Photo, Selvaraja Rajasegar
நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அண்மைக்கால போராட்ட இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களில் சமார் 4000 பேரை கைதுசெய்து தடுத்து வைத்தது என்றாலும் அவர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் பல மாதங்களாக வாடுகிறார்கள். அவர்களை விடுதலை செய்யவேண்டும் அல்லது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேசிய மனித உரிமைகள் அமைப்புகளினால் விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்கு இதுவரையில் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
குறிப்பாக, மாணவர் தலைவர் வசந்த முதலிகே மற்றும் மாணவர் இயக்கத் தலைமைத்துவத்தில் துடிப்பாக இயங்கும் இளம் புத்த பிக்குவான வண.கல்வேவா ஸ்ரீதம்ம தேரோவினது கைதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான அவர்களது தடுப்புக்காவலும் அண்மையில் நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகின. ஒரு அரச அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எட்டு உறுப்பினர்களையும் அரசாங்கம் விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பது தமிழ்ச்சமூகத்தினதும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவந்தது. அவர்களின் விடுதலை தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு சூழலையும் உருவாக்கும். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் ஆர்ப்பாட்ட இயக்கங்களை தொடர்ச்சியாக நடத்தி வேண்டுகோள் விடுத்துவந்த போதிலும், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்திய போதிலும் குறைந்தது முன்னைய நான்கு அரசாங்கங்கள் அதைச் செய்வதற்கு மறுத்தன.
விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களில் மூவர் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கவை கொலைசெய்ய முயற்சித்ததாக குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள். அந்த குண்டுத் தாக்குதலில் அவர் தனது ஒரு கண் பார்வையை இழந்தார். ஜனாதிபதி விக்கிரமசிங்க கைச்சாத்திட்ட மன்னிப்பின் மூலமாக அவர்களை விடுதலை செய்வதற்கு முன்னர் அரசாங்கம் திருமதி குமாரதுங்கவின் கருத்தையும் கேட்டு அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய முயற்சித்த விடுதலை புலிகள் இயக்க உறுப்பினரை மன்னித்து விடுதலை செய்ததைப் போன்று திருமதி குமாரதுங்கவும் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டினார். இனப்பிரச்சினையின் விளைவான உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமாகிய நாட்டின் காயங்களைக் குணப்படுத்த அத்தகைய பெருந்தன்மை அவசியமாகிறது.
விடுதலை செய்யப்பட்ட அந்த 8 கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையையும் விட கூடுதல் காலம் சிறைவாசத்தை அனுபவித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி தரும் வகையில் ஒத்துக்கொண்டிருக்கிறது. “மூன்று கைதிகளுக்கு 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 22 வருடகாலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இன்னொரு கைதிக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டார். 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி 14 வருடங்கள் சிறையில் இருந்தார். ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரு கைதிகள் 14 வருடங்கள் சிறைக்குள் இருந்துவிட்டாரகள்” என்று ஜனாதிபதி செயலக அறிக்கை கூறுகிறது.
இது பாரதூரமான மனித உரிமை மீறலாக தோன்றுகிறது. இவ்வாறாக அவர்களை சிறையில் அடைத்து வைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகம் சகித்துக்கொள்ள முடியாதது. அரசாங்கம் இது குறித்து விசாரணை நடத்தி இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சமூகங்களுக்கும் விளக்கம் அளிக்கவேண்டிய தேவை இருக்கிறது. நீதித்துறையின் நியாயாதிக்கத்துக்கு அப்பாற்பட்ட முறையில் இடம்பெற்றிருக்கும் இந்த சிறைவாசம் இலங்கையின் உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவா போன்ற சர்வதேச மன்றங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதுடன் எந்தவிதமான நீதித்துறை ஆணையும் இன்றி இவ்வாறாக மேலும் எத்தனை பேர் சிறையில் இன்னமும் வாடுகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு துஷ்பிரயோகம் செய்கின்ற சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறவர்களும் அவர்களின் குடும்பங்களும் எந்தளவுக்கு வலிமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் எதிர்நோக்கவேண்டியிருக்கின்ற அவலங்கைளையும் இந்த எட்டு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் நேர்ந்த கதியின் மூலம் தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
திருத்தியமைக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் இல.48 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 9(1) இன் கீழ் எந்தவொரு நபரும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் நம்புவதற்கு அல்லது சந்தேகிப்பதற்குக் காரணம் இருக்கும் பட்சத்தில் முதல் சந்தர்ப்பத்தில் மூன்று மாதங்களுக்கும் மேற்படாத காலப்பகுதிக்கு அந்த நபரை தடுப்புக்காவலில் வைக்கமுடியும். அந்த நபர் தடுத்துவைக்கப்பட்டிருக்கவேண்டிய இடம், சூழ்நிலைகள் எல்லாம் அமைச்சரினால் தீர்மானிக்கப்படலாம். அத்தகைய உத்தரவை நேரத்துக்கு நேரம் மூன்று மாதங்களுக்கும் மேற்படாத காலத்துக்கு நீடிக்கலாம். 12 மாதங்களுக்கும் மேற்படாத காலப்பகுதிக்கு இவ்வாறு செய்யமுடியும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்வாறாக 43 வருடங்களாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும் வந்திருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்றி ஆட்களை சிறையில் அடைக்க அனுமதிப்பதால் இந்தச் சட்டத்தை கொடூரமான சட்டம் என்று அழைப்பது மிகவும் சரியானதே.
இவ்வருடம் ஜூலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட உடனடியாகவே பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தி அரசாங்கம் போராட்ட இயக்கத்தை கடுமையாக அடக்கியொடுக்கியது. அகிம்சை வழியிலான மக்கள் அதிகாரத்தின் உறுதிச்சான்றாக உலகம் பூராவும் ஊடகங்களினால் காண்பிக்கப்பட்ட – மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலப்பகுதி நீடித்த போராட்டக் களங்கள் நிர்மூலஞ்செய்யப்பட்டன. போராட்டக்காரர்கள் தப்பியோடும் வரை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் ஒன்றுகூடுவதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமையையும் மீறும் வகையில் அமைந்த இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் போராட்டங்களை விரைவாகவே ஒரு முடிவுக்கு கொண்டுவந்தன. வன்முறையில் ஈடுபட்டதாக அல்லது வன்முறையை தூண்டுவதற்கு சதி செய்ததாக காண்பிக்கப்படாதவர்களை சிறையில் அடைப்பதற்குப் பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தனால் பயன்படுத்தப்பட்டது மிகவும் மோசமான செயலாகும்.
போராட்ட இயக்கம் படைபலம் கொண்டு அடக்கியொடுக்கப்பட்டதன் காரணமாக இன்று நாட்டில் வழமை நிலையின் ஒரு பொய்யான வெளித்தோற்றம் காணப்படுகிறது. அது சுற்றுலா பயணிகளையும் பொருளாதாரத்துக்கு வலுவளிக்க டொலர்களையும் கொண்டுவருவதில் உதவ முடியும். ஆனால், யதார்த்தத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எந்த வேளையிலும் பயங்கரமானதாக மாறிவிடக்கூடிய பொருளாதார இடர்நிலைக்கும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக குமுறிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் மத்தியிலேயே ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். போராட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது சகாக்களில் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். அமைதிவழியில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்க சார்பு குண்டர்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதுடன் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் செய்கிறார்கள் என்பதை காணும்போது போராட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மனக்கவலையும் சீற்றமும் அடைகிறார்கள். இத்தகைய இரட்டைத்தனமான அணுகுமுறை அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை தொடர்ந்து அரித்துச் செல்கிறது என்பதுடன் எதிர்கால போராட்ட அணிதிரட்டல்களுக்கு ஒரு ‘மின்கடத்தி’ போன்று செயற்படவும் கூடும்.
பகிரங்கமாக வீதிகளில் இறங்கி முழக்கங்களை எழுப்புவதற்கும் பலத்தைக் காட்டுவதற்காக போக்குவரத்துக்களை தடுக்கவும் வந்தவர்களை மாத்திரம் கொண்டதல்ல போராட்ட இயக்கம். இதை விடவும் பெரிய போராட்ட இயக்கம் உறங்குநிலையில் இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பங்களை வாழவைக்க சம்பாதிக்கவேண்டிய தேவைக்கு இப்போது முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கிறது. 70 – 100 சதவீதத்துக்கு இடைப்பட்டதாக இருக்கும் பணவீக்கத்தின் விளைவாக மக்களின் உண்மையான வருமானம் குறைந்தபட்சம் அரைவாசியாக சுருங்கியிருக்கும் நிலையில் ஒரு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைப்பது போதுமான ஒரு நடவடிக்கையல்ல. பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமானவர்கள் சுதந்திரமாக திரிவதுடன் அதிகாரத்திலும் இருக்கின்ற அதேவேளை போராட்டத்தை நடத்தி புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பதவியேற்பதை உறுதிசெய்தவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதனால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கருதும் மக்களின் உணர்வுகளையும் சாந்தப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது.
வலுவற்றவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதியின் குறியீடுகளாக வசந்த முதலிகேயும் வண.கல்வேவ ஸ்ரீதம்ம தேரரும் விளங்குகிறார்கள். இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத்தைப் பற்றியது. பயங்கவாதத்தைத் தடுப்பதை நோக்கமாக கொண்டது.
அரசியல், தத்துவார்த்த மற்றும் மதரீதியான இலட்சியங்களை முன்னெடுப்பதற்காக பீதியைப் பரப்பும் நோக்குடன் குடிமக்கள் சனத்தொகையை அல்லது அந்த குடிமக்கள் சனத்தொகையின் ஒரு பிரிவினரை இலக்குவைத்து அச்சுறுத்தலை மேற்கொள்கின்ற அல்லது பலத்தைப் பிரயோகித்து வன்முறையை மேற்கொள்கின்ற செயல்களே பயங்கரவாதம் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வரைவிலக்கணம் கூறியிருக்கிறது. இந்த நியமத்தை பிரயோகித்துப் பார்த்தால் வசந்த முதலிகேயினதும் ஸ்ரீதம்ம தேரரின் கைதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தொடர்ச்சியான தடுப்புக்காவலும் காரணகாரிய அடிப்படையற்றவையும் நியாயப்படுத்த முடியாதவையும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறது. உடல் நலமின்றிய இருவரும் வருந்தத்தக்க சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர்கள் இருவர் மீதும் இதுவரையில் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. முழுமையாக மாற்றுவதாக சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் உறுதியளித்திருக்கும் அதே பயங்கரவாதத் சட்டத்தின் கீழ் அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் விடுதலை புலிகள் இயக்க கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ததைப் போன்று வசந்த முதலிகேக்கும் ஸ்ரீதம்ம தேரருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மன்னிப்பை வழங்கினால் அது போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்கிய அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மனக்காயங்களை கணப்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தமுடியும்.
கலாநிதி ஜெகான் பெரேரா