பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் மீது அது ஏற்படுத்திவரும் தாக்கம் என்பன சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் என்பவற்றினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அபூ சலீம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் முழுமைமையான பாதிப்பை அனுபவித்து வந்திருக்கிறார்கள்; பதினெட்டு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சலீம் தனது வேலையை இழந்ததுடன், அவரது பிள்ளைகளின் வாழ்க்கை அவர் இல்லாத நிலையில் கழிந்தது. தனது சொந்த சமூகத்திலிருந்தே அவர் கடும் வசவுகள் மற்றும் துன்புறுத்தல் என்பவற்றை எதிர்கொண்டார். தடுப்புக் காவலில் இருக்கும் பொழுது அவர் எதிர்கொண்ட மிக மோசமான தாக்குதல்களின் வேதனையினால் இன்னும் அவர் துன்பம் அனுபவித்து வருகின்றார். அவருடைய வழக்கு தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில் அவர் இப்பொழுது அலசியப்படுத்தப்பட்ட ஒரு நபராக இருந்து வருகிறார்.
அபூ சலீம் (47) மற்றும் அவருடைய மனைவி ராஸியா (44) ஆகியோர் (இது அவர்களுடைய உண்மையான பெயர்களல்ல) மன்னாரைச் சேர்ந்தவர்கள்; ஆனால், இப்பொழுது அவர்கள் கற்பிட்டியில் வசித்து வருகின்றார்கள். அவருடைய குடும்பம் 1985 இல் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், அவர் அங்கு ஓர் அகதி முகாமில் ஐந்தாண்டுகள் வாழ்ந்தார். 1990இல் அவர் தனது சகோதரியுடன் கற்பிட்டிக்கு வந்தார். பல சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சாரா அமைப்புக்களால் புறமொதுக்கப்பட்ட மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஆகியோரின் நலனை முன்னிட்டு அமுல்செய்யப்பட்டு வந்த கருத்திட்டங்களை மேற்பார்வை செய்யும் பணியில் அவர் அங்கு ஈடுபட்டிருந்தார். அபூ சலீம் 2014 ஆம் ஆண்டளவில் ஓர் உள்ளூர் நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தில் முகாமையாளராக பணியாற்றத் தொடங்கினார். அதேவேளையில், அவருடைய குடும்பம் கற்பிட்டியில் வசித்து வந்தது. தொழில்கள் மூலம் அவர் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு அதிகமாக எதுவும் சம்பாதித்திருக்கவில்லை. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஒரு சாதாரண வீட்டை அமைத்துக் கொள்வதற்கும், தனது நான்கு பிள்ளைகளையும் ஒரு கிராமத்துப் பாடசாலைக்கு அனுப்புவதற்கும் போதுமானதாக இருந்து வந்தது. தமது தோட்டத்தின் மணல் தரையில் ஒரு சில மரக்கறி வகைகளையும், பழ மரங்களையும் அவர்கள் பயிரிட்டு வந்தார்கள்.
அது எவ்விதத்திலும் எளிதான அல்லது சௌகரியமான ஒரு வாழ்க்கையாக இருந்து வரவில்லை; பல மணித்தியாலங்கள் இரு வழிப் பயணங்களில் ஈடுபட்டு வார இறுதி நாட்களில் மட்டும் அவர் தனது குடும்பத்தினரை சந்திக்க முடிந்தது. ஆனால், 2020 மே 03ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அவர்களுடைய உலகம் தலைகீழாக மாற்றமடைந்தது. அது புனித நோன்பு மாதமாக இருந்ததுடன், நோன்பு துறப்பதற்கு சிறிது நேரம் மட்டுமே எஞ்சியிருந்தது. சிவில் ஆடைகளில் இருந்த ஐந்து நபர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுடைய அடையாள அட்டைகளை காண்பிற்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும், அவற்றைக் காண்பிக்காது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கென சலீம் தம்முடன் கொழும்புக்கு வர வேண்டுமென அவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த நபர்கள் வீட்டில் தேடுதல் நடத்தி ஒரு சில ஆவணங்கள், இரண்டு தொலைபேசிகள், அவருடைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்துக் கொண்டார்கள். சலீம் கை விலங்கிடப்பட்டிருந்த நிலையில், மிகுந்த தயக்கத்துடன், அங்கு காத்திருந்த ஜீப் வண்டியில் ஏறினார். அன்றைய தினமே மீண்டும் வீடு திரும்புவதற்கு அவர் எதிர்பார்த்திருந்த காரணத்தினால் அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டுமே அவர் சென்றார். அங்கு வந்த நபர்கள் சலீமின் மனைவியிடம் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தை கையளித்தார்கள். ஆனால், அவரால் சிங்கள மொழியை வாசிக்க முடியாது. அவருடைய கணவரை விசாரணைக்காக எடுத்துச் செல்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடைய இளைய மகள் பயந்து அழத் தொடங்கினாள்.
“நான் எந்தத் தவறையும் செய்திருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். எத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளிலும் நான் பங்கேற்றிருக்கவில்லை” என்கிறார் சலீம். வறிய பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கென இலங்கையர்களினால் நிதிப்படுத்தப்பட்டு வந்த ஓர் உள்ளூர் தொண்டு நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தமையே சலீமின் கைதுக்கான காரணமாக இருந்தது. பிள்ளைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பாடசாலைக்குப் போய் தமது வாழ்வாதாரங்களை அமைத்துக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். கீர்த்திமிக்க மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இந்த அமைப்புக்கு உதவி வந்தார். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்ததுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவருக்கெதிரான சாட்சிகளைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஹிஜாஸ் கைதுசெய்யப்பட்ட பின்னர் அடுத்துவரும் நாட்களில் தனக்குப் பிரச்சினை ஏற்பட முடியுமென்ற விடயத்தை தெரிந்து வைத்திருந்த சலீம் கற்பிட்டிக்கு திரும்பி வந்தார். பின்னர் அவரும் இவ்விதம் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு செல்லும் வழியில் அந்த ஜீப் வண்டி மதுரங்குளியில் நிறுத்தப்பட்டது. அந்த அமைப்பின் ஓர் அலுவலக அறை மதுரங்குளியில் இருந்ததுடன், அந்த ஆட்கள் அந்த அறையில் தேடுதல் நடத்தினார்கள். சிவில் ஆடையிலிருந்த ஆட்களுடன், அருகிலிருந்த முந்தல் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சீருடை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள். 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படும் ‘பயங்கரவாதியை’ கைதுசெய்யும் நிகழ்வு தொடர்பான செய்தி சேகரிப்பதற்கென ஊடகவியாளர்களும் அங்கு வருகை தந்திருந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலுமிருந்த 253 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 219 பேர் காயமடைந்தார்கள்.
சலீமின் கைதின் பின்னர் வெளிவந்த ஊடக அறிக்கைகள் இந்தத் தாக்குதல்களின் பின்னணியிலிருந்த சூத்திரதாரியும், தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான ஹாசிம் மதுரங்குளி அலுவலகத்தில் தீவிரவாதம் தொடர்பான விரிவுரைகளை நடத்தியிருந்தாரென குறிப்பிட்டதுடன், சலீம் அந்த இடத்தில் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாரெனவும் குறிப்பிட்டிருந்தன. இக்குற்றச்சாட்டுக்களை அவர் மறுக்கின்றார். “அவ்விதம் எதுவும் இடம்பெறவில்லை” என்கிறார் அவர்.
நள்ளிரவில் அவர்கள் கொழும்பு வந்து சேர்ந்ததுடன், மட்டக்குளிய பள்ளிவாசல் கட்டடத்திலுள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்றார்கள். அங்கும் வவுச்சர்கள், பற்றுச்சீட்டுகள், துண்டறிக்கைகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் கொழும்பு கோட்டையில் அமைந்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று, சலீமின் புகைப்படத்தை எடுத்து, விரல் அடையாளங்களைப் பதிவுசெய்து, அவரிடம் தேடுதல் நடத்தினார்கள்; பல மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வேறு தீவிரவாத நடவடிக்கைளில் அவருடைய அமைப்பு சம்பந்தப்பட்டிருந்ததா என்ற விடயம் குறித்தும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்தும் அவரிடம் விரிவாக விசாரணைகள் நடத்தப்பட்டன. வீட்டுக்குச் செல்வதற்கான பேருந்துக் கட்டணமாக அவர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்நூறு ரூபா பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்த நாள் சலீம் பயங்கரவாத புலன் விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சிஐடி கட்டடத்தின் 2 ஆவது தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தன்னை ஏன் வீட்டுக்கு அனுப்பவில்லை என சலீம் பொலிஸ் பரிசோதகரிடம் கேட்ட போது, அதற்குப் பதிலாக அவரது கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவருடைய அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளாரென அவரிடம் அங்கு கூறப்பட்டது.
“சிஐடி உத்தியோகத்தர் என்னிடம் கேட்ட அதே கேள்விகளை TID உத்தியோகத்தர்களும் என்னிடம் கேட்டார்கள் – எமது அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததா எனக் கேட்டார்கள். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நான் கூறினேன். அதன் பின்னர் அவர்கள் ஹிஜாஸ் குறித்துக் கேட்டார்கள். ஹிஜாஸ் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தார் என நான் கூறினால் மூன்று நாட்களில் என்னை விடுவிப்பதாகவும் சொன்னர்கள். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன்” பொய்ச்சாட்சி கூறி, ஹிஜாஸை இந்த விடயத்தில் சம்பந்தப்படுத்தப் போவதில்லை என்ற விடயத்தில் சலீம் பிடிவாதமாக இருந்தார். “அவர் ஒரு நல்ல மனிதர். எனவே, அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்த நான் விரும்பவில்லை” என சலீம் விளக்குகிறார்.
அதன் பின்னர் மிகவும் ஈவிரக்கமற்ற விதத்தில் முறையில் சலீமை அவர்கள் தாக்கினார்கள். இன்னமும் அது அவருக்குக் கடும் வலியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது. “மூன்று நபர்கள் என் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர்களுடைய முழங்கைகள் மூலம் எனது முதுகெலும்பில் அடித்தார்கள். அது பல நிமிடங்கள் தொடர்ந்தது. ஒருவர் தனது சப்பாத்துகளைக் கொண்டு என்னை உதைத்தார். அப்பொழுதும் நான் கைவிலங்கிடப்பட்டிருந்தேன். அப்பொழுது என்னால் ஒரு பொய்யைச் சொல்லியிருக்க முடியும். ஆனால், இங்கு பொய் கூறியதாக நீதிமன்றில் வைத்து சொல்வேன் என நான் அவர்களிடம் கூறினேன். பொய் சொல்லக் கூடாதென எனது சமயமும் கூறுகிறது” என சுட்டிக் காட்டுகிறார் சலீம்.
ஒரு கை மேசையுடன் சேர்த்து கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்தவாறு அடுத்த பதின்மூன்று நாட்களைக் கழித்தார் சலீம். இரவு நேரத்திலும் கைவிலங்குகள் அகற்றப்படவில்லை. அவரிடம் தனது சொந்த ஆடைகள் இல்லாதிருந்த காரணத்தினால் அறையில் இருந்த ஏனையவர்கள் அவருக்கு ஒரு சாரத்தையும், டீ சர்ட்டையும் அணிவதற்குக் கொடுத்தார்கள்.
மிகவும் மர்மமான ஒரு சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சலீம் மற்றும் ஏனைய நான்கு நபர்கள் ஓர் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஆட்கள் அங்கு தமது நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். விசாரணை மற்றும் தாக்குதல்கள் என்பன மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றன. சலீமை அவர்கள் ஆறாவது தளத்துக்கு எடுத்துச் சென்று, சுமார் 23 பேர் இருந்த ஓர் அறையில் வைத்தனர்கள் – அவர்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள், கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் என்பன தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் இருந்தனர். அவர்கள் தனித் தனித் தடுப்பறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், படுத்துறங்குவதற்கு பாய்கள் இருக்கவில்லை. தனக்கென ஒரு சில ஆடைகளையும், ஒரு பாயையும் எடுத்து வருமாறு அவர் தனது உறவுமுறை சகோதரரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்; தலையணை வைத்துக் கொள்வதற்கு அனுமதி இருக்கவில்லை.
நான்கு மாதங்களின் பின்னர் சலீம் தங்கல்லையில் இருக்கும் பழைய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 96 பேருடன் வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
சலீம் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலப் பிரிவின் போது தனது குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் தங்காலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீண்ட பயணமாக இருந்ததன் காரணமாகவும், அதற்காக அவர் மனைவி, பிள்ளைகள் பெருந் தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருந்ததன் காரணமாகவும் தன்னை வந்து பார்க்க வேண்டாமென அவர் அவரது மனைவியிடம் கூறியிருந்தார். ஒரு கடற்றொழிலாளரான அவருடைய உறவுமுறைச் சகோதரரால் மன்னாரிலிருந்து வந்து சலீமைப் பார்க்க முடியாதிருந்தது. ஏனென்றால், அவ்விதம் வருவதன் மூலம் தனது இரண்டு நாள் வருமானத்தை அவர் இழக்க வேண்டியிருந்தது. தனது சட்டத்தரணியுடன் தொலைபேசிக்கூடாக மட்டும் உரையாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தங்கல்லையிலிருந்து சலீம் 2021 அக்டோபர் மாதத்தின் பின்பகுதியில் வெலிக்கடை மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்கு மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவில் அவருடைய தடுப்பறை இருந்தது. “அவர்கள் இரவு பகல் முழுவதும் உரத்துச் சத்தமிட்டுக் கொண்டும், அழுது கொண்டுமிருந்தார்கள். என்னால் அங்கு தூங்க முடியவில்லை. அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது. உடல் வேதனையின் போது பயன்படுத்துவதற்கென ஒரு சில மாத்திரைகள் கிடைத்திருந்தன. எனக்குக் கிடைத்த மருந்துகள் அவை மட்டும் தான்” என்கிறார் அவர். அக்டோபர் 27ஆம் திகதி சலீம் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட முதல் தடவை இதுவாகும். அவர் அவருடைய சட்டத்தரணியையும் சந்தித்தார். எவ்வாறிருப்பினும், உரையாடல்கள் அனைத்தும் மிகவும் உன்னிப்பான விதத்தில் கவனிக்கப்பட்டு வந்ததுடன், அங்கிருந்த பொலிஸார் அனைவரும் அவற்றைச் செவிமடுக்க முடிந்தது. சலீம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் எனவும், அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட வேண்டுமெனவும் வாதாடிய அவருடைய சட்டத்தரணி அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்தார். நீதவான் இந்த விடயம் தொடர்பாக அனுதாப உணர்வைக் கொண்டிருந்ததுடன், பிணை வழங்குவதற்கும் தயார் நிலையில் இருந்து வந்தார். ஆனால், அப்பொழுது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதவானிடம் ஒரு குறிப்பைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், அதன் பின்னர் சலீம் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டுமென நீதவான் கட்டளையிட்டார். எவ்வாறிருப்பினும், அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென நீதவான் பரிந்துரை செய்திருந்தார்.
ஒரு வார காலம் அவர் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் மகஸின் சிறைச்சாலையிலிருந்த பெரிய அறைக்கு அவர் மாற்றப்பட்டார். அந்த அறையில் 70 ஆட்கள் இருந்ததுடன், அவர்களுடன் அவர் அடுத்து வந்த ஆறு மாதங்களை செலவிட்டார். “அந்த ஆட்கள் குற்றவாளிகளாக இருந்து வந்த போதிலும், அவர்கள் மிக நல்ல மனிதர்களாகக் காணப்பட்டதுடன், எனக்கு உதவக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். சிறைச்சாலை நலன்புரி நிலையத்திலிருந்து வாசிப்பதற்கென எனக்கு ஒரு சில புத்தகங்கள் கிடைத்தன. உணவும் அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை” என்கிறார் சலீம். தன்னுடைய தொலைபேசிக்கூடாக அழைப்புகளை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு அவருக்கு இருந்ததுடன், கைது செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக தனது பிள்ளைகளின் முகங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
ஒவ்வொரு பதினான்கு நாட்களுக்கும் ஒரு முறை அவர் நீதிபதியுடன் ஸ்கைப் மூலமாக தொலைபேசியில் உரையாட முடிந்தது. பல சந்தர்ப்பங்களில் தனக்கு பிணை வழங்கப்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவையனைத்தும் இறுதியில் முறிவடைந்தன. இறுதியில் 2022 ஏப்ரல் 08ஆம் திகதி ஆவணங்களில் கையொப்பமிட்டு, அவரது பொருட்களை மீண்டும் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவருடைய சட்டத்தரணி அவருக்குப் பிணையைப் பெற்றுக் கொடுத்தார். முதல் தடவையாக சலீம் ஒரு சுதந்திர மனிதனாக வெளியில் வந்தார். அவருடைய அடுத்த வழக்குத் தவணை நவம்பர் மாதத்தில் வருகிறது. ஓர் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்வதற்கு அவர் திட்டமிட்டு வருகிறார். “அவர்கள் எனக்கு செய்யக் கூடிய ஆகக் கூடிய தீங்கு என்னைக் கொலை செய்வதாகும். என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய அனைத்துத் துன்பங்களையும் நான் இப்போது அனுபவித்திருக்கிறேன். என்னுடைய கண்ணியத்தை இழந்திருக்கிறேன். உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் எனது வாழ்க்கைப் பாதிப்படைந்திருக்கிறது” என்கிறார் அவர்.
சலீமின் மனைவி ராஸியாவைப் பொருத்தவரையில் கடந்த இரண்டு வருட காலங்கள் மனப் பதற்றம், அச்சம், வெட்கம் மற்றும் விரக்தி என்பன நிறைந்த காலப் பிரிவாக இருந்து வந்தது. “எனது கணவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என ஏனையவர்கள் என்னிடம் கேட்ட பொழுது எனக்கு வெட்க உணர்வு ஏற்பட்டது. தமது தந்தை சிறையில் இருக்கும் காரணத்தினால் எனது பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவில்லை. இரவில் வீட்டில் தனியாக இருப்பதற்கு நாங்கள் பயப்பட்டோம்” என அவர் விளக்குகிறார். தன்னையும் ஆட்கள் சந்தேகக் கண்கொண்டு பார்த்ததாக ராஸியா சொல்கிறார். அவர்களுடைய வீட்டில் ஆயுதங்களும், தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சஹ்ரானுடன் சேர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்றும் கிராமத்தில் மக்கள் பேசிக் கொண்டார்கள். மிக மோசமான விடயங்கள் தனக்கு நடக்க முடியுமென்ற அச்சத்தில் ராஸியா இரண்டு ஆண்டுகளைக் கழித்தார். தன்னுடைய கணவனுக்கு ஏதாவது நடக்கக் கூடுமென அவர் நினைத்தார்.
தனது பிள்ளைகள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது சலீமைப் பொருத்தவரைக்கும் ஒரு முக்கியமான விடயமாக இருந்து வந்தது. “நான் எத்தகைய ஒரு சட்ட விரோதமான நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்ற விடயத்தை நான் என்னுடைய பிள்ளைகளிடம் தெளிவாகச் சொல்லியிருந்தேன். அவர்கள் கல்வி பெறுவது முக்கியமானது என்றும், வேறு விடயங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்களுடைய தந்தை எந்தவொரு மோசமான காரியத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் நான் அவர்களிடம் சொன்னேன்.”
இப்பொழுது பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்குச் செல்கிறார்கள்; அவர்கள் தமது தந்தையை இழந்திருந்ததுடன், மீண்டும் அவர் வீடு வந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். வாழ்க்கை ஓரளவுக்கு பழைய நிலைமைக்கு வந்திருக்கிறது. ஆனால், புதிய வேலை இடத்தில் சலீம் இன்னமும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார். ஏனென்றால், அவரிடம் கேள்விகளைக் கேட்பதற்காக அங்கு சிஐடி உத்தியோகத்தர்கள் வந்து செல்கிறார்கள். அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருக்கும் அவரது சம்பளத்தை அவரால் மீளப் பெற முடியாதுள்ளது. தனது கடவுச் சீட்டு இல்லாத நிலையில் வெளிநாட்டில் வேலை செய்வதற்கும் அவரால் செல்ல முடியாது. முதுகு வலி காரணமாக அவர் தொடர்ந்தும் வேதனை அனுபவித்து வருவதுடன், கற்பிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“கடந்த இரண்டு வருட காலத்தின் போது நான் பல பிரச்சினைகளையும், சிக்கல்களையும், வன்முறைகளையும் எதிர்கொண்டேன். அதிலும் பார்க்க மோசமான எவையும் இனி எனக்கு நடக்க முடியாது. நான் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் கூட, என்னால் அதனை எதிர்கொள்ள முடியும். நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன். பயங்கரவாதத்துடன் எனக்கு எந்தத் தொடர்புமில்லை” எனப் பிரகடனம் செய்கிறார் சலீம்.
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் வாக்குமூலங்களில் கையொப்பமிட வேண்டுமென அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது அல்லது அவர்களுடைய மனைவிமார் மற்றும் பிள்ளைகள் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பல நபர்கள் தாக்கப்படுவதையும், சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன்; நான் அவர்களுடைய காயங்களை ஆற்றியிருக்கிறேன்.”
“பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது ஒரு நியாயமற்ற சட்டமாகும். சாட்சிகள் இல்லாத நிலையில் நபர்கள் கைது செய்யப்படுவதுடன், அதன் பின்னர் பொலிஸார் சாட்சிகளை உருவாக்குகிறார்கள். நான் யார் என்ற விடயத்தை கிராம சேவை உத்தியோகத்தர் அறிவார். உள்ளூர் பொலிஸாருக்கும் என்னைப் பற்றித் தெரியும். நான் ஏதாவது சட்ட விரோதமான காரியங்களைச் செய்திருந்தால் பொலிஸார் செய்ய வேண்டியதெல்லாம் சம்பந்தப்பட்ட அந்த உத்தியோகத்தர்களிடம் என்னைப் பற்றி விசாரிப்பதுதான்” என்கிறார் அவர்.
இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக கேட்கப்பட்ட பொழுது சலீம் தோள்களைக் குலுக்கிக் கொண்டு புன்னகையுடன் கூறுகின்றார், “எனக்குத் தெரியாது.”
மினொலி டி சொய்ஸா
A Life Wrecked by an Unjust Law என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.