Photo, AP Photo, Eranga Jayawardena

திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் செல்வதற்கு சில மாதங்கள் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு ‘செயற்திட்ட நகர்வு வரைவு’ ஒன்றை அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் கையளித்தார். இரு தரப்பு உறவுகளை ‘பரஸ்பரம் தங்கியிருத்தல், மதிப்பு மற்றும் நேசம் ஆகிய பண்புகளின் அடிப்படையில்’ விசேடமான ஒன்றாக வளர்ப்பதே அவரின் நோக்கமாக இருப்பதாக கூறப்பட்டது.

மொரகொடவின் வழிகாட்டலில் புதுடில்லியில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலூகா கதுருகமுவ தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட அந்தச் செயற்திட்ட நகர்வு வரைவின் தலைப்பு ‘இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திர பணியகங்களுக்கான ஒருங்கிணைந்த தந்திரோபாயம்’ என்பதாகும். கோட்டபாயவிடம் அந்த வரைவு கையளிக்கப்பட்ட போதிலும் அதை அன்றைய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டதா அல்லது அதன் பிரகாரம்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. அத்துடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொரகொடவின் தந்திரோபாயம் குறித்து எத்தகைய அபிப்பிராயத்தை கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

ஆனால், அண்மைக்காலத்தில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்களாக பதவி வகித்தவர்களில் மொரகொட அந்த நாட்டில் மத்திய அரசுடன் நின்றுவிடாமல் பரவலாக மாநில மட்டங்களிலும் பல்வேறு தரப்புகளுடனும் நிறுவனங்களுடனும் கூடுதலான அளவுக்கு ஊடாட்டங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்ராலினை மொரகொட இதுவரையில் இரு தடவைகள் சந்தித்து நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஊடகங்களுடனும் அவர் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. இந்தியாவில் அவர் கலந்துகொள்ளும் வைபவங்களுக்கு, நிகழ்த்துகின்ற உரைகளுக்கு, வழங்குகின்ற நேர்காணல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வாரமும் (அக்.17)  உயர்ஸ்தானிகர் மொரகொட ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அது முதல் பக்க தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது. அதில் அவர் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கை இடம் கொடுக்காது என்று தெரிவித்த கருத்துக்கே பெரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த நேர்காணலை மறுபிரசுரம் செய்த இலங்கை ஊடகங்களும் அதே பாதுகாப்பு அம்சத்துக்கே அழுத்தத்தை கொடுத்தன.

இரு தரப்பு உடன்படிக்கைகளுக்கு ஏற்ப இந்தியாவின் நலன்களுக்குப் பாதகமான முறையில் எந்தவொரு வெளிநாடும்  துறைமுகங்களைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்கப்போவதில்லை என்று இந்திய அரசாங்கத்துக்கு மீள உறுதிப்படுத்த அந்த நேர்காணலை பயன்படுத்திக்கொண்ட உயர்ஸ்தானிகர், “எமது பாதுகாப்பு அக்கறைகள் முற்றிலும் ஒன்றாகவே இருக்கின்றன. இந்தியாவுக்கு வருகின்ற எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கு வருகின்ற பாதுகாப்பு அச்சுறுத்தலே என்ற எமது நம்பிக்கையே அடிப்படைக் கோட்பாடாகும். இந்தியாவும் அவ்வாறே நினைக்கிறது என்று நாம் கருதுகிறோம்”  என்று குறிப்பிட்டார்.

பாரிய கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் ‘நிலைபேறான’ பொருளாதார மீட்சிக்கு இந்தியா முக்கியமானது என்று கூறிய மொரகொட இந்தியாவுடன் முடிச்சுப்போட்டு இலங்கையை பிணைத்துக்கொள்ள தங்களால் முடியுமாக இருந்தால், இந்தியா நகரும்போது தங்களாலும் நகரக்கூடியதாக இருக்கும் என்று பொருளாதாரப் பிணைப்பொன்றை  இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தவேண்டும் என்ற அக்கறையையும் வெளியிட்டார்.

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுவது பற்றிய இலங்கை அரசியல் தலைவர்களினதோ அல்லது இராஜதந்திரிகளினதோ கருத்துக்கள் வழமையானவை. அதுவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா அண்மைய மாதங்களாக வழங்கிய அவசர உதவிகளின் பின்புலத்தில் அவை தவிர்க்கமுடியாதவையும் கூட.

ஆனால், இந்தக் கட்டுரையாளரைப் பொறுத்தவரை, 1987 ஜூலை 29 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் குறித்த மொரகொடவின்  கருத்தே கவனத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஈழநாடு பத்திரிகை அதற்கு முதல்பக்க தலைப்புச் செய்தி முக்கியத்துவம் கொடுத்துப்  பிரசுரித்திருந்தது.

13ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தை செய்து தமிழர் பிரச்சினை தொடர்பிலான தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இலங்கை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அண்மையில் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா விசனம் வெளியிட்ட பின்புலத்தில் 13ஆவது திருத்தம் பற்றிய மொரகொடவின் கருத்து ஒரு சர்ச்சைக்குரியதாக அமைகிறது எனலாம்.

“ஜெனீவாவில் இந்தியா கூறியதில் புதிதாக எதுவுமில்லை. இந்தியா அதன் அக்கறையை வெளிப்படுத்திய முறையில் மாற்றம் இருந்திருக்கக்கூடும். ஆனால், சாராம்சத்தில் இந்தியா இடையறாது ஒன்றையே கூறிவந்திருக்கிறது. அரசியல் ரீதியில் இலங்கை ஒரு நிலைமாறு கட்டத்தில் இருக்கிறது. எமது நாட்டில் சமூக மற்றும் அரசியல் உடன்பாடுகளை மீளப்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. இலங்கை பல மதங்கள், இனங்களைக் கொண்ட சிக்கலான நாடு. 13ஆவது திருத்தமும் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவேண்டிய வகைக்குள்ளேயே வருகிறது. நாம் புதிய ஒரு உடன்படிக்கையை செய்யவேண்டியிருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்து மொரகொடவிடமிருந்து வந்திருப்பதால் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவுக்கு உயர்ஸ்தானிகராகச் செல்வதற்கு முன்னர் அவர் 13ஆவது திருத்தமும் மாகாணசபைகளும் தேவையற்றவை என்றும்  மாவட்ட மட்டத்தில் அதிகாரப்பரவலாக்கத்தை செய்யவேண்டும் என்றும் கடுமையாக வலியுறுதியவர். மாகாண சபைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்று கொழும்பை வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நாட்டுக்கு இலங்கையின் உயர்ஸ்தானிகராக போகிறவர் இந்த பிரச்சினையில் முரண்பாடான கருத்தை முன்வைத்திருக்கிறார் என்று அந்த நேரத்தில் அவதானிகள் சுட்டிக்காட்டவும் செய்தனர்.

ஆனால், இந்தியாவில் பதவியேற்ற பிறகு மாகாண சபைகளுக்கு எதிரான தனது கருத்தை மொரகொட தொடர்ந்து வலியுறுத்தியதாக தெரியவரவில்லை. அதேவேளை, அந்தக் கருத்தை அவர் மாற்றிக்கொண்டதற்கான அறிகுறியும் தென்பட்டதாக இல்லை.

அரசியல் ரீதியில் நிலைமாறு கட்டத்தில் இருப்பதாக அவர் கூறும் இலங்கையில் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவேண்டியதாக 13ஆவது திருத்தமும் இருக்கிறது என்று கருதுகிறார் என்றால் தனது நிலைப்பாட்டுக்கு ஏற்ற முறையில் மாகாண சபைகளை இல்லாமல் செய்து மாவட்ட மட்டத்தில் அதிகார பரவலாக்கத்தை செய்வதற்காக மீள் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்பதா அதன் உண்மையான அர்த்தம்? அவரிடமிருந்தே அதற்கான விளக்கம் வரவேண்டும்.

35 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் மாகாண சபைகள் முறையை அந்த நாள் தொடக்கம் இந்த நாள்வரை பதவியில் இருந்த எந்த அரசாங்கமும் உருப்படியாக நடைமுறைப்படுத்தவில்லை. 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை அரசாங்கங்கள் உறுதிசெய்துகொண்டன என்பதே உண்மை. இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட ஒரே ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே. இதை அவர் இலங்கையில் மாத்திரமல்ல,பதவியில் இருந்து இறங்கிய பிறகு புதுடில்லிக்குச் சென்ற ஒரு சந்தர்ப்பத்திலும் கூட தலைவர்கள் மத்தியில்  கூறினார்.

மாகாண சபைகள் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டவை என்ற அபிப்பிராயமே சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம் பரவலாக இருக்கிறது. அதனால், மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கு அல்லது அதன் அதிகாரங்களை மேலும் குறைப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் தென்னிலங்கையில் பரவலாக வரவேற்பு கிடைக்கவும் கூடும்.

ஆனால், அது குறித்து மீள் பேச்சுவார்த்தையை நடத்துவதானால், இந்தியாவுடன் தான் செய்யவேண்டும். இன்றைய புவிசார் அரசியல் நிவைரத்துக்கு மத்தியில் இந்தியாவுக்கு அத்தகைய ஒரு தேவை இருக்கிறதா? இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாலும் கூட இது காலவரையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பரவலாக்குவது தொடர்பில் அளித்த உறுதிமொழிகளை கொழும்பு காப்பாற்றாத நிலையில் மீள் பேச்சுவார்த்தைக்கு புதுடில்லி வருவது சாத்தியமா?

புதிய உடன்படிக்கை பற்றி மொரகொட பேசுகிறார் என்றால், இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை முழுவதையும் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவேண்டும் என்று அவர் கருதுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. உடன்படிக்கையில் இலங்கை மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்தை செய்வதற்கான ஏற்பாட்டுடன்  சம்பந்தப்பட்ட பகுதிகளை மாத்திரம் மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த புதுடில்லி முன்வருமா? அவ்வாறு செய்யமுடியுமா?

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது வெறுமனே புதுடில்லியின் இடையறாத வலியுறுத்தலாக இருந்த நிலையில் இருந்து தற்போது ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மூலமாக சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. அண்மைய மூன்று ஜெனீவா தீர்மானங்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில் மீள் பேச்சுவார்த்தை, புதிய உடன்படிக்கை பற்றிய உயர்ஸ்தானிகர் மொரகொடவின் கருத்து அடிப்படையில் இலங்கை ஆட்சியதிகார பீடத்தின் ஒரு பிரிவினரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறதா? இந்தியாவும் ஜெனீவாவும் வலியுறுத்திக்கொண்டிருந்தாலும் கூட இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலை தோன்றுவது சாத்தியமில்லை என்பதைத்தான் மொரகொடவின் வார்த்தைகள் ஊடாக கொழும்பு வெளிப்படுத்தியிருக்கிறதா?

இவ்வாறாக விடைகளை வேண்டிநிற்கும் பெருவாரியான கேள்விகள் எழுகின்றன.

மொரகொடவின் கருத்து குறித்து கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் பேராசிரியர் ஒருவருடன் பேசியபோது தற்போதைய சூழ்நிலையில், மீள்பேச்சுவார்த்தையொன்று இடம்பெறும் பட்சத்தில், கொழும்பின் நம்பிக்கையை வென்றெடுத்து அதை தன்பக்கம் கூடுதலாக  இழுப்பதற்காக  புதுடில்லி தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையில் இணங்கிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் சொன்னார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய அரசாங்கத்துக்கோ நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வலுவான அரசியல் சமுதாயம் தமிழ் மக்கள் மத்தியில் இன்று இல்லை என்பதை அவர் ஒரு காரணமாகவும் சொன்னார்.

35 வருடங்களுக்கு முன்னர் உள்நாட்டுப் போர் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்து பல ஏற்பாடுகளுக்கு இணங்கவைத்ததைப் போன்று தற்போது நிலைவரங்கள் பெருமளவுக்கு மாறிவிட்ட சூழ்நிலையில் செய்வது நடைமுறைச்சாத்தியமில்லை என்று புதுடில்லி தமிழர்களுக்கு கைவிரித்துவிடவும் கூடும்.

உயர்ஸ்தானிகர் மொரகொடவின் இந்த மீள் பேச்சுவார்த்தை கருத்து குறித்து இலங்கையில் அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பவில்லை. ஏன் என்றும் புரியவில்லை.

இந்தக் கட்டுரையாளர் அறிந்த வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் மாத்திரம் ருவிட்டர் சமூக ஊடகத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

“13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதில் இருந்து கட்டியெழுப்பி மேலும் அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலைச் சாதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியாவுக்கு இலங்கை பல தடவைகள் உறுதியளித்திருக்கிறது. அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தவா புதிய உடன்படிக்கை ?” என்ற கேள்வியாக அவரது பதிவு அமைந்தது.

அமைதி, சமாதானம், இனங்களிடையே நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பாடுபடுகின்ற கொழும்பை தளமாகக்கொண்ட முக்கியமான தன்னார்வ நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று பணிப்பாளரும் அரசியல் அவதானியுமான ஒரு முக்கியஸ்தரிடம் மொரகொடவின் புதிய உடன்படிக்கை கருத்து குறித்து கேட்டபோது, “அத்தகைய யோசனைகளுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்தி ஒரு மதிப்பை நாம் கொடுத்துவிடக் கூடாது” என்று மாத்திரம் பதிலளித்தார். அவர் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

வீரகத்தி தனபாலசிங்கம்