரத்ன, குறித்த நிபுணர் குழுவில் முன்னணியில் திகழ்ந்தவர். தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை நோக்கி நகர்த்தக்கூடிய யோசனைகள் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான பெரும்பான்மை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன (அவ் யோசனைகள் பின்பு தூக்கி வீசப்பட்டன).

குறித்த நிபுணர் குழு நியமிக்கப்பட்ட அதேவேளை, அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையில் ‘சர்வ கட்சிகள் பிரதிநிதிகள் குழு’ (APRC) நியமிக்கப்பட்டது. அரசியல் தீர்வுக்கான விரிவான ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கு இக்குழு பணிக்கப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ, நல்லதொரு உரையினை நிகழ்த்தியிருந்தார். சுருங்கக் கூறின், “அதிகாரப்பகிர்வு என்பது எட்டக்கூடியளவுக்கான பிரதேசங்களுக்கெல்லாம் சென்றடையவேண்டும். அப்பிரதேச மக்கள் தத்தம் தலைவிதியை தாமே நிர்ணயிக்கவேண்டும்” என்று அர்த்தப்பட தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். அது எவ்வளவு தூரம் சாதகமானதாகக் கருதப்பட்டதென்றால், பிந்திய காலகட்டங்களில் நடைபெற்றுவந்த பேச்சுகளின் போதெல்லாம் குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பினர் அதனை சற்று மகிழ்ச்சியாக மேற்கோள்காட்டி வந்துள்ளனர். ஆனால், அவையாவும் காற்றில் பறக்கவிட்ட காரியங்களாகிவிட்டன. கடந்த காலங்களில் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையே (பண்டா – செல்வா – 1957/ டட்லி – செல்வா – 1965) ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்த கோழைத்தனமான, அரசியல் மனோதிடமற்ற ஆளும் வர்க்கங்கள் இத்தகைய நெறி பிறல்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது ஒன்றும் புதுமையல்ல. ஆம், அடிப்படையில் வாக்கு வங்கி அரசியல் முறைமையில் மூழ்கியுள்ள இலங்கையின் பேரினவாத ஆளும் வர்க்கங்கள், முழு நாட்டினதும் நீண்டகால நலன்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றுவதை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படும் வங்குரோத்துக் கும்பல்களாகவே மாற்றமடைந்துள்ளனர்.

எனவே, அரச பயங்கரவாதம்தான் தமது பிரதான ஆயுதமென ஆட்சியாளர்கள் கைக்கொண்டு வந்துள்ளனர். 1958இல், 1977இல், 1983இல் ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்ட இனக்கலவரங்கள், அழித்தொழிப்பு அட்டூழியங்களை நான் தற்போது விவரிக்க முற்படவில்லை. ஆயினும், பிறிதொரு சம்பவத்தை மட்டும் குறிப்பிடலாம். அதாவது, 1985ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ‘குமுதினி படகு சங்காரம்’ தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாகிய 29ஆவது நினைவு தினம் ராஜபக்‌ஷ அரசின் 5ஆவது ஆண்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே (15.09.2014) நடத்தப்பட்டது. அரச வாகனமாகிய ‘குமுதினி’ படகை மறித்த 7 கடற்படையினர் முதியோர், சிறியோர், பெண்கள் என்று வித்தியாசம் பாராது கோடலி, கம்பிகள், கத்திகள் மற்றும் பொல்லுகள் கொண்டு ஆவேசமாகத் தாக்கினர். அது அன்று உச்சக்கட்ட மிலேச்சத்தனமாகக் காணப்பட்டது. 1971இல், 1989இல் கிளர்ச்சி செய்த சிங்கள இளைஞர்கள் ஈவிரக்கமின்றி ஆயிரக்கணக்கில் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். இனக்கொலை வரலாறு இந்த நாட்டில் கொஞ்ச நஞ்சமல்ல.

மீண்டும் நாம் யுத்தம் முற்றுப்பெற்றதன் பின்னரான காலகட்டத்தினை நோக்குவோமாயின், ராஜபக்‌ஷ அடித்த பெரிய குத்துக்கரணமானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பினரோடு 2011 ஜனவரி முதல் மேற்கொண்டுவந்த இரு தரப்பு பேச்சுகளை பல மாதங்கள் கழித்த பின் ஒருதலைப்பட்சமாக முறித்துகொண்டதாகும். அதாவது, அதிதீவிர சிங்கள கடும்போக்காளர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படும் முதுகெலும்பில்லாத் தன்மையே இங்கு காணப்படுகின்றது. வால் நாயை ஆட்டுவது போல அரசில் உள்ள ஜாதிக ஹெல உறுமய (சம்பிக்க ரணவக்க), தேசிய சுதந்திர முன்னணி (விமல் வீரவன்ச) மற்றும் தேசப்பற்று இயக்கத் தலைவர் குணதாச அமரசேகர (பல்வைத்தியர்) போன்ற படு பிற்போக்குவாத சக்திகளே ராஜபக்‌ஷ அரசை ஆட்டிப்படைக்கின்றன. எனவே, பின்பு இழுத்தடிப்பு நாடகமாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு என்றொரு மாயமான் முன்கொண்டுவரப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவானது அரசிற்கு சார்பாக அன்றி வேறு எதையும் சுயாதீனமாகச் செய்யமென்று கூறுவது மடமை. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தை அன்று தெரிவுக்குழு கையாண்ட விதம் நல்ல உதாரணமாகும்.

இதனிடையில், இன்னொரு இழுத்தடிப்பு நாடகம் நடத்தப்பட்டு சர்வதேச அழுத்தம் காரணமாக ஒருவாறு வட மாகாண சபைக்கான தேர்தலை 2013 செப்டம்பர் நடத்தி அந்த நாடகம் முற்றுப் பெற்றது. தேர்தல் நடத்தப்பட்டதையிட்டு சர்வதேச சமூகம் ராஜபக்‌ஷ அரசைப் பாராட்டியதுதான் எஞ்சியது. மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமல், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தானும் பிரதம செயலாளர் ஒருவரை நியமிக்காது சபையின் செயற்பாட்டினை முடக்கி வைத்திருப்பதிலேயே ராஜபக்‌ஷ அரசு குறியாயுள்ளது.

இறுதியாக சிறுபான்மை சமூகங்கள் அனைத்தும் இனரீதியாகவும் மதரீதியாகவும் பலத்த அசிங்கமான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றன. இவற்றின் காரணகர்த்தாவாக அரசின் அனுசரணையுடன் செயற்படுதாகக் கூறப்படும் பொதுபலசேனா (BBS) செயற்படுகிறது. பௌத்தத்தின் காவலர்கள் என்று வலம் வரும் இந்த அமைப்பினர், சீலமான பௌத்த நெறிகளை மிதித்துக்கொண்டு செயற்படுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.

வல்லிபுரம் திருநாவுக்கரசு

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.