Photo, GROUNDVIEWS

எப்போதுமே பாரம்பரிய நடைமுறைகளைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற பிரிட்டனில் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டதாகக் கருதப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக்கை பிரதமராக தெரிவுசெய்தமை புதிய காற்றைச் சுவாசிப்பது போன்று இருப்பதாகவும் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமான உரிமைகளைக் கொண்டிருப்பதற்கும் இனம், நிறம் மற்றும் மதம் எல்லாவற்றையும் கடந்து அரசியல் உயர் பதவிகளுக்கு வருவதற்கு சமத்துவமான வாய்ப்புக்களைக் கொண்டிருப்பதற்கும் ஏனைய உலக நாடுகளுக்கு இது ஒரு பிரகாசமான உதாரணமாக இருப்பதாகவும் அரசியல் அவதானிகளும் ஊடகங்களும் கருத்து வெளியிட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

குறுகிய இன,மத பாகுபாட்டு சிந்தனைகளை கைவிட்டு சகல குடிமக்களுக்கும் அவர்களுக்கு உரித்தான இடத்தை உலக நாடுகள் வழங்கவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். உண்மையில் இது மகத்தான ஒரு இலட்சியமே.

இந்திய வம்சாவளி சுனாக் வெள்ளையினத்தவர்களை 80 சதவீதத்தினராகக் கொண்ட கிறிஸ்தவ நாட்டில் பிரதமராக வரமுடிந்ததைப் போன்று இந்தியாவில் நேரு குடும்பத்தில் திருமணம் செய்துகொண்ட இத்தாலிய பெண்மணியான சோனியா காந்தியினால் வரமுடியாமல் போய்விட்டதே என்ற தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வெளியிட்ட கருத்துக்களும் வாதப்பிரதி வாதங்களை மூளவைத்தன..

அதேபோன்று இலங்கையிலும் பௌத்த சிங்களவர் அல்லாத ஒருவரினால் ஏன் அரசியல் உயர்பதவிக்கு வரமுடியாது என்று கேள்வியெழுப்பி அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்களை வெளியிடுவதையும் சில ஆங்கில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களை கூட தீட்டுவதையும் காண்கிறோம்.

இவையெல்லாம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்ட்ட பிறகு சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் மும்முரமாகப் பேசப்பட்ட வேளையில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்.பி.யான திலான் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்த யோசனையொன்றை நினைவுக்கு கொண்டுவருகின்றன.

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் பிரதமராக தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் அமைச்சரவை இனவிகிதாசாரப்படி அமைக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இவ்வாறு செய்வதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் நல்ல மதிப்பு ஏற்படும்; அதனால் பல அனுகூலங்களை நாடு பெறமுடியும் என்று குறிப்பிட்ட பெரேரா,”தமிழர் ஒருவரை பிரதமராகவும் முஸ்லிம் ஒருவரை சபை முதல்வராகவும் நியமிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நாம் சிங்கள பௌத்த ஜனாதிபதியைக் கொண்டிருக்கலாம். இந்த நியமனங்களை செயதால் உலகிற்கு நேர்மறையான சமிக்ஞை ஒன்றை காட்டமுடியும். அறகலய போராட்டம் மூலம் தீவிரவாதப்போக்கு  தகர்க்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்.

திலான் பெரேரா தான்தோன்றித்தனமாக பேசும் ஒரு அரசியல்வாதி என்று அடையாளம் காணப்பட்டவர் என்ற போதிலும், அவரின் இந்த யோசனையை வரவேற்காமல் இருப்பதற்கு காரணமில்லை. அந்த யோசனை குறித்து ஆசிரிய தலையங்கம் தீட்டிய ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இதற்கு முன்னர் இலங்கையில் தமிழர் ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் 1983 கறுப்பு ஜூலை இன வன்செயல்களோ சுமார் மூன்று தசாப்தகாலம் நீடித்த பிரிவினைவாத போரோ இடம்பெற்றிருக்காது என்று குறிப்பிட்டது.

வெள்ளையரும் கிறிஸ்தவருமல்லாத இந்திய வம்சாவளி குடியேற்றவாசி பெற்றோர்களின் ஒரு மகனை பிரதமராக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு பிரிட்டனின் அரசியல் முறைமை நேர்மறையான ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்பதன் ஒரு உறுதிச்சான்றாக சுனாக்கின் உயர்வை நோக்கவேண்டும். அத்தகைய ஒரு மாற்றம்  இலங்கையின் அரசியல் முறைமையில் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியையும் காணக்கூடியதாக இருக்கிறதா? என்னதான் எமது நாட்டை ‘இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு’ என்று அழைத்தாலும் அந்த அரசு அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மேல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின்  ஐக்கியம், இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை ஆட்சியதிகாரக் கட்டமைப்பு மீதான சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு அப்பால் வேறு எதுவுமாக சாதாரண சிங்கள மக்கள் விளங்கிவைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த மேலாதிக்கத்தை தகர்க்கக்கூடிய பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படாத பட்சத்தில் இலங்கையில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியமான அரசியல் உயர்பதவிகளுக்கு வருவது குறித்து  மாத்திரமல்ல இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காண்பது குறித்தும்  கனவிலும் நினைக்கமுடியாது.

கடந்த நூற்றாண்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவேளையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அரசாங்க தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. நாடாளுமன்ற அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் மீது என்றைக்குத்தான் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருந்ததோ நாமறியோம்.

சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து ஒரே அரசியல் இயக்கத்தை தாபித்த தமிழ் தலைவர்கள் கூட இனவாத அடிப்படையில் ஓரங்கட்டப்பட்ட அனுபவம் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழர்களுக்கு இருக்கிறது.

இலங்கை சிவில் சேவையில் இணைந்துகொண்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரிய சேர் பொன் அருணாச்சலம் 1913 அந்த சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார். 1917 இலங்கை தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தக் கழகம் என்ற அமைப்புக்களை தாபித்து அவற்றின் தலைவராக இருந்த அவர் 1919 இலங்கை தேசிய காங்கிரஸை தாபித்த தலைவர்களில் ஒருவர். அதன் முதலாவது தலைவரும் அவரே.

இலங்கை சட்டப்பேரவையின் (Legislative Council ) உறுப்பினராகவும் இருந்த அருணாச்சலம் ஒரு வருடத்துக்கும் மேலாக தேசிய காங்கிரஸின் தலைவராக இருக்கமுடியவில்லை. சட்டப்பேரவையில் இன ரீதியான பிரதிநிதித்துவம் தொடர்பாக மூண்ட பிரச்சினையை அடுத்து அவர் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறினார். இன ரீதியான பிரதிநிதித்துவ முறையை அவர் முற்றுமுழுதாக எதிர்த்தார்.

சிங்கள தலைவர்களின் ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்ட அந்த  பிரதிநிதித்துவ முறை காரணமாக 1921 சட்டப்பேரவைக்கு  மேல் மாகாணத்தில் இருந்து தமிழர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாமல்  போய்விட்டது. பிறகு அருணாச்சலம் 1923 இலங்கை தமிழர் கழகம் (Ceylon Tamil League) என்ற அமைப்பை தொடங்கினார். சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த தமிழ் தலைவருக்கு அந்த இயக்கத்தின் தலைமைத்துவ மட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினை தேசிய இயக்கங்களில் தமிழ் தலைவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முந்திய உதாரணமாகும்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதியின் ஒரு உதாரணமாக காலஞ்சென்ற வெளியுறவு அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிக்கு நேர்ந்த கதியை கூறலாம்.

2004 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன பெரமுன ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வுடன் சேர்ந்து அமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றது. கதிர்காமரை பிரதமராக நியமிக்கவேண்டும் என்ற யோசனை உண்மையில் ஜே.வி.பியினரால்தான்  முன்வைக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்கவேண்டும் என்று விரும்பிய குழுவினரின் நடவடிக்கைகளினால் அந்த யோசனை நடைமுறைச் சாத்தியமாகவில்லை. தனக்கு பிரதமர் பதவி தரப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணையப்போவதாகக் கூட ராஜபக்‌ஷ அச்சுறுத்தினார். அவருக்கு ஆதரவாக சிங்கள பௌத்த அமைப்புக்களும் குரல் கொடுத்தன. மஹிந்தவை பிரதமராக நியமிப்பதை தவிர திருமதி குமாரதுங்கவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அதேவேளை, சுனாக்கின் உயர்வை அடுத்து இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் அரசியல் உயர்பதவிகளுக்கு வருவது குறித்த கதைகள் பேசப்படுவதைப் போன்று 2008ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா வெற்றிபெற்றதை அடுத்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை அவமதிக்கும் சிந்தனைப் போக்கை தீவிரமாக முன்னெடுப்பவர்களில் ஒருவரான பேராசிரியர் நளின் டி சில்வா இலங்கையில் ஒபாமாவின் சமாந்தரம் குறித்து சில கட்டுரைகளை அந்த காலப்பகுதியில் எழுதியிருந்தார்.

ஒபாமா அமெரிக்கர்களினால் குறிப்பாக வெள்ளை அமெரிக்கர்களினால்  ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவராக இருந்ததற்கு பிரதான காரணம் அமெரிக்காவின் ஆங்கில கிறிஸ்தவ கலாசாரத்தின் முக்கியத்துவத்தை (மேலாதிக்கத்தை) அவர் ஏற்றுக்கொண்டமையேயாகும் என்று சில்வா கூறினார்.

இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலாதிக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டால் அவரை பிரதமராகவோ ஏன் ஜனாதிபதியாகவோ கூட தெரிவுசெய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே அவரின் வாதமாக இருந்தது.

அத்துடன், அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறையை ஒழிப்பதற்கு வெகு முன்னதாகவே இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் நாயக்க மன்னர்களை தங்கள் மன்னர்களாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சில்வா எழுதினார்.

சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதே பிரதானமானது என்றால் அத்தகைய நிலைப்பாட்டுக்கு ஒத்துப்போகக்கூடியவரான கதிர்காமரை பிரதமராக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்காமல் போனது ஏன் என்று விளங்கவில்லை.

ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அமெரிக்கா வரலாறு படைத்துவிட்டது; சுனாக்கை பிரதமராக்கி பிரிட்டன் வரலாறு படைத்துவிட்டது; இலங்கையர்களால் அவ்வாறு வரலாறு படைக்கமுடியுமா என்று கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை. இலங்கையின் சிங்கள பௌத்த அரசியல்  ஒருபோதுமே ஆரோக்கியமான ஒழுக்க நியாய பாரம்பரியத்தை கொண்டதாக இருந்ததில்லை.அதில் மாறுதல் ஏற்படக்கூடிய அறிகுறிகளும் இல்லை.

உண்மையில் இலங்கைக்கு தேவைப்படுவது ஒரு ஒபாமாவோ அல்லது ஒரு சுனாக்கோ அல்ல. சிங்கள சமுதாயத்தின் தவறான சிந்தனைகளுக்குப் பின்னால் இழுபட்டுச்செல்லாமல் அவர்களை சரியான மார்க்கத்தில் வழிநடத்தி சிறுபான்மை இன மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளையும் மனக்குறைகளையும் அங்கீகரித்து தேசிய இனப்பிரச்சினைக்கு – சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முழுநிறைவான – அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காணக்கூடிய தொலைநோக்கும் அரசியல் துணிவாற்றல் மற்றும் விவேகமுடைய சிங்கள தலைவர் ஒருவரே தேவை.

வீரகத்தி தனபாலசிங்கம்